Published:Updated:

பாபா பிசினஸ்!

பாபா பிசினஸ்!
பிரீமியம் ஸ்டோரி
News
பாபா பிசினஸ்!

விகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப் கான்

பாபா பிசினஸ்!

டந்த ஆண்டு மேகி நூடுல்ஸுக்குத் தடைவிதிக்கப்பட்ட சில நாட்களில், பத்திரிகைகளை ஒரு விளம்பரம் அலங்கரித்தது. `சுத்தமான, உண்மையான, சிறந்த நூடுல்ஸ் ‘பதஞ்சலி நூடுல்ஸ்’ ' என்றது அந்த விளம்பரம். இந்தப் புதிய பதஞ்சலி பிராண்ட், பரபரப்புச் சாமியார் பாபா ராம்தேவுக்குச் சொந்தமானது. இந்த விளம்பரங்களைக் கண்ட சமூக வலைதள இளைஞர்கள் உடனுக்குடன் பாபா ராம்தேவைக் கேலிசெய்து மீம்ஸ்களால் வெளுத்துவாங்கினர். ஆனால், இந்த ஒரு வருடத்தில் இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனமாக மாறியிருக்கிறது பதஞ்சலி.

5,000 கோடி ரூபாய் சாம்ராஜ்ஜியமாக மாறி நிற்கிறது. இதற்குப் பின்னால் இருப்பது, ஆன்மிகமும் அரசியலும் கலந்த விசித்திரமான ஒரு கூட்டணி.

நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சோப், பேஸ்ட், ஷாம்பு, நறுமணப் பொருட்கள், எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய FMCG (Fast Moving Consumer Goods)சந்தையின் மதிப்பு, இந்தியா போன்ற வளரும் நாட்டில் மிகப் பிரமாண்டமானது. நாம் டி.வி-யில் பார்க்கும் 60 சதவிகித விளம்பரங்கள் இந்த FMCG பொருட்களுக்கானவைதான். கார், பைக் வாங்குவதுபோல, வீடு, நகை வாங்குவதுபோல... இந்தப் பொருட்களுக்கான செலவு சட்டென நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த வகைப் பொருட்களுக்காக நம் குடும்பம் ஒவ்வொன்றும் மாதம்தோறும் ஆயிரக்கணக்கில் செலவழிக்கிறது.

அதனாலேயே பல பிரமாண்டப் பொருட்களைக் காட்டிலும் FMCG பொருட்களுக்கான லாப விகிதம் நாம் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிக அதிகம். இந்தக் காரணத்தினால்தான் நெஸ்லே, இந்துஸ்தான் லீவர், ஐடிசி, பி அண்ட் ஜி எனப் பல பன்னாட்டு நிறுவனங்களும் இந்தத் துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய்கள் லாபம் எடுத்து, பல ஆண்டுகளாக இந்தியாவில் கோலோச்சி வருகின்றன. ஒவ்வொரு நாளும் பல நூறு கோடிகளை விளம்பரத்துக்காக மட்டுமே செலவழிக்கின்றன.

ஆனால், கடந்த ஒரே ஆண்டில் இந்த நிலையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த இந்திய FMCG துறையையும் ஆட்டம்காணவைத்திருக்கிறது, ‘பதஞ்சலி’ என்ற ஒற்றைச் சொல். இத்தனை ஆண்டுகாலமாகக் கோலோச்சிவந்த பகாசுர நிறுவனங்களான ஐடிசி, இந்துஸ்தான் லீவர், புராக்டர் அண்ட் கேம்பிள்களுக்கு எல்லாம் சரிநிகராக, விதவிதமான பொருட்களை நாடு முழுக்கக் களம் இறக்கி, இந்திய FMCG துறையின் பெரும்பங்கை தனதாக்கி இருக்கிறது பதஞ்சலி ஆயுர்வேதிக் லிமிடெட். நுகர்வோர் சந்தையில் ஒரு சாமியாரின் வரவும், அவருடைய ஆதிக்கமும் பெரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளன.

பாபா பிசினஸ்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

புகழ்பெற்ற மற்றோர் இந்தியச் சாமியாரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், ‘ஸ்ரீஸ்ரீ ஆயுர்வேதா’ என்ற பெயரில் ஆயுர்வேதப் பொருட்களை 2003-ம் ஆண்டில் இருந்தே தயாரித்துவருகிறார். இவருக்கு முன்னர் 1997-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது, பாபா ராம்தேவின் ‘பதஞ்சலி ஆயுர்வேதா’. ஹரித்வாரில் தொடங்கப்பட்ட சிறிய பார்மசி இது. கடந்த சில ஆண்டுகள் வரைக்குமே ஒரேவிதமான பொருட்களைத்தான் இவர்களின் இரு நிறுவனங்களும் தயாரித்துவந்தன. எல்லாமே ஆயுர்வேதம் சார்ந்த மருந்துப்பொருட்கள்தான். ஆனால், இன்றைய தேதியில் பாபா ராம்தேவின் `பதஞ்சலி', ஸ்ரீஸ்ரீ நிறுவனத்தை பல மடங்கு முந்திச்சென்றுவிட்டது. 

பதஞ்சலி ஆயுர்வேதிக் லிமிடெட் நிறுவனம், உத்தர்காண்ட் மாநிலம் ஹரித்துவாரில் இருந்து இயங்குகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர், அதாவது 2011-12 காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் ஆண்டு வருவாய் 453 கோடி ரூபாய். 2015-16 ஆண்டில் 5,000 கோடி ரூபாய். ஐந்தே ஆண்டுகளில் 10 மடங்கு வளர்ச்சி. இப்போது 450 வகையான உணவுப் பொருட்களை இந்த நிறுவனம் விற்பனை செய்துவருகிறது. எல்லாமே ஆயுர்வேதப் பின்னணிகொண்டவை என்றே சந்தைப்படுத்தப்படுகிறது. உணவுப் பொருட்கள் மட்டும் அல்ல, உடல் நலன் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான 300 வகையான பொருட்களை விற்பனைசெய்கிறது பதஞ்சலி. இவையும் ஆயுர்வேதம்தான்.

பாபா ராம்தேவ், இத்துடன் நிற்கவில்லை. `சௌந்தர்யா' என்ற பெயரில் அழகு சாதனப் பொருட்களைக் கொண்டுவர இருக்கிறார்.

‘2017-ம் ஆண்டில் பதஞ்சலி நிறுவனம் சார்பாக இந்தியா முழுக்க 2,500 மெகா ஸ்டோர்களைத் திறக்கத் திட்டமிட்டிருக்கிறோம்' என்கிறார் பதஞ்சலி நிறுவனத்தின் தலைமை விற்பனை அதிகாரியான தேஜ் கட்பிட்டியா. பொருளாதாரச் சந்தையில் அதிவேகத்தில் செல்லும் பதஞ்சலி நிறுவனம், 2020-ம் ஆண்டுக்குள் 20,000 கோடி ரூபாய் நிறுவனமாக முன்னேற வேண்டும் என உழைக்கிறது.

`கோல்கேட்டின் கேட்டை மூடுவோம், நெஸ்லே பறவையைக் காணாமல்போகவைப்போம், இரண்டே ஆண்டுகளில் யூனிலிவரின் லிவர் கெட்டுப்போகும்’ என, கடந்த ஏப்ரலில் கொக்கரித்தார் பாபா ராம்தேவ். இந்த ஆண்டு ஐந்து மாநிலங்களில் உற்பத்திக்கூடங்களை அமைப்பதற்காக 1,000 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது பதஞ்சலி. ‘நாங்கள் சென்ற ஆண்டு மட்டுமே 8 முதல் 12 சதவிகிதம் வரை லாபம் ஈட்டியிருக்கிறோம். இது தொடக்கம்தான். இனி நுகர்வோருக்கு மத்தியில் எங்கே எல்லாம் பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கின்றனவோ, அங்கே எல்லாம் நுழைவோம். அவர்களுடைய சந்தைத் தந்திரங்களை முறியடிப்போம்’ என்றும் இந்த ஆண்டு தொடக்கத்தில் கூறியிருந்தார் பாபா ராம்தேவ்.

பாபா பிசினஸ்!

கடந்த ஆண்டு நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ், பெரும் சர்ச்சையில் சிக்கி விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டபோது, அதை சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்திக்கொண்டது பதஞ்சலி. உடனடியாகக் களம் இறங்கிய பதஞ்சலி நிறுவனம், ‘பதஞ்சலி ஆட்டா நூடுல்ஸ்’ஐ அறிமுகப்படுத்தியது. அடுத்தடுத்து வெவ்வேறு விதமான பொருட்களையும் ஆட்டத்துக்குக் கொண்டுவந்தது. இதனால், பெரிய பாதிப்பைச் சந்தித்தது நெஸ்லே. 2014-ம் ஆண்டு 9,854 கோடியாக இருந்த நெஸ்லே நிறுவனத்தின் விற்பனை, 2015-ம் ஆண்டு 8,175 கோடியாகச் சரிந்தது.

‘தான்த் கந்தி’ என்ற பெயரில் வெளிவரும் பதஞ்சலியின் டூத்பேஸ்ட், கடந்த நிதியாண்டில் 450 கோடி ரூபாய்க்கு விற்றுள்ளது. இது இந்தியாவின் மொத்த டூத்பேஸ்ட் சந்தையில்
ஐந்து சதவிகிதம். இதே நிதியாண்டு காலத்தில்தான், இந்திய டூத்பேஸ்ட் துறையின் தாதாவாக இருக்கும் கோல்கேட், பாமாலிவ் நிறுவனம், தனது விற்பனையின் 0.6 சதவிகிதத்தை இழந்துள்ளது. அதாவது பதஞ்சலியின் டூத்பேஸ்ட், கோல்கோட்டின் விற்பனைச் சந்தையில் நேரடியாகக் கைவைக்கிறது. இது அடுத்த ஆண்டுகளில் இன்னும் அதிகரிக்கும்.

பதஞ்சலியின் வெற்றிக்குக் காரணமாக நிறைய விஷயங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால், அதில் மிக முக்கியமானது, இதுவரை இல்லாத புதிய வகையான மார்க்கெட்டிங் உத்தி. இந்தியக் கலாசார வளர்ச்சி, சுதேசி ஆதரவு, ஆயுர்வேதப் பெருமை, மதம் சார்ந்த மார்க்கெட்டிங் என, பன்னாட்டு நிறுவனங்களால் தொட முடியாத விஷயங்களைத் தொடர்ச்சியாகத் தொட்டது.

பாபா பிசினஸ்!

பதஞ்சலியின் முகம், ஒரு கிரிக்கெட் வீரனுடையதோ அல்லது பாலிவுட் நடிகருடையதோ அல்ல. தவ வாழ்வு வாழும் அப்பழுக்கற்ற ஒரு சாமியாருடையது. அவர் அப்படிப்பட்டவரா என்பதில் பிரச்னைகள்  உண்டு. அவர் பல ஆயிரம் கோடி ரூபாய் சாம்ராஜ்ஜி யத்தின் தலைவராக இருந்தாலும், காவி உடை உடுத்திய ஓர் எளிய யோகியாகவே மக்கள் மனதில் பதியவைக்கப்பட்டிருக்கிறார். அவர் யோகாவின் வழியாக இந்தியா முழுக்க உருவாக்கிவைத் திருக்கும் நற்பெயர், இந்த பிராண்ட் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவுகிறது.

பாபா பிசினஸ்!

பதஞ்சலி நிறுவனம், மற்ற பன்னாட்டு நிறுவனங்களைப்போல விளம்பரங்களுக்காக கோடிகளைக் கொட்டுவது இல்லை. அந்த நிறுவனத்துக்கான பிராண்டிங், அட்வர்டைஸிங் எல்லாமே பக்தகோடிகள்தான். அவர்களின் வழியே ஏற்கெனவே தங்களுக்கு இருக்கும் `நல்லவன்' இமேஜ் மூலம், தங்களுடைய பொருட்களும் தரமானவை என்கிற செய்தியைப் பரப்புகிறார்கள். தங்களுடைய யோகா வகுப்புகளின் வழியே உணவுப் பொருட்களைச் சந்தைப்படுத்துகிறார்கள். விளம்பரச் செலவுகள் இல்லை என்பதாலேயே, தன்னுடைய பொருட்களை மற்ற நிறுவனங்களைவிட குறைந்த விலைக்குத் தர முடிகிறது.  இவற்றின் தரமும் எந்தவிதமான குறையும் சொல்லமுடியாதபடி நன்றாகவே இருக்கிறது.

இந்தியா முழுக்கப் பரவிவரும் உடல்நலன்  குறித்த கவலை, பதஞ்சலிக்குப் பொக்கிஷமாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, அலோபதி மருத்துவம் குறித்த அச்சமும், இந்தியாவின் பாரம்பர்ய மருத்துவம் குறித்த மக்களின் ஈர்ப்பும் அந்த நிறுவனத்தின் சந்தையை வலுவாக்கியுள்ளன. ஆர்கானிக் விளைபொருட்களைச் சாப்பிடுவதையும், இயற்கை உணவுகளை நோக்கி நகர்வதையும் இன்றைய நகரவாசிகள் பெருமைமிகு விஷயமாகக் கருத ஆரம்பித்திருப்பதும் பதஞ்சலியின் வளர்ச்சிக்குக் காரணமாக இருக்கிறது. இதற்கு எல்லாம் மேல் பதஞ்சலிக்கு இருக்கும் பெரிய அட்வான்டேஜ்... மத்தியில் ஆளும் மோடி அரசு.

மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகுதான் பதஞ்சலி மிக வேகமாக வளரத் தொடங்கியது என்கிறார்கள். சென்ற ஆண்டு இந்தியாவின் ராணுவ ஆய்வு நிறுவனமான DRDO, அது தயாரிக்கும் பொருட்களை பதஞ்சலியின் வழியே விற்பதற்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டது. அந்தச் சமயத்தில் நாடு முழுக்க இது பெரிய அளவில் விமர்சிக்கப்பட்டது. ஆனால், பதஞ்சலி அதைப் பற்றி கவலைப்படவில்லை. இன்று DRDO-வின் 50 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை வாங்கி விற்றுக்கொடுக்கிறது பதஞ்சலி.

பாபா பிசினஸ்!

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பாபா ராம்தேவின் மீது 250-க்கும் அதிகமான வழக்குகள் தொடர்ச்சியாகப் பதிவாகியுள்ளன. காங்கிரஸ் ஆண்டுகொண்டிருந்த காலகட்டத்தில் கறுப்புப்பணத்தை ஒழிப்போம், ஊழலை ஒழிப்போம் எனத் தொடர்ந்து பேசிவந்தவர் பாபா ராம்தேவ். ஆனால், மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பாபா ராம்தேவ் இந்த ஊழல் ஒழிப்பு, கறுப்புப்பணப் பறிமுதல்களை எல்லாம் நிறுத்திவிட்டார். அவருடைய கவனம் இப்போது வியாபாரத்தில் மட்டும்தான் இருக்கிறது. கூடவே அவர் ஆளும் பா.ஜ.க-வுடன் தொடர்ச்சியாக நட்பைப் பேணுகிறார்.

ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். ஜக்கிவாசுதேவ் `ஈஷா' மூலம் சிறியதாக ஏற்கெனவே பிசினஸ் செய்துகொண்டிருக்கிறார். இன்னும் பலர் திட்டமிட ஆரம்பித்துவிட்டனர். பதஞ்சலியின் வெற்றி, இந்தியாவின் பிற சாமியார்களையும் நிச்சயம் ஈர்க்கும். அவர்களையும் இந்த FMCG சந்தையை நோக்கி அழைத்துவரும். இனி இந்த ஆட்டத்தின் போக்கு, சாமியார்களின் பிடியில்!