Election bannerElection banner
Published:Updated:

காட்டுத் `தீ'யை உண்டாக்கிய சிறு பொறியே இந்த `சால்ட் அண்ட் பெப்பர்'..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 2

காட்டுத் `தீ'யை உண்டாக்கிய சிறு பொறியே இந்த `சால்ட் அண்ட் பெப்பர்'..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 2
காட்டுத் `தீ'யை உண்டாக்கிய சிறு பொறியே இந்த `சால்ட் அண்ட் பெப்பர்'..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 2

காட்டுத் `தீ'யை உண்டாக்கிய சிறு பொறியே இந்த `சால்ட் அண்ட் பெப்பர்'..! - ‘மலையாள கிளாசிக்’ - பகுதி 2

இந்தப் படத்தில் பால கிருஷ்ணன் என்கிற ஒரு கதாபாத்திரம் உண்டு. மானுடவியல் ஆள். தனது குழுவினருடன் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டி சரித்திரத்தை ஆராய்ந்துகொண்டிருக்கிறார். நான் பெரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தி நோபல் பரிசேகூட வாங்குவேன் என்கிறார். படத்தின் இறுதிப் பகுதியில் குழு மூட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறது. நொந்து போயிருக்கிற ஹீரோவுடன் டீ அருந்தியவாறே ஒன்றும் கிடைக்கவில்லை என்கிறார். பர்சனலாய் தனது இளமை பருவத்தின் காதலைச் சொல்லுகிறார். அப்போது தவறவிட்டவள் போட்ட டீதான் இது, எப்படி இருக்கிறது என்கிறார். அதோ தெரிகிறதே, அதுதான் அவள் வீடு !

படிப்பு, பணம், பதவி, வெற்றிகள் எல்லாம் தாண்டி சில விஷயங்கள் உண்டு. அரசு செலவில் பள்ளம் தோண்டி கொஞ்ச காலம் இங்கிருந்து செலவழித்தேன், தோண்டும்போதே ஒன்றும் கிடைக்காது என்று தெரியும் என்றவாறே குழுவினருடன் கிளம்புகிற அவர் இந்தப் படத்தின் மைய நாடி என்று சொல்லலாம். உலகில் ஆயிரம் காதல் கதைகள்- இந்தப் படம் ஏன் நம்மை ஈர்க்கிறது என்றால் இந்த முதிர்ச்சிதான். அது இளமையோடும் பொலிவோடும் இருந்தது.

ஒரு பள்ளியின் வகுப்பில் ஆசிரியர் சொல்கிறார். நாமெல்லாம் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம். இல்லையே சார் என்கிறான் ஒரு சிறுவன். நாம் சாப்பிடுவதற்காகத்தான் உயிர் வாழ்கிறோம். அனைவரும் சிரித்துக்கொண்டிருக்கையில் ஒரு புளியம்பழத்தை வாயில் நுழைத்து அதை அப்படியே வெளியே இழுக்கும்போது வகுப்பே எச்சில் விழுங்குகிறது. கண்கள் அடைத்து அந்த மதுரப் புளிப்பில் கிறங்கியிருக்கிற அச்சிறுவனான காளிதாசனின் முகத்தில்தான் படம் துவங்கி நகரும். அவன் ரசிகன். வளர்ந்து திருமணத்துக்குப் பெண் பார்க்கப் போன இடத்தில்கூட நெய்யப்பம் சுட்ட ஆளைக் கூட்டி வருவதில்தான் அவன் மனம் இருந்திருக்கிறது. பெண்களை அறியாமல் இளமையைக் கடந்துவிட்ட அவனுக்கு அவனைப் போலவே ஒரு பெண்ணின் மீது காதல் வருவதுதான் கதை. அவளும்கூட அவனைக் காதலிக்கிறாள். ஆனால், அந்தப் பெண்ணோடு ஓர் இளம்பெண்ணும், காளிதாசனுடன் ஓர் இளைஞனும் இருக்கிறார்கள். அவர்கள் இவர்கள் இருவரையும் முதலில் பார்க்க விடாமலும் அப்புறம் சேர விடாமலும் தடுப்பது எதற்கு என்பதும், அதை மீறி இவர்கள் எப்படிச் சேர்ந்தார்கள் என்பதும் முடிவு.  

படத்தில் பிரமாண்டமான புனைவுகளோ தத்துவ சிக்கல்களோ கிடையாது. ஆனால், கதைக்குள் நம்மை உள்ளிழுத்து இறுதி வரை அழைத்துச் செல்லும் பாங்கில் நாம் மெய்மறக்கிறோம். முதலில் ஓரிரு படங்கள் வந்திருந்தாலுமே ஒரு மலையாளப் படம் தனது திரைமொழியை இதில் முற்றிலுமாய் மாற்றிக்கொண்டிருந்தது. அதே நேரம் வேறு பல சர்க்கஸ் காட்டி ஒவ்வாமையையும் உருவாக்கவில்லை. ஸ்வேதா மேனன் செய்த மாயா என்கிற பாத்திரம் எங்கேனும் நாம் பார்த்திருக்கக் கூடியவள்தான். தண்ணியடித்து பிட்டாகிக் கண்ணீர் விடும் அவளது தனிமையைத்தான் பார்த்திருக்க முடியாது. ஒரு விசேஷமும் இல்லாத ஏதாவது மொக்கைகூட அவளிடம் வர்றியா என்று கேட்டுவிட முடியும். கல்யாணக் கனவுகளைப் பொசுக்கிப்போட்டுவிட்டு நாக்கின் ருசியில் நாள்களை ஓட்டிக் கொண்டிருக்கும்போதுதான் காளிதாசனின் உறவு  கிடைக்கிறது. எல்லாம் போனில்தான். தாழ்வு மனப்பான்மையால் சந்திப்பதில் சிக்கல்கள் நேர்கின்றன. நான் சொல்ல வருவது, வாலிபம் கடந்த ஒரு பெண்ணின் பதற்றத்தைக் குறி வைத்த படமாய் இருந்தது இது. அதன் கத்திக் குத்துகளை நம்மால் உணர முடிந்தது. அவள் தன்னையே வெறுத்துக்கொள்கிற எல்லையில் திரள்கிற கசப்பை சரியான அளவில் சொல்லி இருந்தார்கள். 

அது அப்படித்தான். படத்தில் மனு என்கிற அந்தப் பையனோ மீனாட்சி என்ற அந்தப் பெண்ணோ காதலித்து விடுவதைப்போல காளிதாசனும் மாயாவும் காதலித்து விட முடியாது. நிறைய தயக்கங்கள், நிறைய சந்தேகங்கள். ஆனால், அவர்களுடைய கோப்பைகளில் காதல் நிரம்பும் போது இருவருமே அதன் தாக்குதல்களில் தத்தளிக்கிறார்கள். படத்தில் மிக அருமையான காட்சிகளில் ஓன்று, இவர்கள் இருவருக்குமான லவ் மான்டேஜ். உலகப் போருக்குச் சென்று திரும்பாத தனது காதலனுக்காகக் காத்திருந்து தினம் ஒரு கேக்கை செய்யும் பிரெஞ்சுப்  பெண்ணின் கதையோடு இவர்களுடைய உறவு வலுப்படுவதை ஒரு எடிட்டர் மற்றும் இசையமைப்பாளர் துணை கொண்டு நெறியாளுகை செய்திருப்பதைத் தனியாய் சொல்லலாம். அது ஒரு எபிசோட். பின்னால் சொல்லப் போகிற கதைக்கு அடித்தளமாய் அமைவது. V Saajan எடிட் செய்திருந்தார்.Bijibal, Avial இருவரும் இசையமைத்திருந்தார்கள். படம் பார்க்கிறவர்களை அங்கே கண்ணிமைக்காமல் செய்வதன் மூலமே, சற்றுத் தள்ளி அவர்கள் சந்திக்க முடியாமல் போகும்போது டென்ஷனை முறுக்க முடிகிறது.

இந்தத் தொழில் நுட்பங்களைக் காட்டிலும் நாம் அணைவது வேறு பலவற்றில் என்றுதான் சொல்ல வேண்டும். முக்கியமாய் உணவு. அது எங்கெங்குமாய் பரவியிருந்த ஒரு பாத்திரமாகவே இருந்தது. உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறோம் என்கிற எண்ணம் இருந்தால் அதை மாற்றிக் கொள்ளலாம். படம் முடிவதற்குள் பசியை உண்டாக்குகிற வேலையைப் படம் செய்கிறது. அந்த உணவை ரசித்து உண்பவர்களை, அதை சமைப்பவர்களை வியக்க வைக்கிறார்கள். குட்டி தோசையுடன் வந்து சேர்கிற அம்மாவின் அன்பு சொல்லப்பட்டபோது உண்ட, உண்கிற எதற்குமே நினைவுப் பாதைகள் உள்ளன என்று துணுக்குறுகிறோம்.  வாழ்வு உள்ளது. காளிதாசனுடன் இருக்கிற, பாபு என்கிற ஒரு பெண் தன்மையுள்ள சமையல்காரன் நமக்குள் எழுப்புகிற நெகிழ்வுகளைச் சொல்ல சொற்களில்லை. ஓரிரு முறை முகம் காட்டுகிற கல்பனா மற்றும் இதரர் யாருமே கதையின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சங்கள்தான். 

லால் ஒரு அற்புதமான நடிகன். அவரது இடறலான குரலில்தான் எத்தனை துக்கம்? ஸ்வேதா, திரையில் ஓடும் பைங்கிளிக் கதைக்கு வாய் விட்டு சிரித்து, டப்பிங் துவங்கும்போதே தன்னைச் சொல்லி விடுகிறார். ஆசிப் அலியும், மைதிலியும் குறை வைக்கவில்லை. நான் முதலில் சொன்ன பாலகிருஷ்ணன் பாத்திரத்தை செய்தவர் விஜய ராகவன். அடிப்பொளி. அப்புறம் காட்டின் மூப்பன் ஒருவர் இருக்கிறார். நல்ல ஒரு பார்வையும், கொஞ்சம் சிரிப்பும் மட்டும்தான். போதுமானதாயிருந்தது. திலேஷ் போத்தன் ஒரு டைரக்டர் இந்தப் படத்தில். டப்பிங் தியேட்டருக்கு தனது பட காரியமாக வந்துபோய்க்கொண்டிருக்கிறார். மாயாவிடம் ஒரு சில்லறைக் காமம், வளைந்தால் பொட்டலம் கட்டி விடலாம் என்கிற நப்பாசை, அதை அவர் அதகளம் செய்திருக்கிறார்.முக்கியமாய் இறுதிக் காட்சி. இப்படி வந்து போகிறவர்கள்கூட பொருந்தியிருக்கிறார்கள் என்பதை தனியாய் கவனிக்கலாம்.

Syam Pushkaran, Dileesh Nair ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். கச்சிதம். திரைக்கதையின் வழுக்கலில் அவர்களுடைய திறமை துல்லியம். 

Shyju Kahild ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அளவான வேலைதான். ஆயின் எனக்கு ஏதோ ஸ்பானிஷ் படம் பார்க்கிற உணர்வு தோன்றிற்று. இந்த வர்ணங்கள் கேரளப் படங்களுக்கு வந்துவிட்டதா என்கிற பொறாமை முதலில். அது வளர்ந்துகொண்டேதான் இருக்கிறது. அப்புறம் அதில் இருக்கிற பேலன்ஸ் பெரிய விஷயமாய் பட்டது. புதிய தலைமுறையை இந்தப் படம் தொட்டதற்கு ஒளிப்பதிவாளரின் கண்களும் கூட காரணம். வேறு ஒன்றும் சொல்ல வேண்டும், எவ்வளவு எளிமை என்பது இப்போதும் பிரமிப்பாய் இருக்கிறது. 

ஆஷிக் அபு பற்றி நான் விவரிக்கப் போவதில்லை.

முதல் காரணம் நான் படத்தைப் பற்றிச் சொன்ன மேன்மைகளை எல்லாம் கொண்டு வந்தவர் அவர். ஆமாம், எல்லாப் புகழும் அவருக்கே. அதைவிட முக்கியமானது வேறொன்று.

இன்று கிளாசிக் படங்களின் முகம் மாறி பலரும் பல படிகளில் ஏறி விட்டார்கள். மலையாளப் படங்கள் இன்று பல்வேறு பிரச்னைகளை சொல்கின்றன. பல தரப்பிலும் இருந்து புதுமைகள் திரண்டவாறிருக்கின்றன. இதில் நான் கருதுகிற பையன்களின் சினிமா துவங்கினதற்கு இந்தப் படம் ஒரு வழிகாட்டியாய் இருந்தது. அது சொன்னால் போதுமா. கதாகாலட்சேபம் பண்ணிக்கொண்டிருந்தவர்கள் அது இனி முடியாது என்கிற பயத்தை அடைந்தார்கள். நட்சத்திரங்கள் தங்களுடைய போக்கை, இயக்குநர்களை மாற்றிக்கொள்ள  வேண்டியிருந்தது. புதுப் பையன்களும், பெண்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களுமாய் அலையலையாய் வந்தவாறிருக்கிறார்கள். பக்கத்து மாநிலங்களில் கூட சினிமாவை சீராக்கும் பேச்சு எழுந்திருக்கிறது.  எழும் சிறு பொறிதானே எப்போதும் மிகப் பெரும் தீ. எனவே சால்ட் அண்ட் பெப்பர் என்கிற சிறிய சினிமாவைத் தந்த அவரை, ஆஷிக் அபுவை அணைத்துக்கொள்கிறேன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு