Published:Updated:

பயணம் சிறக்கட்டும்!

பயணம் சிறக்கட்டும்!
பிரீமியம் ஸ்டோரி
News
பயணம் சிறக்கட்டும்!

பயணம் சிறக்கட்டும்!

பயணம் சிறக்கட்டும்!

மீபகால சரித்திரத்தில் எம்.ஜி.ஆரைத் தவிர வேறு யாரையும் அடுத்தடுத்து இரண்டு முறை முதல்வர் பதவியில் அமரவைத்து, தமிழக மக்கள் அழகுபார்த்தது இல்லை. சமகால அதிசயமாக, மீண்டும் ஆட்சியில் அமர்ந்திருக்கிற தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

`படிப்படியாக மதுவிலக்கு...’ என தான் தந்த தேர்தல் வாக்குறுதியின்படி, டாஸ்மாக் கடைகளின் நேரத்தை இரண்டு மணி நேரம் குறைத்து, உடனடியாக 500 கடைகளை மூட முதல்வர் உத்தரவிட்டிருப்பதை, இருகரம் கூப்பி வரவேற்கிறோம். அடுத்தடுத்த நடவடிக்கைகள் மூலம் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூடி, பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் நாளுக்காகக் காத்திருக்கிறது தமிழகம். 

பொதுவாக, யார் ஆட்சிக்கு வந்தாலும் கடன் சுமை, நிர்வாக முறைகேடுகள் என முந்தைய அரசைக் குறைகூறுவது, இதுவரை இருந்து வந்த பழக்கம். இப்போது அப்படிச் சொல்ல முடியாது. கடந்த ஐந்து ஆண்டு காலம் ஆட்சி செய்ததும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆளப்போவதும் ஜெயலலிதாவே. ஆக, தன் முன்னே இருக்கும் சவால்களை முதல்வர் அறிவார்.

பதவி ஏற்ற முதல் நாளே, எளிய மக்களின் துயர்துடைக்க சில நலத் திட்டங்களை அறிவித்திருக்கிறார் முதல்வர். மிக்க மகிழ்ச்சி. ஆனால்,  இவை எல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கான நிதி ஆதாரங்களைத் திரட்டுவது எப்படி?

பொதுவாக, அரசு இயந்திரத்தின் வெளிப்படைத்தன்மை, பொறுப்பேற்கும் குணம், தொலைநோக்குப் பார்வை... இந்த மூன்றும் இல்லாததுதான் கடந்த ஆட்சிக்காலங்களின் ஆகப்பெரிய சிக்கல்கள். இவற்றைக் களைவதே இந்த ஆட்சியின் முன்னுரிமைகளாக‌ இருக்க வேண்டும். அக்கம்பக்கத்து மாநிலங்களான ஆந்திராவும் தெலங்கானாவும் முற்றிலும் நவீன, வெளிப்படையான நிர்வாகத்துக்கு வாசல்களைத் திறந்திருக்கிற நேரம் இது. நாம் படிக்கவேண்டிய பாடமும் அதுவே.

அதே சமயம் ஆற்று மணலோ, தாது மணலோ, கிரானைட் கற்களோ, வனமோ, நீர்நிலையோ இனிமேலும் தனியாரின் சுரண்டலுக்கு இரை ஆகாமல், நம் இயற்கை வளங்களைக் காப்பதில் அரசே முன்நிற்கட்டும். அதற்கு, அரசியல் தலையீடுகளோ, அதிகாரத் துஷ்பிரயோகமோ இல்லாத, தூய்மையான, துடிப்பான, நேர்மையான அரசு இயந்திரமே நம் முழுமுதல் தேவை.

புதிய திட்டங்களைக் கொண்டுவந்து மாநிலத்தின் மின் உற்பத்தித் திறனைக் கூட்ட வேண்டும். அதனால், முடங்கிக்கிடக்கும் தொழிலுக்கும் சுணங்கிக்கிடக்கும் விவசாயத்துக்கும் புது ரத்தம் பாயும்.

அப்போதுதான் புதிய முதலீடுகள் வரும்; புதிய தொழில்கள் வளரும்; வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்; அரசுக்கும் வருவாய் பெருகும். இவை எல்லாம் நிகழ்ந்தால்தான், இதுவரை இருக்கிற கடன் சுமைகள் குறையும். தேர்தல் வாக்குறுதிகளாகத் தந்திருக்கிற ஏராளமான வள நலத் திட்டங்களைச் செயல்படுத்த வழி பிறக்கும்.

இதைத்தான் எதிர்பார்க்கிறது தமிழகம்!  

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz