Published:Updated:

"ஒரு வீடியோ..சில லட்சியங்கள்... பல கனவுகள்..!" கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

"ஒரு வீடியோ..சில லட்சியங்கள்... பல கனவுகள்..!" கவிதா ராமு ஐ.ஏ.எஸ்
"ஒரு வீடியோ..சில லட்சியங்கள்... பல கனவுகள்..!" கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

"ஒரு வீடியோ..சில லட்சியங்கள்... பல கனவுகள்..!" கவிதா ராமு ஐ.ஏ.எஸ்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

”இதைத் தூய்மைப் பாடல், அழுக்குப் பாடல் அல்லது இதுவும் மற்றொரு பாடல் என்றே நீங்கள் கடந்துப்போகலாம்” - இப்படிக் குறிப்பிட்டு ஒரு பாடலை யூடியூபில் பதிவிட்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரியும் நடன கலைஞருமான கவிதா ராமு. 

வழக்கமான அறிவுரைப் பாடல்தான். ஆனால், கவிதா ராமுவும் குழுவினரும் சேர்ந்து, நம் சுற்றுப்புறத்தின் சுத்தம் மற்றும் வீட்டில் கழிப்பறையின் முக்கியத்துவம் குறித்து, எளிமையான வரிகளில், துள்ளலான இசையில், அழகான நடனம் வடிவமைப்பின் மூலம் நமக்குள் ஆழமாகப் பதிவுசெய்கிறார்கள். கடந்த மகளிர் தினத்தன்று இந்தப் பாடல் யூடியூபில் வெளியிட்டுள்ளார். “மகளிர் தினத்தில் வெளியிட்டது நிறைய தற்செயலாக நடந்தது. இந்தக் காணொளியை எடுத்து இரண்டு, மூன்று மாசம் இருக்கும். இடையில, குஜராத் தேர்தல் வேலைகள்ல கொஞ்சம் பிசியாக இருந்ததால், அன்னிக்கு வெளியிட்டோம். கிராமப்புற பெண்களுக்கு வீட்டில் கழிப்பறை வசதியில்லாதது பெரும் பாதிப்புகளை உண்டாகுகிறது. நம்ம சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்யததால, பல நோய்களுக்கு ஆளாகிறோம். இந்த விஷயங்களை வலியுறுத்தி, ஒரு காணொளி பண்ணலாமென்று யோசித்து எடுத்தது. 

நான் இதற்கு முன்னாடியே மேடைகளில், வரதட்சணை மற்றும் பெண் சிசுக் கொலை பற்றி நிகழ்ச்சிகள் செஞ்சிருக்கேன். சுத்தம், சுகாதாரம் பற்றி காணொளியா வெளியிட்டால் பலரிடம் சென்றடையுமென்று நினைத்தேன். அதேமாதிரி வீடியோவுக்கு நல்ல ரென்பான்ஸ் கிடைச்ச்ரிருக்கு” என்று மகிழ்ச்சியுடன் பேசத் தொடங்குகிறார் கவிதா. ஐ.ஏ.எஸ். ஓர் ஐ.ஏ.எஸ் அதிகாரியிடம் பேசுகிறோம் என்பதைவிட, இச்சமூகத்தின் மீதும், சக மனிதர்களின் மீதும் பேரன்பு கொண்டுள்ள ஓர் உணர்வுப்பூர்வமான மனிதியிடம் பேசுகிறோம் என்ற உணர்வையே நமக்கு அளிக்கிறார் கவிதா. 

தற்போது, தமிழ்நாடு அருங்காட்சியங்கள் துறையின் இயக்குநராக இருக்கும் கவிதா, ஐந்து வயதிலிருந்து பரதநாட்டியத்தின் மீது ஆர்வம்கொண்டு, தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இதுவரை, கிட்டதட்ட 625 நடன நிகழ்ச்சியில் நடத்தியிருக்கிறார். தான் பயின்ற கலையை மற்றவர்களுக்கும் கற்பிக்கும் நோக்கத்தில், கடந்த எட்டு ஆண்டுகளாக, ‘லஸ்யா கவி’ (Lasya Kavie) என்ற நடன பள்ளி ஒன்றையும் சென்னையில் நடந்துவருகிறார். ஐ.ஏ.எஸ் அதிகாரி இருந்தாலும், தன் கலை கனவை நிறைவேற்றிக்கொள்வதன் மூலம் தனித்து நிற்கிறார். 

நீங்கள் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் எனில், கவிதா ராமுவின் நடன காணொளியை ஒருமுறையாவது பார்த்திருப்பீர்கள். ஒருபுறம் அரசுத் துறையின் பரபரப்பான வேலை, மறுபுறம் நடன நிகழ்ச்சிகள் மற்றும் சமூக விஷயங்களில் தனது கருத்து ஆகியவற்றைச் சமூக வலைத்தளங்களில் பதிவுசெய்வது என உற்சாகமாக இருக்கிறார். இதையெல்லாம் செய்ய எப்படி நேரம் கிடைக்கிறது என்று நாம் கேட்டால் சிரிக்கிறார். 

“ஐந்து வயசிலிருந்தே நடனம் கத்துட்டிருக்கேன். நடனம் என் வாழ்க்கையின் ஓர் அங்கமாகவே இருக்கிறதால், அதைக் கூடுதல் திறமையாகவே நினைக்கவில்லை. அதனால், ஐ.ஏ.எஸ், நடனம் இரண்டிலும் பயணிக்கிறேன். அரசுத் துறையில் இருக்கிறதால், பல நாள்களுக்கு மூச்சுவிடவும் நேரம் இருக்காதுதான். ஆனாலும், நடனத்துக்கான நேரத்தை எப்படியாவது எடுத்துப்பேன். ஏன்னா, இரண்டையுமே என்னுடைய கடமையாக நினைக்கிறேன். இரவில்தான் கொஞ்சம் நேரம் கிடைக்கும். அதில் ஐந்து விஷயங்களைச் செஞ்சுடுவேன். பாட்டு கேட்டுட்டே புத்தகங்கள் படிப்பேன். இடையில் டிவி பார்ப்பேன், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ் போடுவேன். நான் எழுத நினைக்கும் விஷயங்களை என் நோட்புக்கில் எழுதி முடிச்சிருவேன். 
எனக்குப் புத்தங்கள் படித்து, குறிப்புகள் எடுத்துக்கொள்ளப் பிடிக்கும். நிறையப் புத்தகங்கள் படிக்கவேண்டுமென்று ஆசை. இப்போக்கூட நான் ஐந்து புத்தகங்கள் படிச்சிட்டு இருக்கிறேன். ர்ஹோண்டா பேர்னி (  Rhonde Byrne) எழுதிய ‘நாயகன்’, டாக்டர்.ப்ரியன் வைஸ் (  Dr.Brian Weiss) எழுதிய ‘ஒன்லி லவ் இஸ் ரியல்' (  Only Love is Real), ஓஷோவின் ‘தி ஏம்ப்டி போட’ (The Empty Boat), பெரியார் இன்றும் என்றும், திருமாவேலனின் ‘சுதேசி தேசம் சுரண்டப்படும் வரலாறு’..இந்தப் புத்தகங்களை படிச்சிட்டு இருக்கிறேன். 
எனக்கு புதுப்புது விஷயங்களை கத்துக்க பிடிக்கும். ஒரு நடன கலைஞராக, எனக்கு கதக் கத்தக்கணும். இப்போது கிட்டார் கத்துக்க தொடங்கியிருக்கிறேன். அப்புறம் ஸ்பானிஷ் மொழியை கத்துக்கணும் ஆசை இருக்கு ” என்று தன் அர்த்தமுள்ள விருப்பங்களைக் கூறி நம்மை மலைக்கவைக்கிறார். 

ஒரு பெண் அதிகாரியாக, இன்றைய பெண்களின் நிலை எப்படி இருப்பதாக நினைக்கிறீர்கள்? 

“எல்லாக் காலகட்டத்திலும், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்துகொண்டேதான் இருக்கு. இப்போது, பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள், சமூக வலைத்தளங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் மூலமாகப் பரவலாக வெளியில் தெரிய ஆரம்பித்திருக்கிறது. பெண்களும் தங்கள் பிரச்சினைகளை வெளிப்படையா பேச ஆரம்பிச்சிருக்காங்க. என்னைக் கேட்டால், இப்போதன் பெண்களுக்கு எதிரான வன்முறை கொஞ்சம் குறைஞ்சிருக்குனு நினைக்கிறேன். அந்தக் காலத்தில், பல கொடுமைகள் வெளியில் வராமலே போய் இருக்கலாம் இல்லையா?” என்கிறார். 

நடனக் கலை மூலம் சமூக அக்கறைகொண்ட வீடியோக்களைப் பதிவிடும் கவிதா ராமுவுக்கு, இச்சமூகத்தில் மாற்றப்படவேண்டிய சில அடிப்படைகளைப் பற்றி இன்னும் விழிப்புணர்வு தேவை என்பதை வலியுறுத்துகிறார். 

”மனித இனத்தின் அடிப்படையே அன்புதான். சக மனிதர்களிடம் அன்பு செலுத்துவது, சாதியை ஒழிக்கிறது, காதல் திருமணங்களை ஆதரிக்கிறது, கல்வி கற்கும் உரிமையை அளிப்பது போன்றவை அவசியம். சாதி என்ற ஒரு விஷயம், நம் சமூகத்தில் எவ்வளவு மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்குன்னு உணரவேண்டும். எல்லாருமே அதன் தாக்கத்தை உணர்ந்தால்தான் பேசினால்தான் மாற்றம் உண்டாகும்” என்று அழுத்தமாகக் கூறுகிறார் கவிதா.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு