Published:Updated:

``போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடிக்குத் தமிழக பட்ஜெட்டில் தீர்வு எங்கே?” - சி.பி.எம். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடிக்குத் தமிழக பட்ஜெட்டில் தீர்வு எங்கே?” - சி.பி.எம். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்
``போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடிக்குத் தமிழக பட்ஜெட்டில் தீர்வு எங்கே?” - சி.பி.எம். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

``போக்குவரத்துக் கழக நிதி நெருக்கடிக்குத் தமிழக பட்ஜெட்டில் தீர்வு எங்கே?” - சி.பி.எம். மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நிதியமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல்செய்துள்ள இந்த ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டுக்கு வரவேற்பு குறைவாகவும் அதிருப்தி அதிகமாகவும் காணப்படுகிறது. 

தமிழகத்தில் வேலையற்றோர் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்க இருக்கும் நிலையில் வேலை வாய்ப்பை பெருக்குவதற்கான திட்டங்களோ, தொழில் வளர்ச்சி, சிறு குறு தொழில்களை மேம்படுத்தி, புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவது குறித்த உருப்படியான திட்டங்களோ இல்லை; வழக்கமான அறிவிப்புகளே உள்ளன. 2015-ம் ஆண்டில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2.4 லட்சம் கோடி ரூபாய்க்கான முதலீடுகள் தமிழ்நாட்டுக்கு வரும் என்று சொல்லப்பட்டது; ஆனால், இதில் ரூ.63,000 கோடி அளவிற்குத்தான் முதலீடு வந்துள்ளது. இருக்கும் தொழில்களும் வேறு மாநிலங்களுக்குச் செல்கின்றன; ஆயிரக்கணக்கான சிறு குறு நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன; கைத்தறி, விசைத்தறி, பட்டாசு, தீப்பெட்டி போன்ற தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்பது சிபிஎம் கட்சியின் விமர்சனம். 

இடுபொருள்களின் விலை உயர்வால் வேளாண் உற்பத்திச் செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது; வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் துயருற்றிருக்கும் நிலையில், உற்பத்திச் செலவுடன் விளைபொருள்களுக்கு 50 சதவிகிதம் லாபம் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் பெ.சண்முகம்.  

``விலைவீழ்ச்சியைத் தடுத்து விவசாயிகளைப் பாதுகாப்பதற்கு இந்த பட்ஜெட்டில் எந்த நடவடிக்கையும் இல்லை. 2018-19ம் ஆண்டுக்கு நெல்கொள்முதல் விலை உயர்த்தப்படவில்லை. ஊக்கத்தொகை வழங்கப்படும் என்கிற அறிவிப்பு மட்டுமே போதுமானதாக இல்லை.  டாக்டர் ரங்கராஜன் குழுவின் பரிந்துரைப்படி கரும்புக்கு விலையை நிர்ணயித்திட வருவாய் பங்கீட்டு முறையை நடப்பு ஆண்டு முதலே அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது கரும்பு விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். இதைக் கைவிட்டு கரும்புக்கு லாபகரமான விலை கிடைக்கும் வகையில் மாநில அரசின் பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும். சர்க்கரை ஆலைகள் ரூ.1600 கோடி கரும்புப் பண பாக்கி வைத்துள்ளனர். நிலுவைத்தொகை குறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை. லட்சக்கணக்கான பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும். ஒகி புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கும் இழப்பீடு அறிவித்து வழங்க வேண்டும். அத்திக்கடவு, அவிநாசி குடிநீர் வழங்கல் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்பது இப்போதும் அறிவிப்பாகவே உள்ளது. நீர்ப்பாசன மேம்பாட்டிற்கு ரூ.715 கோடி ஒதுக்கியுள்ளதாகக் குறிப்பட்டுள்ள போதிலும் அணைகள், ஏரிகள், நீர்நிலைகளைத் தூர்வாரி மேம்படுத்த போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. ஒதுக்கப்படுகிற நிதியை முழுமையாக உரிய பணிகளுக்குச் செலவழிப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்துகிறார், பெ.சண்முகம். 

சுகாதாரத் துறைக்காக இந்த நிதிநிலை அறிக்கையில் 11,634 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஏமாற்றமளிக்கிறது; இது யானைப் பசிக்குச் சோளப்பொறி போட்டது போல் உள்ளது; நிதிஒதுக்கீட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத், `` சென்ற ஆண்டு டெங்குக் காய்ச்சலால் அதிகமான நோயாளிகள் தமிழகத்தில்தான் இறந்தனர்.டெங்கு நோயாளிகள் இறப்பில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்தது.டெங்கு, பன்றிக் காய்ச்சல், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், மலேரியா, தொழுநோய், யானைக்கால் நோய் போன்றவையும் தமிழகத்தில் பரவிவருகின்றன. இந்திய அளவில் நலக்குறியீட்டில் இரண்டாம் நிலையில் இருந்த தமிழகம், மூன்றாம் நிலைக்கு இந்தாண்டு பின்தங்கிவிட்டது. இவற்றைக் கவனத்தில்கொண்டு, தமிழக மக்களின் இன்றைய தேவைக்கு ஏற்ப மருத்துவக் கட்டமைப்பு வசதிகளும்,நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும், மருத்துவத் துறையில் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன.செவிலியர்கள் உட்பட ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஒப்பந்தமுறையிலும், தற்காலிக அடிப்படையிலும் மிகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் பணிநிரந்தரம் செய்யப்பட வேண்டும். ஒதுக்கப்படும் நிதியையும் நேரடியாக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்த செலவிடவேண்டும். மருத்துவக் காப்பீடு மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கும், மருத்துவக் காப்பீட்டு நிறுவனத்திற்கும், இடைத்தரகர்களுக்கும் மூன்றாம் தரப்பு நிர்வாகத் தினருக்கும் வாரி வழங்கக் கூடாது” என்று கூறியுள்ளார். 

``அரசு பொது மருத்துவமனைகள் பெருமளவில் மேம்படுத்தப்படாத நிலையில், தனியார் மருத்துவமனைகளை நம்பி மக்கள் செல்ல வேண்டியுள்ளது. அரசு பொது மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி ஒதுக்கீடு இந்த பட்ஜட்டில் இல்லை” என்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயற்குழுவும் குறைகூறியுள்ளது.  

கல்வித்துறையில் பள்ளிக்கல்விக்காக ரூ.27, 205.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உயர்கல்வித் துறைக்கு ரூ.4,620.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கல்வித்துறைக்கு 30 சதவிகிதம் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துகிறார், தமிழகச் சட்டமேலவை முன்னாள் உறுப்பினரும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனர் தலைவருமான அ.மாயவன். 

``மாநிலம் முழுவதுமுள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்துவருவதற்கு முக்கியக் காரணம், அடிப்படை வசதிகள் இல்லாததும் ஆகும். ஏராளமான பள்ளிகளில் காற்றோட்டமான வகுப்பறைகள், கழிப்பிடங்கள் இல்லாமை, அப்படி இருந்தாலும் அதற்கான தண்ணீர்வசதி இல்லாமை, தூய்மைப்பணியாளர் இல்லாமை ஆகிய காரணங்களால், கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க பெற்றோர் தயங்குகின்றனர். ஓராண்டாக சிறிது முன்னேற்றம் இருக்கிறது. என்றாலும் போதுமானது அல்ல. 1964 ம் ஆண்டு அமைக்கப்பட்ட கோத்தாரி கல்வி கமிஷன் பரிந்துரைத்தபடி, ஆண்டுதோறும் அரசின் செலவினத்தில் 30 சதவிகிதம் கல்விக்காக ஒதுக்கினால், காலிப்பணியிடங்கள் உட்பட பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, கல்வியின் தரம் மேம்படும்” என்கிறார், அ. மாயவன். 

``அரசு கல்வி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.333 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இது போதுமானதல்ல. அரசுப் போக்குவரத்துக் கழகங்களை நிதி நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை. மின்சாரத் துறையில் டாம்பீகமான அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. இலவச மின் இணைப்பு கோரியுள்ள விவசாயிகளின் பல லட்சம் கேட்பு மனுக்கள் கிடப்பில் போடப்பட்டு அவை அப்படியே உள்ளன” என விவரங்களை அடுக்குகிறார், சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன். 

தமிழக அரசின் தற்போதைய நிதிநிலைமை குறித்து பரவலாக அச்சமும் பீதியும் வெளிப்படுகிறது. 

``தமிழ்நாட்டு அரசின் கடன் சுமார் மூன்றரை லட்சம் கோடி இருப்பதாகவும் இந்த ஆண்டு மேலும் ஒரு லட்சம் கோடிக்குப் புதிய கடன் வாங்கப்போவதாகவும் அரசு கூறியுள்ளது. இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வரி வருவாய்ப் பகிர்வில் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு தொடர்ந்து துரோகம் இழைத்து வருகிறது. 2015 முதல் 2018 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு 14 ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த தொகையான 81,570 கோடி ரூபாயை வழங்காமல் அதைக் குறைத்து 72,234 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு கர்நாடகாவுக்கு 155% ஆகவும், மகாராஷ்டிராவுக்கு 149% ஆகவும், ஆந்திராவுக்கு 128% ஆகவும் இருக்கும்போது தமிழ்நாட்டுக்கு 89% ஆக மட்டுமே உள்ளது” என்கிறார், விசிக தலைவர் தொல்.திருமாவளவன். 

சிபிஎம் கட்சியின் மாநிலச்செயலாளர் பாலகிருஷ்ணனோ, ``13வது நிதிக்குழு காலத்தை ஒப்பிடுகையில் 14வது நிதிக்குழு காலத்தில் தமிழ்நாட்டுக்குக் கிடைத்த நிதி என்பது 121 சதவிகித அளவே உயர்ந்துள்ளது. அனைத்திந்திய அளவில் சராசரியாக 173 சதவிகித உயர்வை இதர மாநிலங்கள் பெற்றுள்ள நிலையில் தமிழகம் இவ்விஷயத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளது” என்கிறார்.  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு