Published:Updated:

`தம்மையே தாழ்த்தி அடிமைக்கோலம் பூண்டார் இயேசு!’ - குருத்தோலைத் திருவிழா தரும் செய்தி #PalmSunday

`தம்மையே தாழ்த்தி அடிமைக்கோலம் பூண்டார் இயேசு!’ - குருத்தோலைத் திருவிழா தரும் செய்தி #PalmSunday
`தம்மையே தாழ்த்தி அடிமைக்கோலம் பூண்டார் இயேசு!’ - குருத்தோலைத் திருவிழா தரும் செய்தி #PalmSunday

ன்று, `குருத்து ஞாயிறு’ எனப்படும் `குருத்தோலைத் திருவிழா’ கொண்டாடப்படுகிறது. இது, இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்த நிகழ்ச்சியை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் நினைவுகூரும் நிகழ்ச்சி. புனித வாரத்தின் தொடக்கநாளான இன்றைய நாளில், இது தொடர்பாக சில செய்திகளைத் தெரிந்துகொள்வோம்... 

இயேசுவைப் பொறுத்தவரை, ஜெருசலேம் நகரம் அதிகார மையமாக இருந்தது. அதிகார மையமாக இருந்த ஜெருசலேம் நகரத்துக்குள் நுழையும் இயேசு கிறிஸ்து, எத்தகைய அதிகாரத்தை நிலைநாட்டப்போகிறார் என்பது குறித்து கிறிஸ்தவர்கள் சிந்திக்க அழைக்கப்படுகிறார்கள். அடுத்ததாக, இயேசு கிறிஸ்து தாழ்ச்சியின் அடையாளமாக ஜெருசலேமுக்குள் நுழைகிறார். மூன்றாவதாகச் சொல்லவேண்டுமென்றால், `துன்பங்கள்படப் போகிறோம்’ என்பதை அறிந்துகொண்டே அங்கே வருகிறார். இந்த மூன்று கருத்துகள் பற்றியும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.

இயேசு வாழ்ந்த காலத்தில் ஜெருசலேம் நகரம், யூதர்களின் அதிகார மையமாக விளங்கியது. அரசியல் அதிகாரம், பொருளாதார அதிகாரம், ஆன்மிக அதிகாரம் அனைத்தும் அங்கே மையம் கொண்டிருந்தன. ஜெருசலேம் நகர ஆலயம் என்பது ஏழைகளை ஏமாற்றும் இடமாக இருந்தது. அதேபோல ஆட்சியாளர்கள், ஏழை எளிய மக்களிடம் வரி வசூலித்து அவர்களைப் பொருளாதாரச் சுமைக்கு ஆளாக்கினார்கள். இதையெல்லாம் இயேசு நன்கு அறிந்திருந்தார். 

ஆட்சியாளர்கள் கொண்டிருந்த அரசியல் அதிகாரத்துக்கும், இயேசு கொண்டிருந்த அதிகாரத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. யூத அரசர்கள் கொண்டிருந்த அதிகாரமோ மண்ணுலகு சார்ந்த அதிகாரம். இது மக்களை அடக்கி ஆள்வதற்கான அதிகாரம்; நேர்மையையும் நீதியையும் விலைக்கு விற்கும் அதிகாரம். இந்த அதிகாரம் தற்காலிகமானது மட்டுமல்ல, போலியானது. பெருமையையும் புகழையும் விரும்பும் அதிகாரமாக அது இருந்தது. 

இயேசு கிறிஸ்து, ஓர் அரசராக கோவேறுக் கழுதையின் மீது ஏறி வரும்போது விண்ணுலகின் அதிகாரம் தாங்கியவராக வருகிறார். அது விண்ணுலக மதிப்பீடுகளை அன்பு, அறம், உண்மை, நீதி, நேர்மை, பகிர்வு, மன்னிப்பு, இரக்கம் போன்றவற்றை மக்களிடையே விதைப்பதற்கான அதிகாரமாக இருந்தது. அவருடைய அதிகாரம் மக்களை வாழ வைப்பதற்கான அதிகாரமாக இருந்தது.  

இயேசு, ஓர் அரசராக ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தாலும், கிரீடம் தாங்கி மாபெரும் தேரில் பயணிக்கவில்லை. மாறாக சமூகத்தில் சுமைகளை ஏற்றிச் செல்லும் கோவேறுக் கழுதையின் மீது பயணம் செய்தார்.`யூதர்கள் அரசே வாழி' என்று எல்லோரும் கூறும்போது மிகவும் தாழ்ச்சியோடும் எளிமையாகவும் ஜெருசலேமுக்குள் நுழைகிறார். தான், தன் தலையில் முள்முடி சூடிக்கொள்ளப் போகிறோம் என்பதை முன்கூட்டியே அறிந்த இயேசு, மனதில் தாழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆரவாரமில்லாமல் பயணம் செய்கிறார்.

இயேசுவின் பிறப்பு, மாபெரும் மீட்பு வரலாற்றின் தொடக்கம். இறை மகனாக இருந்தும் அதை ஒரு பொருட்டாக அவர் எடுத்துக்கொள்ளவில்லை. அதில் எந்தவிதத்திலும் பெருமைகொள்ளவில்லை. இதைத்தான் புனித சின்னப்பர் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் அருமையாக எழுதி வைத்திருக்கிறார். `கடவுள் தன்மையில் விளங்கிய அவர் கடவுளுக்கு இணையாக இருக்கும் நிலையைப் பிடித்துக்கொண்டிருக்கவேண்டிய ஒன்றாகக் கருதவில்லை. மாறாக தம்மையே தாழ்த்தி அடிமைக்கோலம் பூண்டார் (பிலி: 2: 6-11) என்று எழுதியுள்ளார்.

இயேசு ஓர் இறைமகனாகப் பிறந்து, அரும் பெரும் செயல்களைச் செய்தாலும் ஒருபோதும் அவர் பெருமையைத் தேடிக்கொள்ளவில்லை. ஆனால் மனிதர்களாகிய நாம், சிறிய வேலைகளைச் செய்துவிட்டு பெரிய விளம்பரங்களைத் தேடிக்கொள்கிறோம். பெருமையையும் புகழையையும் காசு கொடுத்து வாங்கப் பார்க்கிறோம். மற்றவர் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக பல்வேறு செயல்களைச் செய்கிறோம். இயேசுவின் குருத்து ஞாயிறு ஊர்வலம், விளம்பரம் தேடாத ஒரு தாழ்ச்சியின் ஊர்வலம் என்றால் அது மிகையல்ல.

இயேசு ஜெருசலேம் நகருக்குள் நுழைந்தபோது ஏழை எளிய மக்கள், `தாவீது மகனுக்கு ஓசான்னா...' என்று பாடி மகிழ்ந்தார்கள். ஆனால் இயேசு, தான் துன்பப்படப் போகிறோம் என்பதை அறிந்து மனம் கலங்கியவராக வருகிறார். ஒருவருடைய சாவு எவ்வளவு வலியைத் தருமோ என்பதல்ல முக்கியம். தான் சாகப்போகிறோம் என்பதை அறிந்துகொண்டு, அதை நோக்கிப் பயணிப்பது அதைவிட வலி நிறைந்தது. எனவே, வெளியே சொல்ல முடியாத வலியோடும் வேதனைகளோடும் இயேசு பயணம் செய்தார். 

யூதர்கள் வார்த்தையால் தொடுக்கும் அவமானங்களையும் சாட்டையால், ஆணியால் அறையும் வலிகளையும் தாங்கிக்கொள்ளும் மனநிலையுடன் அங்கே கழுதையில் ஏறி வருகிறார். இத்தனைத் துன்பங்களையும் அவர் ஏன் பட வேண்டும்? பலருடைய மீட்புக்காக ஒருவர் சாக வேண்டும் என்ற தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றவே இயேசு பாடுகள் படுவதை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டார். உன்னையும் ஆழமாக அன்பு செய்வதன் அடையாளமாகவே இயேசு துன்பங்களை, சுமைகளை ஏற்றுக்கொண்டார். 

உயர்ந்த லட்சியவாதியை மரணம்கூட தோற்கடிப்பதில்லை என்பதை இயேசு தன்னுடைய சாவின் மூலம் நிரூபித்துக் காட்டிவிட்டார். அவரை சிலுவையில் அறைந்து கொன்றுவிடலாம். ஆனால் நீதிக்கான, நேர்மைக்கான, மன்னிப்புக்கான, இரக்கத்துக்கான அவரின் வேட்கையை, லட்சியத்தை எந்த சிலுவையும் மரணமும் தோற்கடிக்க முடியாது என்பதைத்தான் குருத்து ஞாயிறு நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. எனவே விண்ணுலக மதிப்பீடுகளை வளர்ப்போம். இயேசுவைப்போன்று தாழ்ச்சியையும் எளிமையையும் ஆடையாக அணிவோம்.கொண்ட லட்சியத்தில் உறுதியுடன் இருப்போம்.