Published:Updated:

கல்யாணம்... கலை... கேமரா!

கல்யாணம்... கலை... கேமரா!
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணம்... கலை... கேமரா!

கார்க்கிபவா

கல்யாணம்... கலை... கேமரா!

கார்க்கிபவா

Published:Updated:
கல்யாணம்... கலை... கேமரா!
பிரீமியம் ஸ்டோரி
கல்யாணம்... கலை... கேமரா!
கல்யாணம்... கலை... கேமரா!

சென்னையைச் சேர்ந்த மாப்பிள்ளை ஒருவருக்கு, தன் வருங்கால மனைவியோடு ஸ்பெஷல் ஆல்பம் ஒன்று எடுக்க ஆசை. `வளையோசை கலகலவென...’ பாடலில் கமலும் அமலாவும் பேருந்தில் தொங்கிக்கொண்டே போவதைப்போல வருங்கால மனைவி உடன் செல்ல நினைத்தார். மணப்பெண்ணும் போட்டோகிராஃபரும் இதைக் கேட்டதும் ஆர்வமாக, மூவர் குழு கோயம்பேடு கிளம்பியது. நினைத்ததுபோல கூட்டமான ஒரு பேருந்தில் ஏறியதும் க்ளிக்கிவிட்டார். ஆனால், கேமராமேனை போலீஸ் மடக்க, விஷயத்தைச் சொன்னதும் ஆசீர்வதித்து அனுப்பியிருக்கிறார்கள்.

வெல்கம் டூ வெட்டிங் போட்டோகிராபி 2016!   பல லட்சங்கள் புரள்கிற புதிய துறை. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் களம் இறங்கியிருக்கும் ஆச்சர்ய வேலை. கையில் பூச்செண்டோடு கோட்டு சூட்டும் பட்டுப்புடவையுமாக தாடைக்கு முட்டுக்கொடுத்து படமெடுத்தது போன தலைமுறையோடு முடிவுக்கு வந்துவிட்டது. `தோள் மேல கைவைங்க பாஸ்... ப்ளீஸ்’ எனக் கெஞ்சிக்கொண்டிருந்த புகைப்படக் கலைஞர்களை இப்போது பார்க்கவே முடிவது இல்லை.

இன்றைய `திருமணப் புகைப்படத் துறை' வேற லெவலுக்குச் சென்றுவிட்டது.   இந்தியாவில் நடக்கும் திருமணங்களுக்காக ஆண்டு ஒன்றுக்கு 80,000 கோடி ரூபாய் செலவாவதாக ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. அதில் இரண்டு சதவிகிதம் போட்டோகிராஃபிக்கு ஒதுக்கப்படுகிறது. அதாவது 1,600 கோடி ரூபாய்! 

கல்யாணம்... கலை... கேமரா!
கல்யாணம்... கலை... கேமரா!

ஒரு மண்டபதுக்குள் அரை மணி நேரத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட் இப்போது, ஒரு நாள் முழுவதும் அழகிய பூங்காவில், பீச்சில் நடத்தப்படுகின்றன. திருமணத்துக்கு முன்னர், திருமணம், திருமணத்துக்குப் பின்னர் என லிஸ்ட் போட்டு சுடுகிறார்கள் புதுமணத் தம்பதிகள்.

“மாப்பிள்ளை, பொண்ணு ரெண்டு பேருமே எங்களுக்கு செலிபிரிட்டிகள்தான். அவங்க மனசுக்குள் திருமண வாழ்க்கை பத்தின கனவுகள் நிறைய இருக்கும். அதுல ஏதாவது ஒண்ணை என் போட்டோவுல நிறைவேத்திக்காட்டணும்னு ஆசைப்படுவேன். அந்த நம்பிக்கையோடு அவங்க வாழ்க்கையைத் தொடங்குறது,  சூப்பர்ல...” என்கிறார் பாலா மாரியப்பன். சென்னையில் வசிக்கும் இந்த மென்பொருள் நிபுணருக்கு, வெட்டிங் போட்டோகிராஃபிதான் இப்போது பீட்சா வாங்கித்தருகிறது.

கல்யாணம்... கலை... கேமரா!

``ஆரம்பத்துல ஸ்ட்ரீட் போட்டோகிராஃபிதான் எடுத்துட்டிருந்தேன். படம் பிடிக்கிறேன்னு சொன்னதும் சாதாரண மக்கள்கூட வேறமாதிரி ரியாக்‌ஷன் கொடுப்பாங்க. அந்த அனுபவங்களே வெட்டிங் போட்டோகிராஃபில எனக்கு உதவுது. எல்லோருக்குமே நம்மள நாமே பார்க்கிறது பிடிக்கும். எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காதது நம் முகம்தான். அதே சமயம், எத்தனை தடவை பார்த்தாலும் ஏதாவது ஒரு குறை இருந்திட்டே இருக்கும். அது இல்லாத ஒரு போட்டோ எடுக்கிறதுதான் எல்லோருடைய ஃபேன்டசியும்’’ என்கிறார் பாலா.

திருமணம் என்பது பல குடும்பங்களை ஒன்றினைக்கும் ஒரு நிகழ்வு. அந்தச் சமயத்தில் ஒருவர் மாப்பிள்ளையின் நேரத்தை எடுத்துக்கொள்வதோ, சம்பிராதயங்களைத் தாமதிப்பதோ அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் அனுமதிப்பது இல்லை. அவர்கள் முன்னால் மணமக்களும் ஒருவித தயக்கத்துடனே லென்ஸுக்கு ஹாய் சொல்வார்கள். கூடவே, உடைகள் மாற்ற, அவுட்டோர் போகவும் வாய்ப்பு இல்லை. இதை எல்லாம் சரிகட்டதான் `ப்ரி- வெட்டிங் போட்டோஷுட்’ வந்தது. திருமணத்துக்கு முன்னர் ஒரு நாள் மணமக்களை மட்டும் அழைத்துக்கொண்டு ஹாயாக க்ளிக்கித் தள்ளுகிறார்கள். கேண்டிட் போட்டோக்களை எடுக்க, எக்ஸ்பெர்ட்ஸ் ஏராளம் இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் டூயட் போட்டோகிராஃபி. ``பேர்லயே ரொமான்ஸ் பொங்குதே’’ என்றதும் சிரிக்கிறார் அதன் காரணகர்த்தா நிவாஸ் மதன்.

கல்யாணம்... கலை... கேமரா!

‘`முதல்ல இது என்னைப் போல போட்டோகிராஃபர்களுக்கு பேஷனாதான் இருந்தது. இப்ப இது பெரிய பிசினஸ். ஒரு கல்யாண ஆர்டருக்கு 15 பேர் கொண்ட டீம் வொர்க் பண்றோம். மாப்பிள்ளை, பெண் பத்தி நிறையத் தெரிஞ்சிக்கிட்டு கான்செப்ட் பிடிக்கணும். அதை எக்ஸிக்யூட் பண்றதுல நிறையச் சிரமங்கள் வரும். அப்புறம் கலர் கரெக்‌ஷன், போஸ்ட் புரொடக்‌ஷன் நிறைய வேலைகள் இருக்கு’’ என்கிற நிவாஸ், சினிமா ஆர்வத்தில் இருந்த பொறியியல் பட்டதாரி. ``மனசுக்குப் பிடிச்ச வேலை. கை நிறையச் சம்பாதிக்கிறோம் பாஸ்’’ எனச் சிரிக்கிறார்.

கல்யாணம்... கலை... கேமரா!
கல்யாணம்... கலை... கேமரா!

``போட்டோகிராஃபி... குடும்பத்துக்கு நல்லது பாஸ். ஒருதடவ நான் கேண்டிட் பண்ணபோன இடத்துல மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் சண்டை. உர்... உர்னு இருந்த பொண்ணைச் சரிக்கட்ட, குடும்பத்துல வர்ற சண்டையையே கான்செப்ட்டா வெச்சு சில படங்கள் எடுத்தேன். ஷூட் முடிஞ்சுபோறதுக்குள்ள ரெண்டு பேரும் அப்படி க்ளோஸ் ஆகிட்டாங்க. இப்பலாம் மனைவி, வீட்டுல சண்டை போட்டாலே கணவன் எனக்கு கால் பண்ணிடுறார்” எனச் சிரிக்கும் பாலாவிடம் இதுபோல பல கதைகள் உண்டு.

படம் எடுப்பது, எடுத்த படங்களை பிரின்ட் போட்டுப் பார்ப்பது என்பதை எல்லாம் தாண்டி அதை சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து லைக் வாங்குவதுதான் இப்பதைக்கு கிக். அந்தப் படங்கள் வைரலானால் அதற்காக தனியே ட்ரீட் கொடுக்கும் அளவுக்கு ஆர்வமாக இருக்கிறார்கள் புது மாப்பிள்ளைகள். இதற்காகச் செலவுசெய்யவும் அவர்கள் தயங்குவது இல்லை. ஒரு திருமணத்துக்கு 50 ஆயிரம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை சார்ஜ் செய்கிறார்கள் புகைப்படக்கலைஞர்கள்.

ப்ரீ-வெட்டிங் படங்களில் மயங்கிய ஒரு மாப்பிள்ளை அதே போட்டோகிராபரை `ஹனிமூனுக்கும் கூடவந்து போட்டோ எடுத்துத் தர முடியுமா?’ எனக் கேட்டதெல்லாம் நடந்திருக்கிறது. இதுதான் காலத்தை நிறுத்திவைக்கும் இந்தக் கலையின் பெருமை!