Published:Updated:

நானும் விகடனும்

நா.கதிர்வேலன் படங்கள் : தி.விஜய்

நானும் விகடனும்

நா.கதிர்வேலன் படங்கள் : தி.விஜய்

Published:Updated:
##~##

''உலகம் நமக்குப் பின்னாடியும் இயங்கும். விகடனும் அப்படித்தான்!

விகடனின் ஸ்பெஷல்னா... காமெடி. விகடனின் ஒவ்வொரு ஜோக்குக்கும் நான் அடிமை. 10 வயசுல படிச்ச ஒரு ஜோக் இப்போ 57 வயசுலயும் பளிச்சுனு ஞாபகத்தில் இருக்கு. ஒருத்தர் களிமண் சட்டியைத் தலையில்வெச்சுத் தூக்கிட்டுப் போவார். எதிரே வர்ற ஒருத்தர் 'தலையில என்ன’?னு  கேட்பார். இவர் 'களிமண்ணு’னு சொல்ல, 'அது தெரியும், சட்டியில என்ன இருக்கு?’னு அவர் கேட்பார். ஞாபக அறையில் இந்த மாதிரி இன்னும் பல ஜோக்குகள் ஸ்டாக் இருக்கு.

இளமையில் ஜோக்கில் ஆரம்பித்தது. அப்புறம் சுஜாதா வரைக்கும் வளர்ந்தது. சுஜாதா ஒரு தடவை 'நானும் நீங்களும் லட்டு சாப்பிடுறோம். ரெண்டு பேருமே சூப்பர்னு சொல்றோம். ஆனா, உங்களுக்கு எப்படி சூப்பரா இருந்தது? எனக்கு எப்படி சூப்பராக இருந்தது? இரண்டும் வேறு வேறு இல்லையா?’னு  பல உதாரணங்களோடு எழுதி இருப்பார். அப்படி ஜோக்கில் ஆரம்பிச்சது, விஞ்ஞானம் வரைக்கும் சொல்லிக்கொடுத்தது விகடன்தான்.

நானும் விகடனும்

என்னைக்கும் மறக்கவே முடியாதது, நம்ம தலைவர் எம்.ஜி.ஆர். எழுதின 'நான் ஏன் பிறந்தேன்?’ தொடர். இன்னைக் கும் அதோட பைண்டிங் என்கிட்ட இருக்கு. அந்தத் தொடரில் இடம்பெற்ற படங்கள் அத்தனையும் பொக்கிஷம். ஒரு படத்துல எம்.ஜி.ஆர். பட்டு வேட்டி, பட்டுச் சட்டை போட்டு கையை மடிச்சுவிட்டு ஒரு பெரிய குத்துவிளக்கை ஏற்றுவார். அந்த மாதிரி அழகான ஒரு எம்.ஜி.ஆர். ஸ்டிலைப் பார்க்கவே முடியாது. அப்படியே ஜொலிஜொலினு ஜோதி மாதிரி ஜொலிப்பார்.

விகடனின் பிரத்யேகமான அம்சம்... பொக்கிஷம். 25 வருஷத்துக்கு முன்னாடி நான் கொடுத்த ஒரு பேட்டியை கொஞ்ச நாள் முன்னாடி பொக்கிஷத்தில் பிரசுரம் பண்ணி இருந்தாங்க. அந்தப் பேட்டியில, 'இன்னும் 25 வருஷத்துக்குப் பின்னாடி கம்ப்யூட்டர்லாம் பிரபலமாகும். அதிலும் நம்ம அரசியல்வாதிகள் தனி மனிதத் துதியைப் புகுத்திடுவாங்க. கம்ப்யூட்டரும் நல்லவங்ககிட்டே இருந்து கைமாறிப்போயிடும்’னு சொல்லி இருந்தேன். அதைப் படிச்சிட்டு, சிவகுமார் சார் எனக்கு போன் பண்ணினார். 'ராஜு, 25 வருஷத்துக்கு முன்னாடி, அவ்ளோ விவரமாப் பேட்டி கொடுத்திருக்கியே... இப்ப அந்த விவரம் என்னாச்சு?’னு கேட்டார். என்ன சொல்றதுன்னே தெரியலை. விகடன் நம்மளை மாட்டிவிட்ருச்சு. 'வயசாகிட்டே போகுது... வம்புல மாட்டிக்கிடக் கூடாதுங்கிற பயம்தான். ஏன் பொல்லாப்புனு கமுக்கமா இருக்கிறதுதான்’னு அவர்கிட்ட எப்படிச் சொல்றது?

நானும் விகடனும்

விகடனின் முத்திரை அம்சம்... சினிமா விமர்சனமும் மார்க்கும். விமர்சனம், மார்க் ரெண்டுமே கச்சிதமா இருக்கும். என்னைப் பொறுத்தவரை விகடன் விமர்சனம் என் விஷயத்தில் எப்போதும் சறுக்கியது இல்லை. 'வால்டர் வெற்றிவேல்’ ஃபர்ஸ்ட் காப்பி பார்த்ததுமே படம் ஹிட் ஆயிரும்னு பட்டது. ஆனா, 'படம் முழுக்க மீட்டிங்கில் பேசற மாதிரி ஓவராப் பேசிட்டே இருக்கோமே’னு எனக்கேதோணுச்சு. அடுத்த வாரம் விகடன் விமர்சனத்துல இப்படி வருது... 'சத்யராஜ் மீட்டிங்கில் பேசுவதுபோலப் படம் முழுவதும் பேசிக்கொண்டே இருக்கிறார்!’ நச் விமர்சனம்!

நாவரசு கொலைப் பின்னணியில் எடுத்த 'மாறன்’ படத்துக்கு ரொம்ப நல்ல விமர்சனம் எழுதி இருந்தாங்க. 'ஏர்போர்ட்’ வந்தப்ப, 'சத்யராஜின் நடிப்பு பற்றிய விமர்சனம் நன்றாக இருந்தது. நானும் ரசித்தேன்’னு விகடன் வாசகர் கடிதம் பகுதியில் ஒரு கடிதம். அந்தக் கடிதம் எழுதிய விகடன் வாசகர்...  நடிகர் கார்த்திக்!

விகடனின் அட்டையில் இரண்டு தடவை இடம் பிடிச்சிருக்கேன் நான். அதை இப்பவும் எப்பவும் பெரிய கௌரவமா நினைச்சுட்டு இருக்கேன். 'காக்கிச் சட்டை’க்குப் பிறகு எனக்கு இண்டஸ்ட்ரியில் இமேஜ் கூடி இருக்குனு ஒரு கட்டுரை. நானும் நமீதாவும் கட்சி ஆரம்பிப்பதாக ஒரு ஏப்ரல் ஃபூல் கட்டுரை. நிஜமாகவே கட்சி ஆரம்பிச்ச மாதிரியே செம்ம லொள்ளா எழுதி இருந்தாங்க.  

இப்போ விகடனில் லூஸுப் பையனை விடாமப் படிச்சுடுறேன். ஆரம்பத்தில் 'கெரகம்... கெரகம்’னு படத்தில் அடிக்கடி சொல்வேன். இப்போ நானே அதை மறந்துட்டேன். ஆனா, லூஸுப் பையன் மட்டும் அதை மறக்காம கரெக்டா என் கேரக்டர் வரும்போது 'கெரகம்... கெரகம்’னு எழுதி விட்ருவார். படிச்சதும் விழுந்து விழுந்து சிரிப்பேன்!  

மதன், ஹரன் இருவரின் கார்ட்டூன் களும் விகடனுக்கு அழகு. மதனின் குறும்புக்கு அளவே இல்லை என்பதற்கு ஒரு கார்ட்டூன் நச் உதாரணம்... நடிகர் ராமராஜன் நாடாளுமன்றத்துக்குப் போனபோது எல்லோரும் வெள்ளைச் சட்டையில் இருக்க, அவர் மட்டும் மிட்டாய் கலர் சட்டையில் இருப்பார்!

ஒரு தடவை ஹாய் மதனில் 'வேதம் புதிது’ படத்தை இப்போ எடுத்தால் சத்யராஜ் கேரக்டரில் யாரை நடிக்கவைக்க லாம்னு கேள்வி. 'ஏன், அவருக்கு என்ன... அவரே இப்போதும் நடிக்கலாமே’னு பதில் எழுதி இருந்தார். ரொம்ப தேங்க்ஸ் மதன் சார்!

ஒரு வருஷத்துக்கு முன்னாடி விகடனோடு வெளிவந்த பாக்கெட் சைஸ் புத்தக இணைப்புகள் ஒவ்வொண்ணும் சுவாரஸ்யமானது. அந்த வரிசையில் புரட்சி விகடனை மறக்க முடியாது. அதைக் கையில வெச்சுக்கிட்டு பப்ளிக் மீட்டிங்கே பொறி பறக்கப் பேசிரலாம். ஃபிடல் காஸ்ட்ரோ, சே குவேரா, ஏங்கல்ஸ், மார்க்ஸ், லிங்கன்னு அவ்வளவு தகவல்கள். விகடன் ஆபீஸுக்கு போன் போட்டு அரை மணி நேரம் பாராட் டிய பிறகுதான் அந்தப் பரபரப்பு அடங்குச்சு!

நானும் விகடனும்

ஈழப் பிரச்னையை நேர்மையாக விகடன் கையாண்ட விதம் அதன் ஆண்டாண்டு கால சரித்திரத்தில் இடம்பெறும். உச்சகட்டப் போரின் போது ப.திருமாவேலன் எழுதின சில கட்டுரைகள் உணர்ச்சிப் பிழம்புகள். போரின் கடைசி மணித் துளி வரை விகடன் தன் உதவிக் கரத்தை நீட்டிய படியே இருந்தது.

சமீபத்தில் 'வட்டியும் முதலும்’  பகுதியில் ராஜு முருகன் செங்கொடி பற்றி எழுதி இருந்த கட்டுரை என் மனதைப் பிசைந்தது. அந்த அத்தியா யத்துக்கு முத்துக்குமாரும் செங்கொடி யும் புரட்சிக் கொடியை உயர்த்திப் பிடிச்சு நிற்கிற மாதிரி ஹாசிப் கான் ஓவியம் வரைந்திருந்தார். ரஷ்யப் புரட்சி ஓவியத்தில் சுத்தியல் அரிவா ளோடு இரண்டு பேர் கொடி ஏந்தி நிற்பார்களே, அதற்கு இணையான ஓவியம் அது. அந்த ஓவியத்தை எந்த ஒரு புரட்சி இயக்கத்துக்கும் அடையா ளமாக வைக்கலாம்.

விகடன் எதையும் தீர்ப்பாக எழுது வது இல்லை. அண்ணா ஹஜாரேவில் இருந்து கூடங்குளம் வரை எதையும் நம்மை யோசிக்கத் தூண்டுகிறார்கள். 'இப்படி நடந்துட்டு இருக்கு... பார்த்துக்கங்க, யோசிங்க’னு தோள்ல கைபோட்டுச் சொல்றாங்க. தமிழ் மக்களின் மீதுகொண்ட தீராத அக்கறையும் அன்புமே விகடனின் உரம்!

விகடன் - தமிழர்களின் தேவை!''