Published:Updated:

‘இறைவி’ படத்துல யார் நடிச்சிருக்கா?

‘இறைவி’ படத்துல யார் நடிச்சிருக்கா?
பிரீமியம் ஸ்டோரி
News
‘இறைவி’ படத்துல யார் நடிச்சிருக்கா?

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.விஜயலட்சுமி

“இன்னைக்கு மட்டும் 15 கல்யாணத்துக்குப் போறேன். பத்திகையில எல்லாரும் என் பேர் போட்டுட்டதால, கல்யாணத்துக்குப் போறதுதானே முறை. அதுனால நாம கார்ல போய்க்கிட்டே பேசலாமா?” என்று கை குலுக்குகிறார் தி.மு.க-வின் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு.

“படம் வரைவதைத் தவிர எனக்கு வேற எதுவும் தெரியாது தம்பி. ஜி.கே-வுல நான் ஜீரோ. அதை பளிச்னு சொல்லப்போறீங்க. அதானே உங்க திட்டம்?” என கண்கள் மூடிச் சிரிக்கிறார் ஓவியர் மருது.

“இதோ ஷூட்டிங் முடிச்சு வரேன். ஃப்ரீயா, ஜாலியா எவ்வளவு நேரம் வேணும்னாலும் பேசலாம்” - கமிட் ஆகிறார் ‘தெய்வமகள்’ வாணி போஜன்.

“போட்டோகிராஃபி பற்றியும் கேள்வி கேளுங்க. அப்பதான் கொஞ்சமாவது நான் மார்க் ஸ்கோர் பண்ண முடியும்” என விண்ணப்பம் தட்டுகிறார் புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம்.

“இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் பெண் முதலமைச்சர்கள் ஆட்சிசெய்கிறார்கள்?”

விடை: மெகபூபா முஃப்தி (ஜம்மு-காஷ்மீர்), வசுந்தரா ராஜே (ராஜஸ்தான்), ஆனந்தி பென் பட்டேல் (குஜராத்), மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்), ஜெயலலிதா (தமிழ்நாடு) என, மொத்தம் ஐந்து பெண் முதலமைச்சர்கள்.

‘இறைவி’ படத்துல யார் நடிச்சிருக்கா?

கே.என்.நேரு: “தமிழ்நாடு ஜெயலலிதா, மேற்கு வங்காளம் மம்தா பானர்ஜி, குஜராத் ஆனந்தி பட்டேல், ஜம்மு காஷ்மீர் மெகபூபா முஃப்தி என நாலு பெண் முதலமைச்சர்கள். இவங்களைப் பற்றி கருத்துச் சொல்ல நிறைய இருக்கு. ஆனா, நாங்க எதிர்க்கட்சியா இருக்கோம். கருத்து சொன்னா, `வேணும்னே விமர்சனம் பண்றாங்க'னு சொல்வாங்க.”

 மருது: “ஜெயலலிதா, மம்தா பானர்ஜி தெரியும். இன்னும் ரெண்டு பேரு இருக்காங்களே. அவங்க யாருனு சட்டுனு ஞாபகம் வர மாட்டேங்குது. எனக்கு அடிக்கடி எக்ஸாம் எழுதுற மாதிரி கனவு வரும். ஏன் வருதுன்னே தெரியல. இப்ப ரொம்ப வருஷம் கழிச்சு இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்கும்போது, ஸ்கூல்ல எக்ஸாம் எழுதுற ஃபீல் வருது” எனச் சிரிக்கிறார்.

வாணி போஜன்: “ஐ திங்க் ஒருத்தவங்க நம்ம சி.எம் ஜெயலலிதா மேடம். இன்னொருத்தர் மம்தா பானர்ஜி. இன்னும் யாராவது இருந்தாங்கன்னா... அவங்க பெயரை எழுதி, நான் சரியான பதிலைச் சொன்ன மாதிரி போடுங்க ப்ளீஸ்...''

‘இறைவி’ படத்துல யார் நடிச்சிருக்கா?

ஜி.வெங்கட்ராம்: “நாலு ஸ்டேட்ல பெண் முதலமைச்சர்கள் இருக் காங்களா! எதுக்கும் சரியானு செக் பண்ணிக்கோங்க பாஸ்.”

“இளைஞரை அடித்ததாக, சர்ச்சையில் சிக்கிய நடிகர் யார்?”

விடை: சூர்யா.

கே.என். நேரு:
கேள்வியை முடிக்கும் முன்னரே “நடிகர் சூர்யா. ஒரு ஹாஸ்பிட்டல் முன்னாடி ஒருத்தரை அடிச்சுட்டார். இந்த அடிதடி, சர்ச்சையான நியூஸ் எல்லாம் படிக்கும்போது என் கண்ணுல முதல்ல சிக்கும். இலக்கியம், சினிமா சம்பந்தமான செய்தி வந்ததுன்னா படிக்காமத் திருப்பிடுவேன்.”

மருது: “இந்த மாதிரி சர்ச்சையான செய்திகளை ஃபேஸ்புக்லயும் சரி, நியூஸ்லயும் சரி நான் பார்க்கிறதே கிடையாது. எந்த நடிகர் அடிச்சாராம், என்ன பிரச்னை?” என விசாரிக்கிறார்.

வாணி போஜன்:
“ஈஸியான கொஸ்டீன்ப்பா. (சியர்ஸ் தட்டியவர்) நடிகர் சூர்யா” எனக் குஷியாகிறார்.

ஜி.வெங்கட்ராம்:
``கேள்வியை மறுபடி சொல்லுங்க...ஆன்சர் சூர்யாதானே?”

“தனியார் பால் விலை, அண்மையில் லிட்டருக்கு எவ்வளவு உயர்த்தப்பட்டது?”

விடை: இரண்டு ரூபாய்.

கே.என்.நேரு
: “நான் இந்தத் துறைக்கு அமைச்சரா இருந்தப்ப, ஆறு மாதத்துக்கு ஒருமுறை பால்காரங்க அரசாங்கத்துக்கிட்ட பால் விலையை உயர்த்தச் சொல்லி கெஞ்சுவாங்க. அடுத்த ஆறு மாதம் நாம பால்காரங்ககிட்ட விலையைக் குறைக்கச் சொல்லி கெஞ்சணும். அப்ப ஆறு மாசத்துக்கு ஒருமுறை பால் உற்பத்தி அதிகமாவதும் குறைவதுமாக இருந்தது. இப்ப தேவைக்கு அதிகமாவே உற்பத்தி இருக்கு. நானே 400 மாடுகள் வெச்சிருக்கேன். தினமும் 800 லிட்டர் பால் உற்பத்தி பண்றேன். பால் விலையை உயர்த்தவேண்டிய அவசியமே இல்லை. ஆனா, இப்ப ரெண்டு ரூபாய் அதிகப்படுத்தியிருக்காங்க.”

மருது: “எங்க வீட்டுல தினமும் போடும் பால் பாக்கெட் எடுத்து, நான்தான் வீட்டுக்குள்ள வைப்பேன். ஆனால், பால் விலை எவ்வளவுனு கவனிச்சது இல்லை. இருங்க பால் கவரை எடுத்துப் பார்க்கிறேன்.”

வாணி போஜன்:
“பால் வாங்கி தினமும் எனக்கு பால் காய்ச்சித் தருவதே எங்க அம்மாதான். அவங்ககிட்ட கேட்டா தெரியும். ஒரு லிட்டர் பால் 23 ரூபாய்னு நினைக்கிறேன். இப்ப ரெண்டு ரூபா அதிகமாக்கி இருப்பாங்கனு நினைக்கிறேன்.”

ஜி.வெங்கட்ராம்:
“குத்துமதிப்பா பால் விலை ஒரு ரூபாய் ஏத்தியிருப்பாங்கனு நினைக்கிறேன். நான் பால் குடிப்பதோடு சரி. இப்படி எடக்குமடக்கா கேட்டா எப்படிங்க?” என ஜாலியாகிறார்.

“விஜய் மல்லையா இப்போது எங்கு இருக்கிறார்?”

விடை: லண்டனில்.

கே.என்.நேரு: “எங்க ஊர்ல விவசாயத்துக்கு விவசாயி பணம் வாங்கி கட்டலைன்னா டிராக்டரை அதிகாரிங்க தூக்கிடுறாங்க. ஆனா மதுவுக்கும், ஃப்ளைட்டுக்கும், குதிரை ரேஸுக்கும் வங்கிகளிடம் கோடிக்கணக்கில் கடன் வாங்கி எஸ்கேப் ஆகிட்டார் மல்லையா. இப்ப லண்டன்ல இருக்கார். எதுனால பிடிக்காம இருக்காங்கனு தெரியலை.”

‘இறைவி’ படத்துல யார் நடிச்சிருக்கா?

மருது: “நாம சின்ன வயசுல ஒளிஞ்சு விளையாடுவோம்ல. அப்படி விஜய் மல்லையாவும் அவர்கூடச் சேர்ந்து பலரும் ஒளிஞ்சு கண்ணாமூச்சி விளையாடுறாங்க. ஆனா, அவர் இருக்கும் இடம் எல்லாருக்கும் தெரியுமே. இப்ப அவரு லண்டன்ல இருக்கார்.”

வாணி போஜன்: “மல்லையா பற்றி என்கிட்டையேவா? நான் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸின் முன்னாள் ஏர்ஹோஸ்டஸ் தெரியும்ல? எங்களுக்கு இன்னும் சம்பள பாக்கி இருக்கு. ஆனா, அவர் லண்டன்ல ஜாலியா இருக்கார்” என சோக ஸ்மைலியை வெளிப்படுத்துகிறார்.

ஜி.வெங்கட்ராம்: “மல்லையா லண்டனில் இருக்கார். இந்தக் கேள்விக்காவது நல்ல மார்க் கொடுங்க பிரதர்.”

`` ‘இறைவி’ என்றால் என்ன அர்த்தம்?''

விடை: கடவுளானவள்.

கே.என்.நேரு: யோசிக்கிறார்

“ `இறைவி’ இந்தப் பெயரை சமீபத்துல எங்கேயோ பார்த்த மாதிரி ஒரு ஞாபகம். எங்கேனு நினைவுக்கு வரலை. எனக்கு பதில் தெரியலையே” என்றவரிடம் பதிலைச் சொன்னால், “நீங்க அந்தக் காலத்துப் படங்களைப் பற்றி எப்ப கேட்டாலும் கடகடனு சொல்லிடுவேன். இந்தப் படங்கள் எல்லாம் பார்க்க, எங்கே தம்பி நேரம் இருக்கு? ஆமா, `இறைவி' படத்துல யார் நடிச்சிருக்கா? ஓஹோ...
எஸ்.ஜே.சூர்யா தம்பியை மட்டும் தெரியும். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா எல்லாரும் யாருப்பா?”

மருது: “பெண் தெய்வம். அப்புறம் இப்ப வந்த ஒரு படத்தோட பேரு.”

வாணி போஜன்: `` ‘இறைவி'னா பொண்ணுதானே..?” என எதையோ யோசித்தவர், “இல்லைங்க. இறைவனுக்கு நேர் எதிர் இறைவி. அப்படிப் பார்த்தால் இறைவி லேடி காட்னு வைச்சுக்கலாம். ஓ.கே-வா?

‘இறைவி’ படத்துல யார் நடிச்சிருக்கா?

ஜி.வெங்கட்ராம்: “சத்தியமா தெரியலையேங்க. நான் இன்னும் படம் பார்க்கலை. பார்த்தவங்க `நல்லா இருக்கு'னு சொன்னாங்க. ஆமா, ‘இறைவி’னா என்ன அர்த்தம்? நீங்க சொன்னால் தெரிஞ்சுக்கிறேன்.”

“தமிழ்நாடு முதலமைச்சரின் ஒரு மாத சம்பளம் என்ன?”

விடை: 32,000 ரூபாய் (இதர படிகள் தனி) + 160 லிட்டர் பெட்ரோலுக்கான பணம்.

கே.என்.நேரு: கூலாக யோசித்தவர் “அவங்க முதல் முறை முதலமைச்சரானபோது வெறும் ஒரே ஒரு ரூபாய் சம்பளம் வாங்கினாங்க. ஆனா, இப்போ எவ்வளவு வாங்குறாங்கனு தெரியலை. இந்தப் பதிலை இப்படியே எழுதுங்க தம்பி” எனக் கண்ணடித்துச் சிரிக்கிறார்.

மருது: “ஹா... ஹா... நான் ஸ்கூல்ல படிக்கும்போதே டீச்சர் க்ளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்கன்னா நான் படம் வரைஞ்சுக்கிட்டு இருப்பேன். அப்ப தொடங்கி இப்ப வரைக்கும் அப்படித்தான். என் முழுக் கவனமும் ஓவியம் மீதுதான். அதுனால இந்த மாதிரி செய்திகளை எல்லாம் நான் கவனிப்பதே இல்லை. எப்பவோ ஒரு பைசா சம்பளம் வாங்கினாங்க. அவ்வளவுதான் தெரியும்.”

வாணி போஜன்
: “ஒன் ருப்பிதானே சேலரி... கரெக்ட்டா? இது தப்புன்னா, ஒரு அரசு ஊழியர் எவ்ளோ சம்பளம் வாங்குறாரோ அவ்ளோதான் தமிழ்நாடு சி.எம்-மும் வாங்குவார். எப்படி... லாஜிக்கா பதில் சொன்னேன் பார்த்தீங்களா?”

ஜி.வெங்கட்ராம்: சரியாக 33 விநாடிகள் யோசித்தவர், “ஒரு லட்சம் ரூபாய் சம்பளம் வாங்குவாங்க. இல்லையா? அப்ப நான் சொன்ன பதிலை அழிச்சுட்டு, நீங்களே சரியான பதிலை எழுதிக்கங்க. நமக்கு எதுக்கு வம்பு?''