Published:Updated:

ஜி.ஆர்.முதல் ஏ.ஆர்.வரை !

ந.வினோத்குமார்,படங்கள்: ஜெ.தான்யராஜு

ஜி.ஆர்.முதல் ஏ.ஆர்.வரை !

ந.வினோத்குமார்,படங்கள்: ஜெ.தான்யராஜு

Published:Updated:
##~##

அடையாறு ஆந்திர மகிளா சபா. இளம் பெண்களின் அணிவகுப்பு. குருவின் கட்டளைக்கு ஏற்ப அபிநயம் பிடிக்கிற அழகால், விழிகள் பேசும் மொழியால், நம் மனதிலும் 'ஜல்... ஜல்...’ சலங்கை ஒலி.

''கிருத்திகா, ஸ்ருதி, ஆரபி, மாதுர்யா, வாணி, சாம்பவி... இன்னும் எங்களோட ஃப்ரெண்ட்ஸும் இருக்காங்க. காலேஜ், வேலைனு இருக்கிறதால அவங்களால ரிகர்சலுக்கு வர முடியலை'' எடுத்த எடுப்பிலேயே கோரஸ் அறிமுகம். ''ஏ... கிருத்திகா.. கிருஷ்ணனைப் போல் பாவனை காட்டு... ஸ்ருதி நீ கொஞ்சம் சிரி... மாதுர்யா நீ முத்திரையை மாத்து'' என்றபடி மாணவிகளைப் பெண்டு நிமிர்த்திய ராதிகா சுரஜித், ''40 வருஷத்துக்கு மேல டான்ஸ் மாஸ்டரா இருக்கேன். 'த்ரயி’ங்கிற டான்ஸ் ஸ்கூல் நடத்துறேன். 'அழகி’ படத்தில் 'பாட்டுச் சொல்லி’, 'இந்திரா’ படத்தில் 'நிலா காய்கிறது’னு சினிமாவிலும் பாடல்களுக்கு கோரியோகிராஃபி பண்ணியிருக்கேன். இத்தனை வருஷ அனுபவத்தைவெச்சு ஏதாவது புதுசா பண்ணணும்னு தோணுச்சு. அப்ப உருவானதுதான் 'திரைஇசைப் பாட்டும் பரதமும்’கிற கான்செப்ட்! உத்சவ் மியூஸிக்’ சார்பில் ஸ்டேஜுக்கு எடுத் துட்டுப் போறோம்'' என்கிறார். இவரின் கைவண்ணம்தான் ஜெயா டி.வி-யின் 'தகதிமிதா’ நிகழ்ச்சி.

ஜி.ஆர்.முதல் ஏ.ஆர்.வரை !

'இத்தனை நாள் நீங்க ரசிச்சுக் கேட்ட சினிமா பாட்டு எவ்வளவோ இருக்கும் இல்லையா? அதில் சிலதைத் தேர்ந்தெடுத்து அந்தப் பாடல்களுக்கு அபிநயம் பிடிக்கப்போறோம்'' என்று நிகழ்ச்சிபற்றி ஒரு வரி விளக்கம் கொடுத்த கிருத்திகா, சாஸ்திரா பல்கலைக்கழக முதுநிலை நுண்கலை மாணவி. செயின்ட் ஜோசப்பில் இறுதியாண்டு பொறியியல் படிக்கும் ஸ்ருதி, ''சினிமா பாட்டுக்குப் பரதமானு யோசிக்கிறீங்களா? ஆனால், ஸ்டேஜ்ல நீங்க பார்க்கிறப்போ பிரமிப்பா இருக்கும். உங்க மனசுல குறிப்பிட்ட பாட்டைக் கேட்கும்போது அது தொடர்பான காட்சிகள்தான் ஓடும். அதை மறக்கடிக்கும் வகையில் நாங்க பெர்ஃபார்ம் பண்ணணும் என்பதுதான் எங்களுக்கான சவால்!'' என்கிறார். இவர் பரதத்தோடு பாடுவதிலும் பிரமாதப்படுத்து வாராம்.

சாஸ்திராவில் எம்.எஃப்.ஏ. படிக்கும் ஆரபி, ''பரதம் அடிப்படையா இருக்குறதால எங்களால் வேறு எந்த வகை டான்ஸையும் ஈஸியா கத்துக்க முடியும். சினிமா பாட்டுக்குப் பரதம் ஆடுறது சவால் என்றாலும் சுலபம்தான்!'' என்று 'தம்ஸ் அப்’ காட்டுகிறார். ''இத்தனை நாள் கீர்த்தனைகளுக்கு ஆடினோம். இப்ப சினிமா பாட்டுக்குப் பரதம் ஆடுறது ரொம்பவே ஃப்ரெஷ்ஷா இருக்குற மாதிரி ஒரு ஃபீல். என்ன ஒண்ணு, மூணு மாசமா ஒரே மூஞ்சிகளைப் பார்த்துட்டு இருக்குறதுதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு'' என்று கலாய்க்கும் மாதுர்யா, எம்.ஓ.பி-யில் எலெக்ட்ரானிக் மீடியா படிக்கிறார்.

ஜி.ஆர்.முதல் ஏ.ஆர்.வரை !

''இந்த ரிகர்சல் ஆரம்பிச்சதுல இருந்து ஒரு குடும்பம் மாதிரி இருக்கோம்'' என்று சொல்லும் அனுஷா, ஸ்டெல்லாமேரிஸ் பி.காம். மாணவி. ''ஓ.கே. விஷயத்துக்கு வாங்க'' என்று குரல் உயர்த்திய வாணி, ஒரு டான்ஸ் டீச்சர். ''மேடம் கிட்ட 'தகதிமிதா’ ஷோவுல உதவி பண்ணிக்கிட்டு இருக்கேன். பரதம் மேல் உள்ள ஆர்வத்தில் கல்யாணத்துக்குப் பிறகும் டான்ஸ் கத்துக்க என் ஹஸ்பண்ட் ஊக்கப்படுத்துறார். சினிமா பாட்டுக்குப் பரதம்னதும் கிளாஸிக்கலான பாடல்களுக்கு மட்டும்தான் ஆடுவோம்னு நினைச்சுடாதீங்க. 'புல்வெளி... புல்வெளி’ டைப் மெலடிகளுக்கும் அபிநயம் பிடிப்போம். சுருக்கமாச் சொல்லணும்னா, ஜி.ஆர். முதல் ஏ.ஆர். வரை! அதாவது இசையமைப்பாளர்கள் ஜி.ராமநாதன் தொடங்கி இன்றைய ஏ.ஆர்.ரஹ்மான் வரை பல இசையமைப்பாளர்களுக்கும் பெருமை சேர்ப்பதுதான் நிகழ்ச்சியின்

கான்செப்ட்!'' என்று கைகூப்புகிறார்.

''ஒரு வரியில் சொல்லணும்னா 'சாஸ்திரிய கலையைச் சாமானியனுக்குக் கொண்டுபோற முயற்சி. வர்ற அக்டோபர் 30-ம் தேதி பாரதிய வித்யா பவன்ல இந்த நிகழ்ச்சி நடக்கப்போகுது. மிஸ் பண்ணாம வந்துடுங்க!'' என கோரஸாக அழைக்கின்றனர் மாணவிகள்.

கண்டிப்பா!