Published:Updated:

இது கால்பந்து சீஸன்!

இது கால்பந்து சீஸன்!
பிரீமியம் ஸ்டோரி
இது கால்பந்து சீஸன்!

எம்.குமரேசன்

இது கால்பந்து சீஸன்!

எம்.குமரேசன்

Published:Updated:
இது கால்பந்து சீஸன்!
பிரீமியம் ஸ்டோரி
இது கால்பந்து சீஸன்!
இது கால்பந்து சீஸன்!

கால்பந்து கோலாகலத்துக்குத் தயாராகி விட்டது பிரான்ஸ். உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு அடுத்து, உலகின் மிகப் பெரிய கால்பந்து போட்டி யூரோ கப். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் யூரோ கப், ஜூன் 10-ம் தேதி தொடங்கி, பிரான்ஸின் 10 நகரங்களில் நடைபெற இருக்கிறது. உலக சாம்பியன் ஜெர்மனி, நெதர்லாந்து, ஸ்பெயின், இங்கிலாந்து என கால்பந்து விளையாட்டின் முக்கிய நாடுகள் அனைத்தும் கலந்துகொள்வதால் உலகின் ஒட்டுமொத்த கால்பந்து ரசிகர்களின் கவனமும் யூரோ கோப்பை மீதுதான்.

இது கால்பந்து சீஸன்!

ஜெர்மனி 

கால்பந்து உலகக்கோப்பையை நான்கு முறையும், யூரோ கோப்பையை மூன்று முறையும் வென்றிருக்கும் ஜெர்மனியே இந்த முறையும் கோப்பையை வெல்லும் அணியாக கணிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் சோகம் என்னவென்றால், கடைசியாக யூரோ கோப்பையை ஜெர்மனி வென்று 20 வருடங்களாகிவிட்டது. இந்த முறை உலக சாம்பியன் என்ற கெத்துடன் யூரோ கோப்பைக்குள் நுழையும் ஜெர்மனி, கோப்பையை வென்றாக வேண்டும் என்ற வெறியில் இருக்கிறது.

ஜெர்மனியைப் பொறுத்தவரை, சூப்பர் ஸ்டார் என யாரும் கிடையாது. அனைத்து வீரர்களும் சூப்பர்ஸ்டார்ஸ்தான். கோல்கீப்பர் மேனுவல் நூயூவரைத் தாண்டி பந்து எல்லைக்கோட்டைக் கடப்பது கடினம் என்றால், முன்களத்தில் தாமஸ் முல்லர் எப்போது, எங்கு இருந்து வருவார் எனத் தெரியாது. மிக லாகவமாகக் கடந்து செல்லும் அசாத்திய திறமையும் வேகமும்தான் முல்லரின் பலம்.

2014-ம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி கோல் அடித்து அர்ஜென்டினாவின் வெற்றியைப் பறித்த மரியோ கோட்சேவும் சாதாரண ஆள் இல்லை. மைதானத்தில் ஓடிக்கொண்டே இருப்பார் கோட்சே. நடுகளத்தில் அனுபவமிக்க பாஸ்டியன் ஸ்வான்ஸ்டேகர் ஜெர்மனியின் மிகப் பெரிய பலம். டோனி க்ருஸ், சமி கெடிரா, மெசூத் ஒசில் என ஜெர்மனியின் ஒவ்வொரு வீரரும் எதிர் அணியை மிரளவைப்பவர்கள்.

இது கால்பந்து சீஸன்!

ஸ்பெயின்

ஜெர்மனியைப் போலவே யூரோ கோப்பையை மூன்று முறை வென்றிருக்கும் அணி என்பதோடு, ஸ்பெயின்தான் யூரோ கோப்பையின் நடப்பு சாம்பியன். ஆனால், 2014-ம் ஆண்டு உலகக்கோப்பையில் ஸ்பெயின் மரண அடி வாங்கி முதல் சுற்றிலேயே வெளியேறியதால், ஸ்பெயினுக்கு இந்த முறை மனரீதியிலான சவால்களும் அதிகம். ஸ்பெயின், டிக்கி டாக்கா ஆட்டமுறையைப் பின்பற்றும்.

தங்களுக்குள் ஷாட் பாஸ் போட்டுக்கொண்டு, தங்கள் கட்டுப்பாட்டிலேயே பந்தை வைத்துக்கொண்டு, எதிர் அணி வீரர்களை சோர்வுக்குள்ளாக்கி தக்க சமயத்தில் கோல் அடிப்பது டிக்கி டாக்கா உத்தி. `ஒருகாலத்தில் ஸ்பெயினுக்கு டிக்கி டாக்கா, மந்திரம் போல பலித்தது. ஆனால், கடந்த உலகக்கோப்பையில் டிக்கி டாக்கா எடுபடவில்லை. அதனால் இந்த முறை புதிய ஆட்டமுறையில் ஸ்பெயின் ஆடும்' என்கிறார் அதன் பயிற்சியாளர்.

ஸ்பெயின் அணி, நட்சத்திர வீரர்கள் நிறைந்த அணி. ஐகெர் கெசிலாஸ் ஸ்பெயின் அணியின் அனுபவமிக்க கோல்கீப்பர். 2000-ம் ஆண்டு முதல் இதுவரை தொடர்ந்து ஐந்து யூரோ கோப்பைத் தொடரில் விளையாடியிருக்கிறார். நடுகளத்தில் ஆன்ட்ரஸ் இனியஸ்டா பிரித்து மேய்வார்; எதிர் முகாமில் இருந்து கோல் போஸ்ட்டுக்குப் பந்தைக் கடத்தி வருவதில் கில்லாடி. டேவிட் சில்வா, ஃபெப்ரிகாஸ் ஆகியோர் நடுகளத்தில் இனியஸ்டாவுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். தடுப்பாட்டத்தைப் பொறுத்தவரை செர்ஜியோ ரமோஸ் எப்போதுமே அதிரடிதான். ஒன்று பந்தைத் தூக்கு இல்லையென்றால், ஆளைத் தூக்குவதுதான் ரமோஸின் பாலிசி. நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்த்தை ஸ்பெயின் தக்கவைத்துக் கொண்டால், யூரோவை நான்கு முறை வென்ற சாதனையையும் படைக்கும்.

இது கால்பந்து சீஸன்!

இங்கிலாந்து

அது உலகக்கோப்பையாக இருந்தாலும் சரி, யூரோ கோப்பையாக இருந்தாலும் சரி ஒவ்வொரு முறையும் கப்பு எங்களுக்குத்தான் என ஓவர் சவுண்டோடு நுழையும் அணி இங்கிலாந்து. இந்த முறையும் அந்தப் பாரம்பர்யம் தொடர்கிறது.

இந்த முறை இங்கிலாந்து பயிற்சியாளர் ஹாட்ஸன், திறமைமிகுந்த இளம் அணியைத் தயார்செய்திருக்கிறார். கேரி காகில், கிறிஸ் ஸ்மால்லிங், ஆடம் லல்லென்னா, ரஹீம் ஸ்டெர்லிங், ஸ்டர்ரிஜ், ஜேமி வார்டி என இளம் வீரர்கள் பட்டாளம் எதிர் அணிக்கு நிச்சயம் கிலியை ஏற்படுத்தத்தான் செய்கிறது. இதில் ஜேமி வார்டி மிக முக்கியமானவர். இங்கிலீஷ் பிரீமியர் லீக்கில் பெரிய அணிகள் எல்லாம் வெளியேற, லியோசெஸ்டர் சிட்டி என்ற கத்துக்குட்டி அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதற்கு முழுமுதற் காரணம் ஜேமி வார்டிதான். லியோசெஸ்டர் அணிக்காக 24 கோல்கள் அடித்து அந்த அணிக்குக் கோப்பை வென்று கொடுத்துள்ளார் ஜேமி. இங்கிலாந்து அணியின் கேப்டன் வேன் ரூனேவும் வேறு களத்தில் இருக்கிறார்.

இது கால்பந்து சீஸன்!

இத்தாலி

நான்கு முறை உலகக்கோப்பை சாம்பியன் அணியான இத்தாலிக்கு, இந்த யூரோ கப் மிகப் பெரிய சவால்தான். இத்தாலியின் முக்கிய வீரரும், `மிட்ஃபீல்ட் மேஸ்ட்ரோ' எனப் புகழப்படுபவருமான ஆண்ட்ரூ பிர்லோ இப்போது அணியில் இல்லை. கடந்த யூரோவில் கலக்கிய சேட்டைக்கார மரியோ பாலோட்டலியும் இந்த முறை அணியில் இல்லை. பலோட்டலிக்குப் பதிலாக ஸ்டீபன் எல்சார்வி என்கிற இளம் வீரர் முன்களத்தில் விளையாடப்போகிறார். இத்தாலி அணி எப்போதும் தடுப்பாட்டத்தை நம்பியே களம் இறங்கும். கடந்த உலகக்கோப்பையில் உருகுவே வீரர் சுவாரஸிடம் கடி வாங்கிய கெலினியை மையமாக வைத்ததுத்தான் இந்த முறை இத்தாலியின் தடுப்பாட்டம் இயங்கப்போகிறது. பானுச்சி, பர்சாக்லி ஆகியோரும் பின்களத்தில் இத்தாலிக்கு நம்பிக்கை கொடுப்பவர்கள்.

கேப்டன் ஜியான்லுகி பஃபன் உலகிலேயே மிகச் சிறந்த கோல்கீப்பர். இத்தாலி அணிக்காக 157 சர்வதேசப் போட்களில் விளையாடியுள்ளார். இவருக்கு இது 4-வது யூரோ தொடர். இத்தாலியைப் பொறுத்தவரை எடுத்தோம் கவிழ்த்தோம் என ஆடுவது இல்லை. எதிர் அணியைப் பொறுத்து தடுப்பாட்டத்தைக் கையாளும். தேவைப்பட்டால் தாக்குதல் ஆட்டத்தைத் தீவிரப்படுத்தும். இந்த யூரோவில், அனுபவமும் இளமையும் கலந்த ஒரு கலவையாக இத்தாலி இருக்கிறது.

இது கால்பந்து சீஸன்!

போர்ச்சுகல்

`போர்ச்சுகல்...' என்றதுமே நமக்கு ரொனால்டோதான் நினைவுக்கு வருவார். இந்த முறை ரியல்மாட்ரிட்டுடன் சேர்ந்து சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்ற தெம்பில் ரொனால்டோ இருக்கிறார். பந்து காலுக்குக் கிடைத்துவிட்டால், கோல் கம்பம்தான் இவரது இலக்காக இருக்கும். கவுன்டர் அட்டாக்கில் ரொனால் டோவைப் பிடிக்கவே முடியாது. அந்த அளவுக்கு ஒரு வேகம் இருக்கும். ஆனால், ரொனால்டோவைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், போர்ச்சுகல் என்ற அணியே காற்றுபோன பலூன்தான். ஒவ்வொரு முறையும் ரொனால்டோவை நம்பியே களம் இறங்குவதால் ஆரம்பத்திலேயே வெளியேறிவிடுகிறது போர்ச்சுகல்.

இது கால்பந்து சீஸன்!

பிரான்ஸ்

போட்டியை நடத்தும் பிரான்ஸ், இதற்கு முன்னர் 1984 மற்றும் 2000-ம் ஆண்டில் யூரோ கோப்பையை வென்றிருக்கிறது. தற்போதையை அணியில் பால் போக்பா என்கிற இளம் வீரரைத்தான் பிரான்ஸ் பெரிதும் நம்பியிருக்கிறது. யோகன் கபாயி, சக்னா, கோல்கீப்பர் லாரிஸ், ஆலிவர் ஜிராட்டு ஆகியோர் பிரான்ஸின் நம்பிக்கை நட்சத்திரங்கள். சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறுவது பிரான்ஸுக்குக் கூடுதல் பலம்.

இது கால்பந்து சீஸன்!

நெதர்லாந்து அவுட்!

2016-ம் ஆண்டு நடக்கவிருக்கும் யூரோவில், அதிர்ச்சியான ஒரு விஷயமும் இருக்கிறது. கால்பந்து விளையாட்டில் மிக முக்கியமான அணியான நெதர்லாந்து இந்த முறை யூரோவுக்குத் தகுதி பெறவே இல்லை. நெதர்லாந்து யூரோவில் இல்லாதது, போட்டியின் சுவாரஸ்யத்தைக் குறைக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், இதுவரை 16 அணிகளே மோதிய யூரோ கோப்பையில் இந்த முறை 24 அணிகள் மோதுவதால், புதிய அணிகளும் புதிய வீரர்களும் போட்டியை சுவராஸ்யப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம்!