Published:Updated:

கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!

கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!

அதிஷா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.குமரகுருபரன், மீ.நிவேதன்

கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!

அதிஷா, படங்கள்: சொ.பாலசுப்ரமணியன், தி.குமரகுருபரன், மீ.நிவேதன்

Published:Updated:
கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!
பிரீமியம் ஸ்டோரி
கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!
கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!

ப்போதும் ஜிலுஜிலு ஜனவரியில் நடக்கும் சென்னை புத்தகச் சந்தை, இந்த ஆண்டு கோடையில் வந்துவிட்டதால் அரங்கத்துக்குள் நுழைவது என்பது உருக்கு ஆலைக்குள் நுழைவதைப்போலவே இருந்தது. ‘நெருப்புடா..!’ என ஆங்காங்கே மக்கள் கதறிக்கொண்டிருந்த ஒலி, காதில் ரீங்காரமிட்டபடி இருந்தது. வியர்வையில் தொப்பலாக நனைந்துதான் அத்தனை வாசகர்களும் சுற்றிக்கொண்டிருந்தனர். அத்தனை ஈரத்திலும் `சுடச்சுட' புத்தகங்கள் வாங்குவதில் யாருக்கும் சோர்வு இல்லை.

• எங்கும் எண்ணற்ற வீடியோ கேமராக்களை காண முடிந்தது. ஸ்ருதி டி.வி, முகில் டி.வி என சாமானியர்களின் யூ டியூப் டி.வி-க்கள் குவிந்துவிட்டன. எங்கு பார்த்தாலும் யாராவது மைக் பிடித்து ‘ஹருகி முராகமி மாதிரி லைட் ரீடிங் புக்ஸ்தான் வாங்கினேன்.

ஐ டோன்ட் ரீட் தமிழ் இலக்கிய புக்ஸ்... ஸாரி’ என்பதுபோல கருத்து முத்துக்களைச் சிதறவிட்டனர்.

•   பெரிய ஃபுட் கோர்ட்டில் எப்போதும் போலவே குழிப்பணியாரம் மணமணத்தது. கண்காட்சியைவிட அங்குதான் கூட்டம் கும்மியடித்தது. புத்தகக் கடைகள் எல்லாம் காற்று வாங்கிய வேலைநாட்களில்கூட எங்கு இருந்துதான் இத்தனை பேர் இந்தச் சாப்பாட்டுக் கடைக்கு படையெடுக் கிறார்கள் என்ற கேள்வி ஆய்வுக்குரியது.

•   இந்தப் புத்தகச் சந்தையில் தன் முதல் அடியை எடுத்துவைத்திருக்கிறது `விகடன் தடம்'. எந்நேரமும் நான்கைந்து இலக்கியவாதிகள் கூடி விவாதிக்கும் இடமாக `தடம்' ஸ்டால் மாறி இருந்தது.

கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!

•   கடந்த இரண்டு ஆண்டுகளாக `காலச்சுவடு' ஸ்டால் வாசலில், ஒரு சணல் மனிதனை உட்காரவைத்திருக்கிறார்கள். சணல் கயிறுகளால் செய்யப்பட்ட அழகிய சிற்பம் இது. ஓவியர் ரோகிணி மணியின் கலைப்படைப்பு. அதிகம் ஆபத்து இல்லாத ஓர் இலக்கியவாதி. இந்த ஆண்டு சணல் மனிதனுக்கு கையில் இரண்டு முகமூடியும் முகத்தில் ஒரு முகமூடியும் போட்டு உட்கார வைத்திருந்தார்கள். ‘இதில் என்ன இலக்கிய குறியீடு?' 

•   தீவுத்திடலுக்கு நடுவில் மிகப் பெரிய சாக்கடை ஒன்று ஓடிக்கொண்டிருக்கும். அது கூவம் நதியாக முன்னொரு காலத்தில் அழைக்கப்பட்டது. அந்தச் சாக்கடையைத் தாண்டிச் செல்ல ஒரு மரப்பாலம் போட்டு வைத்திருப்பார்கள். புத்தகச் சந்தை நடக்கும் நேரத்தில்தான் அது உடைந்து விழ வேண்டுமா? ஆனால், உடைந்துபோனதற்குக் காரணம் புத்தகச் சந்தை அல்ல... அந்த இடத்தில் அதிகாலையில் நடந்த மாரத்தான் போட்டி. ஓட்டக்காரர்கள் சிலர் சாக்கடையில் விழுந்து அடியெல்லாம் வாங்கியிருக்கிறார்கள். அந்தப் பாலத்தில்தான் முந்தைய நாள் வரை ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தோடு குழந்தைகளோடு கண்காட்சிக்கு வந்து சென்றனர். எவ்வளவு அலட்சியம்?

• முக்தா ஸ்ரீனிவாசன் தனியாகக் கடைபோட்டு உற்சாகமாக அமர்ந்திருந்தார். கடைக்குள் யார் சென்றாலும் அருகில் அமரவைத்து வாஞ்சையாக உரையாடுகிறார். வைரமுத்துவும் தனிக்கடை போட்டிருக்கிறார். வைரமுத்து ஒருநாள் வந்திருந்து வாசகர்களுக்கு கையெழுத்துப் போட்டு செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.

•   இளைஞர்கள் புத்தகம் வாங்குகிறார்களோ இல்லையோ நிறைய செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். நடிகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் என யார் கிடைத்தாலும் அவர்களிடம் ஆட்டோகிராஃப் வாங்குவது இல்லை... செல்ஃபி மட்டும்தான். `செல்ஃபிக்காகச் சிரித்த மாதிரியே முகத்தை வைத்து, தாடையும் கன்னமும் வலிக்குதுப்பா' எனக் கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஃபீல் பண்ணிச் சொன்னார்.

• `இயல்வாகை' என்ற இயற்கை அங்காடியில் முதல் நாளே பொங்கல் மாதிரி ஏதோ இனிப்பு அயிட்டம் ஒன்றை வாசகர்களுக்கு இலவசமாகக் கொடுத்தனர். ஆங்காங்கே விழுதுகள் தொங்க, சுரைக் குடுவைகளும் மரப்பாச்சி பொம்மைகளுமாக தமிழ்ப் பண்பாட்டால் கடையை அலங்கரித்துவைத்திருந்தனர். இந்தக் கடையில் விற்கப்பட்ட பனை ஓலையில் செய்த கிலுகிலுப்பை இன்ஸ்டன்ட் ஹிட். தேவைப்படுகிறதோ இல்லையோ அதைப் பார்த்ததுமே அதன் அழகில் மயங்கி ஆளுக்கு ஒன்று வாங்கிச் சென்றனர். விலை 25 ரூபாய்.

•   பாக்கெட் நாவல் புகழ் `ஜீயே பதிப்பக'த்தில் பெஸ்ட் செல்லர் க்ரைம் நாவல்களும், குடும்ப நாவல்களும் ஏராளமாகக் கிடைத்தன. இலக்கிய கிளாசிக் நாவல்களை மலிவு விலையில் அச்சிட்டு வருகிறார் ஜீயே அசோகன். ஜே.கே-வின் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ 50 ரூபாய்க்கே கிடைத்தது.

கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!

•   நடிகை ஷகிலாவின் சுயசரிதை நூல் கன்னாபின்னாவென விற்றுக்கொண்டிருந்தது உயிர்மை ஸ்டாலில்.

•   சாமியார்கள் இல்லாமல் புத்தகச் சந்தையா? முக்குக்கு முக்கு சாமியார்கள் கடை விரித்துக் காத்திருந்தனர். நித்யானந்தா மட்டும் லீவு! இஸ்கான் கடையில் எந்நேரமும் எப்படியோ சந்தனம் மணக்கிறது.
 

•   `நீங்கள் எழுத்தாளரா?' என பெரிய பேனர் வைத்து வரவேற்ற கடையில் அச்சத்தோடுதான் உள்ளே நுழைந்தேன். காசு கொடுத்தால் நம்முடைய நூலை அச்சிட்டு, அட்டை போட்டு, கடை கடையாக அவர்களே விற்றும் கொடுத்து, `உங்களை எப்படியாவது ஃபேமஸ் ரைட்டர் ஆக்கிவிடுவோம்' என்றனர். அவர்கள் அதைச் சொல்லச் சொல்ல, கேட்கும்போதே திகிலாக இருந்தது.

•   28 மொழிகளில் 2,000 புத்தகம் போட்ட ஜப்பான் எழுத்தாளர் ரூயோ ஓகாவாவின் கடைக்குள் நுழைந்தேன். நாம் எல்லாம் ஸ்டேட்டஸ் போடுகிற மாதிரி ஓகாவா புத்தகம் போடுகிறார். இவரை, `ஜப்பானின் தமிழ்வாணன்' என தாரளமாக அழைக்கலாம். உலகின் எல்லா பிரச்னைகளுக்கும் புத்தகம் போட்டிருக்கிறார். கேன்சரில் இருந்து மீள்வது எப்படி தொடங்கி  பொண்டாட்டி  கொடுக்கும் தர்மஅடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி... என்பது வரை.

•   Asusual இந்த ஆண்டும் சுஜாதாதான் டாப் செல்லர். இளைஞர்கள் பலரும் அவரைத்தான் தேடித் தேடிப் படிக்கிறார்கள். எங்கும் அவர் பெயர்தான் உச்சரிக்கப்பட்டது.

• கடை ஒன்றில், காந்தியின் `சத்தியசோதனை' நூல் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதற்கு கீழேயே ஒரு பைப்பும் ப்ளாஸ்டிக் கப்பும் வைக்கப் பட்டிருந்தன. சத்தியசோதனை நூல் வாங்கும் எல்லோருமே அந்த பைப் கப்பையும் வாங்கி சென்றார்கள். என்னவென விசாரித்தபோது, அது `இனிமா கிட்' என்றார்கள். சத்தியசோதனைக்கும் இனிமா கிட்டுக்கும் என்ன தொடர்பு என யோசிக்க ஆரம்பித்தேன். உங்களுக்குத் தெரியுமா இரண்டுக்குமான தொடர்பு?

கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!

•   ஒவ்வோர் ஆண்டும் புத்தகச் சந்தைக்கு என்றே நிறைய புதிய நூல்கள் களம் இறக்கப்படும். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை சற்றே குறைவு. எங்கு பார்த்தாலும் அதே பொன்னியின் செல்வன், பாரதியார் கவிதைகள், புதுமைப்பித்தன் சிறுகதைகள், பூண்டு ரச ரெசிப்பிகள். பதிப்பாளர்கள் பலர் முகங்களில் உற்சாகம் இல்லை. பெரும்பாலானோர் சென்னை மழைவெள்ளத்தில் பெரிய அளவில் நஷ்டத்தைச் சந்தித்தவர்கள். மழை தின்ற நூல்களை டன் டன்னாகக் குப்பையில் போட்டதை, கண்ணீர் மல்கச் சொன்னார் ஒரு பதிப்பாளர். இலக்கிய நூல்கள் விற்கும் சின்னப் பதிப்பகங்கள், பல லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்திருக்கின்றன.

•   எம்.கே. தியாகராஜ பாகவதர் பாடல்களின் தொகுப்பு ஒன்று சிக்கியது. அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது என்பதை அதன் அச்சும் உருவாக்கமும் தெளிவாக்கியது. அந்த நூலின் பின்பக்கம் கண்டவை இவை.

சாலையில் கிடந்த பிணம்
கொல்லாமல் விட மாட்டேன்
பள்ளி மாணவி படுகொலை
எலும்புக்கூடு ரகசியம்
ரத்தத் தடாகம்
பிணக்குவியல்
ஆ... நீயா?

எல்லாமே அந்தப் பாட்டுப் புத்தகம் போட்ட பதிப்பகத்தின் டாப் செல்லர் சிறார் நூல்களின் தலைப்புகளாம். ஒரு நூலின் விலை 30 காசுதான். மொத்தமாக வாங்கினால், ஒரு ரூபாய். இந்தத் தலைப்புகளே, படிக்க நவீனக் கவிதைபோல இருந்தாலும், இதை எல்லாம் சிறுவர் நூல்கள் என்ற பிரிவில் எப்படிச் சேர்த்தனர் என்பதைத்தான் புரிந்துகொள்ள முடியவில்லை.

கொஞ்சம் இலக்கியம்... நிறைய உரையாடல்!