Published:Updated:

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

Published:Updated:
தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்
பிரீமியம் ஸ்டோரி
தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்
தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

லக அளவில் நவீனக் கலையின் உயரிய மரபு, அதன் பிரத்தியேக அர்த்தத்தில், 19-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் செசானிடமிருந்தே தொடங்குகிறது. தமிழில் நவீனச் சிறுகதை புதுமைப்பித்தனிலிருந்து தோற்றம் பெறுவதைப்போல. ‘தோற்றத்தைப் பிரதிபலிப்பதல்ல; மாறாக, தனதான உலகைத் தோற்றப்படுத்துவது’ என்ற அடிப்படை நியதியிலிருந்துதான் நவீனக் கலையின் உயரிய மரபு உருப்பெற்றது. நவீன ஓவியத்தின் தனித்துவமான வெளியீட்டம்சங்களின் சாரங்களாக தூய வண்ணம், ஆதி எளிமை, கோடுகளின் உக்கிரம், குறியீட்டு ரீதியான சிதைப்பு, உள்ளார்ந்த தனித்துவம் ஆகியவை அமைந்தன.

19-ம் நூற்றாண்டின் பிற்பாதியில் இருந்து அதனை அடுத்த ஒரு நூற்றாண்டுக்குள்ளாக,  பல்வேறு இயக்கங்கள், காலத்தினதும் கலையினதும் தேவைகளை நிறைவுசெய்யும் முகமாக, முழுவீச்சோடும் உக்கிரத்தோடும் எழுந்தன. ஒவ்வோர் இயக்கமும் தனதான கலைக் கோட்பாடுகளைப் பிரகடனப்படுத்தி, கலை ஆக்கங்களில் ஈடுபட்டன. இப்பிரகடனங்கள் இலக்கிய உலகிலும் தாக்கத்தை நிகழ்த்தி, அதிலும் புதிய போக்குகள் உருவாகக் காரணமாகின. ஒன்றை மேவிய ஒன்றாக, ஒன்றை நிராகரித்த ஒன்றாக, ஒன்றைக் கடந்த ஒன்றாக இம்ப்ரஸனிசம், எக்ஸ்பிரஸனிசம், ஃபுவிசம், ஃப்யூச்சரிசம், சிம்பாலிசம், டாடாயிசம், க்யூபிசம், சர்ரியலிசம், மிஸ்டிஸிசம், அப்ஸ்ட்ராக்ட் என வடிவ ரீதியாகவும் வெளியீட்டு நுட்பங்கள் ரீதியாகவும், படைப்புப் பொருள் மற்றும் நோக்கம் ரீதியாகவும் மாறுபட்ட அணுகுமுறைகளோடு விரிந்து செழித்தது நவீனக் கலை.

உலக அரங்கில் அபரிமிதமான கலைப் பாய்ச்சல்கள் நிகழ்ந்தேறிய ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர்தான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

தமிழகத்தில் நவீன ஓவியம் தோற்றம்கொள்ளத் தொடங்குகிறது. ஆங்கிலேயர்கள் தங்களுடைய கைவினைப் பொருட்களின் தேவையைப் பூர்த்திசெய்து கொள்வதற்காகவும், தொழில்நுட்பப் பணியாளர்களை உருவாக்கும் வகையிலும் இந்தியாவில் சில கலைப் பள்ளிகளை உருவாக்கினர். அப்படியான ஒன்று சென்னையில் 1850-ம் ஆண்டில் தொடங்கப் பட்டது. 1929-ம் ஆண்டில் விஸ்கெளன் கோஸின் நிர்வாகத்திலிருந்த சென்னை அரசாங்கம், சென்னை கலைப் பள்ளியில் நுண்கலைகளை அறிமுகம் செய்து அப்பள்ளிக்குக் கலைமுகம் அளிக்கத் தீர்மானித்தது. வங்காளத்தைச் சேர்ந்த தேவி பிரசாத் ராய் சௌத்ரி, தன் 30-வது வயதில் நேரடி நியமனமாக அப்பள்ளியின் தலைமைப் பொறுப்பேற்றார். இளம் வயதிலேயே தைல வண்ண உருவப்பட ஓவியங்களிலும், உருவச் சிலைகளிலும் நிகரற்றவராகத் திகழ்ந்தவர் ராய் சௌத்ரி (சென்னை மெரினா கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலையும் உழைப்பாளர் சிலையும் இவரால் படைக்கப் பட்டவை).

தேவி பிரசாத், சென்னை கலைப் பள்ளியின் தலைமைப் பொறுப்பேற்றிருந்த 30 ஆண்டுகளில் இப்பள்ளி வலுவான அடித்தளத்தில் உயரத் தொடங்கியது. அதுவரை தொழில்நுட்பப் பணியாளர் களையே தயாரித்துக்கொண்டிருந்த இப்பள்ளி, கலை எழுச்சி பெற்றது. புதிய சகாப்தம் உருவானது. இவ்வளவுக்கும் ராய் சௌத்ரியை நவீன கலைப் படைப்பாளி என்று கருதுவதற்கு இல்லை. செவ்வியல் தன்மையும், ரொமான்டிஸிசமும் மேவிய படைப்பாளி. அதேசமயம், கற்பனை ஆற்றலாலும் கடுமையான உழைப்பாலும், அயராத உத்வேகத்தாலும், தீவிரமான கலை நம்பிக்கையாலும் புதிய சகாப்தத்தைக் கட்டமைத்தவர். இவருடைய தலைமையில் இப்பள்ளி கலை முகம் பெற்று சர்வதேசக் கலை அரங்கின் ஓர் அங்கமாகியது.

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

இந்தியக் கலை அரங்கில் பேருருவச் சிலையென விகாசம் பெற்றிருந்தார் தேவி பிரசாத். இந்தியாவெங்கும் கலை ஆர்வமிக்க இளைஞர்கள் அவரிடம் மாணவனாகப் பயிலும் கனவோடு சென்னையை நாடிவந்த காலம் அது. கே.சி.எஸ்.பணிக்கர், பரிதோஷ் சென், ஈ.கோதண்டராமன், கிருஷ்ணா ராவ், எஸ்.தனபால், பிரதோஷ் தாஸ் குப்தா, னிவாசலு, கோபால் கோஷ், எல்.முனுசாமி, சந்தானராஜ்... என இவரின் கலை ஆளுமையில் உருவான கலைப் படைப்பாளிகள் பரந்து காணப்படுகின்றனர். எந்தவோர் இயக்கக் கோட்பாட்டையும் முன்னிறுத்தி, எவரையும் குறுக்கிவிடாமல் அவரவர் மன உலகத்துக்கேற்ப கலை ஆளுமைகொள்ள, அவர் முன்வைத்த ஆதர்சம் அவரை மகோன்னதமான ஆசிரியராகக் காட்டுகிறது.

பீகாரிலுள்ள ராஞ்சியிலிருந்து 1,200 மைல்கள் கடந்து, தேவி பிரசாத்திடம் பயிலும் கனவோடு சென்னை வந்து, பின்னர் முக்கியக் கலை ஆளுமையாக உருவாகிய சுசில் முகர்ஜி, ‘India and World Arts and Crafts’ என்ற இதழில் தன் கல்லூரி நாட்கள் குறித்து நினைவுகூர்ந்து எழுதிய ஒரு கட்டுரைத் தொடரில் அன்றைய முதல்வர் ராய் சௌத்ரி பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்:

‘பொருளாதார நெருக்கடிகளுக்கிடையே மாணவர்கள் பயின்று வந்தபோது - சமூகச் சூழல் எவ்வகையிலும் எங்களுக்குத் தெம்பூட்டுவதாக இல்லாத நிலையில் - எங்களுக்காக அக்கறைப்பட்ட ஒரே மனிதராகவும், எங்களுக்கு உற்சாகமும் உத்வேகமும் அளிப்பவராகவும், நாங்கள் முக்கியமானவர்கள், கலைஞர்கள் எனப் பெருமிதம்கொள்ளும்படியும் திகழ்ந்தவர் தேவி பிரசாத்.’

தேவி பிரசாத் 20-ம் நூற்றாண்டு இந்தியக் கலையின் குழந்தை. செவ்வியல் பாங்கான கலைப் புனைவுகளின் நிறைவெல்லையாகப் படைப்புகளை உருவாக்கிய தேவி பிரசாத், அதே சமயம் நவீனக் கலைப் போக்குகளின் மலர்ச்சிக்கான ஓர் உந்துசக்தியாகவும் இருந்திருக்கிறார்.

1957-ம் ஆண்டில் ராய் சௌத்ரி ஓய்வு பெற்றபோது, அவரிடம் மாணவராகவும், பின்னர் ஓவியத் துறை ஆசிரியராகவும் இருந்த கே.சி.எஸ்.பணிக்கர் இந்தப் பள்ளியின் தலைமைப் பொறுப்பேற்றார். இந்தியாவின் சிறந்த நவீனத்துவக் கலைப் படைப்பாளிகளில் ஒருவரும், கனவுகள் மிக்கவருமான இவரின் தலைமையில் சென்னைப் பள்ளி நவீனத்துவக் கலை வெளியில் வலுவாகத் தடம் பதித்தது. பணிக்கர் காலத்தில் கோட்டோவியங்களில் சென்னைப் பள்ளி ஓவியர்கள் அபாரத் திறன் பெற்றனர். இக்காலகட்டத்தில் கோடு பற்றிய கருத்தாக்கத்தில் ஒரு புதிய பரிமாணத்தை உருவாக்கி, ஒரு புதிய அலை வீச்சை இந்திய அரங்கில் சென்னை ஓவியக் கல்லூரி நிகழ்த்தியது. கோடானது, கோட்டோவியத்தில் ஒரு வரையறைக் கோடாக இருந்த நிலை மாறி, கோடு ஓர் அர்த்தம் பொதிந்த மொழியானது. ஓர் இயங்கு சக்தியாக ஓவிய வெளியில் உயிர் கொண்டது. வளைவு, நெளிவு, சுழிப்பு, அறுபடுதல், நீள்தல் எனக் கோடு படைப்புவெளியில் சுதந்திரமாக இயங்கத் தொடங்கியது.

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

1960-களில் ‘சென்னை இயக்கம்’ (Madras Movement) என்றொரு கலை இயக்கத்தின் ஆதர்ச சக்தியாக இருந்து, அதைக் கட்டமைத்து வழிநடத்தியவர் பணிக்கர். இந்தியக் கலையின் சாரமாக எது இருக்கிறதோ அதுவே நவீனக் கலையின் உயிர்ப்பாகவும் இருக்க வேண்டும் என்ற கருத்தியலை முன்வைத்து தீர்க்கமாகச் செயல்பட்டவர். இவ்வியக்கத்தின்போது, ஐரோப்பியக் கல்வித் துறைசார் பகுப்பாய்வு உத்திகள் புறமொதுக்கப் பட்டன. காலனிய செல்வாக்கும் ஆதிக்கமும் இந்தியக் கலை அரங்கிலிருந்து வெளியேறும் வகையில் படைப்பாக்கச் செயல்பாடுகள் அமைந்தன.

பேராற்றலின் எழுச்சி வடிவங்களாக உருப்பெறும் உருவ பாணியைக் கொண்டது நம் நாட்டார் மரபு. விசித்திரக் கவர்ச்சியோடும் ஒரு நிகழ்ச்சி பற்றிய குறுங்கதைத் தன்மையோடும் வெளிப்பட்டது நம் மினியேச்சர் மரபு. மகத்தான காவியத் தன்மை கொண்டது, நம் செவ்வியல் சிற்ப மரபு. ஆற்றல் மிக்க உருவம், குறுங்கதை, காவிய அம்சம் ஆகிய நம் மரபுக் கோலங்கள் நம் நவீனக் கலையில் உள்ளுறைய வேண்டுமென்ற கனவோடும் வேட்கையோடும் சிந்தனைகளோடும் பணிக்கரும், சென்னை ஓவியக் கல்லூரி படைப்பாளிகளும் செயல்பட்ட காலம்.

ஓர் ஆசிரியராகவும், கலை இயக்க ஆளுமையாளராகவும் இளம் ஓவியர்கள் மீதும் ஓவிய மாணவர்களிடத்தும் பெரும் அக்கறைகொண்டிருந்தார் பணிக்கர். ஓவியர்கள் தங்கள் திறன் சார்ந்து வாழ்க்கையை நடத்துவதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஓவியர்கள் தம் ஓவியங்களைக் காட்சிப்படுத்துவதற்கும் விற்பதற்கும் வசதியாக ‘முற்போக்கு ஓவியர் சங்கம்’, `ஆங்கிலப் பேச்சறிவுப் பயிற்சி வகுப்புகள்’, ‘கலைஞர்களின் கைவினைப் பொருட்கள் சங்கம்’ போன்றவற்றை உருவாக்கினார். எல்லாவற்றுக்கும் மேலாக, கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பாக, படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வாழ்ந்து படைப்பாக்கங்களில் ஈடுபட வேண்டுமென்ற அபூர்வக் கனவின் நனவாக ‘சோழ மண்டல ஓவியர் கிராமத்தை’ உருவாக்கினார். ஒரு லட்சியக் கனவின் வடிவமாக வாழ்ந்த கலை மேதை கே.சி.எஸ்.பணிக்கர், தமிழக நவீனக் கலைவெளியில் ஓர் அபூர்வ சித்திரம்.

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

தமிழக நவீனக் கலைச்சூழலின் வளத்துக்கு வலுவான அடித்தளம் அமைத்த இன்னொரு லட்சிய உருவகம் எஸ்.தனபால். இவருடைய முக்கியத்துவம் தனிச்சிறப்பு வாய்ந்தது. அக்காலகட்டத்தில் ஓவியப் பள்ளியில் மாணவனாகச் சேர்வதற்குக் குறைந்தபட்ச கல்வித் தகுதி என்ற நெறிமுறை ஏதும் கிடையாது. ஓவியத் திறனும் ஆர்வமும் போதும். தமிழ் மட்டுமே பேசத் தெரிந்து, மிகுந்த ஆர்வத்தோடு, அப்பள்ளியில் சேர்ந்த, சேரவிழைந்த மாணவர்களுக்குப் பெரும் ஆதர்சமாகத் திகழ்ந்தவர் எஸ்.தனபால். இன்று முதனிலை வகித்துச் செயல்படும் கலைப் படைப்பாளிகள் பலரும் இவருடைய மாணவர்களே.

ஓவியராகக் கலை வாழ்க்கையைத் தொடங்கிப் பின்னாளில் சிற்பியாகச் செயலாற்றினார். இவருடைய ஓவியங்கள் செழுமையான மரபு சார்ந்த மரபுக் கவிதை எனில், சிற்பங்கள் புதுக்கவிதை. பல்லவச் சிற்பிகள் முதல் சமகாலச் சிற்பிகளான ரூடின், ஹென்ரி மூர் வரையான படைப்பாளிகளின் பாதிப்பை ஆரோக்கியமாக ஏற்று, தனதான உலகை நுட்பமான வெளிப்பாடாக்கினார். நவீனத்துவ எழுச்சியும், தமிழ் அழகியல் கூறுகளும் லயப்படும் சிற்பங்கள் இவருடையவை. “மரபுக்கூறுகளை முற்போக்குக் கருத்தியலுக்குள் இசைமைப்படுத்திய முதல் சமகால இந்தியச் சிற்பியாக தனபாலையே குறிப்பிட வேண்டும்” என்கிறார் எழுத்தாளரும் கலை விமர்சகருமான முல்க் ராஜ் ஆனந்த்.

பொதுவாக, இன்றைய ஆசிரியர்களிடம் காணப்படும் உத்வேகமற்ற அசட்டையான மனோபாவம் காரணமாக, சென்னை ஓவியக் கல்லூரிப் பின்புலத்தில் அசமந்தமான சூழலே காணப்படுகிறது. தனபாலின் அர்ப்பண உணர்வும் உத்வேகமிக்க ஆசிரியத்துவமும் லட்சிய வேட்கையும் போற்றி ஸ்வீகரிக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் இன்றைய காலம் இருந்துகொண்டிருக்கிறது.

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

தனித்துவமிக்க கலை ஆளுமையோடு தமிழகத்தில் நவீனக் கலையைக் கட்டமைத்த மூன்று ஆதர்ச சக்திகள்: தேவி பிரசாத் ராய் சௌத்ரி, கே.சி.எஸ்.பணிக்கர், எஸ்.தனபால். இந்த மூன்று முன்னோடி மேதைகளிடமும் பயின்று வெளிப்பட்ட மிக முக்கியமான இரு படைப்பாளிகள். எல்.முனுசாமி, ஏ.பி.சந்தானராஜ்... இருவேறு எல்லைகளில் சஞ்சாரம் செய்த இணையற்ற கலைஞர்கள் இவர்கள்.

நவீனக் கலையில் சந்தானராஜும் முனுசாமியும் தம் கோடுகளிலும் வண்ணங்களிலும் தொடர்ந்தும் அயராதும் மேற்கொண்ட பரிசோதனைகளின் மூலம் அவற்றுக்கு ஒரு மாயத் தன்மையை அளித்தனர். சந்தானராஜின் நவீனப் புனைவுகள் கவித்துவப் பேரழகை வசப்படுத்தின. எனில், முனுசாமியின் நவீனப் புனைவுகள் தன் வயமான உள்ளார்ந்த தகிப்புகளை உக்கிரத்துடன் வெளிப்படுத்தின.

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

அதேசமயம், சந்தான ராஜின் கலைமேதைமை சிறப்பாகக் குறிப்பிடப்பட வேண்டியது. உருவரீதியான கதையாடலை அபாரமான கோட்டுச் சித்திரங்கள் மூலம் இவர் வசியப்படுத்தியது ஓவிய வெளியில் ஒரு மகத்தான நிகழ்வு. மேலும், இவருடைய வண்ண ஓவியங்கள் செழிப்பான இயற்கைப் பின்புலம் கொண்டவை. நாட்டுப்புற வாழ்வின் மீதான ஏக்கத்தைப் பிரதிபலிப்பவை. மகத்தான புனைவுக் கோலங்களோடு மிகவும் ஒய்யாரமான வெளியீட்டுப் பாணியில் இவர் உருவாக்கிய மாய யதார்த்தம் மிகவும் வசீகரமானது.

இக்காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு மிக முக்கியமான படைப்பாளி, சிற்பி பி.வி.ஜானகிராம். பணிக்கரால் ஓவியத்திலும் தனபாலால் சிற்பத்திலும் எதிர்கொள்ளப் பட்ட மரபார்ந்த அழகியல் அணுகுமுறையை தன்னுடைய தனித்துவமான உலோகச் சிற்பங்களில் கண்டடைந்தவர் இவர். செவ்வியல் மரபும் நாட்டார் மரபும் உருவ வெளிப்பாடும் எளிமையும் கலந்த சிற்பங்கள் இவருடையவை.

இந்த வளமான மரபின் தொடர்ச்சியாக, அடுத்து வெளிப்பட்டவர்கள், விந்தைப் புனைவுலக மேதை கே.ராமானுஜம்; கோடுகளின் மகத்துவமும் வண்ணங்களின் இசையையும் கொண்ட கே.எம்.ஆதிமூலம்; வடிவமும் வெளியும் லயப்படும் கலை உலகம்கொண்ட ஆர்.பி.பாஸ்கரன்; கல்வெளியில் நாட்டார் மரபின் நவீனத் துவத்தைக் கண்டடைந்த சிற்பி சி.தட்சிணாமூர்த்தி ஆகியோர்.

இவர்களில் கே.ராமானுஜமும் கே.எம்.ஆதிமூலமும் கலை மேதைகள். நவீன ஓவியங்களுக்கு அறிமுகமற்ற கண்களைக்கூட தம் வசம் ஈர்க்கக்கூடிய கவித்துவமான விந்தைப் பிராந்தியம் ராமானுஜத்தினுடையது. மிகவும் நெருக்கமாக இழையூட்டப்பட்ட கோடுகள் மூலமாக அவர் உருவாக்கிய படைப்புகள், அவருடைய தனிப்பட்ட புராணங்கள். மிகவும் பிரத்தியேகமானவை. மிக மோசமாக அலைக்கழிக்கப்பட்ட, உளைச்சலுக்குள்ளான ஒரு கலை மனம், தனக்கென்று ஓர் உலகை உருவாக்கிக் கொண்டு அதில் குதூகலித்திருக்க விழைந்த தகிப்பிலிருந்து பிறந்தவை.

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

கோடுகளின் மொழியிலான ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் அபாரமானவை என்றால், அவருடைய அரூப வண்ண ஓவியங்கள் வெகு அழகானவை.  இயற்கையின் பூரணத்துவத்தை, அதன் ரகஸ்ய நறுமணத்தை விதவிதமான வண்ண அடுக்குகளில் அகப்படுத்தும் முயற்சியில் ஆதிமூலத்தின் படைப்புகள் உயிர்ப்பும் அழகும் பெறுகின்றன.

இதனை அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளில் சிறப்பாக வெளிப்பட்டவர்கள், உருவ மொழியில் அசாத்திய வித்தகம் கொண்ட சந்ரு; புதிர்ப் பிராந்தியத்தில் சுடரும் டக்ளஸ்; கோடுகளின் மாய ஞானம் கைவரப் பெற்ற இராம.பழனியப்பன்; புராணிகப் படிமங்களும் கதையாடலும் எளிமையும் கூடிய முரளிதரன்; காட்சி ரீதியான கவித்துவமும் ஒளியின் ஜாலமும் கொண்ட விஸ்வம் ஆகியோர். இவர்களில் விஸ்வம், கும்பகோணம் ஓவியப் பள்ளியில் பயின்றவர்.

இவர்களில் சி.டக்ளஸ் சிறப்பாகக் குறிப்பிடவேண்டிய ஆளுமை. நவீன மனிதனின் அடிப்படைப் பிரச்னைகளில் உழன்று, அதனூடாகப் பெற்ற பெறுமதியான எண்ணவோட்டங்களைத் தனித்துவமான அழகியலோடு வெளிப்படுத்துபவர். சாந்தமாகவும் புதிர்த்தன்மையோடும், ரெம்பிராண்டின் தத்துவவாதி இருளுக்கும் ஒளிக்குமிடையே நிற்பதைப்போல, இவருடைய உருவம் பிறப்புக்கும் இறப்புக்குமிடையேயான வாழ்வெளியில் துயர் சுமந்தும் வலிகள் நிறைந்தும் சாந்தமாகவும் புதிர்த் தன்மையோடும் இருந்துகொண்டிருக்கிறது.

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

1980-களின் பிற்பாதியில் கல்லூரி வளாகச் சூழலில் உத்வேகமிக்க எழுச்சி உருவானது. சந்தானராஜ் முதல்வராகப் பொறுப்பேற்ற காலம். மூத்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தங்கள் படைப்புகளை உருவாக்குவதிலும், கலந்து உரையாடுவதிலும் பரவசம் கொண்டனர். நம் கலை மரபின் சிறப்புகள் குறித்த சொல்லாடல்கள் மூலமும் வரைகலை மூலமும் அப்போது அங்கு ஆசிரியராக இருந்த சந்ரு, தன் கலைப் பார்வையை வெளிப்படுத்தியபடி ஓர் ஆதர்சமாக உருவாகிக்கொண்டிருந்தார்.

இக்காலகட்டத்தின் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளாக உருவானவர்கள், மாயவெளியில் விகாசிக்கும், அந்தரத்தில் தொங்கும் சிற்பங்களை உருவாக்கும் மரிய அந்தோணிராஜ்; புதிய கடவுளைத் தம் படைப்புகள் வழியாகக் கண்டடைய முயலும் நடேஷ்; மனக்குகைக்கு ஒளியூட்டும் உடல் படிமங்களை உருவாக்கும் போஸ் மருது; இயற்கையின் அரூபமும் வண்ணங்களின் ரூபமும் கலந்துறவாடும் அரூப ஓவியர் அதிவீர பாண்டியன்; படைப்பின் வழியாக ரகசிய அறிதலைக் கண்டடைய தீவிர முனைப்புகொள்ளும் மைக்கேல் இருதயராஜ் ஆகியோர். இந்தத் தலைமுறைப் படைப்பாளிகளில் நடேஷை உத்வேகத்தின் எக்காளம் என்று கொண்டால், மரியாவை உத்வேகத்தின் உள்ளார்ந்த அமைதி எனக்கொள்ளலாம்.

20-ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 21-ம் நூற்றாண்டின் தொடக்கம் தந்த நம்பிக்கைக்குரிய படைப்பாளிகளென, குல்பர்காவில் ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சீ.வெங்கடேசன், பரோடாவில் முதுகலைப் பட்டம் பெற்ற அபராஜிதன், சென்னையில் முதுகலைப் பட்டம் பெற்ற கே.பெனித்தா பெர்ஸியால், கே.நடராஜன் மற்றும் கிருஷ்ணப்ரியா ஆகியோரைக் குறிப்பிடலாம்.

தமிழ்வெளியில் நவீனக்கலை: சரித்திரமும் சாதனைகளும் - சி.மோகன்

இவர்களுக்குள் முக்கியமானவர் கே.நடராஜன். வனமும் தொன்மமும் கலந்துறவாடும் படைப்புகள் இவருடையவை. பழங்குடி மற்றும் நாட்டார் மரபிலான கதையாடல் தன்மையும், சமகாலப் பிரக்ஞையும் கலந்த பிரத்யேகப் படைப்புலகம் இவருடையது.

ஆக, 80 ஆண்டு கால சரித்திரம் படிந்த தமிழக நவீன ஓவிய வெளி ஒரு வளமான கலைப்பிரதேசம் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், பார்வையாளர்களிடம் இது இன்னமும் அறியப்படாத, விளங்கிக்கொள்ள முடியாத புதிர்ப் பிரதேசமாகவே இருந்து வருகிறது. அழகியல் அனுபவத்தின் முக்கியத்துவம் உணரப்படாமல் இருப்பது நம் அவலநிலை. அறியப்படாதவற்றை அடைவதன் மூலமே நம் காலமும் வாழ்வும் கலாசாரமும் செழுமையடையும். அறியப்படாதவற்றை அடைவதற்கான ஒரே வழி, அறியப்படாதவற்றினூடாக நாம் பயணம் கொள்வதுதான். அந்த வழிதான் நம் வாழ்வின் சாத்தியங்களை விஸ்தரிக்கும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism