Published:Updated:

கட்டஞ்சாயா குடிக்கலாம்; படகு வீட்டில் மிதக்கலாம்... தண்ணீர் தேசம் ஆலப்புழா..! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் -16 #Alleppey

கட்டஞ்சாயா குடிக்கலாம்; படகு வீட்டில் மிதக்கலாம்... தண்ணீர் தேசம் ஆலப்புழா..! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் -16 #Alleppey

கட்டஞ்சாயா குடிக்கலாம்; படகு வீட்டில் மிதக்கலாம்... தண்ணீர் தேசம் ஆலப்புழா..! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் -16 #Alleppey

கட்டஞ்சாயா குடிக்கலாம்; படகு வீட்டில் மிதக்கலாம்... தண்ணீர் தேசம் ஆலப்புழா..! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் -16 #Alleppey

கட்டஞ்சாயா குடிக்கலாம்; படகு வீட்டில் மிதக்கலாம்... தண்ணீர் தேசம் ஆலப்புழா..! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் -16 #Alleppey

Published:Updated:
கட்டஞ்சாயா குடிக்கலாம்; படகு வீட்டில் மிதக்கலாம்... தண்ணீர் தேசம் ஆலப்புழா..! ஊர் சுத்தலாம் வாங்க பாகம் -16 #Alleppey

வாட்ஸ்-அப்பில் வைரலான ‘பஞ்ஞாரம் விற்று நடஞ்நு குஞ்சு..’ என்கிற அந்த வீடியோவைத் திரும்பத் திரும்பப் பார்த்துச் சிரித்தபோதுதான் சட்டென அந்த ஐடியாவைச் சொன்னார் மலையாள நண்பர். (என்னது, இதற்கு அர்த்தம் வேணுமா? கட்டுரையை முழுசாப் படிங்க. தெரியும்!) ‘‘எந்துனு ஈ சமயம் வெல்லம் தேசமாயி ஆலப்புழைக்கு (Aleppey) போகாம்பாடில்லா?’’ (See Translation: ‘‘இந்த தடவை ஏன் தண்ணீர் தேசமான ஆலப்புழாவுக்குப் போகக் கூடாது?’’) 

அழகின் தேசம்; அழகிகளின் தேசம்; இயற்கையின் தேசம்; கடவுளின் தேசம்... கேரளாவை இப்படியெல்லாம் வர்ணிக்கிறார்கள். ‘தண்ணீர் தேசம்’ என்றும் எக்ஸ்ட்ராவாக கேரளாவுக்குப் பட்டம் கொடுக்கலாம். (வைரமுத்து மன்னிக்க!) தடுக்கினால் தண்ணீரில்தான் விழ வேண்டும் என்கிற அளவுக்குத் தண்ணீரால் மிதந்த ஆலப்புழாவும் குமரகமும்தான் என்னை இப்படிக் கவிஞனாக்கியது. ஒரு பொதுஅறிவு விஷயத்தோடு கட்டுரையை ஆரம்பிக்கிறேன். கேரளாவில் மொத்தம் 14 மாவட்டங்கள். இதில் 9 மாவட்டங்கள் தண்ணீரால் சூழப்பட்டுள்ளன. கூகுள் மேப்பில் நீலக்கலரில் இருந்த ஆழப்புழாவை டார்கெட் செய்து, சென்னையிலிருந்து வண்டியைக் கிளப்பினேன்.

மாநிலம் விட்டு மாநிலம் போக, ஏகப்பட்ட வழிகள் இருப்பது தமிழ்நாடு to கேரளாதான். தேனி, குமுளி வழியாக கேரளா போகலாம்; நாகர்கோவில், கன்னியாகுமரி வழியாகப் போகலாம்; கோவை, பாலக்காடு வழியாகப் போகலாம். தென்காசி, செங்கோட்டை வழியாக தென்மலை போய்ப் போகலாம். ஒரு பெரிய வாழை இலை விருந்தில் எல்லாமே பிடித்த ஐட்டங்களாக இருந்தால், எந்த உணவில் கை வைப்பது என்கிற சந்தோஷக் குழப்பம் வருமே.. அதுபோன்றதொரு பெருங்குழப்பம் இதில் உண்டு. காரணம், எல்லாமே செம போதையான பாதைகள். செங்கோட்டையில தங்குவோம் என்றால் குற்றாலம் இழுக்கும். குமுளியில் தங்கிட்டுப் போகலாம் என்றால் தேக்கடி நாள்களைச் சாப்பிட்டு விடும். நாகர்கோவிலுக்கும் தொட்டிப்பாலம், பேலஸ், திற்பரப்பு என்று எக்கச்சக்க இடங்கள் உண்டு. 

நான் கோவை - பாலக்காடு வழியைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால், பாலக்காட்டில் 300 வருடங்கள் வாழும் ஆமைபோல், வேலை நடைபெற்றுக் கொண்டே இருக்கும் அந்தச் சாலை...? அதையும் தாண்டி நான் இந்த ரூட்டைத் தேர்ந்தெடுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. பாலக்காடு தாண்டி சாலக்குடி, எர்ணாகுளம், சேர்த்தலா வழியாகப் போனால் குமரகம் என்றொரு ஏரியா இருக்கிறது. 'இத்தனை பெரிய ஏரியா' என்று எந்த சீஸனிலும் வியக்க வைப்பதுதான் குமரகத்தில் உள்ள வேம்பநாடு ஏரியின் ஸ்பெஷல். சொல்லப்போனால், ஆலப்புழாவுக்குப் பிறகு படகு வீடுகளுக்கு குமரகம்தான் சீனியர் என்கிற விஷயம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

கோவையிலிருந்து பாலக்காட்டுக்குச் செல்ல ஒன்றரை மணி நேரம் தேவைப்பட்டது... பாலக்காட்டிலிருந்து திருச்சூருக்கு மூன்று மணி நேரம் தேவைப்பட்டது... ஆனால் திருச்சூரைத் தாண்டுவதற்கு ஒரு யுகமே தேவைப்பட்டது. எப்போதுமே பீக் அவர்ஸாக இருப்பதுதான் திருச்சூரின் ஸ்டைல்போல. கட்டை வண்டிப் பயணம் மாதிரி இருந்தது. ஒவ்வொரு பள்ளத்துக்கும் கியரை மாற்றி ஆக்ஸிலரேட்டர் மிதித்து என்று டயர்டே ஆகிவிடுவார்கள். ஆனால், கேரள மக்கள் குடும்பத்தோடும், காதலி/காதலன்களோடும், நண்பர்களோடும் என்று உற்சாகமாக பைக்குகளிலும் கார்களிலும் அந்த வெறித்தனமான டிராஃபிக்கிலும் ஜாலியாக டிரைவிங் பண்ணிக்கொண்டிருந்தார்கள். ‘பாலைவனத்தைக் கடப்பவர்கள்தாம் கதறி அழுகிறார்கள்; வசிப்பவர்கள் அல்ல’ என்று யாரோ ‘வலைபாயுதே’வில் எழுதியிருந்தது ஞாபகம் வந்தது. 

திருச்சிவபேரூர் எனும் மலையாள வார்த்தையிலிருந்து மருவி, திருச்சூர் ஆகியிருக்கிறது இந்த ஊர். சேர மன்னர்கள் இதை ‘தென் கயிலாயம்’ என்றழைப்பார்களாம். அதாவது, சிவன் பள்ளிகொண்ட இடம். திருச்சூரைச் சுற்றித்தான் அதிரப்பள்ளி, சாவக்காடு பீச், சக்தன் தம்புரான் அரண்மனை, விலாங்கன்குன்னு என்று ஏகப்பட்ட சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றன. இங்குள்ள புன்னத்தூர் கோட்டா எனும் இடம், யானைகளின் சரணாலயத்துக்குப் பெயர்போனது. இங்கே 100-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்படுகின்றனவாம். நம்மூரில் சில பல ஆயிரங்களில் நாய்களைச் செல்லப் பிராணியாக வாங்கி வாக்கிங் கூட்டிக்கொண்டு போவது மாதிரி, இங்கே சில கோடீஸ்வர குருவாயூரப்ப பக்தர்கள் யானைகளைச் செல்லப் பிராணிகளாக வாங்கி, இந்தக் கோயிலுக்குத் தானம் பண்ணி விடுவார்களாம். குட்டிகளாக இருக்கும்போதே வாங்கிப் பழக்கி விடுவார்கள் என்பதால், சில யானைகள் தங்கள் ஓனர்களை அடையாளம் கண்டுகொள்ளும் தருணம் செம ஃபீலிங்காக இருக்குமாம். அதுபோக, திருச்சூர் கோயில் திருவிழாக்களில் யானைகளும் இப்படித் தானம் செய்யப்பட்டவைதாம். ஒவ்வொரு திருவிழாக்களின்போதும், ஏதாவதொரு யானைகளால் அசம்பாவிதம் நடப்பதை மட்டும் தடுக்கவே முடியவில்லை.

திருச்சூர் வெளியே வந்து இடதுபுறம் திரும்பினால், ஒரு வழியாக சாலக்குடி வந்திருந்தது. சாலக்குடிக்கு வரலாற்று முக்கியத்துவம் அதிகம். திப்பு சுல்தான் மைசூருக்குப் படையெடுக்கும்போது, சாலக்குடியில்தான் தனது படை பரிவாரங்களுடன் படையெடுப்பைத் தொடங்கத் திட்டம் போட்டாராம். எப்போதுமே பரபரக்கும் சாலக்குடி ஆறு, கேரளாவுக்கு வரப்பிரசாதம்தான். 

சேர்த்தலாவில்தான் மீன் கறி ரொம்ப ஃபேமஸ் என்றார்கள். மீன்களின் பெயர்தான் வித்தியாசமாக இருக்கிறது. சென்னையில் வறுபடும் அதே மீன்கள்தான். வஞ்சிரம் இங்கே நெய் மீன் என்றழைக்கப்படுகிறது. கானாங்கத்தைக்கு அயிலா என்கிறார்கள். பாறை மீனுக்குக் கறி மீன் என்று பெயர். இருட்டுவதற்குள் குமரகம் போக வேண்டும் என்பதுதான் திட்டம். சாலையோரம், பால் பாக்கெட் வாங்கிக்கொண்டு போவதுபோல், கறி மீன்களைப் பிடித்துச் சென்று கொண்டிருந்தார் ஒருவர். 

குமரகம் போகும் வழியிலேயே சொர்க்க வாசல் திறந்துவிட்டதுபோல் இருந்தது. காரணம், வேம்பநாடு ஏரி. குமரகம் வந்துவிட்டதற்கான அறிகுறி. ஏரியா மொத்தமும் ஏரியாகச் சூழ்ந்திருப்பதுதான் குமரகத்தின் ஸ்பெஷல். லேசான இருளில் ஏரி நன்றாகவே பயமுறுத்தியது. குமரகத்தில் தங்குவதற்கு ஏகப்பட்ட ஆப்ஷன்கள் உண்டு. ஆனால், கொஞ்சம் மிடில்கிளாஸிலிருந்து அடுத்தகட்டத்தில் நீங்கள் இருக்க வேண்டும். காரணம், இங்கே குறைந்தபட்ச ரூம்களே 3,500-ல் இருந்துதான் ஆரம்பிக்கின்றன. 

ஓகே! அரசாங்க காட்டேஜ் மாதிரி தெரிகிறதே என்று உள்ளே நுழைந்தேன். KTDC எனும் கேரள டூரிஸத்தின் அரசாங்க காட்டேஜில், ஜஸ்ட் 14,999 ரூபாய் மட்டுமே கேட்டார்கள். ஆனால், `காசுக்கேற்ற தோசை' மாதிரி காட்டேஜ்களைக் குறை சொல்ல முடியாது. முட்டுக்கொம்புகளுக்கு மேல் தென்னந்தோப்புகளுக்கு இடையே, மூங்கில் கழிகளில் அமர்ந்து காற்று வாங்கியபடி படகுகளையும் காயல் நீரின் இரவு நேர சலசலப்பையும் ரசித்துக்கொண்டே கட்டஞ்சாயாவை அருந்தினால், மோட்சம் கிடைக்கப் பெறலாம். ஆனால் `வானம்’ பட சிம்பு மாதிரி 20 ரூபாய் டீ-ஷர்ட்டைத் தேடிக்கொண்டிருப்பவன் நான். ‘என்ன வாழ்க்கைடா இது’ என்று வெளியே வந்தால், ‘‘மோட்டார் போட்டிங், சைட் சீயிங், லேக் வியூ ரூம்கள், காம்ப்ளிமென்ட்ரி பிரேக்ஃபாஸ்ட் எல்லாமே நன்னல் பீக்குன்னு’’ என்று பிரைவேட் கைடு ஒருவர் சுற்றி வளைத்தார். 22,000 ரூபாய் என்று கார்டை நீட்டினார். ‘‘படகு வீடானு சார்... பிரமாமாயிட்டுண்டுண்ணு...’’ என்று புரொமோட் செய்தார். அதே மோட்சம் மேட்டர் இதற்கும் பொருந்தும்போல! அவசர வேலை இருப்பதாகச் சொல்லிவிட்டு நழுவி விட்டேன். ‘ஓணம் பண்டிகையின்போது, கோடீஸ்வரர்கள் குமரகத்தை டார்கெட் செய்வதுதான் இதற்குக் காரணம்’ என்று தொழில் ரகசியம் சொன்னார் நம்மூரிலிருந்து குமரகத்தில் காட்டேஜ் நடத்தி வரும் உரிமையாளர் ஒருவர். குமரகத்தில் தங்கி படகுச் சவாரியை அனுபவிக்கலாம் என்று நினைத்தால் நடக்காது போலிருந்தது. 

என் போன்ற வறுமைக் கோட்டுக்கு இந்தப் பக்கம் இருப்பவர்களுக்கு, குமரகத்துக்கு அந்தப் பக்கம் இருக்கும் கோட்டயம் நல்ல ஆப்ஷன். கோட்டயத்தில் 900 ரூபாயிலிருந்து ரூம்கள் கிடைத்தன. என்ன, 15 கி.மீ போய்விட்டு மறுநாள் திரும்பி வர வேண்டும். வந்தேன். குமரகத்தில் எல்லாமே காஸ்ட்லி ஆக இருந்தது. குமரகத்தில் பறவைகள் சரணாலயம் இருப்பதாகச் சொன்னார்கள். 14 ஏக்கர் பரப்பளவில் ஏகப்பட்ட பறவைகளோடு பரந்து விரிந்திருக்கிறது சரணாலயம். புலம் பெயர் பறவைகளுக்கான சரணாலயம். பறவை விரும்பிகளுக்கு செம ஆப்ஷன் இது. நம் ஊரிலேயே பார்க்கக் கிடைக்கிற கொக்குகளைக்கூட, தலை சாய்த்து ரசித்து ஒளிஓவியம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் சிலர். சைபீரிய கொக்கு, காட்டு வாத்துகள், நீர்க் குயில்கள், வெண்குருகுகள், பாம்புதாராக்கள் என்று வெரைட்டியாக பறவைகள் பெயர் சொன்னார்கள்.

வெளியே வந்து மோட்டார் போட்டிங்குக்குப் பேரம் பேசி ஏறினேன். ஒரு மணி நேரத்துக்கு 500 ரூபாய் கேட்டார்கள். நான்கைந்து பேராகச் சேர்ந்தால் ஆளுக்கு நூறு என்று ஷேர் பண்ணிக்கொள்ளலாம். அரைமணி நேரம் பயணத்தை எக்ஸ்டெண்ட் செய்து, ஏரி வழியாகவே ஆலப்புழா பார்டரைத் தொட்டு வர தனி ரேட். ஸ்பீடு போட்டிங்குக்குத் தனி ரேட். 1,400 ரூபாய். படகுப் பயணங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், ஏரியின் ஆரம்ப ஆழமே 28 மீட்டராம். போகப் போக டபுள், ட்ரிபிள் என்று GST போல் ஆழம் எகிறுமாம். பெரிய தனவான்கள் படகு வீடுகளை வாடகைக்கு எடுத்திருப்பார்கள்போல. ஏரியில் ஆழம் நிறைந்த ஏரியாவில் நச்சென்று நங்கூரத்தைப் போட்டு படகை நிறுத்தி, இரவு தங்க வைப்பதுதான் படகு வீடுகளின் ஸ்பெஷல். மீன் பிடிக்கக்கூட ஆப்ஷன் உண்டு. 

‘வேள்பாரி’ தொடரில் வரும் தேவாங்குபோல், வேம்பாடு ஏரியின் வடக்குப் பக்கம் பார்த்து அமர்ந்திருந்தேன். ஏரியின் அழகு ஏதோ ஒரு பரவச நிலைக்குக் கொண்டு சென்றது. திடீரென ஓரிடத்தில் படகை நிறுத்திவிட்டு, ``ஈ இடத்தில நேரத்தே இவ்விட 40 ஏக்கரு நிங்கள்ட ஒரு ராஜ்யசபா எம்.பி மேடிச்சிட்டுண்டு’’ என்று ‘நடுப்பக்கம் நக்கி’ மாதிரி காதோரமாக ஸ்கூப் நியூஸ் சொன்னார் படகோட்டி. சிபிஐ-க்கு வேலை இருக்கும் போல!

படகில் அப்படியே மேற்காலே போனால், ஆலப்புழா வருகிறது. ஆனால், படகு கொஞ்ச தூரம் போய் திரும்பிவிட்டது. சாலைப் பயணம் போய் ஆலப்புழா போனால்தான் முழுமையாக ரசிக்க முடியும் என்பதால்தான் இந்த ஐடியா. ஆலப்புழாவில் தங்கும் ரூம்கள் பர்ஸைக் கடிக்கவில்லை. Non-AC ரூம்கள் 800 ரூபாயிலிருந்து 1,200 வரை கிடைக்கின்றன. போட் ஹவுஸும் எடுக்கலாம். குமரகத்தைவிட மலிவாகச் சொன்னார்கள். 8,000 முதல் 12,000 வரை போட் ஹவுஸ் வாடகை சொன்னார்கள். இங்கே ஒரு நாள் என்பது மதியம் 12 மணி முதல் காலை 9 மணி வரை. படகு வீடு என்றால், ஒரே இடத்தில் தங்குவதில்லை. மதியம் 12 மணிக்கு ஆலப்புழா ஏறினால்... அடுத்த நாள் காலை மீண்டும் 9 மணிக்கு அதே இடத்தில் கொண்டு வந்து இறக்கிவிடுவார்கள்.

கேரளாவில் காலை டிஃபனாக புட்டு, இட்லி கிடைக்கிறதோ இல்லையோ, மாட்டிறைச்சியும் மீன் வறுவலும் காலங்காத்தாலேயே தயாராக இருக்கிறது. அசைவப் பிரியர்களுக்கு ஜமாய்தான். அதேபோல் நம் ஊர் மாதிரி 'போதை நிலையம்' அரசுடைமையாக்கப்படவில்லை என்பதால், தனியார் பார்களில் கூட்டம் அள்ளுகிறது. தண்ணீர் தேசத்தில் யாரும் தண்ணீரில் மிதந்தபடி வாகனம் ஓட்டக் கூடாது என்பதில் கறாராக இருக்கின்றனர் காவல்துறையினர். காலையில் தூங்கி எழுந்த மூஞ்சியோடு - வெறும் ஷார்ட்ஸ்-டீஷர்ட்டோடு ஆதார் கார்டில் இருப்பதுபோல் இருந்த என்னை வழிமறித்து செக் செய்தனர். ‘வண்டியை நிறுத்து.. எங்கேருந்து வர்ற... வாயை ஊது...’ என்பனபோன்ற ஒருமை செக்கிங்கெல்லாம் இங்கே இல்லை.  என்னை மரியாதையாகவே செக் செய்தனர். நான் நிரபராதி என்று தெரிந்ததும், மன்னிப்புக் கேட்டுவிட்டு, வழியும் சொல்லியனுப்பினார் ஓர் அதிகாரி. 

ஆலப்புழா பஸ் ஸ்டாண்டுக்குப் போனால்... மூடப்பட்ட திரையரங்குகள் மாதிரி காலியாக இருந்தது. ஏதும் ஸ்ட்ரைக்கா என்று விசாரித்தால், எப்பவுமே இப்படித்தானாம். ஆலப்புழாவில் பேருந்துப் பயணமெல்லாம் மலையேறிவிட்டது. எல்லாமே படகுப் பயணம்தான். எங்கேயோ ஹார்ன் சத்தம் கேட்டது. பஸ்தான் வருகிறது என்று விலகி வழிவிட்டேன். அரசாங்க டவுன் பஸ் என்று நினைத்தால், அரசாங்க டவுன் போட் அது. போட்டிலிருந்து வந்த ஹார்ன் சத்தம். ஆலப்புழாவைச் சுற்றிப் பல கிராமங்களில் பஸ் போக்குவரத்தே கிடையாது. போக்குவரத்துக்குப் படகுதான் ஆதாரம். நகரப் பேருந்துகளில் பயணம் செய்வதுபோல் நகரப் படகுகளில் ஏறி டிக்கெட் வாங்கிப் பயணிக்கிறார்கள் மக்கள். 8 ரூபாயிலிருந்து டிக்கெட் ஆரம்பிக்கிறது. வித்தியாசமான அனுபவமாக இருந்தது. ``சீக்கிரம் ஸ்கூலுக்குப் போகணும்... டிராஃபிக் இல்லாம இருக்கணும்’’ என்று மைண்ட் வாய்ஸ் என நினைத்து சத்தமாக மலையாளத்தில் வேண்டிக் கொண்டிருந்தார் ஒரு கேரள மாணவி. என்னது, தண்ணீரில் டிராஃபிக்கா? 

ஆம்! நம் ஊரில் ஒன்-வேயில் டூ-வே பாதை போட்டுப் பறக்கும் வாகனங்கள் போல் இங்கே 'சர்புர்' என்று கிளம்ப முடியாது. ‘தண்ணிதான் கிடக்கே’ என்று உங்களுக்குரிய லேன் மாறி, நடுவே புகுந்து இஷ்டத்துக்குப் படகை விரட்டினால் தண்டம் கட்ட வேண்டும். ஒவ்வொரு படகுக்கும் ஒவ்வொரு லேன்; குறிப்பிட்ட லேன் மாறி படகு ஓட்டக் கூடாது; ஒவ்வொரு ஸ்டாப்பிலும் நிற்க வேண்டும்; குறைந்த கட்டணம் வசூலிக்க வேண்டும்; பள்ளி மாணவர்களுக்குக் குறைந்த செலவில் போட் பாஸ் வழங்க வேண்டும். இப்படி ஏகப்பட்ட விதிமுறைகள். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கவனிக்க! 

உலகம் கடலால் சூழ்ந்துள்ளதுபோல், ஆலப்புழா முழுக்க தண்ணீரால் சூழ்ந்துள்ளது. நடுநடுவே ஓடையைக் கடந்து சாலைக்குப் போக ஊழல் இல்லாத பாலங்கள் கட்டியிருக்கிறார்கள். காஷ்மீருக்கு அடுத்து படகு வீடுகளுக்குப் பெயர் பெற்றிருக்கிறது ஆலப்புழை. ஆண்டுக்கு ஒரு முறை இங்கே படகுப் போட்டியும் நடத்துகிறார்கள். ஒரு முறை ஆலப்புழாவில் படகுப் பயணம் செய்த இந்தியப் பிரதமர் நேரு, ‘‘படகுப் போட்டி நடத்துங்கள்’’ என்று ஒரு பரிசுத் தொகை அனுப்பியிருந்தாராம். அப்போது முதல் படகுப் போட்டி வெகு ஜரூராக நடந்து வருகிறது. ஆலப்புழாவின் பெரிய அட்ராக்ஷனே இந்தப் படகுப்போட்டிதான். ஒரு படகில் கிட்டத்தட்ட 100 பேர் இருப்பார்கள். ஒரே நேரத்தில் டைமிங் மிஸ் ஆகாமல் துடுப்பு போட வேண்டும். 

சில டூரிஸ்ட் ஸ்பாட்டுகளில் போட்டிங்குக்கு, ரேஷன் கடைபோல க்யூவில் நிற்க வேண்டியதிருக்கும். ஆலப்புழாவில் படகுப் பயணத்துக்கு அலையவோ, காத்திருக்கவோ தேவையில்லை. நம் போன்ற வெளியூர்க்காரர்களைப் பார்த்ததுமே சுற்றி வளைத்துவிடுகிறார்கள் கைடுகள். `ஞான் மனோகரமாயிட்டுச் சுத்திக் காணிக்கா. ஒரு மணிக்கூர்னு 300 தந்னால் மதி!’’ என்று பாவமாக ஒரு படகோட்டி என்னை அப்ரோச் செய்தார். 

ஆயிரக்கணக்கில் படகுகள் இங்கே ஓடுவதாகச் சொன்னார்கள். அதனால் இங்கே பீக் - ஹவர்ஸ் எல்லாம் உண்டு. டிராஃபிக் இல்லாத பீக்-ஹவர்ஸில் அந்தப் படகில் ஏறினேன். ஆனால், ஓரிடத்தில் டிராஃபிக் ஆகி, ‘போட் ஜாம்’ ஏற்பட்டு தண்ணீருக்கு நடுவே தவித்து ரசித்தது தனிக்கதை! ஸ்கூல் பஸ் மாதிரி அது ஸ்கூல் போட் ஆக இருக்க வேண்டும். எதிரே இருந்த படகில் அத்தனை பேரும் பள்ளிக் குழந்தைகள். அத்தனை நெரிசலிலும் மங்கலான நீரோடைக்கு மேல் தெளிந்த நீரோடை மாதிரி பயணித்துக்கொண்டிருந்தார்கள் குழந்தைகள். 

தரையில் மாதிரி தண்ணீரிலும் சில படகுகளில் போலீஸ் ரெய்டெல்லாம் நடந்தது. லைசென்ஸ், RC காட்டுவதுபோல், படகு வீடு வாடகைக்கு எடுத்திருப்பவர்கள், ரசீதைக் காண்பிக்க வேண்டும். வேம்பநாடு ஏரியில் ஏதோ ஓரிடத்தில் படகை நிறுத்தினார்கள். நெடுஞ்சாலைப் பயணங்களில் சில மொக்கையான மோட்டல்களில் பேருந்துகள் நிற்குமே... அதேபோன்றதொரு டீ பிரேக். ஆனால், நல்ல கட்டஞ்சாயா கிடைத்தது. ‘பெண்ணுரிமை இல்லாத நாடு, காற்றில்லாத வீடு’ என்பார்கள். கேரளாவில் ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் அனைத்திலும் முன்னுரிமை வகிக்கிறார்கள். ஹோட்டல் உரிமையாளராக, படகு ஓனர்களாக, டூரிஸ்ட் கைடுகளாக, சாயா போடுபவர்களாக... என்று சேச்சிகள் கேரளாவின் பொருளாதாரத்தில் எந்நேரமும் பங்கு வகித்தபடி இருக்கிறார்கள். லேசான மழைத் தூறலுக்கு இடையே சேச்சி ஒருவர் தயாரிப்பில் கட்டஞ்சாயா உறிஞ்சிவிட்டு மீண்டும் படகுப் பயணம். 

கரையில்... இல்லை.. தண்ணீரில் வீடுகளே கட்டியிருந்தார்கள். தண்ணீரில் மிதந்துகொண்டிருந்தன வீடுகள். இத்தாலியின் வெனிஸ் மாநகரம் இப்படித்தான் இருக்கும் என்று சில படங்களில் பார்த்ததாக ஞாபகம். கிராமமே மிதந்துகொண்டிருந்தது. வீக் எண்ட் என்பதால், ஒரு வீட்டுத் தலைவர் தன் குழந்தைகளுடன் வாசலிலேயே மீன் பிடித்து மனைவிக்கு க்ளீன் பண்ணிக் கொடுத்துக் கொண்டிருந்தார். ஆன் தி ஸ்பாட்டில் அவர்கள் வீட்டில் மீன் குழம்போ, வறுவலோ ரெடியாகிக் கொண்டிருக்க வேண்டும். இன்னொரு வீட்டு வாசலில், ‘பைக் எடுத்துட்டு மார்க்கெட்டுக்குக் கிளம்புவதுபோல்’ குட்டி வள்ளத்தை (படகை) எடுத்தபடி, "மார்க்கெட் போயி பஞ்ஞார வாங்கிட்டு வராஞ்" என்று போட்டிங்கில் ஷாப்பிங் கிளம்பினார் ஒரு குடும்பத் தலைவர். (முதல் வரிக்கான அர்த்தம்: பஞ்ஞார என்றால் சர்க்கரை. சர்க்கரை விற்றபடி நடந்துபோனார் குஞ்சு என்ற ஒருவர்! இதுதாங்க அந்தப் பாடலோட அர்த்தம்!) இங்கே ஒவ்வொருவர் வீட்டிலும் வள்ளம் இருக்க வேண்டும். அவசர காலத்துக்கு இதுதான் லைஃப் போட்!

எனக்குப் படகை விட்டிறங்க மனசே இல்லை. ‘இந்தக் காயல் கரையோரம் ஒரு வாழ்க்கை வாய்த்தால் எப்படி இருக்கும்?’ என்று தண்ணீரில் மிதந்த ஒரு வீட்டுக்கருகே செல்ஃபி எடுத்து, வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்தேன். 850 கான்டாக்ட்ஸ் இருந்த என் போனில் 840 பேர் ‘Seen’ என்று வந்திருந்தது.
 

மற்ற பாகங்கள்