Published:Updated:

புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி

புறக்கணிக்கப்படும்  பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி

கட்டுரை

புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி

கட்டுரை

Published:Updated:
புறக்கணிக்கப்படும்  பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி
பிரீமியம் ஸ்டோரி
புறக்கணிக்கப்படும் பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி
புறக்கணிக்கப்படும்  பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி

கி.மு 100-ல் இருந்து நமது சங்க இலக்கியங்கள் தொடங்குவதாகக் கருதப்படு கிறது. அப்போதைய பெண் கவிஞர்களுக்கு தங்களது காதலைப் பாட எவ்வித மனத் தடைகளும் இல்லை.

‘முட்டுவேன்கொல் தாக்குவேன் கொல்
ஓரேன், யானும் ஓர் பெற்றி மேலிட்டு,
‘ஆ அ ஊ! ஒல் எனக் கூவுவேன்கொல் அலமரல் அசைவளி அலைப்ப, என் உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே.’


‘மெல்லிய காற்று அசைக்கும் தன் காதல் நோயை அறியாது தூங்கும் இவ்வூரை என்ன செய்வது?’ என ஔவை எழுதியபோது, அது செவ்வியல் இலக்கியமாக அங்கீகரிக்கப்பட்ட நிலை இங்கிருந்தது. ஔவை மட்டுமா? ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், காக்கைப்பாடினியார், நச்செள்ளையார் எனப் பெண்பால் புலவர்கள் எழுதிக்குவித்த அழகுகளை அல்லவா நம் தமிழன்னை அணிகளாகச் சூடி அழகுபார்த்தாள். பிறகு, பக்தி இலக்கியக் காலத்தில் ஆண்டாளின் முனகல் கேட்டது.

அப்புறம் நூற்றாண்டு இடைவெளிகளில் பெண் ஏன் ஊமையானாள்? இல்லை, அவள் ஊமையாக்கப்பட்டாள் என்பதே உண்மை. நிலவுடமை அமைப்பை வலுவாக்கத் தோன்றிய கற்பு போன்ற மதிப்பீடுகள், அதிகாரமாக வளர்ந்த மதம் தோற்றுவித்த நெறிகள் என எல்லாம் சேர்த்துதான் பெண்ணின் குரல்வளையை நெரித்தன. அவள் புழங்கும் எல்லைகள், படுக்கையறை யாகவும் சமையற்கட்டாகவும் அத்துக்களை வகுத்தன. பெண் உடல் களிப்பொருளாக, அதேசமயம் தீட்டாகக் கருதப்பட்டது. தூமை சுரக்கும் யோனி, பாவத்தின் பிறப்பிடம். கடைசியாக அவள் கைகளில் இருந்து பாடப் புத்தகங்களும் பறிக்கப்பட்டன. பெண்கள் படிப்பதற்கு பாரதியும் பாரதிதாசனும் கவிதைகள் எழுதவேண்டியதாயிற்று. பெரியார், அயராது பேசவும் எழுதவும் வேண்டியிருந்தது. விளைவாக, பெண் மீண்டும் தன் மௌனம் கலைத்தாள். இருந்தாலும் நமக்கு வேதரத்தினத்தை, தி.ஜா-வை,  கு.ப.ரா-வை, புதுமைப்பித்தனை, ஜெயகாந்தனைத் தெரிந்த அளவுக்கு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையாரை, வை.மு.கோதைநாயகி அம்மாளை, குமுதினியை, எஸ்.அம்புஜத்தை ஏன் தெரியவில்லை? கடந்த நூற்றாண்டில் எழுதியவர்கள் மீது, இந்த நூற்றாண்டிலேயே இருள் கவிகிறதே. இங்கு மொழி, அழகியல், இலக்கிய விதிகள் எல்லாமே ஆண்களின் பார்வையில் வரிக்கப்படுகின்றன. அதுவும் ஆதிக்கச் சமூகத்திலிருந்து பிறக்கும் எழுத்துக்கள் மைய இலக்கியம்; தலித்துகள், பெண்கள் எழுதுபவை எல்லாம் விளிம்பு எழுத்துக்கள் என வகைபடுத்தப்படும் அவலம் இங்குதான் நிகழ்கிறது.

புறக்கணிக்கப்படும்  பெண் எழுத்து - சு.தமிழ்ச்செல்வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பாலியல் பழகுவதற்கென்றே இங்கோர் இனக்குழு உருவாக்கப்பட்டது. அந்தச் சமூகத்தின் இழிவகற்றப் போராடியவர், மூவலூர் இராமாமிர்தம். அவரது ‘தாசிகள் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்’ போன்ற புதினங்களைத் தமிழ்ச் சமூகம் இன்னும் விரிவாகப் பேசியிருக்க வேண்டும். அதுபோல, நிறையப் புனைகதைகள் எழுதியவர், வை.மு.கோதைநாயகி அம்மாள். ‘ஜகன்மோகினி’ எனும் இதழை நீண்டகாலம் நடத்தியவர்; சுதந்திரப் போராட்ட வீரர். இவருடைய புத்தகங்களை எத்தனை  பதிப்பகங்கள் மீளப் பதிப்பித்தன? எத்தனை பல்கலைக்கழகங்கள் பாடப்புத்தகங் களாக்கின? எத்தனையோ இன்னல்களை, இடர்களை மீறி எழுத வருபவர்களைப் பொறுப்போடு வாசித்து உரையாடியிருந்தால், பெண்கள் இன்னமும் ஊக்கம் பெற்றிருப்பார்கள். ஆனால், விமர்சகர்களின் கள்ள மௌனத்தால், காரியார்த்தமான ஒதுக்கலால், பெண் எழுத்து இன்னுமே போதிய கவனம் செலுத்தப்படாமலேயே இருந்துவருகிறது.

ஐவகை நிலங்களின் அகத்தையும் புறத்தையும் பாடியவர்கள் பெண்கள். ஆனால், கடந்த சில நூற்றாண்டுகளில் மறுக்கப்பட்ட கல்வி, சமூகநீதி போன்றவற்றின் காரணமாக, விளிம்புநிலைச் சமூகங்களில், சிறுபான்மைச் சமூகங்களில் இருந்து பெண்கள் எழுத முடியாத சூழல் இருந்தது. இதனால், தமிழ் இலக்கியப் பரப்பு என்பது முழுமையான மானுடத்தின் கதையைப் பேசவில்லை என்கிற உண்மையை நாம் ஒப்புக்கொண்டால்தான் தொடர்ந்து பெண் எழுத்து மீதான கரிசனத்தை, அக்கறையைச் செலுத்த முடியும். கடந்த நூற்றாண்டில் இயங்கிய பெண் எழுத்தாளர்கள் சுமாராக நூறு பேர் இருந்திருப்பார்கள். அவர்களுடைய படைப்புகள், அவர்கள் பற்றிய ஆவணங்கள் எதையும் நாம் பாதுகாக்கவில்லை என்பது, நம் அலட்சியம் இல்லையா? 1940-களில், இஸ்லாம் சமூகத்தவரான சித்தி ஜுனைதாபேகம் முற்போக்கான திசையில் இலக்கியம் படைத்திருக்கிறார். கமலா, கு.ப.சேது அம்மாள், சாவித்திரி, சரஸ்வதி, ராஜம்மாள் என நிறைய பெண் ஆளுமைகளைப் பற்றிய தரவுகளை அவர்களது படைப்புகளை நாம் சேகரிக்க வேண்டியுள்ளது.

பெரியார் நூற்றாண்டுக்குப் பிறகு ஊக்கம் பெற்ற பெண்கள்,  இன்று தமிழ் இலக்கியத்துக்குக் கூடுதலான வண்ணம் சேர்ப்பவர்களாக இருக்கிறார்கள். புனைவு, கவிதை, விமர்சனம் என எல்லா களங்களிலும் இயங்கிவருகிறார்கள். ஆர்.சூடாமணி, அம்பை, சிவசங்கரி, இந்துமதி, உஷா சுப்ரமணியம், வாஸந்தி, சிவகாமி, திலகவதி என சற்று மூத்த எழுத்தாளர்களைத் தொடர்ந்து, பாமா, சு.தமிழ்ச்செல்வி, உமா மகேஸ்வரி, சல்மா, பாரதிதேவி, காஞ்சனா தாமோதரன், இந்திரா, சந்திரா எனத் தொடர்ச்சியாக புனைவிலக்கியங்களை எழுதிவருகின்றனர்.

இதுபோல், தொண்ணூறுகளின் இறுதியில் கவிதைத் துறையில் ஒரு புதிய அலைவீசியது. குட்டிரேவதி, இளம்பிறை, மு.சத்யா, மாலதி மைத்ரி, அ.வெண்ணிலா, ஆண்டாள் பிரியதர்ஷினி, கவின் மலர், புதிய மாதவி, தமிழ்நதி என ஏராளமான பெண்கவிகள் எழுதவந்தனர்.

தங்கள் கவிதைகள் வழியாகப் பெண் மொழியைச் சாத்தியப்படுத்த விழைந்தனர். மறுக்கப்பட்ட பெண் உடலை எழுத முற்பட்டனர். ஆண்கள் உறுப்புநலன்களை எழுதியபோதெல்லாம் அமைதியாக இருந்தவர்கள், பெண்கள் எழுதத் தொடங்கியதும் பண்பாட்டுக் காவலர்களாகக் கூப்பாடுபோட்டனர். இன்று வரை இரு வழிகளில் நமது அறிவு சமூகத்தால் பெண் எழுத்துக்கள் மறுக்கப்பட்டுவருகின்றன. ஆண்கள் நோக்கில் அமைந்த அழகியல் மற்றும் உள்ளடக்கம் வழியாகப் பெண் எழுத்தை அளவிட்டு நிராகரிப்பது ஒருவகை என்றால், மௌனத்தினூடாக அலட்சியப்படுத்துவது இன்னொரு வகை. நமது குடும்ப அமைப்பில் இருந்து பெண்கள் விமர்சனத் துறைக்கு வருவதுதான் பெரும் சவால். வ.கீதா, மங்கை என ஒரு சிலர் தவிர்த்து, பெண்கள் அதிக அளவில் ஈடுபடாத துறையாக விமர்சனத் துறை இருந்துவருகிறது. இதுவரை ராஜம் கிருஷ்ணன், லட்சுமி திரிபுரசுந்தரி, திலகவதி என மூன்றே பெண் எழுத்தாளர்களுக்குதான் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

இப்போதுதான் பல தடைச்சுவர்களைக் கடந்து, இருள்வெளிகளைக் கடந்து, பாலைகளைக் கடந்து பெண் எழுதவருகிறாள். அவளைப் பற்றிய அவதூறுகளைப் பரப்பி, மீண்டும் அவளைத் தன் கூட்டுக்குள் மீளச் செலுத்திவிடாதீர்கள். பெண் இயக்கம் ஐம்பூதங்களைப் போன்றது. இனியும் அவளை மறைத்துவிட முடியாது. அவள் பெருகிக் கொண்டிருப்பாள்; பூத்துக்கொண்டிருப்பாள்; கனன்றுகொண்டிருப்பாள்; வீசிக்கொண்டிருப்பாள்; பொழிந்து கொண்டிருப்பாள். இயல்பில் பெண், படைப்பின் பெரும் சக்தி; அவள் புனைவாற்றல் மிக்கவள்; ரகசியங்களும் மர்மங்களும் நிரம்பிய மனவெளியுடையவள்; தாய்மை கனிந்தவள்... இவ்வாறு இலக்கியத்துக்கான கூறுகளை உள்ளுறையாகக்கொண்ட அவள், எல்லா இடர்பாடுகளையும் தாண்டி தனக்கான வாசகர்களை அடைவாள். மீண்டும் இது பெண்கள் எழும் காலமாக அமையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism