Published:Updated:

சீனாவின் ஸ்மார்ட் அட்டாக்!

சீனாவின் ஸ்மார்ட் அட்டாக்!
பிரீமியம் ஸ்டோரி
News
சீனாவின் ஸ்மார்ட் அட்டாக்!

கார்க்கிபவா

சீனாவின் ஸ்மார்ட் அட்டாக்!

விவோ ஐ.பி.எல்-2016 வின்னர் இஸ்...

இதில் விவோ என்ற பிராண்டை இதற்கு முன்னர் அறிவீர்களா? நோக்கியா, சாம்சங், ஆப்பிள்... எனக் கலக்கிய மொபைல் மார்க்கெட்டில் இப்போது விவோ, ரெட்மீ, அஸுஸ், லெனோவா... போன்ற பெயர்களே சூப்பர்ஸ்டார்கள். இந்திய மொபைல் பிராண்ட் ஆன மைக்ரோமேக்ஸ், கார்பன் முதலியவை தங்களின் விற்பனை சரிவதை வேடிக்கை மட்டுமே பார்க்க முடிகிறது. காரணம், சீனப் பெருந்தலைகளின் அதிரடி என்ட்ரி.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை இந்திய பிராண்டுகள் அவ்வளவு விற்கவில்லை. திடீரென மொபைல் தேவை ராக்கெட் வேகத்தில் அதிகரிக்க, அதைச் சரியாகப் பயன்படுத்தி சாம்சங், ஆப்பிள் போன்ற சர்வதேச பிராண்டுகளை வீழ்த்தி, இந்திய பிராண்டுகள் முதல் இடம் பிடித்தன. இன்று விலையையும் வசதிகளையும் வைத்து, சீன நிறுவனங்கள் அதே வழியில் இந்திய நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளுகின்றன.

இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் இன்னும் எல்லோருடைய கைகளுக்கும் வந்துசேரவில்லை.

50 சதவிகிதத்துக்கும் அதிகமானவர்கள் இன்னமும் மொபைல் இல்லாமலோ அல்லது பழைய மாடல் மொபைலில் ஹலோ சொல்லிக்கொண்டோதான் இருக்கிறார்கள். ஆனால், சீனாவில் 90 சதவிகிதம் பேரிடம் ஸ்மார்ட்போன் விளையாடுகிறது. இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன் பயனர்களை குறைந்த விலை, கொண்டாட்ட வசதிகள்... என, படம் காட்டி கைப்பற்ற நினைக்கின்றன சீன நிறுவனங்கள்.

வைரல் விளம்பரங்கள்

ஸ்மார்ட் என்றாலே பயன்படுத்த கடினமாக இருக்கும் என்ற எண்ணம்தான், எளிய மக்கள் ஸ்மார்ட்போன் பக்கம் திரும்பத் தடையாக இருந்தது. அந்த எண்ணத்தை அதிரடி விளம்பரங்கள் மூலம் உடைத்தனர். சீன நிறுவனங்களின் இந்த விளம்பரங்கள்தான் டாக் ஆஃப் தி டவுன். ஸ்மார்ட்போன் விளம்பரங்களுக்காக ஆண்டுதோறும் 1,200 கோடி ரூபாய் இந்தியாவில் செலவு செய்யப்படுகிறது. இதில் 55 சதவிகிதத்தை விவோ, ஓப்போ, ஜியோனி, லீ ஈகோ ஆகிய நான்கே நிறுவனங்கள் செய்கின்றன. ஒவ்வொரு நாளும் நாளிதழ்களின் முதல் பக்கத்தை மொபைல் விளம்பரங்களே ஆக்கிரமிக்கின்றன.

ஆன்லைன் மூலமே சீன மொபைல்கள் பெரும்பாலும் விற்கப்படுவதால், ஆன்லைன் விளம்பரங்களும் அசத்துகின்றன.

இந்திய நிறுவனங்களால் சீன நிறுவனங்களின் இந்த அட்டாக்கைச் சமாளிக்க முடிவது இல்லை. சில வருடங்களில் கோடிக்கணக்கான மொபைல்களை விற்றுவிட்டு, திரும்பவும் சொந்த நாட்டுக்கே சென்றாலும் அவர்களுக்கு லாபம்தான். அதனால், குறைவான நாட்களில் அதிக பொருட்களை விற்க விளம்பரங்களில் பணத்தைக் கொட்டுகிறார்கள். இந்த வியாபாரத் தந்திரம் இந்திய நிறுவனங்களுக்குப் பொருந்தாது. ஆனால், அவர்களைச் சமாளிக்க விளம்பரம் செய்தே ஆக வேண்டும்.

இணைய வசதி இல்லாத ஸ்மார்ட் போன்கள் பெட்ரோல் இல்லாத பைக்கைப் போலதான். இப்போது வைஃபை வசதி பெரும்பாலான வீடுகளுக்கும், அதையும் தாண்டி ஹோட்டல், ஷாப்பிங் மால்கள் எனப் பரவலாக பல இடங்களுக்கும் வந்துவிட்டது. பேருந்து, ஜிம், சலூன் என நினைத்தே பார்க்க முடியாத இடங்களில் கூட அவர்களது வியாபாரத்தைக் கூட்ட இணையவசதி செய்திருக்கிறார்கள். இந்தச் சூழலில் ஸ்மார்ட்போன் பொழுதுபோக்கு என்பதைத் தாண்டி, தேவையான ஒரு பொருளாக இருக்கிறது. இந்தக் கோணத்திலும் யோசித்த மொபைல் நிறுவனங்கள் பல வசதிகளை
இன்-பில்ட்டாகவே தங்கள் மொபைல் களில் சேர்க்கிறார்கள்.

சீனாவின் ஸ்மார்ட் அட்டாக்!

எல்லா வசதிகளும் உண்டு!

3.5 இன்ச் ஸ்கிரீனுடன் தனது பயணத்தை ஆரம்பித்த ஸ்மார்ட் போன்கள், இன்று ஏழு இன்ச் வரை வளர்ந்துவிட்டன. இளைஞர்கள் டி.வி-யில் படம் பார்க்கும் பழக்கத்தை விடும் அளவுக்கு ஸ்மார்ட்போனிலே படம் பார்க்கிறார்கள். நினைத்த மாதிரி படுத்துக்கொண்டு, பத்து ரூபாய் செலவில் ஸ்நாக்ஸ் வாங்கி, டி.டி.எஸ் எஃபெக்ட் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, 10,000 ரூபாய் மொபைலில் நினைத்த படத்தைப் பார்க்கிறார்கள். டச் ஸ்கிரீன் அடிக்கடி பழுதானதும், இப்போது கொரில்லா கிளாஸ், அன்பிரேக்கபிள் கிளாஸ் என மொபைல் ஸ்கிரினுக்குள் டெக்னாலஜியை நுழைத்துக் கலக்கு கிறார்கள் சீன சயின்ட்டிஸ்ட்கள்.

அடுத்து, மெமரி புரட்சி. சி.டி-க்களில் பாடிக்கொண்டிருந்த எம்.பி3-க்களையும் மொபைலில் சேமிக்க நினைத்தவர்களுக்கு அடுத்தடுத்து வரங்களை வழங்கினார்கள். 8 ஜிபி, 12 ஜிபி போனுக்கே ஆப்பிளும் சாம்சங்கும் யானை விலைவைக்க, சீன மொபைல்கள் டெராபைட் அளவுக்கு டெரரைக் கூட்டுகிறார்கள். பாட்டு கேட்பதால், சார்ஜ் குறையுமோ என்ற கவலை எழும் முன்னரே 5000Mah பேட்டரியை அறிமுகப்படுத்தினார்கள். இப்போது அஸுஸ் இதில் பல அடி முன்னே தாவி, ஒரு மொபைலில் இருந்து இன்னொரு மொபைலுக்கு சார்ஜ் செய்யும் வசதியை இறக்கியிருக்கிறது. அரை நாளுக்கே பாட்டரி தாங்காத இந்திய, கொரிய பிராண்டுகள் இதைக் கண்டு சார்ஜ் இறங்கிப்போயிருக்கின்றன என்றுதான் சொல்ல வேண்டும்.

 சர்வீஸ் எப்படி?

`ஸ்மார்ட்போன் நமக்கு செட் ஆகுமா?’ என்ற ஆரம்பக்கட்ட சந்தேகத்தைத் தாண்டி ஒருவர் ஸ்மார்ட்போனை வாங்கினாலும், `பழுதானால் என்ன ஆவது?’ என்ற எண்ணம் அவர்களைப் பித்துப்பிடிக்க வைக்கிறது. நமக்கு நல்ல அறிமுகமான பைக்கையே, நம்ம தெருவில் இருக்கும் மெக்கானிக்கை நம்பிக் கொடுப்பதில் நமக்கு ஆயிரம் பிரச்னைகள் உண்டு. இந்தச் சூழலில் நம் பெர்சனல் தகவல்கள் பல இருக்கும் ஒரு மொபைலை சந்தேகத்துக்குரிய கடைகளில் எப்படி சர்வீஸ்செய்ய கொடுப்பது என்ற பயம் வருவது இயல்பே. `போர்டு போயிடுச்சு. 6,000 ரூபாய் ஆகும்’ என்றால் `எந்த போர்டு?’ என்றுகூடக் கேட்க முடியாது. ‘சாப்ஃட்வேர் சிஸ்டம் ஆர்க்கிடெக்ட்’ என்பதை ‘மென்பொருள் அமைப்பு கட்டுமாநர்’ எனச் சொன்னால் மட்டும் புரியவாபோகிறது?

எலெக்ட்ரானிக் பொருட்கள், அதிகம் பழுதாகும் வாய்ப்பு உடையவை. அதனால், சர்வீஸ் சென்டர்கள் சரியாக அமைவது முக்கியம். சீன மொபைல் நிறுவனங்கள் இதைச் சரியாகப் புரிந்துவைத்திருக்கின்றன. அவர்களது தயாரிப்புச் செலவு குறைவு என்பதால், சர்வீஸுக்குக் கணிசமான தொகையை ஒதுக்குகிறார்கள். இந்தியாவில் இருக்கும் சின்னச்சின்ன மொபைல் சர்வீஸ் நிறுவனங்களுடன் கைகோத்துக்கொள் கிறார்கள். ஒரே சர்வீஸ் சென்டரில் பல சீன பிராண்ட் மொபைல்களை சர்வீஸ் செய்வதை நாம் பார்க்கலாம். பிரச்னை அதிகம் என்றால், மொபைலை மாற்றிக்கொடுக்கவும் இவர்கள் தயங்குவது இல்லை. மைக்ரோமேக்ஸ், லாவா போன்ற இந்திய பிராண்டுகள் தங்களது மதிப்பை இழந்ததற்குக் காரணமே, சரியான சர்வீஸ் வசதி செய்து தராததுதான்.

சீனாவின் ஸ்மார்ட் அட்டாக்!

இணைய செல்வாக்கு

இந்த வசதிகள் என்னவாக இருந்தாலும் இந்திய மார்க்கெட்டில் சிக்ஸர் அடிக்க தேவை ‘குறைந்த விலை’. தெருவுக்கு ஒரு விலை விற்பதே நம் ஊர் சம்பிரதாயம். இதைச் சமாளிப்பதுதான் சீன நிறுவனங்களின் பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனியே மொபைல்கள் அனுப்புவதில் செலவுகள் அதிகம். டீலர் கமிஷனும் அதிகம். இதை ஒரே ஒரு முடிவில் மாற்றிக்காட்டியது மோட்டோரோலா நிறுவனம். ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல் ஃப்ளிப்கார்டுடன் கைகோத்த மோட்டரோலா, தனது மோட்டோ ஜி மாடலை ஃப்ளிப்கார்டில் மட்டுமே வாங்க முடியும் என அறிவித்தது. அட்டகாச விளம்பரங்கள், அசத்தலான வசதிகள், அதிரடி விலை என எல்லாம் சேர்ந்து மக்களை ஃப்ளிப்கார்ட் பக்கம் திரும்பவைத்தது. இந்த முடிவால் இரண்டு நிறுவனங்களுக்குமே வின் - வின் சிச்சுவேஷன். அதன் பிறகு வந்த சீன நிறுவனங்கள் இந்த வழியைப் பின்பற்றி அமேசான், ஸ்நாப்டீல் போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் மட்டுமே மொபைல்களை சந்தைக்குள் கொண்டுவந்தன. இதனால் இடைத்தரகர்கள் செலவு இல்லை. ஆயிரக்கணக்கான மொபைல்களை ஸ்டாக் செய்துவைக்கத் தேவை இல்லை. அதனால் இன்வென்ட்ரி செலவும் கிடையாது. ஆன்லைன் வர்த்தகத்தில் ட்ரெண்ட் எளிதில் கண்டறிய முடியும். அதனால், அடுத்த ஒரு வாரத்துக்கு எவ்வளவு மொபைல்கள் தேவைப்படும் என்பதை அறிந்து, அதை மட்டும் ஷிப்மென்ட் செய்யலாம்.

ஆனால், மக்கள் நம்பி இணையத்தில் வாங்குவார்களா என்ற கேள்வி எழும். இந்தச் சவாலை ஆன்லைன் நிறுவனங்கள் பார்த்துக் கொண்டன. அமேசானும் ஃப்ளிப்கார்ட்டும் போட்டிப்போட்டுக் கொண்டு பல சலுகைகளைக் காட்டி மக்களை இழுக்கின்றன. கேஷ் ஆன் டெலிவரி, 15 நாட்களுக்குள் திரும்பத் தரும் வசதி எனப் பல விஷயங்கள், இன்று மக்கள் ஆன்லைன் வர்த்தகத்தையும் அண்ணாச்சி கடைபோல நினைக்கவைத்துவிட்டன.

தரம் அடிப்படையில் சீனப் பொருட்கள் மீது எப்போதும் சந்தேகம் உண்டு. போன் சூடாகும்; ஹேங் ஆகும். ஆனால், இதே பிரச்னைகள் இப்போது விலை உயர்ந்த போன்களிலும் வர ஆரம்பித்துவிட்டதால் இதை யாரும் கண்டு கொள்வது இல்லை. சீன மொபைல்கள் சர்வீஸ் ஓ.கே-தான். ஆனால், வாரன்ட்டி முடிந்த பிறகு பார்ட்ஸ் போனால் ரீப்ளேஸ்செய்வது சிரமம். ஸ்கிரீனில் கீறல்கள் விழுந்தாலும் போனையே மாற்றவேண்டியிருக்கும்.

மொபைல் என்பது, ஓர் ஆண்டுக்கு ஒருமுறை மாற்றவேண்டியது எனப் பரவலாக ஒரு கருத்து பதிந்திருக்கிறது. அதனால், சீன மொபைல்கள் பற்றிய குறைபாடுகள் பெரிதாகக் கண்டுக் கொள்ளப்படுவது இல்லை. 2016-ம் ஆண்டில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட மொபைல் மாடல்கள் சந்தைக்குப் புதிதாக வரவிருக்கின்றன. ஆனால், இப்போதும் யாராவது 10,000 ரூபாய்க்கு ஹேங் ஆகாத, சூடு ஆகாத மொபலைக் கொண்டுவந்தால் ஒட்டுமொத்த கவனமும் அதன் பக்கம் திரும்பும். அதைக் கொடுக்கப் போவது யார் என்பதுதான் சஸ்பென்ஸ்!