எதிர்வினை - ஆதவன் தீட்சண்யா - Follow up

விகடன் தடம் ஜூன் 2016 இதழில் வெளியான ‘நூற்றாண்டு காணும் அம்பேத்கரின் முதல் புத்தகம்’ கட்டுரையின் மீதான எதிர்வினை

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அறிவூட்டத்தில் விளைந்த ‘இந்தியாவில் சாதிகள்’ என்ற ஆய்வுரையை வெகுசனங்களுக்கு கொண்டுசேர்க்கும் நன்னோக்கில் சுகுணா திவாகரின் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. நூற்றாண்டைத் தொட்டுநிலைக்கும் அந்த ஆய்வின் இன்றைய பொருத்தப்பாடு மற்றும் தேவையை வலியுறுத்தி எழுதப்பட்டுள்ள அந்தக் கட்டுரையில் தென்படும் மாறுபட்ட புரிதல் ஒன்றைச் சுட்டுவது அவசியமாகிறது.

எந்த ஒரு பொருளையும் ஆய்ந்திடப் புகுமுன், அதுகாறும் அந்தப் பொருள் குறித்துள்ள அனைத்துத் தரவுகளையும் தொகுத்தெடுத்து, பரிசீலனைக்குட்படுத்தி அவற்றில் இருந்த தான் உடன்படும் / முரண்படும் புள்ளிகளை விளக்கும் அம்பேத்கரின் ஆய்வுமுறை அவரது இந்த முதல் ஆய்வுரையிலயே தொடங்கிவிட்டது எனலாம். சாதி என்றால் என்ன, அது எப்படி, யாரால், எப்போது, ஏன் தோற்றம் பெற்றது, அன்றாட வாழ்வில் அதன் வகிபாகம் என்ன... என்பதான கேள்விகளை எழுப்பிக்கொண்டு நடந்த பலரது ஆய்வுகளையும் பரிசீலிக்கிறார். அவற்றின் அரைகுறை உண்மைகளையும்  போதாமைகளையும்  துல்லியப்படுத்திவிட்டு தனது நிலைப்பாட்டை நிறுவுகிறார். அகமண முறை சாதியைத் தோற்றுவித்ததா அல்லது சாதி அகமணமுறையைக் கைக்கொண்டதா என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டு அவர் கண்டடையும் பதில், காரணம் எது... விளைவு எது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டுத்தளங்களில் தமக்கு உள்ள செல்வாக்கு, முற்றுரிமைகள் மற்றும் சலுகைகள் ஆகியவற்றைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள விரும்பாத புரோகித வர்க்கத்தினராகிய பார்ப்பனர்களே சாதி உருவாகக் காரணமாக இருந்தார்கள். சாதியை உருவாக்கி, சமுதாயத்தைச் சிதறடித்தே தீர்வது என்ற சதித்திட்டத்தின் பேரில் அவர்கள் இதைச் செய்யவில்லை. ஆனால், தம்மைத்தாமே உள்வைத்து கதவடைத்துக்கொண்ட அவர்களது செயலின் விளைவு அதுவேயானது. ராணுவ வர்க்கமான சத்ரியர்கள், வணிக வர்க்கமான வைஸ்யர்கள், கைவினைஞரும் ஏவலருமான சூத்திரர்கள் ஆகியோரில் இருந்து பார்ப்பனர்கள் தம்மைத்தாமே துண்டித்துக் கொண்டதையே சாதியின் தோற்றமாகக் காட்டுகிறார் அம்பேத்கர். ‘...ஏதோ ஒரு காலக்கட்டத்தில் புரோகித வர்க்கத்தினர் பிறரிடம் இருந்து தங்களைத் தனியாகப் பிரித்துக்கொண்டு பிறரோடு கலவாமல் இருக்கும் கொள்கைப்படி (Closed Door Policy) தனி ஒரு சாதியாக ஆனார்கள். இவர்களைப்போலவே பிற வர்க்கத்தினரும் சமுதாய உழைப்புப் பங்கீட்டு விதியின்படி பெரிதும் சிறிதுமாகச் சிதறிப்போயினர்’ என்கிறார் அம்பேத்கர். அதாவது சாதி என்ற அமைப்பு முதலில் தோன்றிவிட்டது. பின்னர் அது, தனது தனித்துவத்தையும் தூய்மையையும் காப்பாற்றிக்கொள்ளும் வழிமுறைகளாகக் கலப்பு மணத்தையும் கலந்துண்ணுலையும் தடை செய்ததோடு, அகமணமுறையையும் தனித்துண்ணுதலையும் கைக்கொண்டது. இதற்குக் கைமாறாக அகமணமுறை  சாதியை மறுஉற்பத்திசெய்து காப்பாற்றிவருகிறது.

அம்பேத்கரின் இந்தக் கண்டடைதலைப் பெரிதும் பின்தொடர்ந்து வரும் சுகுணா திவாகர், ‘அகமண முறையே சாதியத்தின் தோற்றுவாய் என்னும் அம்பேத்கரின் ஆய்வு முடிவு, சாதியத்தின் பல புதிர்களை அவிழ்த்தது’ என்று கூறுவது ஏற்புடையது அல்ல.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism