Published:Updated:

பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!

பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!
பிரீமியம் ஸ்டோரி
பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!

என்.சொக்கன்

பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!

என்.சொக்கன்

Published:Updated:
பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!
பிரீமியம் ஸ்டோரி
பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!
பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!

மிழகத்தின் பிரபலமான சாப்பாட்டுக் கடை அது. பெங்களூரிலும் ஏகப்பட்ட கிளைகள் உண்டு.

சென்ற வாரம் அங்கே இட்லி, தோசை பார்சல் வாங்கச் சென்றிருந்தோம். பொட்டலங் களைக் கையில் கொடுத்துவிட்டு, `சட்னி, சாம்பாருக்குப் பாத்திரம் கொண்டுவந்திருக்கீங்களா?' என அன்பாகக் கேட்டார்கள். சட்டென 30 வருடங்கள் பின்னோக்கிச் சென்றுவிட்டதுபோல் ஓர் உணர்வு!

நான் சின்னஞ்சிறுவனாக இருந்தபோது ஹோட்டல்களில் இதுதான் நடைமுறை. வாழை இலையில் வைத்துக் கட்டிய இட்லி, தோசை பார்சலை வாங்கும்போதே சின்னதும் பெரியது மாக இரண்டு பாத்திரங்களையும் தரவேண்டும். அவற்றில் சட்னியும் சாம்பாரும் தருவார்கள்.

அதன் பிறகு எவ்வளவோ மாறிவிட்டது. சட்னி, சாம்பார் என்ன... தங்க நகைகளைக்கூடப் பாலித்தீன் பாக்கெட்களில் போட்டுத்தான் விற்கிறார்கள். கொதிக்கக் கொதிக்க இருக்கும் டீயை பாலித்தீன் கவரில் ஊற்றிக் கட்டித் தருகிறார்கள். இதனால், பெரும் குப்பை சேருவதோடு, மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என சகலருக்கும் பாதிப்பு.

இந்தப் பூனைக்கு மணிகட்ட பலரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில்தான், பெங்களூரு நகரம் வலுவான முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறது. மார்ச் மாதத்தின் ஒரு நன்னாளில், இந்த நகரில் சகலவிதமான பாலித்தீன் பைகளையும் தடை செய்துவிட்டார்கள். தடை என்றால், முழுத்தடை. `37¼ மைக்ரானுக்கு மேல் உள்ள பைகளுக்கு அனுமதி' என்ற உட்டாலக்கடி எல்லாம் கிடையாது. பாலித்தீன் பையைப் பயன்படுத்தக் கூடாது என்றால், பயன்படுத்தவே கூடாது, அவ்வளவுதான்.

பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதாவது, கடைக்காரர்களும் பாலித்தீன் பைகளைத் தரக் கூடாது, வாடிக்கையாளர்களும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. யாராவது பாலித்தீன் பையை வைத்திருந்தாலே, 500 ரூபாய் அபராதம். இரண்டாவது முறை பிடிபட்டால், அபராதம் இருமடங்கு.

இது சும்மா பேச்சு அல்ல... நிஜமாகவே மிகத் தீவிரமாக பெங்களூரு முழுக்க இதை அமல்படுத்தத் தொடங்கிவிட்டார்கள். தெருவில் தள்ளுவண்டியில் காய்கறி விற்பவரில் ஆரம்பித்து ஒரு கர்ச்சீஃப் 1,000 ரூபாய்க்கு விற்கும் ஃபேஷன் கடைகள் வரை எங்கும் பிளாஸ்டிக் பைகளைக் இல்லை. உணவகங்களில் பிளாஸ்டிக் ஸ்பூன் இல்லை, பிளாஸ்டிக் தட்டுகள் இல்லை. அட, அவ்வளவு ஏன்... ஜுஸ் வாங்கினால் குடிப்பதற்கு ஸ்ட்ராகூடத் தர மாட்டேன் என்கிறார்கள்.

காரணம், அரசாங்கம் இந்த விஷயத்தில் மிகத் தீவிரமாக இருக்கிறது. கடைகடையாக நுழைந்து சோதனை போடுகிறார்கள். மேஜை விரிப்புகளை எல்லாம் புரட்டிப்பார்த்து, `பிளாஸ்டிக்கா' எனப் பரிசோதிக்கிறார்கள், விளம்பரப் பலகைகள் பிளாஸ்டிக்கில் இருந்தால்கூட அபராதம்.

போதாக்குறைக்கு, மக்களையும் தூண்டி விட்டிருக்கிறார்கள். `யாராவது பிளாஸ்டிக் பயன்படுத்தினால் எதிர்த்துக் கேள்விகேளுங்கள். சரியான பதில் வராவிட்டால், எங்களுக்குத் தெரிவியுங்கள்' என சோஷியல் மீடியாவில் பிரசாரம் நடக்கிறது.

இன்னொரு பக்கம், பிளாஸ்டிக் தயாரிப்ப வர்கள், விற்பவர்கள் என எல்லோருக்கும் கடுமையான எச்சரிக்கைவிடப்பட்டிருக்கிறது. பால் பாக்கெட் போன்ற மிகச்சில விஷயங்களைத் தவிர, மற்ற எதற்கும் அனுமதி இல்லை. குறிப்பாக, `கேரிபேக்' தயாரித்தாலே லட்சக்கணக்கில் அபராதம்.

இப்படி எல்லா பக்கங்களில் இருந்தும் பிளாஸ்டிக்கைத் துரத்தித் துரத்தித் தடுத்ததால், ஒரே வாரத்தில் பெங்களூரின் பிளாஸ்டிக் குப்பை 10 சதவிகிதம் குறைந்திருக்கிறதாம். இந்தத் தடையைத் தொடர்ந்தால், இன்னும் நல்ல முன்னேற்றத்தைப் பார்க்கலாம் என்கிறார்கள்.

மக்கள் ஆரம்பத்தில் இதை எல்லாம் நக்கலாகத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்கள், `நாலு நாள் கத்துவாங்க. அப்புறம் பழையபடி கலர்கலரா கேரிபேக்ஸ் வந்துடும்' என்றுதான் பெங்களூருவாசிகள் நினைத்தோம். கடைக் காரர்களும் அப்படித்தான் கருதியிருக்க வேண்டும்.

ஆனால் இப்போது, நிலைமையே வேறு. காய்கறிகள், பழங்களில் ஆரம்பித்து கால் கிலோ மிக்ஸர் வரை எதை வாங்கினாலும் காகிதப் பையில்தான் போட்டுத் தருகிறார்கள், எல்லா கடைகளிலும் விதவிதமான துணிப்பைகள் விற்கப்படுகின்றன. நாம் கையில் தொடவே தயங்கிய மஞ்சள்பை இப்போது புதிய ஃபேஷனாகிவிடும்போல் இருக்கிறது.

ஒரு விஷயம், இந்தக் காகிதப்பைகள், துணிப்பைகள் எல்லாம் ஏகப்பட்ட விலை. ஆகவே, வெளியே கிளம்பும் அனைவரும் கையில் ஒரு துணிப்பையை எடுத்துக்கொண்டே செல்லத் தொடங்கிவிட்டார்கள். இரண்டே மாதங்களில் மக்கள் இப்படி மாறிவிடுவார்கள் என யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.

`பிளாஸ்டிக்கைக் குறைப்பது நல்லதுதானே' என மக்கள் இதை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில், இந்தத் தொழிலையே நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கானோர் போராட்டங்களைத் தொடங்கியிருக்கிறார்கள். `பல லட்சம் கடன் வாங்கித் தொழில் தொடங்கியிருக்கிறோம், எங்களை நம்பி குடும்பங்கள் இருக்கின்றன. திடீரென பிளாஸ்டிக்குக்குத் தடைவிதித்தால் நாங்கள் எங்கே போவோம்?' என நீதிமன்றத்துக்குச் செல்கிறார்கள் இவர்கள்.

அதற்காக, பிளாஸ்டிக்கை அனுமதித்துவிட முடியுமா? அது எளிதில் மட்காதபொருள், சுற்றுச்சூழலுக்குக் கேடுவிளைவிக்கிற பொருள் என்பது எல்லாம் எல்லோருக்கும் தெரிந்ததுதானே?
`நாம் நினைக்கும் அளவுக்கு பிளாஸ்டிக் மோசம் இல்லை' என்கிறார்கள் இவர்கள். `அதைப் பயன்படுத்திவிட்டு வீசி எறியாமல் ஒழுங்காக மறுசுழற்சி செய்தால் திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம். அதற்கு வழிசெய்யாமல், `பிளாஸ்டிக்கே ஆகாது' எனச் சொல்வது என்ன நியாயம்? இதற்காக எல்லாரும் காகிதப்பைகளைப் பயன்படுத்த ஆரம்பித்தால், அவற்றைத் தயாரிப்பதற்காக மரங்கள் வெட்டப்படாதா? அதனால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாதா? கூட்டிக்கழித்துப் பார்த்தால் பிளாஸ்டிக்தான் சுற்றுச்சூழலுக்கு நல்லது!'

இப்படிச் சொல்லும் இவர்கள் தேசியப் பசுமை ஆணையத்திடம் இதுபற்றி முறையீடு செய்திருக்கிறார்கள். அவர்கள் இதை விசாரித்து ஜூலை மாதத்தில் தீர்ப்பு சொல்வார்களாம்.

ஆனால் அதற்குள், பெங்களூருவாசிகள் மத்தியில் `பிளாஸ்டிக் ஆகாது' என்ற எண்ணம் அழுத்தமாக வேரூன்றிவிடும்போல் தெரிகிறது. ஆரம்பத்தில் இந்தத் தடையைச் சலிப்புடன் பார்த்த அவர்கள், இப்போதைய சௌகர்  யத்தைவிட, நீண்டகால நோக்கில் சிந்திப்பதே நல்லது எனப் புரிந்துகொண்டுவிட்டதாகத் தெரிகிறது. இதன் கெடுதல்கள் தெரிந்தும்கூட, `எல்லாரும்தான் பயன்படுத்துறாங்க' என பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்திக்கொண்டிருந்தவர்கள், இப்போது வேறு வழி இல்லாமல் மாறவேண்டியிருக்கிறது. இது ஒரு பசுமைப் பிரசாரமாகவே முன்வைக்கப்படுகிறது, அரசாங்கமும் தனியார் அமைப்புகளும் பள்ளிக் குழந்தைகளில் தொடங்கி எல்லோர் மத்தியிலும் இந்தச் செய்தியைக் கொண்டுசெல்கிறார்கள்.

இதனால், ஒருவேளை இந்தத் தடை திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்டாலும்கூட, பெங்களூரில் கணிசமானோர் பிளாஸ்டிக்கை பழையபடி அதீதமாகப் பயன்படுத்தத் தயங்குவார்கள் என்றே தோன்றுகிறது.

இரண்டு மாதம் முன்பு வரை, `பிளாஸ்டிக் இல்லாத உலகமா... சான்ஸே இல்லை!' என்றுதான் இவர்களும் நினைத்திருப்பார்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என பெங்களூரு நிர்வாகம் நிரூபித்துவிட்டது. யாரோ தடை விதித்து ஒரு பொருளைத் தவிர்ப்பதைவிட, நாமாகப் புரிந்துகொண்டு தவிர்ப்பது இன்னும் நல்லது!

``பிளாஸ்டிக் தவிர்ப்போம்!''

பிளாஸ்டிக்கை புறக்கணித்த பெங்களூரு!

``பெங்களூருல பிளாஸ்டிக் முழுவதும் தடை பண்ணியது வரவேற்கவேண்டியதுதான். ஆனால், தமிழகத்தில் முழுமையாக பிளாஸ்டிக்கை​ ​ஒழிக்க இன்னும் சில காலம் ஆகும். நம் வாழ்க்கைச் சூழலில் பிளாஸ்டிக் ​அதிகமாக நுழைந்துவிட்டது. அது​வு​ம்  சென்னை போன்ற நகரங்களில் இதன் பயன்பாடு மிக மிக அதிகம். ஒரு குடும்பம் வாங்கும் தண்ணீர் கேன், குழந்தைக்கு வாங்கித் தரும் பிஸ்கட் பாக்கெட், உணவு பார்சல் கவர், சாப்பிடும் தட்டு, கேரி பேக்... என எங்கும் எதிலும் பிளாஸ்டிக் மயம்தான். பிளாஸ்டிக் தீங்கு என்றாலும் அதனிலும் பெரும் தீங்கு 20 மைக்ரானுக்குக் கீழே உள்ள பிளாஸ்டிக்தான்.  ரொம்ப தின்னாக இருப்பதால் நிலத்துக்குள் எளிதாகச் சென்று நிலத்தடி நீர் இறங்கவிடாமல் தடுக்கும். விலங்குகளும் `ஏதோ சாப்பிடும் உணவு​’ என நினைத்து, சாப்பிட்டு செ​ரிமானம் ஆகாமல் செத்துபோகும். மறுசுழற்றிசெய்வதும் கடினம். குப்பை பொறுக்கி விற்பவர்கள்கூட இந்த 20 மைக்ரானுக்குக் கீழே உள்ள பிளாஸ்டிக்கைச் சீண்ட மாட்டார்கள். இதைப் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு எடுத்தாலே பெரும் பிரச்னைகள் குறையும்.  வீட்டைவிட்டு வெளியே சென்றால் கையில் துணி பையுடன் செல்லுங்கள். ஹோட்டல்களில் உணவு வாங்கினால் வீட்டில் இருந்தே பாத்திரங்களை எடுத்துச் செல்லுங்கள். இப்படி நமக்கு நாமே பிளாஸ்டிக் பயன்படுத்துவதைத் தவிர்த்தால்தான் நமக்கும் நம் சூழலுக்கும் நல்லது'' என்கிறார் பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன்.

- சிபி