Published:Updated:

இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!

இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!

வால்டர் ஒயிட்

இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!

வால்டர் ஒயிட்

Published:Updated:
இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!
பிரீமியம் ஸ்டோரி
இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!
இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!

சினிமாவில் டான் வில்லன்களும் அவனுடைய குட்டைப்பாவாடைத் தோழிகளும் மட்டுமே ஆடுகிற விளையாட்டு... ஸ்நூக்கர். இந்த ஸ்நூக்கரின் உலக சாம்பியனே ஓர் இந்தியர்தான்.

ஸ்நூக்கர் ஒரு கிரிக்கெட் என்றால், அதில் பங்கஜ் அத்வானிதான் சர்வநிச்சயமாக சச்சின். உலகப் போட்டிகளில் வெற்றிகளை அள்ளிவருகிற அபார ஆட்டக்காரர். இவருடைய சமீபத்திய சாதனை ஆறாவது முறையாக `ரெட் ஸ்நூக்கர்' பட்டத்தை வென்றது. ஒரே நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆறு முறை இந்தப் பட்டத்தை வெல்வது உலக அளவில் இதுவே முதல்முறை. கூடவே, ஆசியப் போட்டியிலும் கோப்பைகளைக் குவிக்கிறார் இந்த தங்கமகன்.

ஸ்நூக்கரில் மட்டுமல்ல, பில்லியர்ட்ஸிலும் இவர்தான் உலக சாம்பியன். இரண்டுமே ஆடப்படுவது அதே பச்சை வண்ண மேஜையில்தான் என்றாலும் இரண்டும் வேறு வேறு ஆட்டம். பில்லியர்ட்ஸ் என்பது வெறும் மூன்று பந்துகளை மட்டுமே கொண்டு ஆடுகிற விளையாட்டு. ஸ்நூக்கர் 15 பந்துகளைக் கொண்டு ஆடப்படுவது. இரண்டுக்குமே ஆடும் முறைகளிலும் பின்பற்றவேண்டிய விதிகளிலும் வெற்றி உத்திகளிலும் ஏராளமான வித்தியாசங்கள். இரண்டிலுமே பங்கஜ் கில்லாடி கில்லி.

அர்ஜூனா விருது தொடங்கி, ராஜீவ் காந்தி கேல் ரத்னா வரை விளையாட்டுத் துறையின் அத்தனை விருதுகளையும் பெற்றவர் பங்கஜ். பில்லியர்ட்ஸில் தொடர்ச்சியாக மூன்று முறை உலக சாம்பியன் பட்டத்தையும், ஆசிய சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளார். இவர் பில்லியர்ட்ஸில் இருந்து ஸ்நூக்கரில் அடியெடுத்து வைத்தது 2012-ம் ஆண்டில்தான். ஆனால், இரண்டே ஆண்டுகளில் ஸ்நூக்கரிலும் உலக சாம்பியன்ஷிப் வென்று விட்டார். ஸ்நூக்கர் உலக சாம்பியன்ஷிப்பில் இரண்டு (15 ரெட் ஸ்டாண்டர்ட், 6 ரெட்) பிரிவுகளிலும் இவரே சாம்பியன். இப்படி இதுவரை பங்கஜ் வென்றுள்ள உலக சாம்பியன்ஷிப் பட்டங்கள் 15. ஆனால், இப்போதுதான் 30 வயது  ஆகிறது. இன்னும் 30 ஆண்டுகளுக்கு இவர் விளையாடுவார் என்கிறார்கள்!

``இத்தனை ஆண்டுகள் ஆடி, எத்தனையோ விஷயங்கள் செய்துவிட்டாலும் இன்னமும் நான் கற்றுக்கொள்வதை நிறுத்தவே இல்லை. வெற்றி, தோல்வி என்பதைத் தாண்டி, கற்றல்தான் என்னை வழிநடத்துகிறது. ஒவ்வொரு நாளும் புதிதாக ஒன்றை முயற்சி செய்துகொண்டே இருப்பதை பழக்கமாக்கிக்கொண்டிருக்கிறேன்... அதுதான் என்னை இயக்குகிறது'' என்கிறார் பங்கஜ்.

இரண்டு விளையாட்டு... ஒரு சாம்பியன்!

பங்கஜ் அத்வானி, சிறுவயதில் இருந்தே ஸ்நூக்கரை லட்சியமாகக்கொண்ட ஆள் எல்லாம் இல்லை. அப்பா பெரிய பணக்காரர். அவர் குவைத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த சமயத்தில் சதாம் ஹுசேன் குவைத் மீது தாக்குதல் தொடுக்க, அங்கிருந்து பெங்களூர் வந்து செட்டில் ஆனார். அப்போதிருந்து இன்று வரை பெங்களூர்வாசி. பெங்களூருவில் பள்ளியில் படிக்கும்போது இவருடைய அண்ணன் யோடு ஊர்சுற்றுவது  வழக்கம். பங்கஜின் அண்ணன் ஸ்நூக்கர் பிரியர். அதனால் வாரத்தில் மூன்று நாளாவது ஸ்நூக்கர் பார்களில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரோடு துணைக்குப்போன ஒரு நாளில் ஜாலிக்காக விளையாடிப் பார்த்திருக் கிறார் 10 வயது பங்கஜ். ஒரு சிவப்புப் பந்தைத் தட்டியிருக்கிறார். அது மிகச் சரியாக பாக்கெட்டில் விழ... அதுவரை பிஸினஸ்மேனாக வேண்டும், கோடிகளில் புரள வேண்டும் என லட்சியம் கொண்டிருந்த குட்டிப் பையனுடைய கைக்கு க்யூ (நீளமான ஸ்நூக்கர் குச்சி!) வந்து ஓட்டிக்கொண்டது.

இந்தியாவின் முன்னாள் சாம்பியனான அர்விந்த் சவுர்தான் பங்கஜ் அத்வானியின் திறமையைக் கண்டறிந்து வளர்த்தவர். `இவனை எப்படியாவது உலக சாம்பியன் ஆக்குகிறேன்' என முடிவெடுத்து பயிற்சிகள் கொடுத்தார். ஆனால், அவரே வியக்கும்படி 18 வயதிலேயே உலக சாம்பியன் ஆகிவிட்டார் பங்கஜ்.

இந்தியாவில் ஸ்நூக்கர் என்பது கிளப்களில் ஆடுகிற கேளிக்கை விளையாட்டாகப் பார்க்கப் படுவதில் பங்கஜுக்கு பெரிய வருத்தம் உண்டு.  ``ஸ்நூக்கர் குறித்து மக்களுக்கு இப்போது ஓரளவு தெரிகிறது. நிறைய கிளப்கள் இந்தியா முழுக்க உருவாக ஆரம்பித்துள்ளன. ஆனால், இது போதாது. இந்தியா மாதிரி பெரிய நாட்டில் வெறும் ஒன்றிரண்டு விளையாட்டுகள் மட்டுமே இத்தனை கோடி மக்களையும் சென்றடைகின்றன. நம்முடைய தடகள வீரர்களைப் பாருங்கள், அவர்கள் எல்லாம் யார், எதற்கு ஓடுகிறார்கள் என்று யாருக்குமே தெரியாது. அவர்களுக்கு செலவழிக்கவும் அவர்களைப் பற்றிப் புரிந்துகொள்ளவும் ஆள் இல்லை. தொலைக் காட்சிகளின் வழிதான் மாற்றத்தை உண்டாக்க முடியும். இன்று விளையாட்டு பழைய மாதிரி இல்லை. அது பொழுதுபோக்கு விஷயமாக மாறிவிட்டது. அதற்கேற்ப எல்லா விளையாட்டுகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்'' என்று கோபமாகப் பேசுகிறார்.

சமீபத்தில் பங்கஜ், இந்திய அளவிலான தேசிய போட்டி ஒன்றில் வளர்ந்துவரும் ஆட்டக்காரரான சித்தார்த் பரேக்கிடம் தோல்வியைச் சந்தித்தார். எல்லோருக்குமே பயங்கர அதிர்ச்சி. அதுபற்றி பங்கஜிடம் நோண்டி எடுத்தது மீடியா. ஆனால் அவர் சொன்னது ஒரு நச் பதில். ``வெற்றி பெறுவது என்பது என்னுடைய பிறப்புரிமை கிடையாது. நான் உலக சாம்பியனாக இருக்கலாம்; யாரையும் வீழ்த்துகிற பலசாலியாக இருக்கலாம். ஆனால், அன்றைய நாள் போட்டியில் என்னை எதிர்த்துப் போட்டியிட்டவரைப் பற்றியும் நினைத்துப்பார்க்க வேண்டும். அன்று சித்தார்த் அபாரமாக ஆடினார். நான் நிறையப் பிழைகள் செய்தேன். அதுதான் விளையாட்டின் அழகே... இங்கே வெற்றியும் தோல்வியும் சகஜமானது. யாரிடம் தோற்றாலும் அதில் நாம் கற்பதற்கு ஏதாவது ஒன்று இருக்கும்'' என்றார்.

பங்கஜால் எப்படி தொடர்ந்து வெற்றிபெற்றுக்கொண்டே இருக்க முடிகிறது... அதுவும் உலக அரங்கில்?

``ஓர் உச்சத்தை எட்டுவதைவிட அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொள்வதில்தான் உண்மையான சவால் இருக்கிறது என்று எல்லோருமே சொல்வார்கள். ஆனால், எனக்கு அதில் எல்லாம் நம்பிக்கை இல்லை. எதையுமே நிரந்தரமாகத் தக்கவைத்துக்கொள்ள முடியாது. எதைச் செய்தாலும் அதை முழுமையாக, மகிழ்ச்சியாக, முந்தைய முயற்சிகளைவிட இன்னும் சிறப்பாகச் செய்ய நினைப்பேன். மற்ற யாருடனும் போட்டிபோடாமல், என்னை நான் எப்படி இன்னும் பெஸ்ட்டாக மாற்றிக்கொள்வது என்பதில்தான் கவனம் செலுத்துவேன். நீரோட்டத்தோடு பயணிப்பது, ஒவ்வொரு நொடியிலும் மகிழ்ச்சியோடு இருப்பது, என்னுடைய விளையாட்டை விளையாடுவது, நிறையப் பயிற்சி எடுப்பது, இதுதான் என்னை மேலும் மேலும் உயர்த்துகிறது, இனியும் உயர்த்தும்!'' என்கிறார் உலக சாம்பியன்.