Published:Updated:

கிராமங்களில் மின்வெட்டு அதிகரிக்கப்படாது: அமைச்சர்

சென்னை, பிப்.24,2011

கிராமங்களில் நிலவும் 2 மணி நேர மின்வெட்டு அதிகப்படுத்தப்படாது என்றும், விவசாயத்துக்கு வழங்கப்படும் மின் விநியோகம் குறைக்கப்படவில்லை என்று மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.  ##~~##

சென்னை அண்ணா சாலையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் 2544 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இதில் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கலந்துகொண்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

அதன் பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியது:

"மின்வாரியத்தில் 52 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது எனக் கூறுவது தவறு. அப்படி ஒரு நிலை காணப்பட்டால் மின்சார வாரியமே செயல்பட முடியாது. திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டு உள்ளனர்.

காற்றாலைகள் மூலம் மின் உற்பத்தி குறைந்தாலும், மின் வெட்டு அதிகப்படுத்தப்படாது. அதனை ஈடு செய்ய அண்டை மாநிலங்களில் இருந்து அன்றாடம் 1700 முதல் 2000 மெகாவாட் மின்சாரம் வரை வாங்கி விநியோகம் செய்யப்படுகிறது. எனவே மாவட்டங்கள் மற்றும் கிராமங்களில் நிலவும் 2 மணி நேர மின்வெட்டு அதிகப்படுத்தப்படாது.

பெரிய தொழில் நிறுவனங்கள் கேட்டுக்கொண்டால் அவற்றுக்கு அதிக கட்டணத்தில் 600 மெகாவாட் வரை தனியாக மின்சாரம் வழங்கப்படும்.

விவசாயத்துக்கான மின்வெட்டு அதிகரிக்கப்படவில்லை. மேலும், விவசாயத்துக்கான மின் விநியோகமும் குறைக்கப்படவில்லை," என்றார் அமைச்சர் ஆற்காடு வீராசாமி.

அடுத்த கட்டுரைக்கு