Published:Updated:

அலறவைக்கும் சைபர் ரேப்!

அலறவைக்கும் சைபர் ரேப்!

பா.விஜயலட்சுமி, ஓவியம்: ஹாசிப்கான்

அலறவைக்கும் சைபர் ரேப்!

பா.விஜயலட்சுமி, ஓவியம்: ஹாசிப்கான்

Published:Updated:
அலறவைக்கும் சைபர் ரேப்!
அலறவைக்கும் சைபர் ரேப்!

ரசுப் பதவியில் இருக்கும் கீதாவுக்கு,  தொடர்ச்சியாக வெவ்வேறு எண்களில் இருந்து மொபைல் அழைப்புகள் குவியத் தொடங்கின. அத்தனையும் ஆபாச உரையாடலுக்கு அழைப்புவிடுக்கும் மோசமான அழைப்புகள். பதில் சொல்லிச் சொல்லி நொந்துபோனார் கீதா. ஏதோ தவறு நடந்திருக்கிறது என சுதாரித்துக் கொண்டவர், அடுத்ததாக அழைத்த நபரிடம் நட்பாகப் பேசி ‘உங்களுக்கு எப்படி இந்த நம்பர் கிடைத்தது?’ எனக் கேட்க, அவர் உண்மையைக் கொட்ட ஆரம்பித்தார். கீதாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!

ஃபேஸ்புக்கில் இயங்கும் ஆபாசக் குழு ஒன்றில், கீதாவின் புகைப்படத்தையும் அவருடைய செல்போன் எண்ணையும் யாரோ பகிர்ந்திருக் கிறார்கள். அந்தக் குழு, முழுக்க முழுக்க ஆபாசப் படங்களும் வீடியோக்களும் பகிர்ந்துகொள்ளப்படும் விபரீதமான இடம். கீதாவின் பெயரில் அவருடைய புகைப்படத்தோடு ஃபேக் ஐ.டி ஒன்றும் தொடங்கப்பட்டிருக்கிறது. அந்த ஐடியில் இருந்து ‘என்னை அழையுங்கள் செக்ஸ் சாட் பண்ணலாம்’ என யாரோ கீதா எண்ணுடன் போட்ட பதிவால் வந்த வினைதான் இவை அனைத்தும்!

உடனடியாக சைபர் க்ரைம் அலுவலகத்தின் உதவியை நாடினார் கீதா. விசாரணையில், கீதாவின் நட்புப் பட்டியலில் உள்ள ஒருவர்தான் இதைச் செய்திருக்கிறார் என்பது தெரியவர, அவர் இப்போது சிறையில். ஃபேஸ்புக் உரையாடலில் ஏற்பட்ட சிறு சண்டையில் கீதாவுக்கும் அந்த நபருக்கும் கோபம். அதன் விளைவே, கீதாவின் வாழ்க்கையுடன் அவர் விளையாடியிருக்கிறார்.

அலறவைக்கும் சைபர் ரேப்!

எங்கேயும் எப்போதும் எல்லோரும் ஃபேஸ்புக் அக்கவுன்ட்டும், வாட்ஸ்அப் சாட்டுமாகத்தான் பொழுதைக் கழிக்கிறார்கள். தலைகள் எந்த நேரமும் செல்போன் திரையை நோக்கியே குவிந்திருக்க, விரல்கள் எப்போதும் எதையோ  தட்டிக்கொண்டே இருக்கின்றன. இந்த மெய்நிகர் வாரி வழங்கும் மகிழ்ச்சிக்கு பலர் அடிமையாகிறார்கள். அந்தரங்கத்தை ரசியமாகப் பகிர்ந்துகொள்வதில் கிடைக்கும் ஒரு கிளர்ச்சி, அவர்களை அடுத்த கட்டத்துக்கு இட்டுச்செல்கிறது. குற்றத்தின் அந்தப்புரத்துக்குள் மெதுவாக அவர்களை அறியாமல் நுழைகிறார்கள்.

இங்கு ஒருவருடன் நட்பாக இருப்பது சுலபம். ஒருவருடன் சண்டையிடுவது  அதைவிட சுலபம். ஒருவரை காலிசெய்வதும், அவர் மீது சேறு வாரி இறைத்து கேரக்டரைச் சிதைப்பதும் மிக எளிது. அதுவும் `இலக்கு ஒரு பெண்' என்றால் இரட்டை உற்சாகத்துடன் இதைச் செய்கிறார்கள். இணைய வெளியில் பெண்கள் மீது நொடிக்கு நொடி நிகழும் இந்த வக்கிரமான தாக்குதல்களை ‘சைபர் ரேப்’ என்கிறார்கள்.

ஆபாசமான புகைப்படங்களை வாட்ஸ்அப், ஃபேஸ்புக் வழியே பெண்களுக்கு தொடர்ச்சியாக அனுப்பித் தொந்தரவுசெய்வது, ஃபேக் ஐ.டி-களுக்கு பெண்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவது, மார்ஃபிங் செய்யப்பட்ட ஆபாசப் புகைப்படங்களை இணையத்தில் பரவவிடுவது, பாலியல் தொடர்பான இணையதளங்களில் பெண்களின் செல்போன் எண்களைப் பகிர்வது, சமூக வலைதளங்களில் மிரட்டுவது, பாலியல் பேச்சுக்கள், இரட்டை அர்த்த வார்த்தைகளால் பெண்களுக்குத் தொடர்ச்சியாகத் தொந்தரவு அளிப்பது, பெண்களுக்கு போன்செய்து ஆபாசமாகப் பேசுவது போன்றவை `சைபர் ரேப்' குற்றங்களின் கீழ் அடங்கும். இந்த சைபர் ரேப் கலாசாரம், இன்று இணையம் முழுக்கவே விஷம்போல் பரவிவருகிறது. ஆன்லைன் குற்றங்களில், சைபர் ரேப்புக்குத்தான் நம்பர் ஒன் இடம்.

போட்டோவில் மட்டும் அல்ல, மார்ஃபிங் உதவியோடு வீடியோவில்கூட ஒரு பெண்ணின் உருவத்தை தத்ரூபமாக மாற்றியமைக்க முடியும். இணையம் எங்கும் இதற்கான மென்பொருட்களும் உதவிகளும் கோடிக்கணக்கில் கொட்டிக் கிடக்கின்றன. ஃபேக் ஐ.டி தொடங்குபவர்களுக்கு புரொஃபைல் படமாக வைத்துக்கொள்ள லட்சக்கணக்கில் பெண்களுடைய புகைப்படங்கள் எளிதில் கிடைக்கின்றன. ஃபேஸ்புக்கில் குத்து மதிப்பாக ஒரு பெண்ணின் பெயரைப் போட்டுத் தேடினால் ஏராளமான புரொஃபைல்கள் வரும். அதில் அந்த நேரத்தில் அவர்களுக்கு எந்தப் பெண்ணின் புகைப்படம் பிடிக்கிறதோ, அதை எடுத்து பரப்பிவிடுகின்றனர்.  இது தொழில்முறை கிரிமினல்களின் வேலை.

இவர்களைவிட ஆபத்தானவர்கள், நண்பர்கள் என்ற பெயரில் நம் பட்டியலில் இருப்பவர்கள். இவர்களில் சிலர், தனக்கு ஒரு பெண்ணைப் பிடிக்க வில்லை என்றாலோ, அந்தப் பெண்ணின் கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியவில்லை என்றாலோ உடனடியாக அவளைப் பற்றி அவதூறு பரப்பத் தொடங்கிவிடுகின்றனர். பிடிக்காத பெண்ணின் ஒழுக்கத்தை கேள்விக்கு உட்படுத்துவது என்பது ஃபேஸ்புக்கின் வெளியிலும் செய்யப்படுவதுதான். அந்தப் பெண்ணின் புகைப்படமும் வீடியோவும் ஃபேஸ்புக்கில் கிடைத்துவிடுவதால், அந்த அவதூறு பிரசாரத்தை மேலும் வக்கிரமாகச் செய்கிறார்கள். 

இன்று வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் அதிக அளவில் பகிரப்படுவது, பெண்களின் அந்தரங்கப் படங்களும், பெண் களுக்கே தெரியாமல் எடுக்கப்படும் செல்போன் வீடியோக்களும்தான். ஒரு பெண், தன் காதலர் அல்லது கணவரோடு எடுத்துக்கொண்ட படத்தை தன் ஃபேஸ்புக் புரொஃபைலாக அல்லது வாட்ஸ்அப் டிபி பிக்சராக வைத்தால், அடுத்த சில மணி நேரத்தில் அது பல்லாயிரம் பேரை சென்று அடைந்துவிடுகிறது. எனில், பெண்கள் புகைப் படமே போடக் கூடாதா?

இப்போது வந்திருக்கும் சில செல்போன் ட்ராக்கிங் சாஃப்ட்வேர்கள் மூலம், பெண்கள் எங்கெல்லாம் செல்கிறார்களோ அந்த இடங்களில் இருந்து அந்தப் பெண்ணே ஃபேஸ்புக்கில் அப்டேட் செய்வதுபோலவும் சில விஷமிகள் டெக்னிக்கலாக ஏமாற்றத் தொடங்கியுள்ளனர். `நான் இப்போது இந்த ஷாப்பிங் மாலில் இருக்கிறேன்', `தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்' என அப்டேட் ஆகும். இது, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கே தெரியாமல் இயங்கும் ஃபேஸ்புக் பக்கம்.

‘ஒரு வருடத்தில், 15-ல் இருந்து 20 வயதுக்கும் மேற்பட்ட பெண்களில் ஒன்பது கோடிக்கும் மேலான பெண்கள் சைபர் ரேப் குற்றங்களால் பாதிக்கப்படுகின்றனர்’ என ஐ.நா-வின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அமைப்பின் ஆய்வறிக்கை சொல்கிறது. மேலும், ‘டீன் ஏஜ் வயதான 16-ல் இருந்து 24 வயது வரையிலான பெண்கள் இந்த ‘சைபர் ரேப்’ குற்றங்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஐந்து பெண்கள் இன்டர்நெட் பயன்படுத்தினால் அதில் ஒருவர் நிச்சயம் அதிர்ச்சியூட்டும் மன ரீதியிலான பாலியல் தொந்தரவுக்கு ஆளாகிறார். இந்த வகை குற்றங்களில் இளைஞர்களைவிட, நடுத்தர வயதினரே அதிகளவில் ஈடுபடுகின்றனர்' என சைபர் ரேப் குற்றங்களின் தாக்கம் குறித்து எச்சரிக்கை மணி அடிக்கிறது அந்த ஆய்வறிக்கை.

இந்தியாவில் சைபர் ரேப் மூலம் பாதிக்கப்படும் பெண்களில் 18 சதவிகிதம் பேருக்கு, இன்டர்நெட் பாதிப்பு பற்றிய விழிப்புஉணர்வே இல்லை. சிலர், தான் பாதிக்கப்படுவது தெரிந்தாலும் அதை கணவரிடமோ, பெற்றோரிடமோ சொல்லி நடவடிக்கை எடுக்கத் தயங்குவர். சொன்னால், `அதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன். உனக்கு எதுக்கு இந்த போன்?' என, கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் பறிபோகும் ஆபத்து அதிகம். பாதிக்கப்படும் பெண்களில் 35 சதவிகிதம் பேர்தான் எதிர் தாக்குதல் நடத்தவும் புகார் கொடுக்கவும் முன்வருகிறார்கள்.

அலறவைக்கும் சைபர் ரேப்!

``ஒரு பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவிப்பதுபோல, மெயில் மூலமோ, சமூக இணையதளம் மூலமோ செயல்படும் குற்றத்துக்கு ஒரு வருடம் வரை சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே வழங்கலாம். ஒரு பெண்ணின் நடத்தை பற்றிய பொய் மற்றும் வதந்தியைப் பரப்பினால் இரு வருட சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே வழங்கப்படலாம்.  Information Technology Act-ன் பிரிவு 67-படி பெண்களின் அந்தரங்கப் படங்களைப் பதிவேற்றுதல் மற்றும் பரப்புதல் போன்ற குற்றங்களைச் செய்தால், ஐந்து வருடம் வரை சிறையும், 1 லட்சம் வரை அபராதமும், இந்தக் குற்றத்தை மறுமுறை செய்தால் பத்து வருடம் வரை சிறை, 2 லட்சம் வரை அபராதமும் கிடைக்கும்'' என்கிறார் வழக்குரைஞர் ஹன்சா.

`சைபர் ரேப்' குற்றங்களால் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்து கொள்வது அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்டு வீட்டுக்குள்ளேயே முடங்கிப்போகும் பெண்களின் எண்ணிக்கையும் ஒருபக்கம் அதிகரித்துவருகிறது.

`இது சென்சிட்டிவான விஷயம் என்பதால் பெண்கள் பயப்படுகின்றனர். வெளியே சொன்னால் நியாயம் கேட்பதற்குப் பதில், `உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை... நீ எதுக்கு இன்டர்நெட் எல்லாம் யூஸ் பண்றே?' என்றுதான் கேட்பார்கள். சிலர் கணவருக்குத் தெரியாமல்கூட சமூக வலைதளப் பக்கங்கள் வைத்திருப்பார்கள். சில நேரங்களில் தைரியமாக மோதும் பெண்களிடம், மிரட்டுபவர் மிக மோசமாக நடந்துகொள்ளும் நிலைமையும் இருக்கிறது. அதனாலேயே தற்கொலை செய்துகொள்ளும் மனநிலைக்கு, சில பெண்கள் தள்ளப்படுகின்றனர். செல்போன் நம்பர்கள் தவறாகப் பயன்படுத்தப்படும்போது, அதை மாற்றுவதற்குக்கூட வீட்டில் என்ன காரணம் என்பதைச் சொல்லியாகவேண்டிய சூழல் பலருக்கும் இருக்கிறது. அதுவே பெரும் மனஉளைச்சலை உண்டாக்கும். இது கல்லூரி, டீன் ஏஜ் வயதில் இருக்கும் இளம்பெண்களுக்கு அதிகமாகவே இருக்கும். அந்த வயதுக்கே உரிய பதற்றம் அவர்களை சரியாக யோசிக்க விடாது. அதனாலேயே பெண்கள் முடிந்தவரை பயம் கொள்ளாமல் இதில் இருந்து வெளிவருவதற்கான வழிமுறைகளை மட்டுமே யோசிக்க வேண்டும். பெற்றோர் அல்லது உடன்பிறந்தவர்கள், நம்பிக்கைக்கு உரிய நண்பர்களிடம் இதுபற்றி உடனடியாகச் சொல்வது நல்லது. அவர்களின் ஆலோசனையைப் பெற்று அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்க வேண்டும். உள்ளுக்குள்ளேயே பூட்டி வைத்துக்கொண்டு பயந்துகொண்டிருந்தால், மனஅழுத்தம்தான் அதிகரிக்கும். அதுவே தவறான முடிவுகளையும் எடுக்கத் தூண்டும்'' என்கிறார் மனநல நிபுணர் அபிலாஷா.

சைபர் ரேப் விஷயத்தில், இதுபோன்ற படங்களைக் கட்டுப்படுத்தவும் தடை செய்யவும் சாத்தியம் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை. ஆன்லைன் உலகில் மிகுந்த கவனத்துடன் இயங்குவதுதான் ஒரே வழி!

அலறவைக்கும் சைபர் ரேப்!

சைபர் ரேப் குற்றங்களில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

1) செல்போனை சர்வீஸ் அல்லது ரிப்பேருக்குக் கொடுத்தால் மெமரி கார்டை எடுத்துவிட வேண்டும். அதேபோல போனில் உள்ள படங்கள், வீடியோ, கான்டாக்ட்ஸ் உள்பட அனைத்தையும் பேக்அப் எடுத்து விட்டு, போனில் உள்ளவற்றை முழுமையாக அழித்துவிட்டு அதாவது ஃபேக்டரி ரீசெட் செய்துவிட்டுத் தரவேண்டும்.

2) ஃபேஸ்புக்கில் தெரியாத நபர்களிடம் இருந்து ஃப்ரெண்ட் ரிக்வெஸ்ட் வந்தால், அனுப்பியவரின் விவரங்களை சரிபார்த்துவிட்டு முடிவெடுப்பது நல்லது.

3) ஃபேஸ்புக், ட்விட்டர், இ-மெயில் அக்கவுன்ட் பாஸ்வேர்டுகளை உங்கள் மெமரிக்குள் மட்டுமே சேவ் செய்யுங்கள். பேப்பரில் எழுதியோ, அலுவலக கணினியில் சேமிப்பதோ நல்லது அல்ல.

4) நம்பிக்கைக்குரிய திருமணத் தகவல் மையங்களில் மட்டுமே உங்கள் விபரம் மற்றும் புகைப்படங்களைக் கொடுங்கள். கண்ட கண்ட இணையதளங்களில் பதிவேற்றம் செய்யவேண்டாம்.

5) செல்போனில் அவசியமான அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்துங்கள். கண்டதையும் பதிவிறக்கம் செய்து உங்கள் செல்போனில் இருக்கும் விபரங்களைத் திருடி எடுக்க நீங்களே வழி அமைத்துவிடாதீர்கள்!