Published:Updated:

நோ சொல்லுங்க தோழிகளே...

நோ சொல்லுங்க தோழிகளே...
பிரீமியம் ஸ்டோரி
News
நோ சொல்லுங்க தோழிகளே...

பா.விஜயலட்சுமி

நோ சொல்லுங்க தோழிகளே...

`HOW I RAPED YOUR MOTHER’ (`நான் உன் அம்மாவை எப்படி பலாத்காரம் செய்தேன்?’) - இது `கிர்லியப்பா' என்கிற பெண்கள் டீம் எடுத்திருக்கும் குறும்படத்தின் தலைப்பு. அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக, இப்படி ஒரு தலைப்பை வைக்கவில்லை. இன்றைய இந்தியாவின் மிக முக்கியப் பிரச்னை இது. யூடியூபில் வெளியான இந்தக் குறும்படம், அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் நடைபெறும் பாலியல் வன்முறைகளில், கணவனால் மனைவி பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள்தான் மிக அதிகம். பொதுவாக, இந்தியாவில் அன்றாடம் நடக்கும் பாலியல் வன்முறைகளில் 10 சதவிகிதம் கூட வழக்குகளாகப் பதிவாவது இல்லை. இதில் 2.3 சதவிகிதம் என்கிற அளவில்தான், திருமணத்துக்குப் பிறகு கணவரின் பாலியல் வன்கொடுமைகள், வழக்குகளாகப் பதிவாகின்றன.

வீட்டுக்குள்ளேயே நடக்கும் இந்த வகை பாலியல் வன்கொடுமை சம்பவங்களில், குடிப்பழக்கத்தின் தாக்கம் மிகப் பெரியது. குடிக்கு அடிமையான கணவர்கள் தங்களுடைய இயலாமையினாலும், மனைவியின் மீதான சந்தேகப்பார்வையினாலும் தொடர்ச்சியாக பாலியல்ரீதியாக துன்புறுத்தலில் ஈடுபடுகிறார்கள். இதில் படித்தவர், பாமரர் என்கிற பேதமே கிடையாது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
நோ சொல்லுங்க தோழிகளே...

`கணவரின் பாலியல் வன்முறை ‘பலாத்காரம்’ கிடையாது. அது மனைவி மீதான அவரின் தீவிரக் காதல்; அதை வெளிப்படுத்தும் உடல் சார்ந்த நடைமுறை' என்கின்றன நம் உறவுகள். இந்தச் சிக்கலான பிரச்னையை விமர்சிக்கிறது இந்தக் குறும்படம். 

தேவிகா என்கிற பெண், தன் புகுந்த வீட்டில் இருந்து அம்மா வீட்டுக்குத் திரும்ப வருகிறார். காரணம், அவரது கணவரின் பாலியல்  வன்கொடுமை. குடும்பமே ஒன்றுகூடி அவரைச் சமாதானப்படுத்த முயற்சி செய்கிறது. ‘ரேப்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் கோபத்தில் கொதிக்கும் தந்தை, பலாத்காரம் செய்தவர் அவளின் கணவர் எனத் தெரிந்ததும் விழுந்து விழுந்து சிரிக்கிறார். குடும்பமே தேவிகாவைக் கேலிசெய்கிறது. ‘உன் அப்பா என் மேல் வைத்திருக்கும் தீராக் காதலால்தான் நீ பிறந்தாய்’ எனப் பூரிக்கிறார் தேவிகாவின் அம்மா.

தேவிகாவைச் சமாதானப்படுத்திக் அழைத்துச் செல்ல வரும் கணவன், ‘நீ தினமும் மதியம் கத்திரிக்காய் பொரியல் செய்துகொடுக்கிறாய். அது எனக்குப் பிடிக்காது. ஆனாலும், உன் மீது உள்ள காதலால் அதைச் சாப்பிடுகிறேன். இது உனக்காக நான் செய்யும் தியாகம். அதுபோலத் தான் உன் மீது உள்ள தீவிரமான காதலால் நான் அப்படி நடந்துகொள்கிறேன்’ என, தன் செயலுக்கு நியாயம் கற்பிக்கிறார். கணவர் செயலே சரி என தேவிகாவை முடிவெடுக்கச் சொல்கிறார்கள் அவரது குடும்ப உறுப்பினர்கள். இதை வேடிக்கை பார்க்கும் தேவிகாவின் தங்கையிடமும் இந்தக் கருத்தைத் திணித்துவிடுகிறார்கள் என்பதுதான் இந்தக் குறும்படம் சொல்லும் இன்னொரு கோணம்.

நோ சொல்லுங்க தோழிகளே...

இந்தக் கதையை கேலியும் கிண்டலும் கலந்து உருவாக்கியிருந்தாலும், திருமணத்துக்குப் பிறகு பலாத்காரம் என்பது சிரிக்கக்கூடிய விஷயம் அல்ல என்பதை வலுவாகச் சொல்கிறது படத்தின் கதை. ‘பெண்களே... உங்களுக்கு கணவருடன் உடலுறுவுகொள்வதில் விருப்பம் இல்லை என்றால், அதைத் தைரியமாகச் சொல்லுங்கள்’ என்கிறது இந்தக் குறும்படம்.

`வரதட்சணைக் கொடுமை, குழந்தைத் திருமணம், குழந்தைத் தொழிலாளர்கள் என  சமூகம் சார்ந்த பல பிரச்னைகளுக்கும் புகார் அளிக்க, ஒரு குறிப்பிட்ட தொலைபேசி எண் வைத்திருக்கும் நாம், மனைவி என்னும் உரிமையில் கணவனால் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்காக ஏன் குரலை உயர்த்துவது இல்லை?' என்கிற கேள்வியை எழுப்புகிறது கிர்லியப்பா  குழு.

`‘எனக்கு இந்தியச் சட்டத்திட்டங்கள் பற்றி அவ்வளவாகத் தெரியாது. ஆனால், நாம் எல்லோரும் சாதாரண மனிதர்கள். பெண்கள் குறித்த பார்வை நமக்கு எப்போது தெளிவாகிறதோ, அப்போதுதான் அவர்களும் தங்களை மதிப்புக்கு உரியவர்களாக உணரத் தொடங்குவார்கள். சமுதாயத்தில் பெண்களின் பிரச்னைகளை கலாசாரத் துடைப்பத்தால் கூட்டித் தள்ளுவதை விட்டுவிட்டு அதற்கான தீர்வைத் தேட வேண்டும். அதற்கான சிறிய முயற்சிதான் இந்தக் குறும்படம்’’ என்கிறார் இதன் வசனகர்த்தா ரத்னபாலி பட்டாசார்ஜி!

இந்தக் குறும்படத்தை யூடியூபில் காண - www.youtube.com/watch?v=xLLxUvdmQpw