Published:Updated:

``உடம்பும் மனசும் நல்லாருந்தா போதும்... யூ ஆர் ஃபிட்!’’ - ஃபிட்னெஸுக்கு புது அர்த்தம் சொல்லும் சுஜா வருணி #FitnessTips

``உடம்பும் மனசும் நல்லாருந்தா போதும்... யூ ஆர் ஃபிட்!’’ - ஃபிட்னெஸுக்கு புது அர்த்தம் சொல்லும் சுஜா வருணி #FitnessTips
``உடம்பும் மனசும் நல்லாருந்தா போதும்... யூ ஆர் ஃபிட்!’’ - ஃபிட்னெஸுக்கு புது அர்த்தம் சொல்லும் சுஜா வருணி #FitnessTips

சுஜா வருணி... 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பவர். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி தெரிவதுதான் இவருடைய ஸ்பெஷாலிட்டி! "போன படத்துல குண்டா தெரிஞ்சாங்களே... அதுக்குள்ள ஒல்லியா ஆகிட்டாங்க!" எனத் தன் ரசிகர்களை அடிக்கடி `வாவ்' சொல்ல வைக்கும் `சேட்டை'க்காரி சுஜா. `உடல் எடை கூடிவிட்டால் கேரியர் கேள்விக்குறியாகிவிடும்' என்பவர்களுக்கு சுஜா ஓர் ஆச்சர்யம். `கிடாரி' சுஜாவுக்கும், `குற்றம் 23' சுஜாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. அது, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவோ, ப்ளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரிக்குப் போகும் பெண்ணோ, மாடர்ன் கேர்ளோ... கேரக்டரோடு கச்சிதமாகப் பொருந்திவிடுவார் சுஜா. படத்துக்குப் படம் மாறும் சுஜாவின் 'ஃபிட்னெஸ் சீக்ரெட்’ என்னவாக இருக்கும்? அவரிடமே கேட்டோம்...

`` `ஒவ்வொரு படத்துலயும் வேற வேற மாதிரி இருக்கீங்க’னு என்கிட்ட நிறையப் பேர் சொல்லியிருக்காங்க. படத்துக்கும் கேரக்டருக்கும் ஏத்த மாதிரி என் உடம்பை நான் அடிக்கடி மாத்திக்கிட்டே இருப்பேன். அதனால, என் எக்சர்சைஸ் முறைகளும் மாறிக்கிட்டே இருக்கும். அத்லெட்டா நடிக்கணும்னா, ரன்னிங் மட்டும்தான் என்னோட பயிற்சியா இருக்கும். குழந்தைக்கு அம்மாவா நடிக்கணும்னா, உணவுமுறை மாற்றங்கள்ல கவனம் செலுத்துவேன். 

இந்த மாற்றங்களுக்கு இடையிலயும் நான் விடாமல் செய்யும் பயிற்சிகள்... ஸ்ட்ரெட்சிங்; ட்ரெட் மில், தூக்கம்! இதுல எது மிஸ் ஆனாலும், என்னால அந்த நாள் முழுக்க நிம்மதியா இருக்க முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் இந்த மூணும் பயிற்சிகள் இல்லை... என்னோட ஆக்டிவிட்டீஸ். என் அன்றாட வாழ்க்கையோட மூணும் கலந்துடுச்சு. என்னோட ஃபேவரைட், ட்ரெட் மில்லில் நடக்குறது. கோபமோ, சந்தோஷமோ... நடக்க ஆரம்பிச்சுடுவேன். என்னால பொது இடங்கள்லகூட லிஃப்ட், எக்ஸ்கலேட்டரையெல்லாம் பயன்படுத்த முடியாது. அதை உபயோகப்படுத்தறவங்களைப் பார்த்தாக்கூட, 'கொஞ்சம் நடக்கலாமே பாஸ்'னு சொல்லத் தோணும். நடக்குறது என்னோட ஸ்ட்ரெஸ் பஸ்டரும்கூட!

ஃபிட்டா இருக்கறவங்களைப் பத்தி சில தப்பான அபிப்ராயங்கள் நம்மகிட்ட இருக்கு. குறிப்பிட்டுச் சொல்லணும்னா 'சிக்ஸ்-பேக்' வெச்சிருக்கறவங்கதான் ஃபிட்டானவங்கனு நினைக்கிறது. அதே மாதிரி, ஒல்லியா இருக்கவங்கதான் அல்லது இருந்தாதான், அவங்க ஃபிட்டானவங்கனு நினைக்கிறது. ஃபிட்டுங்கறது உடற்பயிற்சி செய்யறதுல மட்டுமில்லை... நம்ம உணவு முறை, தூக்கம், மன அமைதி, ஓய்வு நேரம்னு எல்லாத்துலயுமே அடங்கியிருக்கு. ஒல்லியோ குண்டோ, உயரமோ குள்ளமோ... உடம்பும் மனசும் நல்லாருந்தா போதும், யூ ஆர் ஃபிட்! முதல்ல, உடற்பயிற்சியை ஒரு பழக்கமா மாத்திக்கணும். அந்த விஷயத்துல என்னை ஆச்சர்யப்படுத்திகிட்டே இருக்கறவங்க, ஹோம் மேக்கர்ஸ்தான். அவங்களுடைய அன்றாடப் பணிகளிலேயே ஸ்ட்ரெட்சஸ் (Stretches), எக்சர்சைஸ், உணவுக்கட்டுப்பாடு எல்லாம் அடங்கிடும். 

நாம என்ன சாப்பிடறோம்ங்கிறதைவிட, எவ்வளவு சாப்பிடறோம்கிறதுதான் முக்கியம். சிலருக்கு அரிசி வகை உணவுகள்தான் பிடிக்கும். ஆனா, அதுல கார்போஹைட்ரேட் அதிகமா இருக்குனு சொல்லி அதையெல்லாம் தவிர்ப்பாங்க. நான் அப்படிக் கிடையாது. என்னோட ஆல்டைம் ஃபேவரைட் சாப்பாடு, அரிசி வகைகள்தாம். சிலருக்கு நிறையப் பசியெடுக்கும். அவங்க உடல் எடை, வயது கணக்கு அடிப்படையில சாப்பாட்டோட அளவை சட்டுனு குறைச்சுடுவாங்க. என்னோட டயட் பை-லைன் எப்பவுமே `மைண்ட்-ஃபுல் ஈட்டிங்’தான் (Mindful Eating). மைண்ட்-ஃபுல் ஈட்டிங்ல முக்கியமான விஷயம், பிடிச்ச சாப்பாட்டைச் சாப்பிடறது. இங்கே நமக்கு எல்லாத்துக்கும் சாய்சஸ் இருக்கு. உதாரணமா, இனிப்பை விரும்பிச் சாப்பிடும்போது வெள்ளைச் சர்க்கரை பிடிக்கலையா, தேன் எடுத்துக்கலாம். அதுவும் வேண்டாம்னா நாட்டுச்சர்க்கரை இருக்கு. அதேபோல, அரிசி வேண்டாம்னா கோதுமை, ஓட்ஸ், மில்லட்ஸ்... இப்படி நிறைய நிறைய சாய்சஸ். அவங்கவங்களுக்குப் பிடிச்ச உணவை, சரியான அளவு சரியான நேரத்துல எடுத்துக்கிட்டா போதும். நான் அப்படித்தான். சாப்பாட்டுல நேரம் தவறுதல் ரொம்பத் தப்பு. பிடிச்ச உணவுனு சொன்னதும், ஃபாஸ்ட் ஃபுட்தான் நம்ம கண்ணுக்குத் தெரியும். ஆனா, அதுக்கும் ஒரு சாய்ஸ் இருக்கு. வீட்டுலயே தயாரிச்சு சாப்பிடுறதுதான் அந்த சாய்ஸ். எக்சர்சைஸ்க்கும் சாய்சஸ் இருக்கு. யோகா, ஜூம்பா (Zumba Dance), பைரேட்ஸ்னு (Pirates Exercise) எவ்வளவோ உடற்பயிற்சி வகைகள் வந்துடுச்சு. உடல்நலம் சார்ந்த விஷயங்கள்ல ஒண்ணு இல்லைனா, இன்னொண்ணுனு முன்னோக்கிப் போய்க்கிட்டே இருங்க. ஏன்னா, 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்'. நோய்னு ஒண்ணு உடம்புக்குள்ள வந்துட்டா, பணத்தைவெச்சு ஒண்ணும் செய்ய முடியாது. நம்ம நோக்கம், 'நோய் இல்லாத வாழ்க்கை'. அதுக்காக எந்த முறையை வேணும்னாலும் ஃபாலோ பண்ணலாம்.

நோயற்ற வாழ்க்கைக்கு முக்கியமான இன்னொரு விஷயம், தூக்கம். 'அட் தி எண்ட் ஆஃப் தி டே'னு இதைச் சொல்லலாம். தினமும் காலையில எழுந்ததும் இதையெல்லாம் பண்ணணும்னு யோசிக்குற நாம, தூக்கத்துக்கு முன்னாடி இதெல்லாம் பண்ணணும்னு யோசிக்கிறதில்லை. நான் தினமும் எட்டு மணி நேரமும் கட்டாயம் தூங்கிடுவேன். மென்ட்டல் ஹெல்த் இல்லாம, ஃபிசிக்கல் ஹெல்த் வேஸ்ட் ஆஃப் டைம்னு நான் நினைக்கிறேன். அதேபோல தினமும் தூங்குறதுக்கு முன்னாடி, அன்னைக்கு என்னைப் பாதிச்ச விஷயங்களுக்குத் தீர்வு என்னனு கண்டுபிடிச்சுடுவேன். இல்லைனா, தூக்கமே வராது. ஒரு நல்ல தூக்கம்தான் அடுத்த நாளை அழகாக்கும். சிலபேர் வேலையைக் காரணமாச் சொல்லி, தூக்கத்தைத் தொலைப்பாங்க. என்னைப் பொறுத்தவரை, எல்லாமே நம்மை நாமே பழக்கப்படுத்திக்கிறவிதத்துலதான் இருக்கு. தினமும் காலையில எழுந்திருச்சவுடனே பல் விளக்கணும், குளிக்கணும், சாப்பிடணும்னு எப்படி வாழ்க்கை முறைக்கு ஏத்த மாதிரி நம்ம மூளையைப் பழக்கப்படுத்துறோமோ, அப்படித்தான் ஃபிட்னெஸையும் பழக்கப்படுத்திக்கணும். நிறைய பேர் எக்சர்சைஸ் செய்யறதை, தனியா ஒரு வேலை மாதிரி நினைக்கிறாங்க. அது ஒரு பழக்கம்... வேலை இல்லை" என்கிறார் சுஜா.