Published:Updated:

``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும் டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview

``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும் டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview
``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும் டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview

``தொகுதிக்கு வராத அரசியல்வாதியும் டிக்கெட் எடுத்துப் படம் பார்க்கும் ரசிகனும்!" - `எம்.எல்.ஏ' படம் எப்படி? #MLAreview

காதலித்த பெண்ணைத் திருமணம் செய்துதரக் காதலன் கேட்க, பெண்ணுடைய அப்பா பிக்பாஸ் மாதிரி கொடுக்கும் 'எம்.எல்.ஏ ஆகவேண்டும்' என்ற டாஸ்க்கை நிறைவேற்றுகிறாரா ஹீரோ என்பதைப் 'புதுமையான' ஆக்‌ஷன், சென்டிமென்ட் கலந்து சொல்ல முயற்சி செய்திருக்கிறது, `எம்.எல்.ஏ' திரைப்படம். 

தனியார் கம்பெனியில் வேலை செய்து வரும் நடுத்தர வயது இளைஞன், கல்யாண் பாபு  (நந்தாமுரி கல்யாணம்). `உண்மைக் காதல்னா உயிரைக் கொடுக்கக்கூடிய' கல்யாண், தன் குடும்பத்தை எதிர்த்து தங்கை மற்றும் நண்பன் வெண்ணிலா கிஷோரின் காதல் திருமணத்தை நடத்தி வைக்கிறார். எதிர்பாராத விதமாக பல இடங்களில் இந்துவை (காஜல் அகர்வால்) சந்திக்கிறார். இது மேஜிக்கல் பிணைப்பு என இந்துவைப் பின் தொடர்ந்து கல்யாண் காதலிக்க, இந்து கல்யாணின் முதலாளியாக வருகிறார். இதைத் தொடர்ந்து முதலாளி-தொழிலாளி பேதம் கல்யாணைத் தடுத்தாலும் இந்துவைக் காதலிப்பதையே முழுநேர வேலையாகச் செய்கிறார். இந்துவின் கம்பெனிக்கு மார்த்தாலி என்ற லோக்கல் வில்லனால் பிரச்னை வர, அதிலிருந்து கம்பெனியையும் தன் காதலையும் காப்பாற்ற நினைக்கிறான், கல்யாண். இதைத் தொடர்ந்து மார்த்தாலி சிறைக்குச் செல்ல, இந்துவை வேறொரு கும்பல் கடத்த முயற்சி செய்கிறது. அவர்களை யாரெனக் கேட்க, அந்தக் கும்பலிலிருந்து ஒருவன், `இவர் எம்.எல்.ஏ காடப்பாவுக்கு நிச்சயிக்கப்பட்டவர்' என்கிறான். ட்விஸ்ட் வெடிக்க முதல் பாதி முடிகிறது. இந்துவைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றால், எம்.எல்.ஏ ஆகவேண்டும் என்ற நிபந்தனை வர, அதில் வெற்றிபெறுகிறாரா இல்லையா? என்பதை மறுபாதி படம் சொல்கிறது. 

ஹீரோ நந்தாமுரி கல்யாண்ராம் திரையில் எளிதான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், ஸ்டன்ட், காமெடி, பன்ச் வசனங்கள் என எல்லாவற்றிலும் 100 சதவிகிதம் முழுமையாக இல்லாதது போலவே ஃபீல் ஆகிறது. இவரது நடிப்பில் பாலகிருஷ்ணா, ரஜினிகாந்த் என சூப்பர் ஸ்டார்களின் சாயல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்த்துச் செல்கிறது. பல வருடங்களாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வலம் வரும் காஜல் அகர்வால் கவனிக்கக்கூடிய கேரக்டர்களை முயற்சி செய்யாமல், இன்னமும் பாஸ் மார்க் வாங்கும் மாஸ் மசாலா படங்களையே தேர்ந்தெடுத்துக்கொண்டிருப்பது, ஏமாற்றமே! 'எம்.எல்.ஏ' படத்திலும் அப்படியான ஒரு க்ளிஷே கதாபாத்திரம்தான். ஆனால், முடிந்த அளவுக்கு நேர்த்தியாகவே செய்திருக்கிறார், காஜல்.

சில காட்சிகளே வந்தாலும், வக்கீல் பட்டாபி கதாபாத்திரத்தில் பிரம்மானந்தம் காமெடி கச்சிதம். நம்மை அடித்து வெளுக்கும் படத்தில், இரண்டாம் பகுதி முழுவதையும் அரசியல் நையாண்டிகளால் சிரிக்க வைக்கிறார், கல்யாண்ராமின் உதவியாளராக வரும், புருதுவி ராஜ். காதலுக்காகப் பதவியை ராஜினாமா செய்யும் ஏ.எல்.ஏ-வாக வரும் காடப்பா (ரவி கிஷன்), இரண்டாம் பாதியின் பெரும்பகுதியில் வில்லத்தனத்தைக் காட்டி மிரட்டுகிறார்.    

மணிஷர்மா இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை பட்டாசு ரகம். பிரசாத் முரெல்லா ஒளிப்பதிவு பாடல்களுக்கு ஃபாரின், மற்ற காட்சிகளுக்கு கிராமம்... என இருவேறு கலரைக் கச்சிதமாகக் காட்டியிருக்கிறது. திரைக்கதைக்கு உகந்த வேகத்தைத் தர முயற்சி செய்திருக்கிறார், படத்தொகுப்பாளர் பிக்கிணா தம்மிராஜு. 'ஆகாடு', 'தூக்குடு' உள்ளிட்ட படங்களுக்குக் கதாசிரியராக இருந்த உபேந்திரா மாதவ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகியிருக்கிறார். பல சூப்பர்ஹிட் கமர்ஷியல் படங்களுடைய கதாசிரியர் என்ற எதிர்பார்ப்புடன் உள்ளே செல்லும் நமக்கு, அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறாரா... என்றால், இல்லைதான்!

காதலுக்காக சில அரசியல் சவால்களைச் சந்திக்கும், உண்மையான சமூக நிலையைப் பார்த்துப் பொங்கும் கதாநாயகன்... ஒரு பக்கா கமர்ஷியல் ஒன்லைனை வைத்திருந்தும், அடித்துத் துவைத்து சாயம்போன, அனைவரும் எளிதில் யூகிக்கக்கூடிய திரைக்கதையால் வீணடித்திருக்கிறார், இயக்குநர். மசாலா தெலுங்கு படங்களில் சாமான்ய ரசிகர்களுக்காக வைக்கப்படும் இயல்புக்கு மாறான சண்டைக் காட்சிகள் இருக்கும்தான். ஆனால், அந்த இயல்புக்கும் விஞ்சிய சில சண்டைக் காட்சிகளைப் பார்க்கும்போது, குபீர் சிரிப்புதான் வருகிறது. அரசியலும், அரசியல் காட்சிகளும் 'தூள்', 'கலகலப்பு', 'முதல்வன்' எனப் பல தமிழ்ப் படங்களை ஞாபகப்படுத்துவது மற்றொரு குறை.   

அடுத்த கட்டுரைக்கு