Published:Updated:

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் சூப்பர்ஹீரோ நாய்கள்... காமிக்ஸில் வராத கதாநாயகர்கள்!

பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் சூப்பர்ஹீரோ நாய்கள்... காமிக்ஸில் வராத கதாநாயகர்கள்!
பனிச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் சூப்பர்ஹீரோ நாய்கள்... காமிக்ஸில் வராத கதாநாயகர்கள்!

1982-ம் ஆண்டு. கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்திருக்கும் ஒரு பனிமலை. ஆன்னா ஆலனுக்கு (Anna Allen) அப்போது 22 வயது. சாகச விரும்பி. அதனால்தான் அவருக்குக் கிடைத்த எத்தனையோ வேலைகளை உதறித் தள்ளிவிட்டு, ஆபத்து நிறைந்த இந்தப் பனிமலைப் பகுதியில் வேலைக்கு வந்துள்ளார். இவர் வேலை செய்வது பனிச்சறுக்கு விளையாட்டினை (Skiing) ஏற்பாடு செய்யும் ஒரு நிறுவனத்தில். அன்று வாடிக்கையாளர்கள் யாரும் இல்லை.

ஆன்னா ஆலன்

அங்கிருந்த சில நண்பர்களோடு பேசிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் இருந்தார் ஆன்னா. ஒரு கட்டத்தில் பனிச்சறுக்கு விளையாட்டிற்குக் கிளம்பலாம் என்று நண்பர்கள் முடிவு செய்கிறார்கள். அதற்கான பிரத்யேக உடைகளை எடுக்க , கட்டடத்தின் உள்ளே தனக்காகக் கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு லாக்கரை நோக்கி நடக்கிறார் ஆன்னா. அதை அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
திடீரென, ஏதோ ஒரு பெரிய சத்தம் பின்னணியில் கேட்டது. என்ன, ஏது என்று ஆன்னா பார்ப்பதற்குள் அந்தப் புகை அவரைச் சூழந்தது. உடல் சில்லிட்டது. அவ்வளவுதான் அவருக்குத் தெரிந்தது. மயங்கிவிட்டார். 20 மணி நேரம் ஆகியிருக்கலாம். லேசாகக் கண் திறந்து பார்த்தார் ஆன்னா.

சில இரும்புப் பெட்டிகள், அந்தப் பனி அவரின் முகத்தை மூடாமல் காத்து நின்றன. மற்றபடி எங்குமே நகர முடியாத நிலை. ஆன்னாவுக்குப் புரிந்தது தான் மிகப்பெரிய பனிச் சரிவில் (Avalanche) மாட்டியிருக்கிறோம் என்று. நாள்களை, நிமிடங்களை, நொடிகளை எண்ணத் தொடங்கினார். தன் நாக்கினால் தொட முடிந்த தூரத்தில் இருந்த சில அழுக்குகளை இழுத்து உணவாக எடுத்துக்கொண்டார். ஒரு சொட்டுத் தண்ணீர் கிடைக்கவில்லை. உயிர் மட்டும் மிச்சமிருந்தது. அது ஐந்தாவது நாள். வெளியே ஆன்னாவைத் தேடும் முயற்சிகள் நடந்துகொண்டிருந்தன. நிச்சயம் அவர் உயிரோடு இருக்க மாட்டார் என்றே அனைவரும் நம்பினார்கள். குறைந்தபட்சம் அவர் உடலையாவது மீட்க வேண்டும் என்று நினைத்தனர். இறுதி முயற்சியாக அந்த 'மீட்பு நாயை' (Rescue Dog) கொண்டு வந்தார்கள். அரை மணி நேரத்திற்குள்ளாக ஓர் இடத்தைக் கண்டுபிடித்தது. அதைத் தன் மூக்கால் துளைத்தது. கால்களைப் போட்டு கிளறியது. அந்த இடத்தைத் தோண்டினார்கள். அங்கு ஆன்னா மயக்கமடைந்த நிலையில் இருந்தார். அங்கிருந்து அவரை மீட்டெடுத்தார்கள்.

இடது காலின் பாதங்கள் அறுத்தெடுக்கப்பட்டன. வலது கால் மூட்டிற்குக் கீழ் அனைத்தும் வெட்டியெடுக்கப்பட்டன. இதோ... இன்று 58 வயதில் இன்னும் அதே பகுதியில், அதே வேலையில் இருக்கிறார். இன்றும் அந்த 'மீட்பு நாய்களுக்கு' நன்றிக்கடன் பட்டவளாக வாழ்ந்து வருகிறார்.

பனிமலைகளில் ஏற்படும் பனிச்சரிவில் சிக்கிக்கொள்ளும் மனிதர்களை மீட்க இன்றும் உலகம் முழுக்க பல 'மீட்பு நாய்கள்' (Avalanche Rescue Dogs) பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பனிச்சரிவில் சிக்கும் மனிதர்களைக் கண்டுபிடிக்க இந்த நவீன உலகிலும் சரியான தொழில்நுட்பம் இல்லை. இந்த நாய்கள்தான் அதற்குப் பெருமளவு உதவுகின்றன. ஜெர்மன் ஷெப்பர்ட் (German Shpeherd), ஆஸ்திரேலியன் ஷெப்பர்ட் (Australian Shepherd), பார்டர் கொல்லீஸ் (Border Collies), கோல்டன் ரிட்ரீவர் (Golden Retriever) போன்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. 

அரைமணி நேரத்தில் 2.5 ஏக்கர் பரப்பளவை இந்த மீட்பு நாய்கள் அலசிவிடும். இதை மனிதர்கள் செய்ய பல மணி நேரங்கள் பிடிக்கும். இந்தப் பனிச்சரிவுகளில் சிக்கும் மனிதர்களில் 90% பேரை முதல் 15 நிமிடங்களில் கண்டுபிடித்தால் உயிரோடு மீட்டு விடலாம். அரைமணி நேரத்திற்குப் பிறகு, இந்த உயிர் பிழைத்தலுக்கான வாய்ப்பு 30% ஆகக் குறையும். இரண்டுமணி நேரத்திற்குப் பிறகு அது வெறும் 10% தான். வரலாற்றில் எப்போதாவது ஆன்னா போன்றவர்கள் நாள்கள் கடந்தும் உயிரோடு கண்டெடுக்கப்படுவதுண்டு. ஆனால், அது ஆச்சர்ய நிகழ்வாக மட்டுமே இருக்கும். இந்த நாய்களுக்கு ஒரு வயது வரை எந்தப் பயிற்சிகளும் வழங்கப்பட மாட்டாது. அந்தப் பகுதியை அவை நன்றாக உணர வேண்டும் என்பதற்காக, அந்தப் பகுதிகளில் சும்மா சுற்றிவர விடப்படும். ஒரு வயதிற்குப் பிறகு, அவைகளுக்கு மிகக் கடுமையான பயிற்சிகள் வழங்கப்படும். தங்களின் மோப்ப சக்தியை உபயோகப்படுத்தி பனிச்சரிவில் சிக்கியிருக்கும் மனிதர்களை அவை அடையாளம் காண்கின்றன. 

இன்று உலகம் முழுக்கப் பனிச்சறுக்கு விளையாட்டுகள் நடக்கும் பகுதிகளிலும், பனி மலையில் ட்ரெக்கிங் செய்யும் பகுதிகளிலும் இந்த நாய்கள் மனிதர்களைக் காக்கும் 'சூப்பர் ஹீரோ'க்களாகவே வாழ்ந்து வருகின்றன.