Published:Updated:

வெயில் காலத்தில் ஹேர் கலரிங் வேண்டாமே கேர்ள்ஸ்!

வெயில் காலத்தில் ஹேர் கலரிங் வேண்டாமே கேர்ள்ஸ்!
வெயில் காலத்தில் ஹேர் கலரிங் வேண்டாமே கேர்ள்ஸ்!

ழகுக்காகவும், இளநரையை மறைப்பதற்காகவும் ஹேர் கலரிங் செய்வதென்பது பெண்கள் மத்தியில்  தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. அப்படிச் செய்துகொள்ளப்படும் ஹேர் கலரிங் கெமிக்கல்களால் ஆனது என்பது நம் எல்லோருக்கும் தெரியும். ''வெயில் காலத்தில் ஹேர் கலரிங் செய்துகொண்டு வெளியில் போனால் முடி ட்ரை ஆகிவிடும்'' என்கிற இன்ட்ரோவோடு பேசினார், சென்னையைச் சேர்ந்த அழகுக்கலை நிபுணர் கீதா அசோக்.

'' பொதுவாகவே, வெயிலில் அதிகம் அலைந்து வேலைப் பார்க்கிற பெண்களின் தலைமுடியைப் பார்த்தீர்களென்றால், அதில் பளபளப்பும், கறுப்பு நிறமும் மற்றவர்களைவிடக்  குறைவாகவே இருக்கும். எண்ணெய் வைத்து, தலைமுடியை முறையாகப் பராமரிப்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வருவதில்லை என்பது வேறு விஷயம். 

நம்முடைய தலைமுடியை நுண்ணோக்கி மூலம் பார்த்தால், ஒவ்வொரு முடியும் தனித்தனியாக இல்லாமல், 3 அல்லது 4 முடிகள் சேர்ந்த ஒரு கொத்தாகத்தான் இருக்கும். இப்படி கொத்துக் கொத்தாக தலைமுடியை இணைத்து வைத்திருக்கும் பகுதியை 'கியூட்டிகிள்' என்போம். ஹேர் கலரிங் செய்த தலைமுடியோடு அடிக்கடி  வெயிலில் சென்றால், இந்தக் கியூட்டிகிளானது, பிரிய ஆரம்பிக்கும். இதனால் முடிக்கற்றைகளானது தனித்தனி முடிகளாகப் பிரிந்து, உலர்ந்து போய்விடும். ஹேர் கலரிங் செய்தவர்களின் தலைமுடி நார் போல இருப்பதற்கு இதுதான் காரணம். முடி இந்த நிலைக்கு வந்தபிறகு, அதை பழையபடி ஈரப்பதத்துடன் மீட்டெடுப்பது மிக மிகக் கடினம். அதனால், இளநரையை மறைக்க ஹேர் கலரிங் செய்பவர்கள், வால் நட் ஓடுகளை வைத்து இயற்கையிலான முறையில் வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்துகொள்ளலாம்'' என்றவர், அதற்கான செய்முறையையும் சொன்னார். 

''கறுப்பு நிற வால் நட்டின் ஓட்டை அரைத்து எடுத்தப் பொடி, கரிய பவளப் பொடி (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்), அவுரி இலைப்பொடி, கரிசலாங்கண்ணிப் பொடி ஆகியவற்றை சமஅளவு எடுத்து பீட்ரூட் சாற்றில் குழைத்து, தலைமுடியில் தடவி, இரண்டு மணி நேரம் ஊற வைத்து விடுங்கள். பிறகு நீங்கள் பயன்படுத்துகிற ஷாம்பூவால் முடியை அலசி, உலர்த்தினால், டார்க் பிரவுன் நிறத்தில் உங்கள் தலைமுடி மாறியிருக்கும். 

கறுப்பு நிற வால்நட்டின் ஓட்டுக்கு, மருதாணி இலையைப் போலவே முடியின் இளநரையை மறைக்கிற தன்மை உண்டு. ஆனால்,  சில கடைகளில் பிரவுன் நிற வால் நட் ஓடுகளின் தோலை கருக வறுத்து ஏமாற்றி விற்பனை செய்கிறார்கள். இந்த விஷயத்தில் மட்டும் கவனமாக இருங்கள். 

ஒரு சிலருக்கு இப்போதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இளநரை எட்டிப் பார்க்க ஆரம்பிக்கும். இவர்கள் ஹேர் கலரிங் செய்யும்போது, இளநரை மறைக்கப்படும். ஆனால், அவை அருகில் இருக்கும் நல்ல முடிகளில் படுவதால், முடிகளுக்கு நிறத்தைக் கொடுக்கும் நிறமிகள் தங்கள் செயல்பாட்டை நிறுத்திவிடக் காரணமாக அமைந்துவிடும். நல்ல முடிகள் பாழாக நாமே வழி ஏற்படுத்திக்கொடுக்கிறோம் என்பது பலருக்குத் தெரிவதில்லை.

இதற்குப்பதில், அவர்கள். ஈவினிங் பிரிம் ரோஸ் ஆயில் கேப்சூல் மூன்றை எடுத்துக்கொள்ளுங்கள். அதை இரண்டாக கட் செய்து, அதனுள் இருக்கும் எண்ணெயோடு ஒரு டீஸ்பூன் அவுரி இலைப்பவுடர், ஒரு டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் சேர்த்து நன்கு கலந்து, தலைமுடியில் தடவி 2 அல்லது 3 மணி நேரம் ஊற வையுங்கள். நரைமுடியை நாற்பது வயதுவரை தள்ளிப்,போட்டு விடலாம்'' என்கிறார் கீதா அசோக்.