Published:Updated:

பைக்... பவர்... பெண்கள்!

பைக்... பவர்... பெண்கள்!
பிரீமியம் ஸ்டோரி
News
பைக்... பவர்... பெண்கள்!

சார்லஸ், படங்கள்: கே.ராஜசேகரன்

பைக்... பவர்... பெண்கள்!

ரு பெண் தனியாக பைக் ஓட்டிப்போவதையே துருக்கி வரைக்கும் திரும்பிப் பார்க்கிற நம்ம ஊர்ல, ஒரு டஜன் பொண்ணுங்க ஒரே நேரத்துல பைக் ஓட்டிட்டுப்போனா எப்படி இருக்கும்? அதுவும் ஸ்போர்ட்ஸ் பைக்குகளில் டாப் கியரில் பறந்தால்... `பைக்கர் பேப்ஸ்' என தமிழகத்தின் முதல் பெண்கள் பைக் கிளப்பாகப் பட்டையைக் கிளப்பும் தோழிகளைச் சந்தித்தேன்.

‘`சின்ன வயசுல இருந்தே பைக் ரொம்பப் பிடிக்கும். எங்க தாத்தா பைக்லதான் முதல்ல ஓட்டக் கத்துக்கிட்டேன். யார் எங்க வீட்டுக்கு பைக்ல வந்தாலும், அந்த பைக்கை எடுத்து, ஒரு ரவுண்ட் ஓட்ட ஆரம்பிச்சுடுவேன். அதுவும் லாங் ரைடு போக ரொம்பப் பிடிக்கும். ராயபுரத்துல என் வீடு. பைக்ல ரொம்ப தூரமாப் போகணும்கிறதுக்காகவே செங்கல்பட்டு தாண்டி இருக்கிற ஆண்டாள் அழகர் காலேஜ்ல சேர்ந்தேன். யமஹா FZ பைக்தான் என் முதல் பைக். பெண்கள் ஏரோப்ளேன் ஓட்டுற இந்தக் காலத்துலேயும், பைக் ஓட்டினா விநோதமாப் பார்க்கிற பழக்கம் நம்ம ஊர்ல இன்னும் இருக்கு.

அதனால் சென்னையில் பைக் ஒட்டுற பொண்ணுங்களோட ஃப்ரெண்ட் ஆகணும்னு தோணுச்சு. ஃபேஸ்புக்ல `பைக்கர் பேப்ஸ்'னு ஒரு பேஜ் ஆரம்பிச்சேன். முதல் லைக் வழக்கம்போல பசங்ககிட்ட இருந்துதான் வந்தது. அப்புறம் வந்தவங்கதான் ஷ்வேதா. பைக் ஓட்டுறது, அதுவும் லாங் ரைடு போறதுனா செம குஷி.  நான் யமஹா FZ பைக், அவங்க ஆர்15 ஸ்போர்ட்ஸ் பைக். ரெண்டு பேரும் பெங்களூருல நடந்த யமஹா மீட்டுக்கு ரைடு போனோம். அங்கே எடுத்த புகைப்படங்களை எங்க ஃபேஸ்புக் பக்கத்துல போட்டதும் ஏகப்பட்ட லைக்ஸ், மெசேஜஸ் வர ஆரம்பிச்சது” என உற்சாகமாகிறார் செளந்தரி என்கிற சிண்டி. சென்னை இருங்காட்டுக்கோட்டையில் நடைபெற இருக்கும் தேசிய பைக் ரேஸ் போட்டியில் கலந்துகொள்ளத் தயாராகிற சிண்டி,  பைக் ஸ்டன்ட்ஸிலும் கில்லி. சிண்டிக்குத் திருமணமாகி ஒரு வயதில் குழந்தை இருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
பைக்... பவர்... பெண்கள்!

``என் கணவர் அனந்த்ராஜ், பைக் ரேஸ் சாம்பியன். இதுவரை மூன்று முறை சாம்பியன்ஷிப் ஜெயிச்சிருக்கார். நாங்க லவ் மேரேஜ். அதனால என் ஆர்வம் அவருக்கு நல்லாவே தெரியும்.  கர்ப்பமாக இருந்தபோதும் சரி, குழந்தை பிறந்த பிறகும் சரி, பைக் ரைட்ஸுக்கு பிரேக் விடவே இல்லை’’ என்கிறார் ஸ்டைலாக.

பைக்கர் பேப்ஸில் 25  இளம்பெண்கள் உறுப்பினர்கள். ஞாயிறுகளில் லாங் ரைடு கிளம்புகிறார்கள்.

``எங்கள் பைக் ரைடு பெரும்பாலும் 150 கிலோமீட்டருக்குள்தான் இருக்கும். அடிக்கடி முதலியார்குப்பம் வரை போவோம். அங்கேதான் சூப்பர் பைக் கிளப்புகளில் இருந்து, 1,000 சிசி பைக்குகளில்  வருவாங்க. அந்த பைக்குகளை ஓட்டணுங்கிறதுதான் எங்க அடுத்த டார்கெட். 500 சிசி பைக்ஸ் வரைக்கும் ஓட்ட ஆரம்பிச்சிட்டோம். 1,000 சிசி பைக்லயும் தெறிக்கவிடுவோம்’’ என்கிறார் ஆன் ஜெனிஃபர். இவரும் தேசிய பைக் ரேஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்குத் தயாராகிறார்.

‘`அமெரிக்காவில் `அயர்ன் பட்’ அசோசியேஷன்னு ஒரு அமைப்பு இருக்கு.

24 மணி நேரத்தில் 1,600 கி.மீ தூரம் பைக் ஓட்டி முடித்தால் சேடில்ஸோர் என்கிற பிரிவில் சாதனைச் சான்றிதழ் தருவாங்க. இந்தச் செய்தியை முதன்முதலில் மோட்டார் விகடனில்தான் படித்தேன். எனக்கும் `அயர்ன் பட்’ ஆசை வந்தது. கிளப்ல இருக்கிற பிரியங்கா, மது, பூஜான்னு மத்த ஃப்ரெண்ட்ஸோடு பேசிட்டு ரூட் மேப் போட்டேன். சென்னையில் இருந்து பெங்களூரு, அங்கிருந்து புனே, மறுபடியும் புனே டு சென்னை இதுதான் ரூட். போன வருடம் ஆகஸ்ட் 30-ம் தேதி நள்ளிரவு 2 மணிக்கு என்னோட ஆர்15 பைக்ல கிளம்பினேன். நான் கிளம்பிய நேரம் சரியான மழை. 90-100 கி.மீட்டர் வேகத்தில் பைக் ஓட்ட ஆரம்பித்தேன். நள்ளிரவு என்பதால் லாரி, பஸ்கள் தவிர பெரிதாக எந்த வண்டிகளும் இல்லை. ஹெல்மெட்டுக்குள் ஊஸ்ஸ்ஸ்னு ஒரே சத்தம். அதைக் கேட்டுக்கிட்டே பிரேக் இல்லாமல் பைக் ஓட்டினது ரொம்ப வித்தியாசமான அனுபவம்.  ஏதோ தியானம் பண்ற மாதிரி உணர்வு. போகும் வழியில் பெட்ரோல் நிரப்பும் பில்களை வைத்துதான் இந்தப் பயண தூரத்தையும் நேரத்தையும் நிரூபிக்க முடியும். ஆனால், தொடர்மழை காரணமா சில பில்கள் அழிஞ்சிருச்சு. அதனால் என்னால அயர்ன் பட் சாதனையை  நிரூபிக்க முடியலை. ஆனா, அந்த அனுபவம் அற்புதம்'' எனச் சிலிர்க்கிறார் ஷ்வேதா.

``இந்தியா முழுக்க பைக்ல சுத்திவரணும். மொத்தம் 120 நாட்கள் பயணம். பைக் இருக்கிற யார் வேண்டுமானாலும் என்கூட இந்தப் பயணத்துக்கு வரலாம். ஆனால் கேர்ள்ஸுக்கு மட்டுமே அனுமதி'' என ஸ்மைலி போடுகிறார் ஷ்வேதா.

பைக்... பவர்... பெண்கள்!

‘`எங்க டீம் டேக்லைன் ‘வி ரைடு ஸ்மார்ட் அண்ட் சேஃப்’ என்பதுதான். ரோட்ல 99 சதவிகிதம் பசங்கதான் பைக் ஓட்டுறாங்க. இன்னும் நம்ம ஊர்ல பைக்கை எப்படி ஓட்டுறதுன்னே யாருக்கும் தெரியலை. ஓவர் ஸ்பீட்ல கன்னாபின்னானு ஓட்டுறது, ஸிக்ஸாக் ரைடு பண்றது, ராஷ் டிரைவ் பண்ணி மத்த வண்டி மேல மோதுறதுனு சில பசங்க பண்ணுற அட்ராசிட்டிகள் தாங்க முடியலை.

 பெண்கள்கிட்ட அதுமாதிரி எந்த விஷயமும் இருக்காது. கிளவுஸ், ஜெர்க்கின், ஹெல்மட் இல்லாமல் நாங்கள் பைக்கைத் தொடுவதே இல்லை. ஓவர்ஸ்பீடு பண்ணா எங்க டீம்ல யாருமே இருக்க முடியாது. ஸ்பீடா பறக்கணும்னு தோணுதா... அப்போ வாங்க ரேஸ் ட்ராக் போய், ரேஸ் கத்துக்கலாம்னு கிளம்பிடுவோம்’’ என்கிறார் பூஜா.

``என் ப்ரெண்ட்ஸ் எல்லாம் `காலேஜுக்கு எப்படி வர்றீங்க... ஸ்கூட்டியா, ஆக்டிவா?'னுதான் கேப்பாங்க. நான் 500 சிசி என்ஃபீல்டு புல்லட்ல வர்றேன்னு சொன்னதும், கொஞ்சம் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. பைக் ஓட்டுறது எங்களுக்கு ஸ்கூட்டர்களை ஓட்டுறதைவிட ஒரு பெரிய கான்ஃபிடன்ஸ் கொடுக்குது. ஸ்கூட்டியில் போகும்போது எல்லாம், நிறையப் பசங்க பக்கத்துல வந்து ஹார்ன் அடிக்கிறது, முன்னால கட் கொடுக்கிறதுனு சில்மிஷம் பண்ணுவாங்க. புல்லட் ஓட்ட ஆரம்பிச்சப் பிறகு, என் முன்னால் அப்படி எந்தப் பையனும் வர்றது இல்லை” என்கிறார் பிரியங்கா.

சீக்கிரமே சூப்பர் பைக்கில் பறக்க வாழ்த்துகள் கேர்ள்ஸ்!