இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 12

ந்தியாவில்  சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. சிகிச்சைக்கு வருபவர்களுக்கு இணையாக, தங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதுகூட தெரியாமல் வாழ்பவர்கள் எண்ணிக்கையும் அதிகம். சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்காமல்போகும்போது கண், சிறுநீரகம், நரம்பு, கால், இதயம் என்று உடலில் உள்ள உறுப்புக்கள் பாதிக்கப்படும். சர்க்கரை நோயால் ஏற்படக்கூடிய விளைவுகளும் செலவும் அதிகம் என்பதால், இதை ‘ஹை ரிஸ்க்’ நோய் என்று காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரத்தியேக பாலிசிகள் கிடையாது. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்ல பாலிசி கிடைப்பது கடினமானதாக இருந்தது. ஆனால், அதிகரித்துவரும் போட்டியின் காரணமாக, தற்போது சில நிறுவனங்கள் சர்க்கரை நோய்க்கு எனப் பிரத்யேக பாலிசிகளை வெளியிட்டுள்ளன. முதலில், ‘ஸ்டார் ஹெல்த்’ நிறுவனம் ‘டயாபடீஸ் சேஃப்’ என்ற பெயரில் சர்க்கரை நோயாளிகளுக்கான முழுமையான பாலிசியை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து இப்போது நான்கைந்து நிறுவனங்கள் சர்க்கரை நோயாளிகளுக்கான பாலிசியை அளிக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் பொது மருத்துவக் காப்பீடு எடுக்கும்போது நிராகரிக்கப்பட வாய்ப்பு அதிகம். சர்க்கரை நோய் உள்ளதை மறைத்து மருத்துவக் காப்பீடு எடுத்தால், பிற்காலத்தில் க்ளெய்ம் கிடைக்காமல் போய்விடும். அப்படியே, காப்பீடு கிடைத்தாலும் உடனடி கவரேஜ் கிடைக்காது. சில ஆண்டுகள் காத்திருப்புக் காலம் இருக்கும். இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க சர்க்கரை நோய்க்கான பிரத்தியேக பாலிசியை எடுத்துக்கொள்வது நல்லது. இந்த பாலிசியிலேயே அவர்களுக்கு மற்ற நோய்களுக்கான கவரேஜும் கிடைத்துவிடும். ஒவ்வொரு நிறுவனமும் சில வரையறைகளை வைத்திருக்கின்றன. எனவே, பாலிசி வாங்கும்போது முழுமையாகப் படித்து, விளக்கம் பெற்று அதன் பிறகு எடுப்பது நல்லது.

இன்ஷூரன்ஸ் இப்போ ஈஸி - 12

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐ.சி.ஐ.சி.ஐ புரொடென்ஷியல்

‘டயாபடீக் கேர்’

25 வயது முதல் 60 வயது வரை பாலிசி எடுக்கலாம். டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு மட்டும் பாலிசி வழங்கப்படும். பாலிசிகள், மூன்று லட்சம், ஐந்து லட்சம் மற்றும் 10 லட்சம் என்ற அளவில் வழங்கப்படுகின்றன. பாலிசி எடுத்து ஒரு வருடத்துக்குப் பிறகு சர்க்கரை நோய் கண்டறியப்பட்டால், அவர்கள் 100 சதவிகிதத் தொகையைப் பெறலாம். 6-12 மாதங்களில் கண்டறியப்பட்டால், 50 சதவிகிதம் என்ற அளவில் வழங்கப்படும். பாலிசி எடுத்து ஆறு மாதங்களுக்குள் கண்டறியப்பட்டால், ப்ரீமியம் கட்டிய அளவுக்கு காப்பீடு வழங்கப்படும். பாலிசி காலம் ஐந்து ஆண்டுகள். பாலிசி எடுத்ததில் இருந்து நான்கு மற்றும் எட்டாவது மாதங்களில் பாலிசிதாரர்களுக்கு ஹெச்.பி.ஏ.1சி மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனை இலவசமாக நடத்தப்படும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவைக் குறைத்து, கட்டுக்குள்வைத்திருந்தால் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் ப்ரீமியம் தொகையில் குறைப்பு செய்யப்படும்.

ஸ்டார்ஹெல்த்

‘டயாபடீக் சேஃப்’

டைப் 1 மற்றும் டைப் 2 சர்க்கரை நோய்களுக்கு அளிக்கப்படுகிறது. 18 முதல் 65 வயது வரை எடுக்கலாம். ஏற்கெனவே சர்க்கரை நோய் உள்ளவர்களும் எடுக்கலாம். 50 ஆயிரம் முதல் ஐந்து லட்சம் ரூபாய் வரை பாலிசி கிடைக்கிறது. தனிநபர், ஃபுளோட்டர் என்று இருவகையிலும் கிடைக்கிறது. பாலிசி வாங்கிய முதல் நாளில் இருந்தே செயல்பாட்டுக்கு வருகிறது. 100 சதவிகித ரெஸ்டோரேஷனும் உண்டு. மற்ற பாலிசிகளைப்போல வருமானவரி விலக்கு உண்டு. டி.பி.ஏ மூலமாக இல்லாமல் நேரடியாக க்ளெய்ம் செட்டில்மென்ட் செய்யப்படுகிறது. 400-க்கும் மேற்பட்ட டேகேர் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

ரிலிகேர் ஹெல்த் இன்ஷூரன்ஸ்

‘கேர் ஃப்ரீடம்’


18 வயதில் இருந்து எடுக்கலாம். உச்ச வயது வரம்பு இல்லை. டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதிகபட்சம் ஐந்து லட்ச ரூபாய் வரை பாலிசி அளிக்கப்படுகிறது. தனிநபர் அல்லது ஃபுளோட்டர் (ஆறு நபர்கள் வரை) என இருவகையிலும் கிடைக்கிறது. வாழ்நாள் முழுக்கப் புதுப்பிக்கலாம். டேகேர் சிகிச்சைகளும் இதில் வழங்கப்படுகின்றன.

அப்போலோ ம்யூனீச்

‘எனர்ஜி’


டைப் 2 சர்க்கரை நோயாளிகளுக்கு, 18 முதல் 65 வயது வரை பாலிசி கவரேஜ் அளிக்கப்படும். கோல்டு, சில்வர் என்று இரண்டு வகையில் பாலிசி வருகிறது. 24 மணி நேரத்துக்கு மேல் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது கவரேஜ் அளிக்கப்படும். 144 வகையான டேகேர் சிகிச்சைகளுக்கு கவரேஜ் அளிக்கப்படும். உடல்உறுப்புத் தானமாகப் பெறப்பட்டு அறுவைசிகிச்சை செய்யப்படும்போதும் கவரேஜ் கிடைக்கும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்து, நல்ல முறையில் பராமரித்து வந்தால் அவர்களுக்கு 25 சதவிகிதம் வரை ப்ரீமியம் தொகையில் தள்ளுபடி அளிக்கப்படும். இதில் காத்திருப்புக் காலம் இல்லை. இரண்டு லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை பாலிசி அளிக்கப்படுகிறது.

- தொடரும்