Published:Updated:

நம்பிக்கை முயற்சிகள்!

நம்பிக்கை முயற்சிகள்!

பிரீமியம் ஸ்டோரி
நம்பிக்கை முயற்சிகள்!

டந்த ஆண்டில் பெய்த வடகிழக்குப் பருவமழை, சென்னையிலும் மாநிலத்தின் இதர மாவட்டங்கள் சிலவற்றிலும் வரலாறு காணாத பேரழிவை ஏற்படுத்தியது. இந்த ஆண்டும் அத்தகைய பாதிப்பு வரலாம் என மக்கள் அச்சம் அடைந்திருக்கும் நிலையில், தமிழக அரசு எடுத்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மக்களுக்கு நம்பிக்கை அளிக்கத் தொடங்கியுள்ளன.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சி எடுத்துவரும் வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகள் அண்மையில் வெளியாயின. வெள்ளப் பாதிப்பு கண்காணிப்புக்கான நிரந்தரக் கட்டுப்பாட்டு அறை, ‘ஹெல்ப் லைன்’ எண் உருவாக்கப்பட்டிருப்பதுடன், தேங்கும் மழைநீரை அகற்றுவதற்கு 600 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. மரம் விழும் இடங்கள், மழை நீர் தேங்கும் இடங்களை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்வதற்காக இரவு நேரக் கண்காணிப்பில் பிரத்யேக ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்துக்கும் 10 முதல் 15 மரம் வெட்டும் இயந்திரங்கள், 30 ஜே.சி.பி இயந்திரங்கள், 60 படகுகள், வெள்ளநீரை அதிவேகமாக வடியச்செய்யும் ‘சூப்பர் சக்கர்’ இயந்திரங்கள்... என எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நம்பிக்கை அளிப்பவையாக இருக்கின்றன. 

வெள்ளம் வரும்போது உடனடியாக அந்த நேரத்தில் எதிர்கொள்வதற்கான ஆற்றல் என்ற அளவில், இந்த முன் தயாரிப்புகள் நிச்சயம் பலன் தரும். அதேநேரம் நீர் வடிகால்களை மீட்டெடுக்கும் பணிகளில் மிக முக்கியமாக அரசு கவனம் செலுத்த வேண்டும். கடந்த ஆண்டு வெள்ளப் பாதிப்பைத் தொடர்ந்து பல்வேறு தனிநபர்களும் தன்னார்வக் குழுக்களும் இத்தகைய சீரமைப்புப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். அவற்றில் சில தனிநபர்களும் அமைப்புகளும் இப்போதும் அக்கறையுடன் தீர்வு காண உழைத்துவருகின்றனர். அரசு, தனது செயல்பாடுகளில் இத்தகைய மாற்றம் தேடும் சக்திகளையும் இணைத்துக்கொள்ள வேண்டும். வெள்ளப் பாதிப்பின்போது தன்னெழுச்சியுடன் திரண்டு மீட்புப் பணிகளில் ஈடுபட்ட மக்களை, நீர்வழிப் பாதைகள் மீட்பிலும் பங்கெடுக்குமாறு அரசு அழைப்புவிடுக்க வேண்டும். மக்கள் பங்கேற்பை உறுதிசெய்தால், இந்தச் செயல் நிகழும் வேகத்தை பன்மடங்கு துரிதப்படுத்த முடியும்.

பொதுவாக தமிழ்நாட்டுக்கு, தென்மேற்குப் பருவமழையைவிட வடகிழக்குப் பருவமழையால்தான் அதிக மழை கிடைக்கும். கடந்த ஆண்டு வெள்ளப் பாதிப்பை ஏற்படுத்தியதும் வடகிழக்குப் பருவமழைதான். ஆனால், `பருவநிலை மாற்றம் காரணமாக, இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழையின் அளவும் வழக்கத்தைவிடக் கூடுதலாக இருக்கும்' என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. எனவே, நாம் இரண்டு மடங்கு தயார் நிலையில் இருக்கவேண்டியது அவசியம். அரசின் முன்னெச்சரிக்கை செயல்பாடுகள் ஒருபக்கம் இருக்க... பொதுமக்களும் தங்களின் பொறுப்பு உணர்ந்து செயல்படவேண்டிய நேரம் இது. ஆக்கிரமிப்புக் கட்டுமானங்களைத் தவிர்ப்பதும் நீர்நிலைகளைப் பாதுகாப்பதும் மக்களின் முதன்மையான பங்களிப்பு.

இயற்கையின் பெருங்கருணையில் இந்த பூமி வாழ்கிறது; பூமியின் அரவணைப்பில் நாம் வாழ்கிறோம். எனவே, நாம் இயற்கையின் அங்கம் என்பதை உணர்ந்து, அதைப் பாழ்படுத்தாமல் இயற்கையுடன் இணைந்து வாழ்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு