
வெள்ளரிக்காய் மேஜிக்!

“டல் சருமம், இந்த வெயில்லயும் சும்மா டாலடிக்கணுமா... அப்போ வெள்ளரிக்காய் செய்யும் மேஜிக்கை ட்ரை பண்ணிப் பாருங்களேன். சருமத்துக்கு ஆரோக்கியமான அழகை வழங்குவதில் வெள்ளரிக்காய்க்கு நிகரானது அதுவேதான். எல்லா சீஸனிலும் கிடைக்கக்கூடிய மற்றும் எல்லோராலும் எளிதில் வாங்கக்கூடிய வெள்ளரிக்காய்தான் இந்த இதழ் பியூட்டி பகுதிக்கான பொருள்'' எனும் அழகுக்கலை நிபுணர் ராஜம் முரளி அளிக்கும் பியூட்டி டிப்ஸ் இதோ...
இயற்கை சருமத்தை மீட்க...
வெள்ளரிக்காயின் தோல் மற்றும் விதைகளை நீக்கிவிட்டு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்து ஜூஸாக்கவும். இதை வடிகட்டியின் மூலம் வடிகட்டிவிட்டு, மறுபடியும் ஒரு காட்டன் துணியில் வடிகட்டவும். மிகமிக தெளிவான இந்த வெள்ளரி சாற்றை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, குறைந்தது பதினைந்து நிமிடங்கள் ஊறவிடவும். உலர்ந்ததும் ஜில் தண்ணீரில் கழுவவும். இதை தினமும் ஒருமுறை செய்வதனால், பாதிக்கப்பட்ட சருமம் மீண்டும் இயற்கை நிலையை அடையும்.
பிளாக் ஹெட்ஸ் நீக்கும் மிக்ஸ்!
ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு தயிர் மற்றும் வெள்ளரிக்காய் சாற்றை சரிசமமான விகிதத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனை பீட்டர் (beater) அல்லது ஸ்பூனால் நன்கு அடித்துக் கலக்கவும். இந்தக் கலவையை கண் இமைகளுக்கு மேல் மற்றும் உதடுகள் என முகம் முழுவதும் தடவவும். 15 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரால் கழுவவும். தினசரி காலை மற்றும் இரவு என தொடர்ந்து செய்துவந்தால் மூக்கின் ஓரங்களில் தங்கும் கரும்புள்ளிகள் காணாமல் போகும்; முகம் பளிச்சென மாறும்.
பளிங்கு முகத்துக்கு!

வெள்ளரிக்காய் சாறு இரண்டு ஸ்பூன், எலுமிச்சைச் சாறு இரண்டு ஸ்பூன், இதனுடன் சந்தனத்தூள் மற்றும் முல்தானிமட்டி தூள் தலா இரண்டு ஸ்பூன்... இவற்றை ஒன்றாகக் கலந்து கண்களைச் சுற்றியுள்ள பகுதிகள் தவிர்த்து முகம் முழுவதும் தடவி, பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இது சருமத்தில் அளவுக்கு அதிகமாக சுரக்கும் எண்ணெய்ப் பசையை நீக்கி, தேவையான எண்ணெய் மற்றும் ஈரப்பதத்தை தக்கவைத்து சருமத்தை பளிங்குபோல மாற்றும்.
முகம் கறுக்காமல் இருக்க...
வெள்ளரிக்காய் சாறு, தயிர், தூளாக்கிய ஓட்ஸ், இவற்றில் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்துக்கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி, பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு கழுவவும். இதை தினமும் தொடர்ந்து செய்துவந்தால், வெயில் மற்றும் மாசுக்களால் முகம் கறுப்பதை தவிர்க்கலாம்.
சுருக்கமில்லா சருமத்துக்கு...
பொதுவாக உலர்ந்த சருமத்தினருக்கு சருமத்தில் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு சுருக்கங்கள் நிறைந்திருக்கும். எலுமிச்சைச் சாறு இரண்டு ஸ்பூன், வெள்ளரிக்காய் சாறு இரண்டு ஸ்பூன்... இவற்றுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து நன்கு அடித்துக் கலக்கிக்கொள்ளவும். இதனை முகத்தில் தடவி, உலர்ந்ததும் கழுவிவிடவும். இதனால் சுருக்கங்கள் குறைவது மட்டுமல்லாமல், தளர்ந்த சருமம் இறுக்கமாகும்.
அலைபாயும் கூந்தலுக்கு!
இருமுறை வடிகட்டப்பட்ட வெள்ளரிக்காய் சாற்றை தலையில் மண்டைப் பகுதியில்படுமாறு தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் கழித்து ஷாம்பு எதுவும் போடாமலே தலையை அலசவும். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு இதை செய்து வந்தால், வெயிலினால் முடி வறண்டு போகாமல் எப்போதும் ஆரோக்கியமாக அலைபாயும்.
ஐந்து பிரச்னைகள்... ஒரே தீர்வு!
கண்களின் கருவளையம், கை கால் மூட்டுகளின் கருமை, கழுத்து பகுதியில் ஏற்படும் வரிகள், முக வீக்கம், மகப்பேற்றுக்கு பிறகு வயிற்றின் மேல் தோன்றும் ஸ்ட்ரெச் மார்க்ஸ்... இந்த ஐந்து பிரச்னைகளுக்கும் தினசரி வெள்ளரியை அரைத்தெடுத்த
சாற்றை தடவி வந்தாலே போதும். நாளடைவில் பிரச்னை காணாமல் போகும்.
இந்துலேகா.சி