Published:Updated:

“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல!”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல!”
“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல!”

ம.கா.செந்தில்குமார், படம்: கே.ராஜசேகரன்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல!”

‘‘அவர் வருவார்ங்கிற நம்பிக்கையில தான் சார் வாழ்ந்துட்டு இருக்கோம். ‘அப்பா எங்கேயாவது திட்டுல, தீவுல இருப்பாரும்மா. நிச்சயமா வந்துடுவார்’னு இந்தப் புள்ளைங்களும் மனசைத் தேத்திக்கிட்டு இருக்குதுங்க. அதனாலதான் இன்னும் எந்தவிதமான சடங்கு சம்பிரதாயமும் செய்யாம அவருக்காகக் காத்துட்டிருக்கேன்’’ - கண்களில் நீர் முட்ட மூன்று மகள்களையும் அணைத்தபடி பேசத் தொடங்கினார் தீபா. சென்னை பெருமழை சமயத்தில் கடலுக்குப் போய் காணாமல்போன மீனவர் சரவணனின் மனைவி.

சென்ற ஆண்டு நவம்பர், டிசம்பரில் சென்னையை மூழ்கடித்த மழையால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப் பட்டன; நூற்றுக்கணக்கானோர் பலி; இன்னும் சிலர் காணாமல்போனார்கள். அப்படிக் காணாமல்போன இரண்டு மீனவர்கள்தான், தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சரவணனும் ராஜியும்.

“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல!”

நவம்பரில் மீன்பிடிக்கச் சென்ற இருவரும், இன்னும் வீடு திரும்பவில்லை. புயலில் சிக்கிய இருவரும் என்ன ஆனார்கள் என்பது இப்போதுவரை தெரியவில்லை. ஒருபக்கம் இறந்துபோனதை நிரூபித்தால்தான் நிவாரண உதவி என முரண்டுபிடிக்கிறது அரசாங்கம். சங்கத்தில் உறுப்பினராக இருந்தால்தான் உதவுவோம் எனும் உதவும் அமைப்புகள் மற்றொரு பக்கம். வருமானம் ஈட்டித் தந்த குடும்பத்தலைவர்கள் இல்லாமல் வறுமையில் வாடுகின்றன இந்த இரண்டு குடும்பங்கள்.

சரவணனின் மனைவி தீபா, தண்டையார் பேட்டை வ.உ.சி நகர் சுனாமி குடியிருப்பில் வசிக்கிறார். ‘தீபா வீடு எது?' என விசாரித்தால், ‘`யாரு... கடலுக்குப் போய் காணாமப் போனாரே அந்த சரவணனோட சம்சாரமா?'’ என்றபடி அடையாளம் சொல்கிறார்கள். ஒரே ஓர் அறைதான் மொத்த வீடு.

‘‘எனக்கு சொந்த ஊர் பழவேற்காடு.

2001-ல கல்யாணம். வீட்டுக்காரர் சரவணன், கடல் வேலைக்குப் போறவர். போட் டிரைவர். அடுத்தடுத்து மூணு பொண்ணுங்க பொறந்தது. பெரியவ பிரவீணாவுக்கு இப்ப 14 வயசு, ஒன்பதாம் கிளாஸ் படிக்கிறா. நடுவுல உள்ளவ பிரதனிசா, இப்ப எட்டாம் கிளாஸ் போறா. சின்னவ திவ்யா, ஆறாங்கிளாஸ். மாமனார், மாமியார் எங்ககூட இருக்காங்க. அவர் ஒருமுறை கடலுக்குப் போனார்னா, வர்றதுக்கு குறைஞ்சது 10-15 நாள் ஆகும். போட்டுக்குப் போயிட்டு வீட்டுக்கு வந்தார்னா, அடுத்தவாட்டி போட்டுக்குப் போற வரைக்கும் வீட்லதான் இருப்பார். எங்க மேல உயிரா இருப்பார். டிரைவர்ங்கிறதால மத்தவங்களைவிட இவருக்கு சம்பளம் கொஞ்சம் கூட. பொண்ணுங்க கேட்கிறதை அப்படியே வாங்கித் தருவார். பொண்ணுங்களை ஃப்ரெண்ட் மாதிரி கூடவே கூட்டிக்கிட்டு சுத்துவார்’’ - தீபா பேசிக்கொண்டிருப்பதை அவரின் மகள்கள் அமைதியாகக் கவனித்துக்கொண்டு இருக்கின்றனர். முகத்தில் அவ்வளவு அச்சம்.

சரவணன் இருந்தவரைக்கும் தீபா வேலைக்குப் போனது இல்லை. கணவன் இல்லாத வீட்டைச் சமாளிக்க, இப்போது சாக்பீஸ் கம்பெனியில் வேலைக்குப் போய் வருகிறார்.

‘‘காலையில புள்ளைங்களை ஸ்கூலுக்குக் கிளப்பிவிட்டுட்டு 9 மணிக்கு வேலைக்குப் போனேன்னா, வர்றதுக்கு சாயங்காலம் ஆறு ஆறரை ஆகிடும். ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பளம். அதைவெச்சுத்தான் மொத்தக் குடும்பத்தையும் ஓட்டிட்டு இருக்கோம்’’ - அழுகையை விழுங்கிக்கொள்கிறார் தீபா.

‘`நான் டாக்டருக்குப் படிக்கணும், தங்கச்சிங்களை போலீஸாக்கணும்னு அப்பா சொல்லும். ஏன்னா, `நல்ல வைத்தியமும் எல்லாரையும் திருடனா பார்க்காத போலீஸும் தான் நமக்குத் தேவை பாப்பா'னு அப்பா சொல்லிட்டே இருக்கும். நாங்க படிக்கணும்கிறது தான் எங்க அப்பாவோட ஆசை. இத்தனை வருஷத்துல ஒருநாள்கூட ஸ்கூலுக்கு நாங்க லீவு போட்டது கிடையாது.  நல்ல சாப்பாடோ, கெட்ட சாப்பாடோ, இருக்கிறதைக் கட்டிக் கிட்டுக் கிளம்பிடுவோம். இங்கே பக்கத்துலதான் தெரேசா ஸ்கூல்ல படிக்கிறோம். நல்ல ஸ்கூல். அப்பா போன பிறகு இன்னும் ஃபீஸ் கட்டலை. கம்மி ஃபீஸ்தான். அதைக்கூட எங்களால கட்ட முடியலை.’’

பேத்தி பிரவீணா பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த கற்பகம், திடீரென வெடித்து அழுகிறார். ஆசுவாசப் படுத்திக்கொண்டு,  ‘‘போன நவம்பர் மாசம் 7-ம் தேதி மத்தியானம் வீட்ல இருந்து கிளம்பினான் சார் என் பையன். சரவணன், ராஜி, இன்னும் மூணு பேரோட சேர்த்து அஞ்சு பேரும் காசிமேடு கடற்கரைக்குப் போய் போட் எடுத்துக்கிட்டுப் போயிருக்காங்க. மறுநாள் காலையில மீனவர் சங்கத்துல இருந்து ஆளுங்க வந்து `உங்க பையன் போன போட் நொறுங்கிடுச்சு. ஆளுங்களைத் தேடிக்கிட்டு இருக்கோம்'னு தகவல் சொன்னாங்க.

விழுந்தடிச்சு காசிமேடு மீன்பிடித் துறைமுகம் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடினோம். ‘மூணு பேர் தப்பிச்சிட்டாங்க. உங்க பையனும் ராஜிங்கிறவரையும் காணோம். கடலோரக் காவல் படையோட ஏரோப்ளேன், ஹெலிகாப்டர் வெச்சுத் தேடுறோம்’னு சொன்னவங்க, கொஞ்ச நேரத்துலயே `தேடிட்டோம்'னு சொன்னாங்க. தேடினாங்களா, இல்லையானு ஒண்ணும் தெரியலை. ஸ்டேஷன்ல அழுது புரண்டுக்கிட்டு அங்கேயே கிடந்தோம். ஆனா,  சரியான பதிலே வரலை.

நடுக்கடல்ல நின்னு மீன்பிடிக்கும்போது போட் அங்கேயும் இங்கேயும் ஆடாம இருக்க நங்கூரம் போடுவாங்க. வலையை இழுக்கும்போது வெயிட் பேலன்ஸ் பண்றதுக்குப் பின்னாடி ஒரு பலகை இருக்கும். வலையை இழுக்கும்போது பேய்க் காற்று அடிச்சதுல போட் நொறுங்கிடுச்சாம். அப்ப மூணு பேர் தப்பிச்சிருக்காங்க. அதுல ஒரு பையன், ‘சரவணனைக் காப்பாத்தி வேற போட்ல ஏத்திவிட்டுட்டோம். ராஜி என்ன ஆனார்னு தெரியலை’னு போலீஸ்கிட்ட சொல்லியிருக்கான். அது உண்மையா இல்லையானு தெரியலை. காப்பாத்தியிருந்தா, இத்தனை நாளா எப்படி சார் வராம இருப்பான்? ஆனாலும் அவன் சொன்னதை நம்பி என் மகன் வருவான்னு காத்துக்கிட்டு இருக்கோம்.

போலீஸ் தேடுறதை கைவிட்டுட்டாங்க சார். நாங்க மீனவர் சங்கத்து ஆட்களை அழைச்சுக்கிட்டு கோவளம், பாலவாக்கம் கடற்கரை எல்லாம் தேடினோம். கன்னியாகுமரி வரை தெரிஞ்ச ஆட்களை வெச்சு அவன் போட்டோ போட்ட பிட் நோட்டீஸ் கொடுத்தோம். ‘வாட்ஸ் அப்ல அனுப்பியிருக்கோம். நெட்ல அனுப்பி யிருக்கோம்’னு சொல்றாங்க. ஆனா, இதுவரைக்கும் அவனைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எங்களுக்கு முயற்சி எடுக்கவும் ஆளுங்க யாரும் கிடையாது. முதலமைச்சர் அம்மாதான் மழையில மீன் பிடிக்கும்போது இறந்தவங்களுக்கு நாலு லட்சம் நிவாரணம் தரச்சொன்னாங்க.

அதுக்கு அவங்க, `ஒண்ணு பாடியா கிடைச்சாத்தான் அந்த நாலு லட்சம் கிடைக்கும். இல்ல... மீனவர் சொசைட்டியில நீங்க மெம்பரா இருந்திருந்தா உங்களுக்கு உதவிகள் வந்திருக்கும். ரெண்டுமே இல்லாததால உங்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்க வாய்ப்பு இல்லை'னு சொல்லிட்டாங்கப்பா’’ என்கிறவர்.

‘‘இந்தப் புள்ளைங்களை வெச்சுக்கிட்டு முடிஞ்சவரைக்கும் போராடுவோம். முடியலையா, கடைசியா ஆறு பேரும் மருந்தைக் குடிச்சிட்டு சாகுறதைத் தவிர எங்களுக்கு வேற வழி தெரியலை’’ - நம்மிடம் சுனாமிபோல பொங்கி அழும் கற்பகத்தைத் தேற்றுகிறார் தீபா. இப்படி ஒருவருக்கொருவர் ஆறுதலும் தேறுதலுமாகத்தான் இவர்களுடைய நாட்கள் கழிகின்றன.

“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல!”

வர்களின் கதை இப்படி என்றால், ராஜியின் மனைவி சாந்தி கதை இன்னும் மோசம். இவர்களுக்கு ஆனந்த் என்கிற ஒரு பையன், ஆனந்தி என்கிற ஒரு பெண். ஆனந்துக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. இதற்கு இடையில் ஆனந்த் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் குடிபோதையில் வீட்டிலேயே தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். வீட்டில் அடுத்தடுத்து இரண்டு ஆண்களை இழந்து அநாதைகளாக நிற்கின்றனர் சாந்தியும் அவரது மகள் ஆனந்தியும்.

`` ‘சரவணனாவது தப்பிக்க வாய்ப்பு இருக்கு. ராஜிக்கு வயசாகிடுச்சு. இவர் வர்றதுக்கு சான்ஸே இல்லை’னு ஸ்டேஷன்ல சொல்றாங்க. எங்கே பொணம் கரை ஒதுங்கினாலும் ஓடுவோம்... மீனவர் சங்கத்துல தயாளன், மகேஷ், ரமேஷ்னு மூணு அண்ணனுங்கதான் எங்களுக்காக உதவிகள் பண்ணிட்டு இருக்காங்க. இவங்க மூணு பேர்தான் எங்களை இட்டுக்கினு கோட்டை, தாசில்தார் ஆபீஸ்னு சுத்திட்டு இருக்காங்க. நாங்க முதலமைச்சர் அம்மாவோட ஆர்.கே.நகர் தொகுதிதான். `இப்ப எலெக்‌ஷன்ல யாரையும் கண்டுக்க முடியாது. அம்மா, ஆட்சியில உட்காரட்டும். உங்களை இட்டுனுபோய் நேரடியா கண்டுப்போம்’னு சொன்னாங்க. இப்ப அம்மாவும் வந்துட்டாங்க.

“கடலுக்குப் போன அப்பா இன்னும் வரல!”

என் பொண்ணு இங்கேயே ஒரு சின்ன துணிக்கடையில வேலைக்குப் போறா. காலையில 9 மணிக்குப் போனா நைட்டு 9 மணிக்குத்தான் வருவா. 150 ரூபாய் சம்பளம். வீட்டு வாடகைகூட கட்ட முடியாததால இப்ப அக்கா வீட்ல இருக்கேன். எங்களுக்கு உதவி செய்ய யாரைப் பிடிக்கிறதுனும் தெரியலை’’ என்கிறார் சாந்தி சோகமாக.

ஆறு மாதங்களாக அல்லல்படும் இந்தக் குடும்பங்களுக்கு ஆறுதல்கள் தேவை இல்லை, ஆதாரங்கள் கேட்கும் அரசிடம் இருந்து அனுசரணையான சொற்களும் எளிய உதவிகளும்தான் உடனடி தேவை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு