Published:Updated:

``ஹர்பஜனின் தமிழ் குரு நான்தான்!” - தமிழக இளைஞர் சின்னாளப்பட்டி சரவணன்

``ஹர்பஜனின் தமிழ் குரு நான்தான்!” - தமிழக இளைஞர் சின்னாளப்பட்டி சரவணன்
``ஹர்பஜனின் தமிழ் குரு நான்தான்!” - தமிழக இளைஞர் சின்னாளப்பட்டி சரவணன்

``ஹர்பஜனின் தமிழ் குரு நான்தான்!” - தமிழக இளைஞர் சின்னாளப்பட்டி சரவணன்

`நான் வந்துட்டேன்னு சொல்லு... தமிழின் அன்பு உடன்பிறப்பு எல்லாம் எப்புடி இருக்கீக மக்கா? உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல மஞ்ச ஜெர்சியில, `வீரமா', காது சவ்வு கிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL-க்காக விளாட(ச)போறத நினைச்சாலே `மெர்சலாகுது' தாய் உள்ளம்கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!' ஐ.பி.எல்-லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ள ஹர்பஜன் சிங், மார்ச் 22-ம் தேதி சென்னை வந்ததும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ட்வீட் இது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை மட்டுமன்றி, தமிழக மக்களையும் ஹர்பஜனின் இந்த ட்வீட் கவனம் ஈர்த்தது. கடந்த தைப்பொங்கல் அன்று முதன்முறையாக தமிழில் பொங்கல் வாழ்த்தை ட்விட்டரில் பதிவிட்டார் ஹர்பஜன் சிங். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பஜன் சிங் தமிழில் ட்வீட் போட்டது, சமூக வலைதளம் எங்கும் பரபரப்பாகியது. இந்தத் தமிழ் ட்வீட்களுக்கெல்லாம் பின்னால் இருக்கும் திண்டுக்கல் சின்னாளப்பட்டியைச் சேர்ந்த சரவணனிடம் பேசினோம். தற்போது துபாயில் இன்ஜினீயராகப் பணிபுரிந்துவருகிறார் சரவணன்.

``கொல்கத்தா ஈடன் கார்டன் கிரவுண்ட்ல 2001-ம் வருஷம் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் நடந்த   டெஸ்ட் மேட்சை எந்த கிரிக்கெட் ரசிகராலயும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அந்த டெஸ்ட் மேட்சுல ஹர்பஜன் சிங் ஹாட்ரிக் விக்கெட் எடுத்தார். அதுவரைக்கும் வேற எந்த இந்திய பெளலரும் டெஸ்ட் மேட்ச்ல `ஹாட்ரிக்' விக்கெட் எடுத்ததில்லை. ஹர்பஜன் சிங்தான் முதல் தடவையா அந்தச் சாதனையைச் செஞ்சாரு. நான் ஹர்பஜன் சிங்கோட தீவிரமான ரசிகரானது அந்த மேட்ச்ல இருந்துதான்" ஹர்பஜன் சிங்கின் தீவிர ரசிகராக இருந்து, தற்போது ஹர்பஜன் சிங் ட்விட்டரில் பதிவிடும் தமிழ்க் கீச்சுக்களுக்குச் சொந்தக்காரராக மாறியிருக்கும் சரவணனின் குரலில் அவ்வளவு பெருமிதம். 

தமிழ் ட்வீட்கள் மட்டுமல்லாமல், சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் நினைவாக தற்போது ஹர்பஜன் சிங் பாடி வெளியிட்டுள்ள `ஏக் சுனேகா...' என்ற ஆல்பத்துக்கான தமிழ் சப்-டைட்டிலையும் சரவணன்தான் அமைத்துக் கொடுத்துள்ளார்.

``இந்திரா-பாண்டியன்தான் என் பெற்றோர். சின்னாளப்பட்டியில இருக்காங்க. அதான் என் ஊர். படிச்சது மெக்கானிக்கல்

இன்ஜினீயரிங். ஸ்கூல் படிக்கிறப்ப இருந்தே பேச்சுப்போட்டிகளுக்குப் போவேன். அப்படித்தான் தமிழ் ஆர்வம் வந்து, ட்விட்டர்ல தமிழ்ல ட்வீட் போட ஆரம்பிச்சேன். திண்டுக்கல்ல ரஞ்சிக்கோப்பை மேட்ச் நடந்தது. அப்போ பஞ்சாப் மேட்ச் நடந்தப்ப, அதைப் பார்க்கிறதுக்காக நான் போயிருந்தேன். அந்த மேட்சுல பஞ்சாப் டீம் கேப்டனா  ஹர்பஜன் விளையாடினார். அப்ப அவரை நேர்ல சந்திச்சு, அவர் விளையாடிய மேட்சைப் பற்றி அவர்கிட்ட பேசினேன். அதுக்கப்புறம் அவரை ஹோட்டல்ல போயி சந்திச்சப்ப கிரிக்கெட் பற்றிப் பேசினோம். அப்புறம் ட்விட்டர்ல பேச ஆரம்பிச்சவுடனேதான் தமிழ்ல ஹர்பஜன் சிங்க ட்வீட்  பண்ணவைக்கலாம்னு யோசனை.

அவர்கிட்ட `எங்க தமிழ்நாட்டு மக்களுக்காக பொங்கல் வாழ்த்து சொல்ல முடியுமா?'னு கேட்டேன். உடனே `சரி'னு சொல்லிட்டார். அவருக்குத் தமிழ் ட்வீட்டும், இங்கிலீஷ்ல அதுக்கான அர்த்தத்தையும் அனுப்பினேன். உடனே அதை ட்வீட்டா போட்டார். அதுக்கு அப்புறம் சென்னை சூப்பர் கிங்ஸ்ல விளையாடுறதுக்காக செலெக்ட் ஆனவுடனே, `மெர்சல்'  படப் பாடலை வெச்சு ட்வீட் பண்ணலாம்னு ஐடியா. அதைவெச்சுதான் எங்க மண்ணு, உன்ன வைக்கும் சிங்கமுன்னு...னு ட்வீட்  போடவெச்சோம். அதுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சது. இப்ப சமீபத்துல பகத்சிங் நினைவு நாள் அப்போ வெளியான பாடலுக்கு, தமிழ்ல ட்வீட் பதிவிட்டார். இப்படி நிறைய தமிழ் ட்வீட் தொடர்ந்து  போடுறாரு. நமக்குப் பிடிச்ச கிரிக்கெட் பிளேயர் நம்ம தாய்மொழில ட்வீட் போடுறது, மனசுக்குச் சந்தோஷமா இருக்கு. அதுக்கு நான் உதவியா இருக்கிறது டபுள் மடங்கு சந்தோஷம்'' எனச் சிரிக்கிறார் சரவணன். 

தமிழ்த் தொண்டு தொடர்க!

அடுத்த கட்டுரைக்கு