Published:Updated:

வாவ்... தீவுகள்

வாவ்... தீவுகள்
பிரீமியம் ஸ்டோரி
வாவ்... தீவுகள்

கார்க்கிபவா

வாவ்... தீவுகள்

கார்க்கிபவா

Published:Updated:
வாவ்... தீவுகள்
பிரீமியம் ஸ்டோரி
வாவ்... தீவுகள்

ரசியல் தலைவர்களின் தேர்தல் பிரசாரச் சுற்றுப்பயணங்கள்போலதான் பெரும்பாலானவர்களின் சுற்றுலாத் திட்டங்களும். தினமும் இத்தனை இடங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என, அலுவலக டார்கெட்களை அங்கேயும் பாக்கெட்டில் வைத்துக்கொண்டே திரிவது இந்தியர்களின் மரபு.

வீடு திரும்பியதும் நான்கு நாள் சுற்றுலா களைப்பைப் போக்கவே, ஒரு வாரம் ரெஸ்ட் எடுப்பவர்கள் நாம். ஆனால், பயணமும் சுற்றுலாவும் அப்படி இருக்கக் கூடாது. `இந்த ஊருக்குப் போங்க. அதுதான் உண்மையான சுற்றுலா’ என சில தீவுகளைக் கைகாட்டுகிறார்கள் உலகின் சிறந்த ஊர்சுற்றிகள். ‘கொண்டாடக் கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவு’ என டாப் ஐந்து தீவுகளுக்குப் போகலாம் வாங்க...

 போராபோரா, பிரான்ஸ்

அழகழகான குடில்கள். விண்டோ ஏ.சி-க்குப் பதில், விண்டோவே ஏ.சி மரக்குடிலின் வெளியே நின்று பார்த்தால் தண்ணீருக்குக் கீழே பவழப்பாறைகளும் மீன்கள் ஓடுவதும் தெரிந்தால் எப்படி இருக்கும்?

வாவ்... தீவுகள்

பிரான்ஸ் நாட்டில் இருக்கும் இந்த `போராபோரா' தீவின் குடில்கள் அத்தனை அழகு.  தீவுச் சுற்றுலாவிலேயே கொஞ்சம் காஸ்ட்லியானதும்கூட. கூட்டம் குறைவு. தங்கும் ஹோட்டலைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அவர்களே தனி ஃப்ளைட் வைத்து உங்களைக் `கடத்திக்’கொண்டுபோய்விடுவார்கள். ஆழ்கடலுக்குள் மாஸ்க் போட்டுக்கொண்டு நீந்தி பவழப்பாறைகளையும் அரிய மீன்வகைகளையும் கண்டுகளிக்கலாம். ஸ்கூபா டைவிங்கும் உண்டு. `எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல...’ வகையறாக்களின் ஃபேவரிட் ஹனிமூன் ஸ்பாட்டும் இதுதான்!

சண்டோரினி, கிரீஸ்

கிரீஸ் நாட்டில் அமைந்துள்ள சண்டோரினி தீவு, சாட்டிலைட் கோணத்தில் பார்த்தால் படுக்கவைத்த டைனோசர்போல இருக்கும்.  இது 91 சதுர கிலோமீட்டர் சொர்க்கம். வெறும் 20 ஆயிரம் பேர்தான் மக்கள்தொகை. ஒருபுறம் மலைமுகட்டில் அமைந்துள்ள வெள்ளைச்சுவர் கட்டடங்கள், மறுபுறம் கடல் என ரகளையான இடம் இது. ‘வீசும் காற்றாய் மாறி மலர்களைக் கொள்ளையடி... மனசுக்குள் வெள்ளையடி’ என்னும் சண்டோரினி, டாப் தீவுகள், டாப் 10 டிராவல் ஸ்பாட்ஸ் என எல்லா பட்டியலிலும் இடம்பெற்றுவிடும். காரணம் கிரேக்கக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் கட்டடங்களும், இந்தக் குட்டித்தீவில் அமைந்துள்ள ஒயின் தொழிற்சாலைகளும்தான். தீவின் தட்பவெப்ப நிலை அவ்வளவு இதம்.

வாவ்... தீவுகள்

சண்டோரினி தீவில் விளையும் தக்காளிகளுக்கு மவுசு அதிகம். இன்னும் எந்தத் தமிழ்ப்பாடலிலும் ‘சண்டோரினி தக்காளி கன்னங்கள்’ என எழுதப்படாதது ஏன் என்பது பற்றி விசாரணை கமிஷன் நிச்சயம் தேவை. அப்புறம் ஒரே ஒரு விஷயம். வரலாற்றின் மிகப் பெரிய எரிமலை வெடிப்பு நடந்த இடங்களில் இதுவும் ஒன்று. பயப்படாதீங்க பாஸ்... அது நடந்து ஜஸ்ட் 3,600 வருஷங்கள்தான் ஆச்சாம்!

 சிஷெல்ஸ் தீவு

வாவ்... தீவுகள்

இந்தியப் பெருங்கடலில், ஆப்பிரிக்காவின் கிழக்கு கடற்கரையில் இருந்து அப்படியே 1,500 கிலோமீட்டர் போனால் இருக்கிறது சிஷெல்ஸ் தீவு. குறிப்பிடத்தக்க அளவு தமிழர்களும் வாழும் இந்தத் தீவின் சிறப்பு அம்சம், காடுகளுக்குள் நீங்கள் டிரெக்கிங் போகலாம். அங்கங்கே கண்ணுக்கு விருந்தாக விழும் அருவிகளை ரசித்துக்கொண்டே போனால், கடற்கரையில் முடியும். ஒரே நேரத்தில் காடு, அருவி, கடற்கரை என்று இயற்கையின் பல வடிவங்களைக் கண்டு மெய் மறக்கலாம்.  சுற்றுலாதான் இவர்களது வாழ்வாதாரம். ஆனாலும் இயற்கை கெடாமல் பாதுகாப்பதில் கறாராக இருக்கிறார்கள். எந்த ஒரு சுற்றுலாத் திட்டமும் இந்தத் தீவின் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் ஒப்புதலுக்குப் பின்னரே அங்கீகரிக்கப்படும். இங்கே சுற்றுச்சூழல் சட்டம் அத்தனை வலிமையானது. எனவே, இங்கே நீங்கள் பெரிய பெரிய கடல் ஆமைகளைக் கண்டுகளிக்கலாம். பறவை இனங்களையும் ரசிக்கலாம். அருவியில் நனையலாம். கடலில் குளிக்கலாம். ‘பொல்யூஷன் எங்கும் புகுந்துவிடாத தீவு' என்றால், அதற்கு சிஷெல்ஸ் தீவுதான் ஒரே சாய்ஸ்.

 பாலி தீவு, இந்தோனேஷியா

 இந்தோனேஷியாவின் பாலித் தீவு, சாட்டிலைட்டில் இருந்து பார்த்தால் ஒரு பெரிய திமிங்கிலம் போல தோன்றும். இது வெள்ளை மணல் கடற்கரைக்குப் பிரசித்தம். கடலை ஒட்டி... உங்கள் ஜன்னல் திரையை விலக்கினால், அலைகளை அதன் சத்தத்தோடு ரசிக்கக்கூடிய அளவுக்கு, அறைகள் கடலுக்கு நெருக்கமாக இருக்கும். ஒருபுறம் மலைகள், மறுபுறம் கடற்கரை, நகருக்குள் கட்டடங்கள்... என இந்தத் தீவு ஒரு பஃபே டைப் சுற்றுலாத்தலம்.

வாவ்... தீவுகள்

நீருக்குள், ஊருக்குள் என இங்கு இருக்கும் கோயில்களின் அழகை ரசிக்கவே கூட்டம் அள்ளும். ஸ்கை டைவிங், சர்ஃபிங் செய்ய ஏற்ற இடம் இது. ‘வாரம் இருநாள் வாழியவே’க்கு சரியான சாய்ஸ் பாலித் தீவுகள். மற்ற தீவுகளைவிட `நம்ம ஊருக்குப் பக்கத்துல’ என்றால் பாலிதான். இந்தோனேஷியாவில் செலவும் கம்மிதான். அங்கும்கூட நாணய மதிப்பு ரூபாய்தான். இந்திய மதிப்பில் 10 ரூபாய் தந்தால், அந்த ஊர் காசு 2,000 ரூபாய் கிடைக்கும்.

மாவோய், ஹவாய் 

வாவ்... தீவுகள்

அட்வென்ச்சர், அமைதி என கலக்கல் காக்டெய்ல் ரசிகர்களின் முதல் சாய்ஸ் மாவோய் என்கிற ஹவாயின் இரண்டாவது பெரியத் தீவு. `The Valley Isle' எனச் செல்லமாக அழைக்கப்படும் மாவோ-யின் பரப்பளவு கிட்டத்தட்ட டெல்லிக்கு சமம். கண்ணாடி போன்ற  க்ரிஸ்டர் க்ளியர் கடற்கரைகளை ரசிக்க பெருங்கூட்டம்  படை எடுக்கிறது. தரைமட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஹலியாகலா மலையினூடே அட்வென்ச்சர் பயணம்  இங்கே பிரபலம். எப்போதும் தீப்பிழம்பைக் கக்கிக்கொண்டிருக்கும் எரிமலைகளுக்கு மேலாக ஒரு ஹெலிகாப்டர் பயணம் போக ஆசையா? அது இங்கே சாத்தியம். `இதற்கு எதற்கு ஹவாய்? நம்ம தலைவர்களின் தேர்தல் பிரசாரத்திலேயே ஹெலிகாப்டரும் உண்டு; தீப்பிழம்பும் உண்டு' என்பவர்களுக்கு லீவும் கிடைக்காது; தீவும் கிடைக்காது. `கொல்லும் ராணுவம், அணு ஆயுதம்...

பசி பட்டினி கரி பாலிட்டிக்ஸ்’ என நெகட்டிவ் விஷயங்களே இல்லாத ஒரு காந்தி மண் இந்த மாவோய்!