Published:Updated:

"கதை வேணாம், கல்லூரி கலாட்டாக்களைப் பார்க்கணுமா?" - 'பூமரம்' படம் எப்படி? #Poomaram

தார்மிக் லீ
"கதை வேணாம், கல்லூரி கலாட்டாக்களைப் பார்க்கணுமா?" - 'பூமரம்' படம் எப்படி? #Poomaram
"கதை வேணாம், கல்லூரி கலாட்டாக்களைப் பார்க்கணுமா?" - 'பூமரம்' படம் எப்படி? #Poomaram

புகழ் மிகுந்த கல்சுரல் போட்டியில் கலந்துகொள்ளும் பல்வேறு கல்லூரிகளில், இறுதியில் வென்றது பாரம்பரிய மஹாராஜா கல்லூரியா, ஐந்து வருடங்களாக கோப்பையைத் தக்கவைத்திருக்கும் தெரசா கல்லூரியா... என்ற சிம்பிளான கதையை சூப்பராக சொல்ல, அந்த இடத்திற்கே `பூமரம்' படத்தின் மூலம் நம்மை அழைத்துச் சென்றிருக்கிறார், இயக்குநர் அப்ரித் ஷைன்.

மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தில் நடக்கும் கல்சுரல்ஸ் போட்டிகளுக்குப் பல கல்லூரிகள் கலந்துகொள்ளும். கேரளாவைச் சுற்றி பட்டிதொட்டிகள் எங்கும் பிரபலமான போட்டி இது. அதில் பல கல்லூரிகள் விளையாட்டாகக் கலந்துகொள்ள, `ஜெயித்தே ஆகவேண்டும்' என்ற வெறியில் இரண்டு கல்லூரிகள் மிகுந்த ஈடுபாட்டோடு பயிற்சி செய்துகொண்டிருக்கும். ஒன்று ஸ்டூடண்ட் சேர்மனாக கௌதம் (காளிதாஸ் ஜெயராம்) இருக்கும் மஹாராஜா கல்லூரி, மற்றொன்று ஐரின் சேர்மனாக இருக்கும் செயின்ட் தெரசா கல்லூரி. ஜரின் ஸ்டூடண்ட் சேர்மனாக இருக்கும் கல்லூரிதான் ஐந்து வருடங்களாக கோப்பையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும். அந்த ஆண்டும் கோப்பை தங்களது கல்லூரியின் ஷோ கேஸில் மின்ன வேண்டுமெனக் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும். இந்தக் கல்லூரி ஒருபக்கம் இருக்க, ஓரிரு முறை கோப்பையை வென்று, எல்லா வருடங்களும் தெரசா கல்லூரிக்கு டஃப் கொடுக்கும் மஹாராஜா கல்லூரியும் கடுமையான பயிற்சியைச் செய்துகொண்டிருக்கும். கனவு மெய்ப்படும் நேரத்தில் எதிர்பாராத விதமாக நடக்கும் ஒரு சிறு பிரச்னை இரண்டில் ஒரு கல்லூரிக்கு லாவகமாக அமைய, மற்றொரு கல்லூரிக்கு அது பாதகமாக மாறிவிடும். அந்தக் கல்லூரி எது? என்பதுதான், க்ளைமாக்ஸ்.

படத்தில் நிறைய விஷயங்கள் பாராட்டும் வகையில் அமைந்திருந்தாலும் பாராட்டுக்களை ஆரம்பிக்க வேண்டிய இடம் எடிட்டிங், பாராட்டப்பட வேண்டிய ஆள், ஜித் ஜோஷி. இயக்குநர் அப்ரித் ஷைனின் ரசனையை அப்படியே அச்சுபிசராமல் தனது எடிட்டிங்கில் கொண்டுவந்து, அழகை அள்ளித் தூவியுள்ளார். காட்சி ஒரு இடத்தில் முடிய, அதை அடுத்த காட்சிக்கு முடிச்சுப்போட்டது செம!. வசனங்களிலும் அதே அமைப்பைக் கொண்டு வந்தது ஆஸம். பாராட்டுகள் லிஸ்டில் இரண்டாவதாக இடம்பெற்றிருப்பது, படத்தின் மூன்று இசைமைப்பாளர்கள். எந்தப் பக்கம் திரும்பினாலும் படம் முழுவதுமே பாடல்களால் சூழ்ந்திருந்தாலும், அது அத்தனையும் திகட்டாமல் ரசிக்கும்படியாக இருப்பதுதான் சிறப்பம்சம். சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் இடம்பெற்ற கோபி சுந்தரின் பின்னணி இசையும் சரி, பாடல்களில் இடம்பெற்ற ஃபைஸல் ரஸி, ஜிரிஷ் குட்டனின் இசையும் சரி... அனைத்துமே கனக்கச்சிதம். இந்தப் படத்தை டைம் டிராவலாக மாற்றியிருக்கிறது, ஞானமின் ஒளிப்பதிவு. ஆம், அந்தக் கல்லூரியில் நடக்கும் கல்சுரல்ஸுக்கு நம்மையும் அழைத்துச் சென்றதுபோன்ற உணர்வைக் கொடுத்திருக்கிறார். அழகான காட்சிகளைப் படமாக்கியது ஞானமின் ஒளிப்பதிவு, அதை மேலும் அழகாக படங்களுக்கு நடுவே பொருத்தியது, ஜித் ஜோஸின் எடிட்டிங், இதற்கு மூலக்காரணமாக இருந்த அப்ரித் ஷைனின் இயக்கம், இவை அனைத்தையும் கவித்துமாய் வழிநடத்திச்செல்ல உதவிய மூவரின் இசையமைப்பு... டெக்னிக்கலான விஷயத்தில், அதிக கவனம் பெறுகிறது இப்படம். 

`அதெப்படி சேட்டா... அப்றம் நாங்கெல்லாம் சும்மாவோ' என்ற ரகத்தில் படத்தில் இடம்பெற்ற ஒவ்வொருவருமே நடித்திருந்தார்கள். காளிதாஸ் ஜெயராம், ஐரின் இருவரும் ஒரு சிறந்த தலைவனுக்கே உரித்தான குணங்களோடு நடித்து அசத்தியிருக்கிறார்கள். அவர்களைத் தவிர, போட்டிகளில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள், பரதநாட்டியம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், லிப்ஸ்டிக் கலையாது உதட்டைச் சுழித்து, நெளித்து உணவருந்தும் பெண், `முதல் நம்பர் ராசியில்லை. நம்பர் மாத்திக்கறீங்களா?' எனக் காம்படிஷனில் கேட்கும் பெண், `தண்ணி பாட்டில மறந்துட்டீங்க' என தனக்குப் பிடித்த பெண்ணைக் கவர முயற்சிக்கும் கிட்டார் இளைஞன், ஒருதலையாக காளிதாஸ் ஜெயராம்மேல் காதல்வயப்படும் பெண்... எனப் படம் முழுக்க பல கதாபாத்திரங்கள், அந்த இடத்தில் நிகழும் சுவையான சம்பவங்களாய் நீள்கிறது படம். இடைவேளைக்குப் பின், போலீஸ் ஸ்டேஷனில் நடக்கும் சோஷியல் மெசேஜ் கலந்த கலாட்டா காமெடி ரகளைகள் எக்ஸ்ட்ரா பூஸ்ட். இதுதவிர போகிறபோக்கில் இடம்பெற்ற காமெடிகள்கூட படத்தில் பக்காவாக வொர்க்அவுட் ஆகியிருக்கிறது.

போட்டியில் ஜெயித்தே ஆகவெண்டுமெனச் செல்லும் இரண்டு கல்லூரிகளின் கதைகள், ஹீரோயிஸத்தை மட்டும் புகுத்தாமல், அங்கு நடக்கும் குறும்பு, போட்டி பொறாமைகள், சண்டை சச்சரவு... என அனைத்தையும் கலந்துகட்டி அசத்தியிருக்கிறார், இயக்குநர். சம்பிரதாயமாக இதை ஒரு கதை வடிவமைப்பில் சொல்லவேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம். ஆனால், கதையாக அல்லாமல் ஒரு தொகுப்பாகவே இருக்கிறது. இயக்குநர் அப்ரித்துக்கு இது மூன்றாவது படம். இதற்குமுன் அடுத்த `ஆக்‌ஷன் ஹீரோ பிஜூ', `1983' அமைப்பிலிருந்து இந்தப் படமும் கொஞ்சமும் மாறவில்லை. கதையில் அதிகம் மெனக்கெடாமல் காட்சிமைப்புகளுக்கு மட்டுமே அதிகம் சிரமப்பட்டிருக்கிறார். இவரது அடுத்த படமும் இதே பேர்ட்டனில் இல்லாமல் காட்சியமைப்போடு சேர்த்து கதைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும்பட்சத்தில், முக்கியமான மலையாள இயக்குநராக ஜொலிக்கலாம். 

கதை எதையும் எதிர்பார்க்காமல், கல்லூரி கலாட்டாக்களைப் பார்வையிட கண்டிப்பாக `பூமரம்' செல்லலாம், பூங்காற்றுக்கு கேரண்டி!.