Published:Updated:

தண்ணீருக்கு விலை வைத்தபோதே நாம் விழித்திருக்க வேண்டும்! #WorldWaterDay

தண்ணீருக்கு விலை வைத்தபோதே நாம் விழித்திருக்க வேண்டும்! #WorldWaterDay
தண்ணீருக்கு விலை வைத்தபோதே நாம் விழித்திருக்க வேண்டும்! #WorldWaterDay

தண்ணீருக்கு விலை வைத்தபோதே நாம் விழித்திருக்க வேண்டும்! #WorldWaterDay

‘பேராசை பெருநஷ்டம்‘ என்பார்கள். அதை தனது ஒவ்வொரு செயலின் மூலமும் நிரூபித்துக்கொண்டேயிருக்கிறான் மனிதன். தனது செயலால் ஏற்படும் தவறுக்காக தண்டனை பெற்றுக்கொண்டேயிருந்தாலும், அந்த அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள தயாராக இல்லை. விளைவு, பக்கவாதத்தில் படுத்துகிடக்கிறது பருவநிலை. நிர்வாணமாக கிடக்கின்றன நீர்நிலைகள். தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த ஆறுகளில் எல்லாம் தற்போது ஆயிரக்கணக்கான லாரிகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தாயின் மார்பை அறுத்து பால்குடிப்பதைப் போல், ஊற்றுகளை உள்வாங்கி வைத்திருக்கும் ஆற்று மணலை கொள்ளையடித்துக்கொண்டேயிருக்கிறோம். வகைதொகையில்லாமல் மார்பை அறுத்தெரிந்துவிட்டு, தற்போது பசிக்கிறதே, தவிக்கிறதே என கதறி என்ன பயன்?

நீரோட்டத்தின் உயிரோட்டமாக இருப்பவை மலைகளும், மணலும்தான். இரண்டையும் அழித்துக்கொண்டே இருக்கிறோம். அதனால் நீரோட்டமும் அழிந்துக்கொண்டேயிருக்கிறது. வீடுகள் தோறும் திண்ணைகளும், சாலைகள் தோறும் தண்ணீர் பந்தல்களையும் அமைத்து, வழிப்போக்கர்களின் தாகத்தை தணித்த பாரம்பரியம் தமிழருடையது. ஆனால், இன்று நாக்கு வறண்டு போனால் கூட சொட்டுத் தண்ணீர் கொடுக்க யோசிக்கிறார்கள். காரணம், இன்றைக்கு பாலை விட தண்ணீரின் விலை அதிகம். 

தண்ணீர். இயற்கை உயிரினங்களுக்கு அளித்த வரம். தண்ணீர் இல்லாமல் இங்கு எதுவுமேயில்லை. அத்தனை அவசியமான ஒன்றை, நாம் எத்தனை கவனமாக கையாள வேண்டும்? இருக்கும்போது இஷ்டம்போல் செலவழித்து விட்டோம். தற்போது பற்றாக்குறை தொடங்கியிருக்கிறது. இயற்கை வரமாக அளித்த நீருக்கு தற்போது விலை வைத்து விற்கத் தொடங்கிவிட்டோம். அப்போதே நாம் விழித்திருக்க வேண்டாமா?  இனியாவது நாம் விழித்துக்கொள்ள வேண்டும். இப்போது இல்லையென்றால் இனி எப்போதும் இல்லை என்ற நிலையில் இருக்கிறது பூவுலகு. ஒரு நாட்டில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டால்கூட ஓரளவு தாக்குபிடித்து விடுவார்கள். ஆனால், தண்ணீர் பஞ்சம் வந்தால் வாழவே முடியாது. உலகளவில் தண்ணீர்தான் தற்போது பெரும் பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. உலகின் 8 நாடுகள் நீர்வளம் இல்லாத நாடுகள் என அறிவிக்கப்பட்டு விட்டன. 81 நாடுகள் எந்த நிமிடத்திலும் நீர்வளம் இல்லாத நாடுகளாக மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் அறிவித்திருக்கிறார்கள் இங்கிலாந்தைச் சேர்ந்த நீரியல் ஆய்வாளர்கள். ஓரளவு நீர்வளம் உள்ள நாடுகளின் பட்டியலில் 107 வது இடத்தில் இருக்கிறது இந்தியா. 

ஒரு மனிதனின் சராசரி தண்ணீர் தேவை தினமும் 140 லிட்டர் என்கிறார்கள். ஆனால் 2050-ம் ஆண்டில் சராசரியாக ஒரு மனிதனுக்கு தினமும் 50 லிட்டர் தண்ணீர்தான் கிடைக்கும் என ஐ.நா. சில ஆண்டுகளுக்கு முன்பாக அறிவித்தது. ஆனால், இன்றைய தேதியில் இந்தியாவில் ஒரு மனிதனுக்கு கிடைக்கும் சராசரி தண்ணீரின் அளவு 27 லிட்டர்தான். இப்போதே இப்படி என்றால் 2050-ல் என்ன நடக்கும் என்பதை யூகிக்கவே முடியவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் தங்கத்தின் விலையை விட தண்ணீரின் விலை அதிகமாகப் போனாலும் ஆச்சர்யப்படுவதிற்கில்லை. ஏன் இந்த நிலை? தண்ணீரின் மதிப்பை நாம் முழுவதுமாக உணராமல் செய்த பிழைதான் இத்தனைக்கும் அடிப்படை.

தமிழகத்திற்கு ஒரு ஆண்டுக்கு 54 ஆயிரத்து 725 மில்லியன் கனலிட்டர் தண்ணீர் தேவை. ஆனால், தற்போது 46 ஆயிரத்து 540 மில்லியன் கன லிட்டர்தான் கிடைக்கிறது. இதுவும் ஆண்டுக்கு ஆண்டு சரிந்துகொண்டே போவதுதான் வேதனை. பெய்யும் மழைநீரை நாம் முறையாக சேமிக்காமல் விட்டதும், இயற்கை வளங்களை அழித்தொழித்துக்கொண்டே இருப்பதும்தான் மழை குறையக்காரணம். பெய்யும் மழைநீரில் 40 சதவிகிதம் நிலத்தில் ஓடி, கடலில் கலக்கிறது. 35 சதவிகிதம் வெயிலில் ஆவியாகி விடுகிறது. 15 சதவிகிதம் பூமி உறிஞ்சி கொள்கிறது. 10 சதவிகிதம் மண்ணை ஈரமாக்குகிறது. ஆக, வீணாக ஓடும் தண்ணீரை சேமித்து வைத்தாலே தண்ணீர் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்து விடலாம். 

தமிழகத்தின் சராசரி மழையளவு 958 மில்லி மீட்டர். இந்த மழைநீரை முறையாக சேமித்து பயன்படுத்தினால் குடிநீர் தட்டுப்பாட்டை சுலபமாக சமாளித்துவிட முடியும். ஆனால், மழைநீர் சேமிப்பில் அரசுக்கும் அக்கறையில்லை, மக்களுக்கும் அக்கறையில்லை. தும்பை விட்டு வாலை பிடிக்கும் நமது பழக்கம் இதிலும் தொடர்கிறது. உலகில் தண்ணீரே இல்லாத ஒரு நகரம் அறிவிக்கப்பட்டுவிட்டது. தென் ஆப்பிரிக்காவின் ‘கேப்டவுன்’ நகரம் ‘ஜூரோ டே’ என்ற சொட்டு தண்ணீர் இல்லாத நாளை எதிர்நோக்கி இருக்கிறது. இனிமேல் அங்கு ஒரு நபருக்கு 25 லிட்டருக்கு மேல் தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் விநியோகத்திற்காக சிறப்பு ரேசன்கடைகள் திறக்கப்படுகின்றன. அந்த நிலை இன்னும் சில மாதங்களில் உலகின் 26 நகரங்களுக்கு ஏற்படும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன. அதில் இந்தியாவின் சில நகரங்களும் இடம்பெற்றுள்ளன என்பது அதிர்ச்சியான உண்மை. 

இன்று உலக தண்ணீர் தினம். இதுவரை போனது போகட்டும். இன்றில் இருந்தாவது தண்ணீரின் அருமை உணர்ந்து அதை சேமிக்கும் நடவடிக்கையில் நாம் இறங்க வேண்டும். இது சரியான தருணம். இந்த கோடையில் வீடுகளில் மழைநீர் சேமிப்பு முறைகளை அமைத்து விட்டால், அடுத்து வரும் மழை மாதங்களில், நமக்கு தேவையான தண்ணீரை, யாரையும் எதிர்பார்க்காமல் நாம் பெற முடியும். ஒரு குடும்பத்துக்கு தேவையான தண்ணீரை அந்த குடும்பமே இயற்கையிடம் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். 100 சதுர மீட்டர் பரப்புள்ள மொட்டை மாடியில் இருந்து ஆண்டுக்கு 61,600 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும் என்கிறது பொதுப்பணித்துறை.

மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகளை, அமைக்க எங்களிடம் வசதியில்லை என நினைப்பவர்களும் மழைநீரை சேமிக்க ஒரு வழியிருக்கிறது. வீட்டு மொட்டை மாடி அல்லது வெட்டவெளியில் நான்கு மூலைகளில் குச்சிகளை கட்டி, அதில் ஒரு வெள்ளை வேஷ்டியை கட்டிவிட வேண்டும். அந்த வேஷ்டியின் மத்தியில் ஒரு கல்லை வைத்தால், நடுப்பகுதி குழியாக மாறி புனல் போல் இருக்கும். அந்த புனல் பகுதிக்கு கீழே பாத்திரங்களை வைத்து மழைநீரை சேமிக்கலாம். மழைநீரை சேமிக்கும் ஆர்வம் இருந்தால் போதும், ஆயிரம் வழிகள் இருக்கின்றன. நாமும் மண்ணெண்ணைக்காக ரேசன்கடைகளில் வரிசையில் நிற்பதைப் போல, தண்ணீருக்காகவும் நிற்கும் காலம் வந்தேவிட்டது. இது விழித்துக்கொள்ள வேண்டிய நேரம்; இனியும் தாமதித்தால் நஷ்டம் நமக்குத்தான்.

அடுத்த கட்டுரைக்கு