Published:Updated:

9 வயதில் திருமணம்... மகனின் மரணம்... தடை தாண்டி சாதித்த முதல் பெண் மருத்துவர் ஆனந்தி! #GoogleDoodle

எனக்குப் பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனாலும், நான் இந்த 100 ரூபாயை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்' சுதந்திரப் போராட்ட வீரரான பாலகங்காதர திலகர், ஆனந்தி கோபால் ஜோஷி என்கிற பெண்ணுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை. யார் இந்த ஆனந்தி கோபால் ஜோஷி? 

9 வயதில் திருமணம்... மகனின் மரணம்... தடை தாண்டி சாதித்த முதல் பெண் மருத்துவர் ஆனந்தி! #GoogleDoodle
9 வயதில் திருமணம்... மகனின் மரணம்... தடை தாண்டி சாதித்த முதல் பெண் மருத்துவர் ஆனந்தி! #GoogleDoodle

PC: Wikimedia Commons

'நீங்கள் எத்தனை தடைகளைத் தாண்டி விடாமுயற்சியோடு சாதித்தீர்கள் என்பதை நான் அறிவேன். நவீன காலத்தில் இருக்கும் தலைசிறந்த பெண்களில் நீங்களும் ஒருவர். உங்களுக்குப் பணம் தேவைப்படுகிறது என்று தெரிந்துகொண்டேன். நான் ஒரு பத்திரிகை ஆசிரியர். எனக்குப் பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனாலும், நான் இந்த 100 ரூபாயை உங்களுக்கு அளிக்க விரும்புகிறேன்'

சுதந்திரப் போராட்ட வீரரான பாலகங்காதர திலகர், ஆனந்தி கோபால் ஜோஷி என்கிற பெண்ணுக்கு எழுதிய கடிதத்தின் வரிகள் இவை. யார் இந்த ஆனந்தி கோபால் ஜோஷி? 

இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். அவர் வாழ்ந்த காலங்களில் பெண்கள் பள்ளிப் படிப்பு படிக்கவே அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெண் அடிமைத்தனம் இந்தியாவில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த காலம். மகாராஷ்ட்ரா மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள கல்யாண் என்ற இடத்தில், 1865-ம் ஆண்டு பிறந்தார் யமுனா (ஆனந்தியின் இயற்பெயர்). யமுனாவின் குடும்பம் வசதி படைத்தது. ஆனால், ஒரு கட்டத்தில் எதிர்பாராவிதமாக நிலங்கள், சொத்துகளை இழந்தார்கள். குடும்பத்தின் வறுமையைப் போக்க அப்போதிலிருந்த ஒரே எளிய வழி, தங்கள் வீட்டுப் பெண் குழந்தைகளை வசதியானவர்களுக்குத் திருமணம் செய்துகொடுத்துவிடுவது. யமுனாவுக்கும் அப்படியே நடந்தது. அவரைவிட 20 வயது மூத்தவரான கோபால் ராவ் ஜோஷிக்கு, 9 வயதிலேயே மனைவியாகச் சென்றார் யமுனா.

கல்யாண் பகுதியில் தபால்துறை கிளார்க்காகப் பணியாற்றிக்கொண்டிருந்த கோபால் ராவுக்கு, கொல்கத்தாவுக்கு மாற்றலானது. தன் மனைவி யமுனா பெயரை, ஆனந்தி என்று மாற்றியதும் அவரே. 14-ம் வயதில், அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார் ஆனந்தி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீண்ட நாள் நிலைக்கவில்லை. பிறந்த ஒரு நாளிலேயே இறந்துவிடுகிறது. காரணம், குழந்தையின் உடல்நிலையைச் சரிசெய்ய அங்கே போதிய வசதிகள் இல்லை. அதுவே, ஆனந்தியின் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக மாறியது. 

ஆனந்திக்குக் கணவர் கோபால் உறுதுணையாக நின்று, மருத்துவம் படிக்க ஊக்குவிக்கிறார். எழுதப் படிக்கவே தெரியாதவர் ஆனந்தி. எனவே, மராத்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கணவரே எழுதப் படிக்கக் கற்பிக்கிறார். பிறகு, பென்சில்வேனியாவில் உள்ள பெண்கள் மருத்துவக் கல்லூரியில் ஆனந்திக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தது. ’ஒரு பெண் கடல் தாண்டி செல்வதா?’ என ஆனந்தியின் குடும்பமும்  சமூகமும் அழுத்தம் கொடுத்தது.

PC: Wikipedia

அப்போது, ஆனந்திக்குப் பக்கபலமாக இருந்தது கணவர் மட்டுமே. துணிவுடன் சென்றார். 1886-ம் ஆண்டு, மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்தார். வெளிநாட்டில் மருத்துவம் படித்த இந்தியாவின் முதல் பெண் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார். இதில், மற்றொரு சிறப்பு உண்டு. ஆனந்தியுடன் மருத்துவம் படித்த கை ஒகாமி ( Kei Okami) என்ற ஜப்பானிய பெண்ணும், தாபாத் இஸ்லாம்பூலி ( Tabat Islambooly) என்ற சிரியா பெண்ணும் அந்தந்த நாட்டின் முதல் மருத்துவ பெண்மணிகள்.

மருத்துவம் முடித்து இந்தியா திரும்பிய ஆனந்தியை, அன்றைய கோல்ஹாபூர் மன்னர் வரவேற்று, அல்பர்ட் எட்வர்டு மருத்துவமனையின் மருத்துவராகப் பணியில் அமர்த்தினார். ஆனால், சில மாதங்களிலேயே காசநோயால் பாதிக்கப்பட்டு, 1887 பிப்ரவரி 26-ம் தேதி மரணம் அடைந்தார், ஆனந்தி. லக்னோவில் உள்ள சமூக அறிவியல் ஆராய்ச்சி மற்றும் ஆவண மையம், ஒவ்வோர் ஆண்டும், மருத்துவ துறையில் சாதிப்பவர்களுக்கு ஆனந்தி பாய் ஜோஷி விருது வழங்குகிறது. அமெரிக்காவின் பெண்ணிய எழுத்தாளரான கரோலின் வெல்ஸ் ஹெலை டால், 1888-ம் ஆண்டில், ஆனந்தி கோபால் ஜோஷியின் சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.

இன்று அவருடைய 153வது பிறந்தநாள். மிகக் குறைந்த நாளே மருத்துவம் புரிந்தாலும், மருத்துவத்தின் வரலாற்றுப் பக்கத்தில் ஆனந்தி கோபால் ஜோஷியின் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்!