Published:Updated:

நற்கருணை என்பது வெறும் உணவல்ல!’ பெரிய வியாழன் அறிவிக்கும் செய்தி! #MaundyThursday

நற்கருணை என்பது வெறும் உணவல்ல!’ பெரிய வியாழன் அறிவிக்கும் செய்தி! #MaundyThursday
நற்கருணை என்பது வெறும் உணவல்ல!’ பெரிய வியாழன் அறிவிக்கும் செய்தி! #MaundyThursday

கிறிஸ்தவப் பெண் ஒருவர் நற்கருணையின்மீது (அப்பம்) நம்பிக்கை இல்லாதவராக இருந்தார். குறிப்பாக இயேசுவின் வார்த்தைகளான ‘எனது சதையை உண்டு, எனது ரத்தத்தைக் குடிப்போர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளனர்' என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உடலையும் ரத்தத்தையும் எப்படி உண்பது... அப்படி உண்பது நர மாமிசம் சாப்பிடுவதைப் போன்றது ஆகாதா?’ என்று பலவாறாக யோசித்து, அதைப் பேசியும் வந்தார். ஒருநாள் தன்னுடைய நான்கு சக்கர வாகனத்தில் அந்தப் பெண் பயணம் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானார். விபத்தில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறி மயக்கம் போட்டு விழுந்தார். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை  மருத்துவமனையில் சேர்த்தார்கள். 


மருத்துவமனையில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது, அவருடைய உடலில் ரத்தம் ஏற ஏற அவர் தெளிவுபெற்றுக் கண்திறந்தார்.  அப்போது அவர் அங்கே நடப்பவற்றை கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினார்.  `யாரோ ஒருவருடைய ரத்தம் தனக்கு  வாழ்வு கொடுக்கும்போது, எல்லாம் வல்ல இயேசுவின் ரத்தம் எப்படி வாழ்வு கொடுக்காமல் இருக்கும்?’ என்று நினைத்து அன்று முதல் அவர் இயேசுவின் வார்த்தைகளின் மீதும், நற்கருணையின்மீதும்  நம்பிக்கைகொள்ளத் தொடங்கினார். ஆம், நற்கருணை என்பது வெறும் உணவு மட்டும் கிடையாது, அது வாழ்வு கொடுக்கும் உயிருள்ள உணவு.

இன்று நாம் பெரிய வியாழனைக் கொண்டாடுகிறோம், இந்த நாள் திருச்சபையின் வரலாற்றில் மிகவும் சிறப்புமிக்க நாள். ஏனென்றால், இந்த நாளில்தான் ஆண்டவர் இயேசு குருத்துவத்தை ஏற்படுத்தினார்; இந்த நாளில்தான் இயேசு தன்னுடைய சீடர்களின் பாதங்களைக் கழுவினார்; அதைவிட இதே நாளில்தான் இயேசு நற்கருணை ஏற்படுத்தினார். ஆதலால்தான், பெரிய வியாழன் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாளாக இருக்கிறது. இன்று நாம் நம்முடைய சிந்தனைக்காக நற்கருணையை மட்டும் எடுத்துக்கொள்வோம். 

`நற்கருணை என்பது கிறிஸ்தவ வாழ்வின் ஊற்றும் உச்சமும்’ என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் சொல்கிறது. ஆம், கிறிஸ்தவர்களாகிய நாம் நம்முடைய வாழ்வுக்கான எல்லா ஆசியையும் அருளையும் நற்கருணையில் இருந்தே பெறுகின்றோம். இந்த நற்கருணையை ஆண்டவர் இயேசு, தான் காட்டிக் கொடுக்கப்பட்ட இரவில் ஏற்படுத்துகிறார்.  கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பவுலடியார் கூறுவார்,  `ஆண்டவர் இயேசுவிடமிருந்து எதைப் பெற்றுக்கொண்டேனோ அதையே உங்களிடம் ஒப்படைக்கிறேன்' என்று சொல்லிவிட்டு இயேசு நற்கருணை ஏற்படுத்தியதை குறித்துப் பேசுவார். அதன் பிறகு  `நீங்கள் இந்த அப்பத்தை உண்டு, கிண்ணத்திலிருந்து திராட்சை ரசத்தை பருகும்போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை அறிவிக்கிறீர்கள்' என்பார். ஆகவே, நாம் ஒவ்வொருவரும் ஆண்டவருடைய திருவிருந்தில் பங்குகொள்ளும்போதும் இதை என் நினைவாகச் செய்யுங்கள்’ என்று சொன்ன இயேசுவின் வார்த்தைகளை நாம் நிறைவேற்றுபவர்களாகிறோம். 

கிறிஸ்தவம் உள்ளே நுழைவதற்கு மிகவும் சவாலாக இருந்த நாடுகளில் ஒன்றான சீனாவில், நற்கருணை விருந்து எப்படி கொண்டாடப்பட்டது என்பதற்கான ஒரு வரலாற்றுச் செய்தி உண்டு. அங்கு மறைபோதகராகப் பணியாற்றிய குருவானவர் ஒருவர் ஒரு கடைக்காரரைப்போல வேடமணிந்துகொண்டு இருப்பார். அங்கு வரும் கிறிஸ்தவர்களை, அவர்கள் வெளிப்படுத்தும் ஒருவிதமான சைகைகளைக் கொண்டு, இவர்கள் கிறிஸ்தவர்கள்தான் என்று அறிந்துகொண்டு, அவர்களுக்கு ஒரு சோப்புக் கட்டியை தருவார். அதில் நற்கருணை இருக்கும். அதை பெற்றுக் கொள்ளும் கிறிஸ்தவர்கள், தங்களுடைய இல்லங்களுக்குச் சென்று, இறைவேண்டல் செய்துவிட்டு, நற்கருணையை உண்பார்கள். இவ்வாறு அவர்கள் நற்கருணையை உண்டு ஆண்டவர் இயேசுவுக்கு சான்று பகர்ந்து வந்தார்கள். ஆகையால், நற்கருணை எப்படியெல்லாம் கொண்டாடப்பட்டிருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.


நற்கருணையை வெறுமனே ஒரு சடங்காக, வழிபாட்டுக் கொண்டாட்டமாக மட்டும்  பார்க்காமல், அது நம்முடைய வாழ்வுக்கான அடையாளம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், ஆண்டவர் இயேசு தன்னுடைய உடலையும் ரத்தத்தையும் மானுட மீட்புக்காகத் தந்தார். அவர் எப்படி மானுட மீட்புக்காக தன்னையே தியாகமாகத் தந்தாரோ, அதேபோல நாம் ஒவ்வொருவரும் நம்மையும், நம்மிடம் இருப்பதையும் தியாகமாகத் தர வேண்டும். அதைத்தான் நாம் கொண்டாடும் நற்கருணைத் திருவிருந்து நமக்கு நினைவூட்டுகிறது. உண்மையாகவே நாம் இயேசுவைப் போன்று தியாக உள்ளத்தோடு வாழ்கிறோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நற்கருணை உட்கொள்கிறபோது நம்முடைய மனதில் இருத்தவேண்டிய இன்னொரு செய்தி, நாம் ஒவ்வொருவரும் நம்மோடு இருப்பவர்களுக்கு பணிவிடை செய்து வாழ வேண்டும் என்பதாகும். மேலும், இயேசு நற்கருணையை நிறுவும்போது, யோவான் நற்செய்தியில் ஆண்டவர் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவுகிறார். நற்கருணை விருந்தில் பங்குகொள்ளும் நாம் ஒவ்வொருவரும் மற்றவரின் பாதங்களைக் கழுவி, அவர்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்பதுதான் இயேசு நமக்கு உணர்த்தும் செய்தி.

பாதங்களைக் கழுவுவதை எல்லாராலும் செய்ய முடியாது. அது உள்ளத்தில் உண்மையான அன்பு வைத்திருப்பவர்களால் மட்டுமே செய்ய முடியும். இயேசு சீடர்கள் மீதும், நம் மீதும்  உண்மையான அன்பு கொண்டிருந்தார். அதனாலேயே சீடர்களின் பாதங்களைக் கழுவினார். நாமும் நம்மோடு வாழக்கூடிய சகோதர, சகோதரிகளிடத்தில் அன்புகொண்டு வாழ்வோம். ஆகவே, இயேசு நற்கருணையை ஏற்படுத்திய இந்த நல்ல நாளில், அவரின் தியாக உள்ளத்தை; உண்மையான அன்பை; தாழ்ச்சியை நாமும் கொண்டு வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாகப் பெறுவோம்.