Published:Updated:

``மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட கோதுமை மணிதான் விளைச்சல் தரும்!’’ - பைபிள் #LentDays

``மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட கோதுமை மணிதான் விளைச்சல் தரும்!’’ - பைபிள் #LentDays
``மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட கோதுமை மணிதான் விளைச்சல் தரும்!’’ - பைபிள் #LentDays

வக்காலத்தின் ஐந்தாம் ஞாயிற்றுக்கிழமையான இன்று வசந்த காலத்தை நமக்கு நினைவுறுத்தும்விதமாக அழகான ஒரு கூற்றை இயேசு கிறிஸ்து நம் முன் வைக்கிறார். அதாவது, `கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால், அது அப்படியே இருந்திருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.’’ - (யோவான் நற்செய்தி 12:24) 

மண்ணில் விழுந்த தாவரங்களின் விதைகள் மீண்டும் உயிர்பெற்று எழும் வசந்த காலத்தில் இயேசு கூறும் இந்தக் கூற்று, பல்வேறுவிதமான கருத்துகளை நம் உள்ளங்களில் விதைக்கிறது. அப்படி விதைக்கப்படும் அந்த எண்ணங்கள், கருத்துகள் மிகுந்த விளைச்சலைக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது மிக எளிதான ஓர் உவமை மட்டுமல்ல, மிக ஆழமான உண்மைகளைக் கூறும் உவமையும்கூட. 

கோதுமை மணி (விதை) படைக்கப்பட்டதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, அது உணவாக மாற்றப்பட்டு வேறோர் உயிரை வளர்க்க வேண்டும். இல்லையென்றால், அது விதையாக மாறி, மண்ணில் விழுந்து வளர்ந்து, கதிராகித் தன் இனத்தைப் பெருக்க வேண்டும். இந்த இரண்டு செயல்களும் நிறைவேற கோதுமை மணி தன்னுடைய சுயரூபத்தை, உயிரை இழக்கவேண்டியிருக்கும். இவற்றுக்கு மாறாக, கோதுமை மணியைக் கொண்டு அலங்காரப் பொருள்கள் செய்யலாம். ஆனால், அலங்காரப் பொருளாக இருப்பது கோதுமை மணியின் இயல்பு கிடையாது.

கோதுமை மணியை அரைத்து, மாவாக்கி, அப்பமாக மாற்றப்படுவதை புனித அந்தியோக்கு இஞ்ஞாசியார்  என்பவர் மிக அழகாகக் கூறியிருக்கிறார். தான் சிங்கங்களின் பசியைத் தீர்க்கும் உணவாகப் போகிறோம் என்பதை உணர்ந்து அவர் சொன்ன வார்த்தைகளைப் பார்ப்போம். அதாவது, ``இறைவனின் கோதுமை மணி நான். சிங்கத்தின் பற்களால் அரைக்கப்பட்டு கிறிஸ்துவின் தூய்மையான அப்பமாக மாறுவதற்காகப் படைக்கப்பட்ட கோதுமை மணி நான்'' என்பவையே அந்த வார்த்தைகள். உணவாக மாறி மற்றவர்களை வாழ்விப்பது, விதையாக மாறி தன் இனத்தைப் பெருக்குவது என்பது கோதுமை மணிக்கு மட்டுமல்ல... இந்த உலகில் படைக்கப்பட்ட எல்லாவித தானியங்களுக்கும் உயிரினங்களுக்கும் பொருந்தக்கூடியதே. 

மண்ணில் மூழ்கடிக்கப்பட்ட விதைதான் நெல்மணியாகும். அதேபோல் கொதிக்கும் நீரில் போடப்பட்டு வெந்த அரிசிதான் சோறாகும். தங்கம் உருக்கப்பட்டுத்தான் நகையாக மாற்றப்படுகிறது. இதேபோல் பாறை அல்லது கல் உடைக்கப்பட்டால்தான் அது சிலையாகும். வாழ்க்கையின் தத்துவமும் இதுவே. தன்னுடைய பாடுகள் மற்றும் மரணத்தால் இந்த உலகத்துக்கு புதுவாழ்வு அளித்த இயேசு கிறிஸ்து, தன்னுடைய கூற்றை இவ்வாறு மெய்ப்பிக்கிறார். 


மறைசாட்சிகள், போதகர்களின் வேதனைகளும் ரத்தமுமே கிறிஸ்தவத்தின் வித்தாகி வேரூன்றி விழுதாகி அனைவருக்கும் பயன்படும் நிலையைத் தந்துள்ளது. தியாகிகள் சிந்திய கண்ணீர், செந்நீரால்தான் நாட்டு மக்களுக்கு நல்லதொரு தேசம் கிடைத்திருக்கிறது. எத்தனையோ பேர் இன்னுயிர் நீத்ததால்தான் நாம் அனைவரும் சுதந்திரக்காற்றை சுவாசித்துக்கொண்டிருக்கிறோம். ஆகவே மனிதர்களாகிய நாம் சுயநலம் என்னும் எண்ணத்தை இந்த மண்ணில் போட்டு புதைக்காவிட்டால், அது பல்கிப்பெருகி இந்த உலகத்தையே சீரழித்துவிடும். ஆகவே அது புதைக்கப்பட வேண்டும். அப்படியானால்தான் பிறர்நலம் என்ற விளைச்சல் மிகுதியாகக் கிடைக்கும்.

இந்த கோதுமை மணி உவமையைக் கொண்டு ஒரு பாடலைப் பார்ப்போமா?

வாழ்வோர் இறந்தோர் நலம்பெற இறைவா

வாழ்த்தி வைத்தோம் காணிக்கையை

நிலத்தில் விழுந்த கோதுமை மணி 

நிறைந்த பலனைத் தந்திடவே - 2

மடிந்து மண்ணில் மறைந்தால்தான் 

மக்கள் பலரின் உணவாகும்.

மண்ணில் புதைந்த இறைமகனும்

மகிமை கொண்டே உயிர்த்து வந்தார்

இறந்த அவரின் அடியாரும்

இனிதே மகிமை அடைந்திடுவார்.