Published:Updated:

ஓவர் க்ளாமர்... நீளமான படம்... ஆங்காங்கே டைரக்டர் டச்..! - ரசிக்க வைக்கிறதா ’ரங்கஸ்தலம்’?

தெலுங்கில் ராம் சரண் தேஜா மற்றும் சமந்தா நடித்து வெளிவந்திருக்கும் 'ரங்கஸ்தலம்' படத்தின் திரை விமர்சனம்...

ஓவர் க்ளாமர்... நீளமான படம்... ஆங்காங்கே டைரக்டர் டச்..! - ரசிக்க வைக்கிறதா ’ரங்கஸ்தலம்’?
ஓவர் க்ளாமர்... நீளமான படம்... ஆங்காங்கே டைரக்டர் டச்..! - ரசிக்க வைக்கிறதா ’ரங்கஸ்தலம்’?

மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி அநியாயம் செய்யும் ஒரு கிராமத்தலைவன், அவனை எதிர்த்துநின்று நியாயம் கேட்கும் இரு சகோதரர்கள். இதுவே `ரங்கஸ்தலம்' படத்தின் ஒரு வரிக்கதை.

சகோதரர்கள் குமார்பாபு, சிட்டிபாபுவாக `ஈரம்' ஆதி மற்றும் ராம் சரண். ரங்கஸ்தலத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு மோட்டாரில் நீர் உறிஞ்சிக் கொடுக்கும் 'படிக்காத மெக்கானிக்கல் இன்ஜினியர்' ராம் சரண். ஆனால், அவரின் கேட்கும்திறன் குறைபாட்டால் ஊர்மக்களுக்கு அவர் `சவுண்டு இன்ஜினியர்'. 80'கள் ஸ்டைல் பூப்போட்ட சட்டை, மடித்து கட்டிய லுங்கி, அடர்ந்த தாடி... என்று கிராமத்து இளைஞன் லுக்கில் பட்டாசாக இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் பெர்ஃபெக்‌ஷன், காதல் காட்சிகளில் குட்டி குட்டி ரியாக்‌ஷன் என சிட்டிபாபு பாத்திரத்தில் பக்காவாக பொருந்தியிருக்கிறார்.

ராம் சரணின் அண்ணன் குமார்பாபுவாக ஆதி, டக் இன் செய்த சட்டை, மூக்கு கண்ணாடி, சவரம் செய்த முகம் என படித்த இளைஞனின் லுக்கில் இவரும் நன்றாகவே பொருந்தியிருக்கிறார். ரௌத்திரம், காதல், பாசம் என எல்லா உணர்ச்சிகளையும் தெளிவாக கடத்தியிருக்கிறார். சில இடங்களில் நாயகனின் கதாபாத்திரத்திரத்தையே தூக்கிச் சாப்பிடும் கதாபாத்திரத்தின் `வெயிட்'டை உணர்ந்து நடித்திருக்கிறார்.

கறுப்பு நிறத்தழகியாக சமந்தா! முகத்திற்கு லிட்டர் லிட்டராக எண்ணெய் வாங்கி பூசியிருக்கிறார்கள். படம் முழுக்க துறுதுறுவென அதேநேரம் சில இடங்களில் நிறைவான நடிப்பையும் தந்திருக்கிறார். என்ன க்ளாமர்தான் கொஞ்சம் ஓவர்! சமீபகாலமாக கோலிவுட் ஹீரோக்களிடம் ஒரண்டை இழுத்துக் கொண்டிருக்கும் ஜெகபதிபாபுதான் படத்தின் வில்லன். அங்கெல்லாம் என்ன செய்தாரோ, அதையேத்தான் இங்கேயும் செய்கிறார். தாறுமாறான பாத்திரவடிவமைப்பு, அதை இன்னுமே வேற லெவலில் நடித்துக் கொடுத்திருக்கலாம் பாபுகாரு! முக்கியமான கதாபாத்திரத்தில் பிரகாஷும் ராஜும் நடித்திருக்கிறார்.

மூன்று மணிநேரம் படம். ஆனால், முப்பது மணி நேரம் பார்த்த ஃபீலிங்கைத் தருகிறது. வழக்கமாக சுகுமார் படங்களின் திரைக்கதையில் இருக்கும் புத்திசாலித்தனம், இந்தப் படத்தில் ரொம்பவே மிஸ்ஸிங். ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் `இவர்தான் இன்னாரு, இவர்தான் அப்படி சொன்னாரு' என அறிமுகப்படுத்துவதிலேயே முக்கால் மணி நேரத்தை ஓட்டிவிடுகிறார்கள். அலுப்பு தட்டுகிறது! 

நாயகனின் அம்மாவையும் தங்கையையும் தவிர மற்ற எல்லா பெண் கதாபாத்திரங்களையும் க்ளாமராகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். `ஜிகேலு ராணி...' பாடல் எல்லாம் உச்சக்கட்டம். அதுவும் அந்தப் பாடல் படத்தின் ஓட்டத்தை வேறு தடுக்கிறது. இரண்டாம் பாதியில் அயிட்டம் டான்ஸ் வைத்தே ஆகவேண்டுமா என அக்கட தேசத்து இயக்குநர்கள் யோசித்தல் நலம்.

80'களில் நடக்கும் கதைக்களம். அதை யதார்த்தமாக, ரொம்பவே நுணுக்கமாக கலை இயக்குநரின் உதவியோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். சோளக்காட்டில் திரியும் பாம்போடு வில்லனை கனெக்ட் செய்தது, சமந்தா வீட்டுக்கு ராம் சரண் செல்லும் காட்சி, ஜெகபதிபாபுவின் பெயரை வைத்து காட்டியிருக்கும் மாஸ் என ஆங்காங்கே சுகுமாரின் டச்.

ரத்னவேலுவின் ஒளிப்பதிவு படத்தின்  மிகப்பெரும் பலம். இரவில் சோளக்காட்டுக்குள் நடக்கும் சண்டைக்காட்சியை அவ்வளவு நேர்த்தியாக, வித்தியாசமாக படம் பிடித்திருக்கிறார். க்ளாஸ்! தேவிஸ்ரீபிரசாத்தின் பின்னணி இசை, படம் சொல்லவரும் உணர்வுகளை உணரவைப்பதில் உதவி செய்கிறது. `ரங்கம்மா மங்கம்மா...' பாடல்  அட்டகாசம். 

காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமிடையே நடக்கும் தர்மயுத்தம் கதையை, தனக்கான பாணியில் புதிதாக செய்ய முயற்சித்து, அதில் பாதிக் கிணறு மட்டுமே தாண்டியிருக்கிறார் இயக்குநர் சுகுமார். `ரங்கஸ்தலம்', நிச்சயம் பொறுமையை சோதிக்கும்.