Election bannerElection banner
Published:Updated:

’அன்னாயும் ரசூலும்'... இது எழுவதும் விழுவதுமான காதலின் அதிசயம்! - மலையாள கிளாசிக் பகுதி 3

’அன்னாயும் ரசூலும்'... இது எழுவதும் விழுவதுமான காதலின் அதிசயம்! - மலையாள கிளாசிக் பகுதி 3
’அன்னாயும் ரசூலும்'... இது எழுவதும் விழுவதுமான காதலின் அதிசயம்! - மலையாள கிளாசிக் பகுதி 3

’அன்னாயும் ரசூலும்'... இது எழுவதும் விழுவதுமான காதலின் அதிசயம்! - மலையாள கிளாசிக் பகுதி 3

மலையாளப் படங்களின் மாற்றம் பற்றி சொல்ல வந்தாலும் அதை புள்ளி விவரங்களுடன் ஒரு வரலாறு போல சொல்ல விரும்ப மாட்டேன். கலையை அடுக்கி வைத்து விளக்கக் கூடாது. எனவே 2010 க்கு அப்புறம் வந்த படங்களை சுவாரஸியமாய் அறியும் பொருட்டு வரிசை கலைத்து அங்கேயும் இங்கேயுமாய் சொல்ல முடியும். ஏனென்றால் இப்போது வந்த ’தொண்டி முதலும் திருக்சாட்க்ஷியும்’ ஏன் அத்தனை அற்புதமாயிருந்தது என்கிற கேள்விக்கு பதில் சொல்லும் வண்ணம் சில இயக்குநர்களின் படங்களை முன்னமே சொல்ல வேண்டியிருக்கிறது. அதில் ராஜிவ் ரவி முக்கியமானவர். அவர் இயக்கிய ’அன்னாயும் ரசூலும் புழக்கத்தில் இருந்த சில அடிப்படைகளை தகர்த்த படம். சொல்லப் போனால் சினிமாவின் எல்லைகளை விஸ்தரித்த படம்.

ஆஷ்லி என்கிற ஒருவன் தான் பின்னணிக் குரலில் கதை சொல்கிறான். 

விடுமுறையில் வந்து ரசூலுக்கு நண்பனாகிற அவன் சொல்லுவது ரசூலைப் பற்றியே. அவன் காதலித்த அன்னாவைப் பற்றியும். ஒரு காதல் கதை என்று சொல்லி விட முடியுமா. ராஜிவ் ரவி அப்படி தன்னைக் குறுக்கிக் கொள்கிறவரில்லை. இதில் எழுவதும் விழுவதுமான வாழ்க்கை இருக்கிறது. மனிதர்களின் வறட்டு பிடிவாதங்கள் மனிதர்களையே பழிவாங்குகிற அல்லாட்டத்தினைப் பற்றின விமர்சனம் இருக்கிறது. சொல்லப்படுவது ஒரு காதல் கதையே தான் என்றே எடுத்துக் கொண்டாலும் அந்தக் காதலில் மூச்சு திணறிப் புரள வேண்டியிருப்பதன் காரணம் மனிதன் தன்னை தேக்கி வைத்து நாறுவதல்லாமல் ஒருபோதும் தன்னை புதுப்பித்துக் கொள்ளாதது தான் என்பது வெளிப்படை.

ரசூல் காசுக்காக மற்றும் நண்பர்களுக்காக சில கோணலான தவறுகளில் பங்கு பெறுகிறான். கார் ஓட்டப் போகிறான். அப்படி ஒரு தருணத்தில் அன்னாவை ஒரு கணம் பார்க்க முடிந்து, ஆஷ்லி இருக்கிற ஊரில் திருவிழாவிலும், அப்புறம் ஆஷ்லியின் எதிர் வீட்டிலுமாய் அவளை முழுமையாய் அறிந்து காதல் கொண்டு அவளை பின்தொடர்கிறான். அவளும் கவனிக்கிறாள். கண்களாலே பேசிக் கொள்ளும் காதல் கனியத் துவங்கி அது தித்திப்பாகிற வரையில் நகர்ந்து வரும் திரைக்கதையில் ஒரு இடறல் இல்லை. திணிக்கப்பட்ட  கட்டுக்கதை இல்லை. அசல் பையன்கள். பெண்கள். குழந்தைகள். அந்தக் காதல் உடனடியாய் பற்றுவதில்லை.

அவள் அவன் தனது விருப்பத்தை சொன்ன பிறகு பதில் சொல்லாமல் நடந்தாலும் அவளுக்குள் ஆசைகள் திரள்வதை காட்சியாலும் இசையாலும் அதை ஒரு துயராகவே சொல்லுகிறார்கள். ஆமாம், பெண்ணை சூழ்ந்திருப்பது ஒரு குடும்பம் மட்டுமில்லை. ஒரு கலாசாரம். பகடையாய் உருட்டப்படவே அவள் ஜீவன் கொண்டிருப்பாள். பின்னர், அன்னா சொல்லுவதெல்லாம் ஒன்றுதான், இது நடக்காது. எனக்கு பயமாய் இருக்கிறது.

ரசூல் முசல்மானாகவும் , அன்னா கிறிஸ்தியாயினியாகவும் பிறந்து விட்டார்களில்லையா.    

திருவிழா அடிதடியில் முன்னே நின்ற ஒரு பையனை ரசூல் தாக்க வேண்டி வருகிறது. என்ன செய்வது? அவன் துரதிர்ஷ்ட வசமாய் அன்னாவின் தம்பி. எனினும் அன்னாவை சமாதானப்படுத்த ரசூலால் முடிகிறது. இருவரும் நெருக்கம் கொள்ள போகிற நேரத்தில் தம்பியும் அவனது நண்பர்களுமாய் ரசூலை தாக்குகின்றனர். வேறு வழியின்றி ரசூல் தனது தந்தை வீட்டுக்கு செல்ல, அன்னாவிற்கு திருமண நிச்சயமாகிறது. கலங்கிய குட்டையில் மீன் பிடிக்கிற கதை தான். ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தை பெற்று விவாகரத்தான பிராஞ்சி, அன்னாவை மணமுடிக்கப் போகிறான். ரசூல் நடைப்பிணமாக பிழைப்பை பார்த்தாலும் அவனுக்குள் இருக்கிற அன்னாவை தண்ணீரில் இறங்கி கண்களைத் திறந்து தனது மனக்கண்ணில் பார்த்தவாறு தினங்களை நகர்த்துகிறான். நண்பர்கள் அவன் சந்தித்து அன்னாவிற்கு நடக்கப் போகிற திருமணத்தைப் பற்றி சொல்லுகிறார்கள். சும்மா சொங்கிக் கொண்டிராமல் விருப்பப்பட்ட பெண்ணை அழைத்து வரத் தெரியாதா என்று முறுக்குகிறார் அவனுடைய அப்பா. அப்படித்தான் என்று கைதட்டுகிற மாதிரி,  பிராஞ்சியின் கண் முன்னாலேயே அவளைக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறான் ரசூல்.

ஆனால் இருவருக்குமிடையே மதங்கள் இருக்கின்றன. ஒருவர் மற்றவரை மதம் மாற சொல்லும் அழுத்தங்களுக்கு தங்களை இறக்கிக் கொள்ளாமல் ஆத்ம பலத்தோடு இருந்தும் கூட, அது அவர்களை முற்றுகையிடுகிறது. அங்கிருந்தும் ஓடி ஒரு இடத்தில் குடியமர்கிறார்கள். உறவு கொள்கிறார்கள். எல்லோரும் வாழ்கிற சகஜமான ஒரு வாழ்க்கை சந்தோஷமாய் துவங்குகிறது. பொதுவாகவே சிரிப்பை அறியாத அன்னாவின் புன்முறுவலை பார்க்கத் துவங்குகிறோம்.

பதைக்க செய்யும் காட்சிகளை முடித்துக் கொண்டு ஒரு பார்வையாளனை ஆசுவாசம் செய்யும் தருணங்களை  கொண்டு வர ஒரு இயக்குநருக்கு சினிமாவின் சக்தி தெரிய வேண்டும். அது இந்தப் படத்தில் இருக்கிறது. அவர்கள் இருவருடைய பந்தத்துக்கு நாம் பரப்பரக்கிறோம். ஆனால் அடுத்த நிமிடத்தை கூட தனது வசம் வைத்திருக்க முடியாத மனிதனின் கதைகளே விசித்திரமல்லவா. 

இரண்டு வகை படங்கள் உண்டு. அடி முதல் முடி வரை நானே சொல்லி முடிப்பேன் என்கிற பிடிவாதமான படங்கள். நீங்களும் இதில் பங்கு பெறுங்கள் என்று நம்முடன் கைகோத்து நம்முடன் சேர்ந்து பயணிக்கும் படங்கள். முதல் தரப்பு நமக்கு அகம்பாவத்துடன் போதிக்கிறது. இரண்டாம் தரப்பு நல்ல வாய்ப்பிருந்தால் வாழ்வை புரிந்து கொள்ள உதவுகிறது. அப்படி இந்தப் படத்தில் சொல்லி விட்ட சம்பவங்களுக்கு அப்புறமாக நாம் விளங்கிக் கொள்கிற எத்தனையோ காரியங்கள் இருக்கின்றன. அதில் முக்கியமாய் காதலர்கள் இருவருடைய மனதையும் நாம் துல்லியமாய் அறிந்து கொண்டு விடுகிறோம். ஒரு உயிர் இன்னொரு உயிரை பற்றிக் கொண்டிருக்கிற இறுதி நிலை அது.

எப்போதோ தனது நண்பர்களுடன் விபரீதமான காரியங்களுக்கு கார் ஓட்டப் போனது, இப்போது ரசூலின் தலையில் வந்து பிரச்னையாய் விழுகிறது.

நண்பனை கொன்று விட்டார்கள்.

போலீசார் ரசூலை அழைத்து செல்கிறார்கள்.

அன்னாவையும் குடும்பத்தார்  விட்டு வைக்கவில்லை. அள்ளி செல்கிறார்கள். மீண்டும் பிராஞ்சி திருமணத்துக்கு முன்வந்து அவளை தனது மனைவியாக்கிக் கொள்கிறான். எல்லா சடங்குகளுக்கும் அவள் நின்று கொடுக்கிறாள். எந்த அழிச்சாட்டியத்துக்கும் இறங்கவில்லை. நிறைந்த மௌனம் காக்கிறாள். அவளது முகத்தில் ஓரத்தில் எங்கோ சிறிய புன்னகை கூட இருக்கிறது. அது ஒன்றும் புதியதல்ல, பெரும்பான்மையான திருமணங்களில் நாம் பார்க்கக் கூடிய மணப்பெண்களின் முகம் தான்.

ரசூல் போலீசாரால் கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறான்.

திக்கோ திசையோ அரவணைப்போ இல்லாத சூழலில் தான் தன்னுடைய அன்னாவை நிர்க்கதியாக நிற்க வைத்து விட்டு வந்து விட்டோம் என்பது தானே அலைக்கழித்துக் கொண்டிருக்கும்?

தப்பிக்கிறான்.

ஓடி வருகிறான்.

வீட்டின் அருகே கூட்டம் கூடியிருக்கிறது.

சேது படம் போல தான். எவ்வளவு எளிமை எல்லாம்? அன்னா தன்னை முடித்துக் கொண்டு விட்டாள்.  

சந்தோஷ் எச்சிகானம் பெரிய எழுத்தாளர். அவர் தான் இந்தப் படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருந்தார். அதை பற்றி சொல்லுவது என்றால் அன்னா மற்றும் ரசூல் அல்லாமல் எத்தனை கதாபாத்திரங்கள். அவைகளின் முகங்கள் நம்மை வியப்பூட்டக் கூடியவை. அவர்களின் வாழ்வுக் கோலங்கள் நம்மை நெகிழ்த்தக் கூடியவை. எந்த பொய்யையும் இட்டு நிரப்பாத, அதே நேரம் உயர எழும்புகிற புனைவுக்கு மந்தம் சேர்த்து விடாத அற்புதமான எழுத்து. ஒரு திரைக்கதை எழுதும் ஆளாய் நான் ஒவ்வொரு சட்டகத்திலும் பிரமித்திருந்தேன் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டும்.

மது நீலகண்டனின் ஒளிப்பதிவு. அது குளுமையாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக அமைய முடியாது. சீற்றமும் காட்டமும் சிறு அழகுகளின் தொகுப்பாகவும் அவரது வேலை விரிவடைந்தவாறு இருக்கும். அதில் சர்வ நேரமும்  தெறிக்கிற சவாலை பற்றி ஒரு முழுக் கட்டுரை தான் எழுத வேண்டும். அவரது பணியை முழுமை செய்கிறார் எடிட்டர் அஜித் குமார்.

ராஜிவ் ரவியை பற்றி என்ன சொல்லுவது?

அவரை ஒரு மலையாள இயக்குநர் என்பது பொருந்தி வராது.
அவரது வெளி உலகமயமானது. அவரது திரைமொழியின் சகஜம் பற்றி சினிமா தெரிந்தவர்கள் வியப்பார்கள். அசலான உணர்வுகளை சினிமாவாக மாற்றும் போது படத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் படைப்பாளியாகவே இருக்கிறவர். அவரது மனப்போக்கு, திரையில் ஆக்ரோஷமான ஒரு நாவல் எழுதுவது போல தான். மற்றும் மக்களின் பக்கத்தில் நிற்க விரும்புகிறவர் என்பதை தனியாய் குறிப்பிட்டு சொல்ல வேண்டும். ராஜிவ் ரவி ஒரு சூறாவளி போல இறங்கி மலையாள சினிமாவில் உண்டாக்கின தாக்கத்தை புறக்கணித்து விட்டு எவரும் அடுத்த அடியை எடுத்து வைக்க முடியாது. தற்காலத்தில் படங்கள் வேறு முகம் கொண்டதற்கு அவர் ஒரு பெரிய காரணம்.

ரசூலாய் பகத் பாசில். அவரை காட்டும் முதல் காட்சியில் போலீசாரோடு நடந்து போகிற அந்த டாப் ஆங்கிள் ஷாட் ஓன்று போதும். அப்புறம்,  ஆண்ட்ரியா சிரிக்க முடியாத துயர் முகத்துடன் கண்களால் தனது ஜீவனை வெளிப்படுத்துவது அறியலாம். என்ன ஒரு நடிகை என்று துணுக்குறாமல் இருக்க முடியாது. இன்னும் பலரும் படம் பார்க்கிறவர்களின் ஏக்கத்தை தூண்டுவதை அறிய முடியும். ஒரே ஒரு முறை வசனம் சொல்லி விட்டுப் போகிறவர்கள் உட்பட.

படத்தின் பாடல்கள் இசை எல்லாம் புத்தம் புதியது.

படத்தின் முடிவை சொல்லவில்லையே?

ரசூல் தனது கூடுகளை உடைத்துக் கொண்டு ஊர் ஊராய் சுற்றிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு உந்துதல் உண்டாகும் நேரத்தில் அவனால் தண்ணீரில் இறங்க முடியும். கண்களை திறக்க முடியும். அவன் தனது உயிராய் அணைந்திருக்கிற அன்னாவை பார்க்க முடியும். எப்போதும் பார்க்க முடியும். அவனது பயணம் தொடர்ந்தவாறிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு