Election bannerElection banner
Published:Updated:

கரீம் பாயும் செஃப் பைசலும் உஸ்தாத் ஹோட்டலில் செய்த மேஜிக்! - மலையாள கிளாசிக் - 4

கரீம் பாயும் செஃப் பைசலும் உஸ்தாத் ஹோட்டலில் செய்த மேஜிக்! - மலையாள கிளாசிக் - 4
கரீம் பாயும் செஃப் பைசலும் உஸ்தாத் ஹோட்டலில் செய்த மேஜிக்! - மலையாள கிளாசிக் - 4

எழுத்தாளர் மணி எம் கே மணி வாரந்தோறும் விகடன் இணையதளத்தில் எழுதும் மலையாள கிளாசிக் தொடரின் நான்காவது பகுதி... இந்த வாரம் உஸ்தாத் ஹோட்டல் திரைப்படத்தைப் பற்றி எழுதியிருக்கார்...

படம் பார்க்காத ஒரு விவரமுள்ள நண்பன் உஸ்தாத் ஹோட்டல் படம் எப்படி என்று கேட்டால் சற்றும் தாமதிக்காமல் அதை நான் ஒரு உலகப்படம் என்று சொல்லி விட முடியும். தொடங்கும் போதே அந்தப் படத்தின் விரிவு அப்படி. பைசல் படத்தினுடைய ஹீரோவின் பெயர். பைசல் பிறப்பதற்கு முன்னமே அவனது கதை தொடங்கி விடுகிறது என்று மம்முகோயாவின் பின்னணிக் குரலில் அதன் காட்சிகளைப் பார்க்கும் போது நமக்குப் புரியும். அந்த அத்தியாயத்தின் பல மடிப்புகளிலும் வளர்ந்துதான் பைசல் ஒரு நாயகனாகி நமது கண் முன்னால் நிற்பான். சொத்துகளைப் பரிபாலிக்க ஓர் ஆண் பிள்ளை பிறக்கும் என்று அப்பா காத்திருக்க நான்கு பெண்களுக்கு அப்புறம் பிறக்கிறான் பைசல். சகோதரிகளுக்கு நடுவே சமையலறையில் வளர்கிறான். காட்சிகளும் மணமும் சப்தமும் நாவறியும் ருசியுமாய் வாலிபனாகிற பைசல் எம்.பி.ஏ இன்னபிற படிக்காமல் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிக்க சுவிட்சர்லாந்துக்குப் பறக்கும் போது அவனது மனம் என்னவாயிருக்கும் என்பது நமக்கு விளங்கி விடும். 

பைசல் யாருக்குள்ளேயும் நிற்கிற தரத்தில் அந்த உலகத் தன்மை தொடங்கி விடுகிறது என்கிறேன்.

அங்கே அவன் ஒரு பெண்ணிடம் ஈடுபாடு கொண்டு அவளுடன் பிசினஸ் செய்ய பிராக்டிக்கலான திட்டங்கள் வகுத்து அடுத்தகட்டத்தை எப்படி நகர்த்துவது என்கிற நேரத்தில்தான் அக்காள்கள் நான்கு பேரும் சின்னதாய் மோசடி செய்து ஊருக்குத் திரும்ப வைக்கிறார்கள். 

இந்தப் படத்தின் எழுத்தாளர் அஞ்சலி மேனன். 

அரதப் பழசில் ஒண்ணு ரெண்டு மூணு என்று சொல்லாமல் சட்டென்று ஒரு அத்தியாயமாய் திரும்புகிற திரைக்கதையை நாம் இங்கே பார்க்க முடியும். பைசல் விமானத்தை விட்டு இறங்கியவுடன் அவன் கல்யாணம் கட்டப் போகிற மணப்பெண் வீட்டுக்கு அழைத்து செல்லப்படுகிறான். சொந்த ஊருக்குத் திரும்பி ஐந்து நட்சத்திர ஹோட்டலைக் கட்டி அதன் முதலாளியாகப் போகிற ஒரு வாலிபனை வளைக்க போட்டி இருக்காதா? அதிசுந்தரியான சஹானா எதிரே அமர்ந்திருக்கிறாள். படித்தவள். பேசுவதற்கு சங்கோஜமில்லாதவள். `நீ உன் ஹோட்டலை கட்டி முடிக்கும் போது நானே இன்டீரியர் டெக்ரஷனை பார்த்துக் கொள்கிறேனே’ என்று உரிமையுடன் கேட்கவும் செய்கிறாள். 

நான் சமைக்கக் கற்றுக்கொண்டு வந்திருக்கிறேன். ஹோட்டல் மேனேஜ்மென்ட் எதுவும் நோ. செப் என்கிறான் பைசல். 

பைசலின் அப்பா அப்துல் ரசாக்தான் ஒரு சமையல்காரனாக இருந்ததை மறக்க விரும்புபவர். 
பைசலைப் போட்டு அடித்தும் கிள்ளியும் கூச்சலிடுகிறார். `உன்னை இந்தக் கேவலத்தைக் கற்றுக்கொள்ளவா பணம் அனுப்பிப் படிக்க வைத்தேன்’ என்று பொருமுகிறார். இன்றைய நவீன மனிதனின் உயிர் ஆதாரங்களாய் இருக்கும் வங்கிக் கார்டுகளையும் பாஸ்போர்ட்டையும் குழந்தை போல பிடுங்கி வைத்துக் கொள்கிறார். செப் என்ற அடுத்த நிமிடம் அந்தப் பெண் காணாமல் போய் பெரும் சச்சரவு உண்டாகி அபவாதப் பேச்சு கேட்டு வந்த இருவரும் தங்களுடைய பிடிவாதத்தில் நிற்கிறார்கள். லண்டனுக்குச் சென்று தனது காதலியுடன் ரெஸ்டாரன்ட் நடத்த விரும்புகிற பைசல் அப்பனின் அஞ்சு நட்சத்திரச் சோற்றுக்கடை கனவை ஊத்தி மூடி, இரவோடிரவாக வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

உஸ்தாத் ஹோட்டல் இப்படியே நகர்ந்து செல்லும் ஒரு கதைதானா என்றால், கிடையாது.

ஏனெனில் உள்ளடுக்குகள் வைத்திருக்காத ஒரு கதை மக்களுக்கு நெருக்கமாவதில்லை.
இந்தியாவில் இந்துக்களை தவிர்த்த சினிமா சொற்பம். முஸ்லிம்களைப் பற்றி என்றால் துழாவ வேண்டும். இருவருக்குள்ளில் பகை வளர்த்து அரசியல் கொழிக்கிறது. முதலில் நாம் ஒருவனை அறிய வேண்டும் என்றால் கூட அவனது வாழ்வு, கலாசாரம் எல்லாவற்றையும் அறிய வேண்டாமா? என்னைப் போலவே அவனுக்கும் சிரிப்புண்டு, அழுகையுண்டு, வலியுண்டு, வாழ்க்கையுண்டு என்கிற படிப்பினை இருந்திருந்தால் யாரால் இந்தப் பிளவை உண்டாக்கியிருக்க முடியும். இப்படத்தில் எல்லோரும் காண்பது வேற்று மத மனிதரையல்ல, சக மனிதரை. அதுதான் கலையின் ஸ்பரிசம். முதலில் அந்த உணர்வை கான்ஷியசாக வைத்திருப்பதாலே இது முழு உலக சினிமாவாய் மாறுகிறது எனலாம். இத்தனைக்கும் இந்தக் கதை நிகழுவதெல்லாம் குறிப்பிட்ட பிராந்தியத்தில்தான். அங்குதான் பைசல் வந்து சேருகிறான். அவனது தாத்தாவிடம். 

உஸ்தாத் ஹோட்டலின் கரீம் பாய்.

அவனை அவர் அறிகிறார்.

மெதுவாக அவரால் அவன் செதுக்கப்படுகிறான். ஏனெனில் பைசலின் முதிர்ந்த கனிந்த இன்னொரு வடிவமே அவனது தாத்தா கரீம் பாய். அவர் உண்மையில் வந்து போகிற ஜனக் கூட்டத்துடன் அசலான வணிகம் செய்து கொண்டிருக்கவில்லை. சாப்பாடு போடுகிற சுகத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார். பணியாளர்களின் குடும்பப் பிரச்னைகளை எல்லாம் பார்த்துக் கொள்வதற்காகதான் அந்த நிறுவனமே நடந்துகொண்டிருக்கிறது. பைசல் எடுபிடி வேலை செய்து எச்சில் பிளேட்டை எடுத்து மேஜையைத் துடைத்து லோக்கல் பரோட்டோ போட்டு கேஷில் உட்கார்ந்தாலும் தாத்தாவிடம் பிணக்கு இல்லை. வந்து எள்ளி நகையாடி பொருமி விட்டு செல்லும் தந்தையிடம் இதெல்லாம் ஒரு வித பிராக்டீஸ்தான் என்று சொல்லி அனுப்புகிறான்.

தாத்தா, எனது அப்பா ஏன் இப்படி?

நான் அவனது அப்பாவாயிருக்க வேண்டிய நேரத்தில் கற்றுக்கொள்ளும் வேட்கையில் ஊர் சுற்றிக்கொண்டிருந்து விட்டேன் என்று கரீம் பாய் தனது தலைமுறையைத் தெளிவுபடுத்துவது படத்தை வேறு தரத்துக்குக் கொண்டு செல்லுகிறது. உடனடியாய் பைசலின் வெளிநாட்டுக் காதலி ஸ்கிப் ஆவதும் சஹானாவைச் சந்திக்க நேர்ந்து அவளுக்கு நடக்கவிருக்கிற நிச்சயதார்த்தம் பற்றி அறிவதும் ஒரே மூச்சில் நடந்து தாத்தா தனது அந்தக் காலத்துக் காதலைப் பற்றி சொல்லும் போது புகழ் பெற்ற அந்த வரிகள் தாத்தாவினால் சொல்லப்படுகின்றன.

ஒவ்வொரு சுலைமானிலும் ஓர் இத்திரி மொகபத்து.

படம் இதுதான். ஒரு கறுப்பு சாயா போடுவதென்றால் கூட அதில் கொஞ்சமாவது காதல் வேண்டும். வயிறை நிறைக்க எவராலும் முடியும். மனதை நிறைக்கும் போது அதன் பெயர் உணவு. 

பைசல் கரீம் பாயின் சிபாரிசில் ஸ்டார் ஹோட்டலில் வேலைக்குச் சேருகிறான். சஹானா பைசலை அவமானப்படுத்திய ஆளுடன் கல்யாணத்தை தவிர்த்து விட்டு அவனுடன் வந்து இணைகிறாள். உஸ்தாத் ஹோட்டல் கடனில் இருக்க, வங்கி ஆட்கள் அந்த இடத்தை அபகரித்து யாருக்குத் தாரை வார்க்க சதி செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதறிந்து பைசல் முன்னிற்க உஸ்தாத் ஹோட்டல் தடைகளை எல்லாம் மீறி புது வடிவம் கொள்கிறது. என்ன வந்தும் என்ன நடந்தும் பைசல் இப்போது பிரான்ஸிற்கு கிளம்பத் தயாராகையில் தாத்தா சிறிய ஹார்ட் அட்டாக்கில் படுக்கிறார்.

படம் இந்த இடத்தில் நிற்கிறது.

கரீம் தாத்தாவைப் போல பிழைக்கத் தெரியாத ஆளாய் பைசல் இருந்து விட முடியாது என்பது நமக்குத் தெரியும். அதே நேரம், முடியும் தருவாயில் உள்ள  அவரது ஏக்கம் பொருட்படுத்தப்படக் கூடாமல் முடிவது தானா. படுக்கையில் இருக்கிற கரீம் மதுரைக்குச் சென்று பணத்தை கொடுத்து விட்டு வர வேண்டும் என்கிற உதவியை மட்டும் தனது பேரனிடம் கேட்கிறார். ஏற்கெனவே அவர் அவ்வப்போது அந்தப் பணத்தை மதுரைக்கு அனுப்பும் வழக்கம் சொல்லப்பட்டிருந்தாலும், அதற்கான காரணம் பற்றி திரைக்கதை சொல்லாமல் நழுவியிருக்கும்.

கரீம் ஒரு கடிதத்தை கொடுத்து அனுப்புகிறார்.

மதுரையில் பைசல் சந்திக்கிற ஜெயபிரகாஷிடம் பணத்தையும் கடிதத்தையும் கொடுக்கிறான் அவன்.

உங்களிடம் இந்தக் கடிதத்தை கொண்டு வருகிறவன் என் பேரன். அவனுக்கு எப்படி சமைக்க வேண்டும் என்று நான் கற்றுக் கொடுத்திருக்கிறேன். எதற்கு சமைக்க வேண்டும் என்பதை நீங்கள் கற்றுக்கொடுங்கள். இதுதான் கடிதத்தின் செய்தி. பைசலுக்கு அந்த மனிதர் ஜெயபிரகாஷ் அதை எப்படிக் கற்றுக் கொடுக்கிறார் என்பதை நான் சொல்லப் போவதில்லை. இம்முறை பார்க்கிற போதும் அந்தக் காட்சிகள் என்னை உலுக்கின. தப்பித் தவறி படம் பார்க்காதவராய் இருந்தால் உங்களையும் உலுக்கும். நம்மை எல்லாம் உலுக்குகிற அது பைசலை மட்டும் அசைக்காமல் இருந்து விடுமா என்ன?
கரீம் பாய் சென்று விட்டார்.

பைசலும் சஹானாவும் உம்மரும் அவரது பிள்ளைகளுமாய் சேர்ந்து ஹோட்டலை திறக்கிறார்கள். வருடங்கள் முடிந்து ஓர் உற்சவ இரவில் உம்மர் என்கிற மம்முகோயா மீடியாவிடம் சொல்லிக்கொண்டிருந்த கதை முடிகிறது. ஹாப்பி எண்ட் ? அதுதான். 

சோறுக்கு இருக்கிற அர்த்தத்தை சொல்லி முடித்திருக்கிறார்கள். பைசலின் அப்பா சங்கமத்தில் இருக்கிறார். பைசலின் சகோதரிகளும் கூட துபாயில் பிரியாணி ஹோட்டல் நடத்துகிறார்களாம். பைசலே கூட தனது மனைவியுடன் மீடியாவிற்கு மிகவும் பாந்தமாய் பேட்டி கொடுக்கிறான். தனது தாத்தாவை நினைவு கூருகிறான்.

படத்தின் உருவாக்கத்தில் நான் மிக முக்கியமாய் கருதுவது முதலில் திரைக்கதையைதான். அதற்கு தோதாக எல்லாவற்றையும் வடிவமைத்திருந்தார்கள். உதாரணமாக ஒளிப்பதிவு ஒரு கலாசாரத்தின் வர்ணங்களை, ஒரு பிராந்தியத்தின் ஆத்மாவைக் கொண்டு வந்திருந்தது என்று சொல்ல வேண்டும். இசையும் கூட தனது எல்லைகளை வளைத்தவாறு இருந்தது. படத்தில் நடித்தவர்களைப் பற்றி விவரிக்க வேண்டுமா என்ன, திலகன் ஒருவருடைய அந்தப் புன்னகை போதாதா. அவரது சில சொற்கள் மந்திரம் போல நின்று கொண்டவை. முஸ்லிம் இன மக்களின் கதைகளை கேரள சினிமா முன்னமே சொல்லியிருந்த போதும் அனைவரும் கவனம் கொள்ளும் விதமாய் வந்த படம் இதுவென்று சொல்ல வேண்டும். அந்தத் தேர்வினை செய்ததற்கே இயக்குநரை மெச்சிக் கொள்ள முடியும். அப்புறம் ஒரு நெஞ்சைத் தொடுகிற சித்திரத்தை முழுமை செய்ததற்காக.

இறுதியாக.

கரீம் பாய் விட்டு விடுதலையான ஒரு நாடோடியின் மனம் கொண்டவரல்லவா? அவருக்கு இன்னும் இன்னும் ஏதாவது தெரிய வேண்டியது இருக்கக் கூடும். ஏகாந்தமாய் அவர் பாலைகளைக் கடந்து சென்றவாறு இருக்கிறார். கடவுளைத் தேடிப் போகிற யாத்ரீகர்களுக்கான அடுப்புகள் எரிந்தவாறு இருக்கின்றன. வயிற்றைக் குளிரப் பண்ணுகிற மனித தர்மம் அணைந்து போவதில்லை. பயணமும் அலைச்சலும் தொழுகையும் பரவசமுமாய் நீள்கிற நாள்களில் இன்று ஒரு மசூதியில் எத்தனையோ துறவிகளுக்கிடையே அவரும் உட்கார்ந்து பிரியாணியைச் சுவைத்துக்கொண்டிருக்கிறார்.   

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு