Published:Updated:

சென்னையில் `மதுரைவீரன்’... பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து!

சென்னையில் `மதுரைவீரன்’... பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து!
சென்னையில் `மதுரைவீரன்’... பெசன்ட் நகரில் நிகழ்ந்த தெருக்கூத்து!

தெருக்கூத்து, நாடகமெல்லாம் கிராமங்களில் திருவிழாக் காலங்களில்தான் நடத்தப்பட்டன. இப்போதுகூட அரிதாகச் சில இடங்களில்தான் நடத்தப்படுகின்றன. டிஜிட்டல் யுகத்தில் கண்டுகொள்ளப்படாமல் போகும் பல கலைகளில் முக்கியமான ஒன்று தெருக்கூத்து. `காட்சிபிழை’ அமைப்பின் சார்பாக, சென்னை பெசன்ட் நகர் ஸ்பேசஸ்-ல் அண்மையில் அரங்கேறியது `மதுரைவீரன்’ கூத்து. கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பறை இசை, கரகாட்டத்துடன் தொடங்கிய நிகழ்ச்சியில், கூத்து தொடர்பான புகைப்படக் கண்காட்சியையும் ஏற்பாடு செய்திருந்தார்கள். நிகழ்ச்சியின் உச்சமாக `மதுரைவீரன்’ கூத்து நிகழ்த்தப்பட்டது. 

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டி ஒன்றியம், நத்தம் மேட்டுப் பகுதியிலிருக்கும் ‘ஸ்ரீனிவாசன் நாடகக் குழுவினர்’ மதுரைவீரன் கூத்தை நிகழ்த்தினார்கள். சாதாரணமாக இரண்டு நாள்கள் நடத்தவேண்டிய மதுரைவீரன் கூத்து நிகழ்ச்சியை, இரண்டு மணி நேரமாகச் சுருக்கி, மிக முக்கியமான காட்சிகளை மட்டுமே நிகழ்த்திக் காட்டினார்கள். 

அரசகுலத்தில் பிறந்து, ஒரு தலித் குடும்பத்தால் வளர்க்கப்படும் மதுரைவீரன், நாயக்கர் என்ற ஆதிக்க சாதிப் பெண்ணான பொம்மிக்குக் காவலுக்குச் செல்கிறார். அவர்கள் இருவரும் காதல்வயப்பட்டு, திருமணம் செய்துகொள்ளும் கதை கூத்தாக நிகழ்த்தப்பட்டது (இது ஒரு நாட்டார் கதை). இது சிவபுராணத்தின் ஒரு கிளைக்கதை என்றும் கூத்தில் அறிமுகம் செய்தனர்.

கட்டியங்காரனின் அறிமுகத்தோடு தொடங்கியது கூத்து. தனக்குப் பிறகு நாட்டை ஆட்சி செய்வதற்குப் பிள்ளை இல்லையே என்ற ஏக்கத்திலிருக்கும் மதுரை மன்னன் காசிராஜன், அரசி நீலிதேவியுடன் பேசுவதிலிருந்து தொடர்ந்தன காட்சிகள். அரசனுக்குக் குழந்தை பிறக்கும் என்று குறிசொல்லும் அரச ஜோசியர்; அப்பாவித்தனமான தோற்றத்துடன் சின்னா; துடுக்கான தோற்றத்தோடு சின்னாவின் மனைவி செல்லி; வீரத்தோடும் ஆக்ரோஷத்தோடும் மதுரைவீரன்; மிரட்சியோடு பொம்மி... என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகமும் பார்வையாளர்களுக்கு அந்தந்தக் கதாபாத்திரங்களின் குணநலன்களை உணர்த்துவதாகவே இருந்தது. இந்தக் கூத்தில் அரசி நீலிதேவியாக பெண் வேடத்தில் நடித்தவர், இந்த நாடகக்குழுவின் தலைவர் ராமகிருஷ்ணனின் மூத்தமகன். இவர் டிப்ளோமா முடித்திருக்கிறார். தனக்குப் பின்னர் இந்தக் கலை அழிந்துவிடக் கூடாது என்ற நோக்கத்தில் தன் மகனுக்குக் கூத்தைக் கற்றுக்கொடுத்திருப்பதாகக் கூறுகிறார் ராமகிருஷ்ணன். 

கூத்தில் பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் கதைப்பாடல்களாக இருந்தன. கதைப்பாடல்கள் வெறும் கதையை மட்டும் நகர்த்துபவையாக அல்லாமல் ‘ஊரார் குடியைக் கெடுக்காதே’; ‘மக்கள்தான் முக்கியம், ஆள்பவர் அல்ல’; ‘மது அருந்துவதால் அறிவு மழுங்கிக் குடும்பம் கெடும்’ போன்ற அறக் கருத்துகளோடு பாடப்பட்டன. சாதியைக் கேலி செய்வது, அரசை விமர்சிப்பது, மாட்டுக்கறி தொடர்பான அரசியல் பேசுவது, அப்பா என்ன வேலையைச்  செய்கிறாரோ அதே வேலையைத்தான் மகன் செய்ய வேண்டும் என்ற கருத்தை விமர்சிப்பது போன்ற பல சமூகக் கருத்துகளை பாடல்களிலும் வசனங்களிலும் இடையிடையே பேசுவதாக இருந்தது கூத்து. இது சிவபுராணத்தின் கிளைக்கதை, மதுரைவீரன்-பொம்மி, சிவன்-பார்வதியின் அவதாரங்கள் என்று சொல்லப்பட்டாலும், பாடப்பட்ட பெரும்பாலான பாடல்கள் திருமாலைப் பற்றியதாகவே இருந்தன. இந்த ஒட்டுமொத்த நிகழ்விலும் `அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிடர் உடைமையடா’ என்ற பாடலைத் தவிர, வேறு எந்த சினிமாப் பாடலும் இடம்பெறவில்லை என்பது ஆச்சர்யம்.

இந்த நிகழ்ச்சிக்கு எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இப்படியொரு நிகழ்வை ஏற்பாடு செய்ததற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள, `காட்சிபிழை’யின் பொறுப்பாளர்களில் ஒருவரான சுரேந்தரனிடம் பேசினோம். “ 2014-ம் ஆண்டு, காஞ்சிபுரம் மாவட்டம் புரிசையில் கூத்துத் திருவிழாவில், `காட்சிப்பிழை’ என்ற பெயரில் புகைப்படங்களைக் காட்சிக்காகவும், வியாபார நோக்கத்திலும் வைத்திருந்தோம். தெருக்கூத்துப் படங்கள் மட்டுல்ல... கூடங்குளம், ஈழப் போராட்டக்களம்... என அரசியல் நிகழ்வுகளையும் உள்ளடக்கிய புகைப்படங்களும் அவற்றிலிருந்தன. அதன் பின்னர், கூத்தை மட்டுமே புகைப்படங்களாக எடுத்தபோது ஒரு பெரிய கலெக்‌ஷன்  கிடைத்தது. அதை 2018-ம் ஆண்டு காட்சிப்படுத்தலாம் என யோசித்தபோது, அதோடு சேர்த்து ஏதாவதொரு கூத்தையும் நிகழ்த்தலாமே என முடிவு செய்தோம். இப்படித்தான் `மதுரைவீரன்’ கூத்து ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவரை `படுகளம்’, `பிரகலாதன்’, `மதுரைவீரன்’, `அர்ச்சுனன் தபசு’ ஆகிய கூத்துகள் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. டிசம்பர் மாதத்துக்குள் இன்னும் ஆறு கூத்துகளை ஆவணப்படங்களாக்கி, திரையிட முடிவுசெய்திருக்கிறோம். இந்த நாடகக்குழுவினர் இந்தக் கூத்தை பணத்துக்காக நிகழ்த்தவில்லை. பல்வேறு வேலைகளைப் பார்த்துக்கொண்டு கூத்தை தங்களுக்குப் பிடித்த கலையாக நினைத்து, அதைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல வேண்டுமென்ற நல்ல நோக்கத்துக்காக, பல்வேறு சிரமங்களுக்கிடையே நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொண்டாட வேண்டும் என்பதே இந்த நிகழ்வின் முக்கிய நோக்கம். இங்கிருக்கும் புகைப்படங்கள் எந்த அளவுக்கு விற்பனையாகும் என்பது தெரியவில்லை. அப்படி விற்பனையானால், கிடைப்பதில் பாதிப் பணத்தை இந்தக் கலைஞர்களுக்குக் கொடுக்க முடிவெடுத்திருக்கிறோம். பார்க்கலாம்” என்றார் சுரேந்திரன்.

அன்றைக்கு கூத்து நிகழ்வுக்குப் பெருங்கூட்டம் கூடியிருந்தது. வந்திருந்தவர்களில் பெரும்பாலானோர் ‘இப்போதான் கூத்துன்னா எப்படி இருக்கும்னு பார்க்குறேன்’ என்று பேசிக்கொண்டதைக் கேட்க முடிந்தது. இப்படிப்பட்ட முயற்சி பாராட்டத்தக்கது. `அனுமதி இலவசம்’ என்றாலும், கூடியிருந்தவர்களிடம் `உங்களால் இயன்ற உதவியைச் செய்யலாம்’ என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அறிவித்தனர். பார்வையாளர்களிடமிருந்து பணமும் வந்தது. என்ன... அதிகபட்சமாக 3,000 ரூபாய் கிடைத்திருக்கும். தகுதியானவர்களைக் கொண்டாட  நாம் தயாராக இல்லை என்ற உண்மை முள்ளாகத் தைக்கிறது. அழிந்துபோன பல நாட்டார் கலைகளைப்போல கூத்தும் ஏட்டில் மட்டுமே இருக்கும் நிலை வெகுவிரைவில் வரும் என்பதை உணர முடிந்தது.