Published:Updated:

"இந்தியாவுக்காக ஓடுகிறேன்!”

"இந்தியாவுக்காக ஓடுகிறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
"இந்தியாவுக்காக ஓடுகிறேன்!”

ஆர்.குமரேசன்

"இந்தியாவுக்காக ஓடுகிறேன்!”

2012-ம் ஆண்டு, 18 வயதுக்கு உட்பட்டோருக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயம். இந்தியாவின் முன்னணி வீரர்களுக்கு நடுவில் நின்றிருந்தாள் அவள். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த ஒடிசாவைச் சேர்ந்த அந்த சின்னப் பெண் அவ்வளவு வேகமாக ஓடி சாதனை படைப்பாள் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அவளுடைய பெயர் டூட்டி சந்த். பந்தயத் தூரத்தை 11.8 விநாடிகளில் கடந்து, தேசிய அளவில் சாதனை படைத்தாள். பயிற்சியாளர்கள், டூட்டியை அள்ளிக்கொண்டனர். `இதோ இந்தியாவின் எதிர்காலம்' என தடகள வட்டாரங்களை அதிரவைத்தார் டூட்டி. ஆனால், இரண்டே ஆண்டுகளில் டூட்டி சந்தின் வாழ்க்கை திசைமாறியது.

2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நெருங்கிக்கொண்டிருந்த நேரம். பயிற்சிக்குப் பிறகு பயிற்சி... என மைதானத்திலேயே தவமாகக்கிடந்தார். அந்தச் சமயத்தில்தான் `டூட்டி சந்துக்குத் தடை!' என அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது இந்தியத் தடகள சங்கம். `காமன்வெல்த் போட்டியில் பங்கேற்க முடியாது' என்றும் அறிவித்தது. டூட்டி சந்த் உடைந்துபோனார்.

இந்தியத் தடகள உலகமே திகைத்துபோனது. `என்ன ஆச்சு இந்தப் பெண்ணுக்கு... ஏன் தடை?' என, கேள்வி மேல் கேள்விகள் எழுந்தன.

`டூட்டி, பெண் அல்ல. அவரது உடலில் ஆணுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருக்கின்றன. அது சர்வதேசத் தடகள சங்கத்தின் விதிமுறைகளை மீறும் வகையில் இருக்கிறது. எனவே அவரால் போட்டிகளில் பங்கேற்க முடியாது' என்றது தடகள சங்கம். தன் எதிர்காலம் இனி ஓட்டம்தான் என வாழ்ந்துகொண்டிருந்த வீராங்கனையை, இந்த அறிவிப்பு உடைத்துப்போட்டது.

இருப்பினும், டூட்டி சளைக்கவில்லை. தடகளத்தின் மீது அவர்கொண்ட காதல், தடையை எதிர்த்துப் போராடவைத்தது. பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் உதவிகளை நாடினார். நீதிமன்றங்களைத் தேடி ஓடினார். டூட்டிக்கு ஆதரவாக எண்ணற்ற அமைப்புகள் திரண்டன. ஸ்விட்ஸர்லாந்தின் லாசானே நகரில் உள்ள சர்வதேச விளையாட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அடுத்து வந்த நாட்கள் டூட்டிக்கு ரணமாகின. இருந்தும் போராடினார்.

``ஆண்களுக்கான ஹார்மோன்கள் அதிகமாக இருந்ததால்தான் தடகள வீராங்கனைகள் களத்தில் வெற்றி பெறுகிறார்கள்' எனக் கூறுவதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் போதுமான அளவில் நிரூபிக்கப்படவில்லை' என நீதிமன்றம் சொல்ல, டூட்டிக்கு தடகளத்தில் இருந்த தடை நீங்கியது.

தடை நீங்கி வந்த டூட்டி, முன் எப்போதையும்விட பலம் வாய்ந்தவளாக, உறுதியானவளாக மாறியிருந்தார். முன்பைவிடவும் இன்னும் அதிக உத்வேகத்துடன் ஓட ஆரம்பித்தார். இப்போது ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள தகுதி பெற்றுவிட்டார்.

"இந்தியாவுக்காக ஓடுகிறேன்!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒலிம்பிக்கின் ஹைலைட்டே 100 மீட்டர் ஓட்டப் பந்தயம்தான். உலகமே உற்றுநோக்கும் ஓட்டம் அது. அந்த 10 விநாடிகளும் உலகம் நின்றுதான் மீண்டும் இயங்கும். புல்லரிக்கவைக்கும் அத்தகைய உச்சக்கட்ட போட்டிக்குத்தான் டூட்டி சந்த் தகுதி பெற்றுள்ளார். 1980-ம் ஆண்டில் மாஸ்கோ ஒலிம்பிக்கில் பி.டி. உஷா 100 மீட்டர் ஓட்டத்துக்குத் தகுதி பெற்றிருந்தார். அதற்குப் பிறகு இப்போதுதான் இன்னோர் இந்தியர் ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் ஓடப்போகிறார்.

See Also: மெஸ்ஸியின் கடைசி கிக்!

ஒடிசாவைச் சேர்ந்த டூட்டியின் தந்தை, ஒரு நெசவாளி. வீட்டில் நான்கு பெண் குழந்தைகள். கல்விக்கே வழி இல்லாத வறுமை. எனினும் டூட்டியின் மூத்த சகோதரி திக்கித்திணறி பல்கலைக்கழக அளவிலான தடகள வீராங்கனையாகிவிட்டார். அக்கா பயிற்சி எடுப்பதைப் பார்த்துப் பார்த்து டூட்டிக்கும் தடகள ஆசை வந்துவிட்டது. கனவும் பெரியதாக இருந்தது. ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதுதான் அவரது ஒரே இலக்கு. இதோ இப்போது அதை எட்டிவிட்டார். அவருடைய அடுத்த இலக்கு பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது.

ஒலிம்பிக்கில் `ஹீட்ஸ்' எனச் சொல்லப்படும் தகுதி சுற்றுகளைத் தாண்டி 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் கடுமையான சவாலும் டூட்டிக்கு இருக்கிறது.

"இந்தியாவுக்காக ஓடுகிறேன்!”

``2014-ம் ஆண்டில் நான் இந்திய கேம்ப்பில் இருந்து வெளியேற்றப்பட்டேன். ஒவ்வோர் இடத்திலும் அவமானப்படுத்தப்பட்டேன்; வீழ்த்தப்பட்டேன். ஒருகட்டத்தில் எல்லாமே முடிந்துவிட்டதாக நினைக்கும் அளவுக்குத் தள்ளப்பட்டேன். ஆனால், இப்போது எழுந்து நிற்கிறேன். இதோ ஒலிம்பிக்கில் ஓடக் கிளம்பிவிட்டேன். இந்தியத் தாய், தனக்காக ஓடும்படி என்னைத் தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஆம். நான் எனக்காக ஓடவில்லை. இந்தியாவுக்காக ஓடுகிறேன்'' என ரியோ ஒலிம்பிக்குக்கு தகுதிபெற்றதும் கண்கலங்கியபடி சொன்னார் டூட்டி.

டூட்டிக்கு இப்போது தேவை, மக்களின் அன்பும் வாழ்த்துகளும்தான்!