Published:Updated:

விகடன்காரங்களா... சில்மிஷம் பிடிச்சவங்களாச்சே !

விகடன்காரங்களா... சில்மிஷம் பிடிச்சவங்களாச்சே !

விகடன்காரங்களா... சில்மிஷம் பிடிச்சவங்களாச்சே !

விகடன்காரங்களா... சில்மிஷம் பிடிச்சவங்களாச்சே !

Published:Updated:
##~##

'காசு இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டால், மாவாட்ட வேண்டி வரும். இல்லேன்னா, வாட்ச்சைக் கழற்றிக் கொடுக்கணும். அதுவும் இல்லேன்னா, சட்டையைக் கழற்றிவைக்க வேண்டியிருக்கும்’ என்று பிறர் சொல்லக் கேள்வி!

 நிஜமாகவே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுக் காசு இல்லாமல் விழிப்பவர்களுக்கு இதுதான் தண்டனையா அல்லது வேறு அனுபவங்களும் இருக்குமா எனப் பரீட்சித்துப் பார்க்கும் ஆசை வந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதற்காக சென்னையின் நான்கு ஹோட்டல்களில் ஏறி இறங்கினோம். நமக்கு ஏற்பட்ட அனுபவங்கள் பின்வருமாறு...

விகடன்காரங்களா... சில்மிஷம் பிடிச்சவங்களாச்சே !

ஹோட்டல் -1

வடபழனியில் உள்ள ஒரு ஹோட்டல்.

நாம் உள்ளே நுழையும்போது கணிசமான கூட்டம்.

நெஞ்சு டிரம்ஸ் வாசிக்க, கட்டுப்படுத்திக்கொண்டு காலியாக இருந்த ஒரு ஸீட்டில் உட்கார்ந்தோம். இரண்டு நிமிடங்கள் கழித்து எதிரில் ஆஜரானார் சர்வர்.

''என்ன சார் வேணும்..?''

''வெங்காய தோசை.''

சற்று நேர அவகாசத்தில் தோசை வர... தயக்கத்துடன் சாப்பிட ஆரம்பித்து முடித்த பிறகு,

''வேறென்ன சார் வேணும்..?''

- மீண்டும் சர்வர்.

''மீண்டும் ஒரு வெங்காய தோசை...''

- நாம்.

வந்தது. தின்று முடித்ததும் 'இதுதான் லிமிட்’ என்று தோன்றியது.

''அடுத்து என்ன சார் வேணும்..?

''பில்லுக்குப் பணம்!''

''ஹ... ஜோக்கா! ஏற்கெனவே படிச்சாச்சு..'' என்று ஜோவியலாகச் சொல்லிக்கொண்டு போன சர்வர் பில்லுடன் வந்தார்.

ஆறு ரூபாய்.

''சர்வர்... வந்து...'' - நாம்.

''என்ன வேணுங்க..?''

''இல்லே... கையில் காசில்லே...'' முகமெல்லாம் வேர்த்துவிட்டது நமக்கு, சொல்லி முடிப்பதற்குள்.

''இன்னாது... காசில்லையா?! அப்புறம் எப்படிய்யா சாப்பிட உட்கார்ந்தே..?'' - ஏக வசனத்தில் இறங்கினார் சர்வர்.

''வந்து... ஏதோ கவனக்குறைவா...''

''வந்தாவது போயாவது... இப்பத்தான்யா டூட்டிக்கு வந்தேன். நான் அட்டெண்ட் பண்ணின முதல் ஆளு... நேரமே சரியில்லே... வாய்யா கேஷியர்கிட்ட...''

ஹோட்டல் மொத்தமும் நம்மைப் பார்த்தது. எடுத்தவுடனே ''உனக்கெதுக்குய்யா பேன்ட்டும் சட்டையும்..?'' என்று ஆரம்பித்த கேஷியர்,

''சரி... சரி... வாட்ச்சைக் கழட்டு'' என்றார்.

''வாட்ச் இல்லீங்க...''

''சரி, சட்டையைக் கழட்டு...''

சரியாப்போச்சு... கேள்விப்பட்டது சரியாப்போச்சு. இதற்கு மேல் தாமதித்தால் சட்டையில்லா மேனியனாகிவிடுவோம் என்ற நிலை. அசடு வழிய நம்மை இன்னார் என்று அடையாளம் சொல்லி, பணத்தை எடுத்துக் கொடுத்தோம்.

இப்போது கேஷியர், சர்வர் முகங்களில் அசடு!

ஹோட்டல் - 2

பட்டினப்பாக்கம், சாந்தோம் ஹைரோட்டில்  ஒரு ஹோட்டல்.

எதற்கும் இருக்கட்டும் என்று பழைய கதர்ச்சட்டையைப் போட்டுக்கொண்டு போயிருந்தோம்.

நுழையும்போதே, கல்லாவில் உட்கார்ந்திருந்த முதலாளியைப் பார்த்தபோது, அவர் முகத்தில் தெரிந்த சாத்வீகம் ஒரு நம்பிக்கையைக் கொடுத்த போதிலும் முன் அனுபவம் உள்ளுக்குள் ஓர் அச்சத்தை ஓடவிட்டது.

''என்ன சார் வேணும்..?'' - சிவந்த நிறத்தில் சர்வர்.

''என்ன இருக்கு?''

''இட்லி, வடை, பூரி மசாலா, பொங்கல், ஊத்தப்பம், சாதா, ஸ்பெஷல் சாதா, போண்டா, கீரை வடை...''

''ஒரு ஸ்பெஷல் சாதா..!''

''ஒரு ஸ்பெஷல் சாதா...'' என்று சத்தமாகச் சொல்லிக்கொண்டே போனவர், கொஞ்ச நேரம் கழித்துக் கொண்டுவந்து வைத்தார். பிறகு ஒரு காபி.

பில் வந்தது.

தயங்கினோம், தடுமாறினோம்.

பேசுவதற்கு வாய் திறக்கு முன், ''என்ன சார்! பணத்தைக் காணோமா..?'' - சர்வர்.

நமக்குள் ஒரு சின்ன திடுக்கிடல்!

''ஆமாம். வந்து...''

''சரி, தவறுவது சகஜம், நீங்க பாட்டுக்குப் போங்க... முதலாளிகிட்ட சொல்லிக்கிறேன்...’ - கொடுத்த பில்லைத் திரும்ப வாங்கிக்கொண்டார்.

சும்மா வெளியேற மனசாட்சி இடம் தர வில்லை. முதலாளியிடம் போய் 'இல்லாமையை ஒப்புக்’கொண்டபோது,

''சரி! இந்தப் பக்கமா வர்றப்போ கொண்டாந்து கொடுங்க...'' என்று வேலையில் மூழ்கிவிட்டார். பணத்தைக் கொடுத்தோம். விளக்கியவுடன் வியப்பில் மூழ்கினார்கள்!

ஹோட்டல் - 3

மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குப் போனோம். உட்கார்ந்தோம். ஒரு பொங்கல், காபி சாப்பிட்டோம். ஏப்பம் வந்தது. பின்னாலேயே பில் வந்தது!

பர்ஸைத் தொலைத்துவிட்டதாக சர்வரிடம் பாவனை செய்தோம். கேஷியரிடம் கூட்டிப்போனார்.

''பர்ஸைத் தொலைச்சுட்டாராம்... பாவம்..!'' - சிபாரிசு செய்தார். கேஷியர் முறைத்துப் பார்த்துவிட்டுச் சும்மாயிருக்க...

''சரி... என் சம்பளத்துல பிடிச்சுக்குங்க'' என்று கேஷியரிடம் உக்கிரமாகச் சொல்லிவிட்டு, வேலையைக் கவனிக்கப் போய்விட்டார் அந்த சர்வர். எவ்வளவு தாராள மனசு?!

'நட்ராஜ்’ என்ற அந்த சர்வருக்கு, நன்றி தெரிவித்துப் பணம் கொடுத்தோம்!

ஹோட்டல் - 4

எம்.ஜி.ஆர். நகரில் ஒரு ஹோட்டல்...

உள்ளே நுழையும்போதே ஒரு 'டயலாக்’ காதில் விழுந்தது. ''ஆனாலும் இந்த ஏரியாக்காரங்களுக்குக் கை நீளம். எடுத்ததுமே அடிதான்...''

எச்சில் கூட்டி விழுங்கிக்கொண்டு உள்ளே போனோம். பெரிய மீசை, கிருதாவுடன் புஷ்டியாகக் கல்லாவில் உட்கார்ந்திருப்பவரைப் பார்த்ததும் ஓர் உதறல்தான். 'கூடவே... பார்த்துக் கலாம்’ என்று தைரியம்!

சர்வர் வந்தார்.

''நாலு இட்லி.. இட்லியை வெச்சுக்கத் தட்டு... கொஞ்சம் சட்னி. சட்னியை வெச்சுக்கக் கிண்ணம்... குடிக்கக் கொஞ்சம் தண்ணீர். தண்ணீரை வெச்சுக்க டம்ளர்...'' என்று சொல்லி முடிப்பதற்குள், அடுத்தடுத்த டேபிள்களில் இருந்து பார்வைகள் திரும்பின.

பொறுமையாக ரூபாய் 9.30-க்குப் சாப்பிட்டு முடித்துவிட்டு, சர்வரிடம் காதைக் கடித்தோம்.

''காசு இல்லீங்க... தெரியாம வீட்ல வெச்சுட்டு வந்துட்டேன்...''

''வீடு எங்கே..?''

''ரொம்ப தூரம்..!''

''மொதலாளி... சாப்ட்டுட்டுக் காசு இல்லேங்கறான்...'' - சர்வர் போட்ட கத்தலில் சகலமும் அதிர்ந்தது.

''எத்தனை பேர்டா இப்படிக் கிளம்பியிருக்கீங்க? நல்லாத் தின்னுப்புட்டுக் கிண்டலா பண்றீங்க... எலே, உள்ளே இழுத்துக்கிட்டுப் போய்ச் சாத்துடா... ரெண்டு பேரை இப்படிப் பண்ணாத்தான், ஏமாத்தித் தின்ன வர்றவனுங்களுக்குப் புத்தி வரும்.''

முதலாளி உறும, சர்வர் கொத்தாக என் சட்டையைப் பிடித்து இழுத்தார்.

சக 'சாப்பாட்டாளர்’கள் கமென்ட்ஸ் கொடுத்தனர்:

''பார்க்கப் படிச்சவனாத் தெரியறான்... காசில்லையாம்ல...''

''டேபிளைத் துடைக்கவிடுங்கப்பா...''

''மாவரைக்க விடுங்க... அப்பதான் வழி பொறக்கும்(!)...''

''பேசாம போலீஸ்ல கொண்டுபோய் விடுங்க...''

இவர்களில் ஒருவர்கூட உதவ முன்வராததில் நொந்துபோனோம்.

இனியும் தாமதித்தால் விபரீதம் ஏற்படலாம் என்று தோன்றியதில், முதலாளியிடம் ஓடோடிப் போய் 'குட்டை’ உடைத்தோம்.

''விகடன்காரங்களா? சில்மிஷம் பிடிச்சவங் களாச்சே? என் ஹோட்டல்தானா கிடைச்சது..? தயவுசெய்து ஊரைப் போட்டாலும் ஹோட்டல் பேரைப் போட்டுடாதீங்க... இப்பதான் ஆரம் பிச்சேன். வெவகாரமாயிடப் போகுது. டேய், யார்றா அங்க... சாருக்கு ஒரு காபி..!'' என்றவரைத் தடுத்துவிட்டு, ஹோட்டலில் டேபிள் க்ளீன் செய்தவரைக் கையோடு அழைத்து வந்து பணத்தைக் கொடுத்து அனுப்பிவைத்தோம்!

- படுதலம் சுகுமாரன்