Published:Updated:

``ஃபிட்னெஸுக்கும் ஆயுளுக்கும் சம்பந்தமில்லை’’ -நடிகர் ஷாம் #FitnessTips

ஆக்‌ஷன் அவதாரம் எடுத்திருக்கும் நடிகர் ஷாம், அவரின் ஃபிட்னெஸ் ரகசியங்களைப் பகிர்ந்துகொள்கிறார்.

``ஃபிட்னெஸுக்கும் ஆயுளுக்கும் சம்பந்தமில்லை’’ -நடிகர் ஷாம் #FitnessTips
``ஃபிட்னெஸுக்கும் ஆயுளுக்கும் சம்பந்தமில்லை’’ -நடிகர் ஷாம் #FitnessTips

`12பி' யில் ஹீரோவாக அறிமுகமானவர் ஷாம். `இயற்கை' `லேசா லேசா' `ஏபிசிடி' என அழகான, அன்பான, காதல், குடும்பக்கதைகளில் மட்டுமே நடித்துவந்தவர், `புறம்போக்கு என்கிற பொதுவுடைமை', `6 மெழுகுவத்திகள்' போன்ற படங்களில் நடிப்பைத்தாண்டி, உடலுக்கு நிறைய உழைப்பைக்கொடுத்திருந்தார் ஷாம். மெலிந்த தேகம், வீங்கிய கண்ணம், பட்டினி கண்கள் என '6 மெழுகுவத்திகள்' ராமின் கதாபாத்திரம், ஷாமுக்கான வேறொரு பரிமாணத்தை தந்தது. தற்போது `பார்ட்டி' கேங்க்ஸ்டர் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஷாம் சினிமாத்துறைக்குள் வந்து, ஏறத்தாழ 18 வருடங்கள் ஆகிவிட்டன. வருடங்கள் ஏற ஏற, கதாபாத்திரங்கள் மீதான அவரது டெடிகேஷன் கூடிக்கொண்டேதான் செல்கிறது. அந்த வகையில், ஆச்சர்யப்பட வைத்த அவரது ஃபிட்னெஸ் பற்றி சில கேள்விகளை அவரிடமே கேட்டோம்...

``உங்க ஃபிட்னெஸ் ஷெட்யூல் என்ன?"

``ஃபிட்னெஸ், என்னோட வாழ்க்கை முறையோட கலந்துவிட்ட ஒரு விஷயம். அதேநேரத்துல, எல்லாத்தையும் ப்ரஃபஷனலா செய்வேன். தினமும் காலையில வாக்கிங் போறது என்னோட ரொட்டீன். ஆனா, `ட்ரெட் மில்' யூஸ் பண்றது பிடிக்காது. காரணம், ஒரு அளவுக்கு மேல ட்ரெட்-மில் முட்டிக்கு நல்லதில்ல. ஞாயிற்றுக்கிழமை தவிர மத்த எல்லா நாளும் ஜிம்முக்கு போய் வொர்க்-அவுட் பண்ணுவேன். ஜாக்கிங், ஒரு நாள் விட்டு ஒரு நாள் சைக்ளிங் அல்லது ஸ்விம்மிங், வாரத்துல மூணு நாள் தசைக்கான எக்ஸர்சைஸ் - இதெல்லாம்தான் என்னோட ஷெட்யூல். ஒவ்வொரு நாளையும் பொறுத்து, அன்றைக்கான பயிற்சி முறைகளைச் செய்வேன். என்ன பயிற்சியா இருந்தாலும், காலையில ஒரு மணி நேர `எக்சர்சைஸ் டைம்' அதுக்கானது. அதுல எந்த மாற்றமும் இருக்காது. சைக்கிளில் ஃப்ரெண்ட்ஸ் கூட, மகாபலிபுரம் வரைக்கும் கூட போயிருக்கேன்... அவ்ளோ க்ரேஸ் அது மேல! சாப்பாடைப் பொறுத்தவரைக்கும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் நோ ரூல்ஸ். ப்ரன்ச், பிடிச்ச சாப்பாட்டை சாப்பிடுவேன். மத்த நாள்கள் எல்லாமே, சப்பாத்தி, சிக்கன், ப்ரோட்டீன் ஷேக் மாதிரியான உணவுகள்தான்."

``சினிமாக்கான ஃபிட்னெஸ் வேற, வாழ்க்கைக்கான ஃபிட்னெஸ் வேறயா?"

``நிச்சயமா வேறுவேறுதான். என்னோட தினசரி வாழ்க்கையில வொர்க்-அவுட் டெக்னிக்ஸ், சைக்ளிங், ஸ்விம்மிங்-ன்னு நிறைய பயிற்சிகள் செஞ்சாலும், சினிமாவுக்கான பயிற்சி முறைகளும், உழைப்பும் அதிகம். படத்துக்குன்னு வரும்போது, கூடுதலா உழைப்பேன். ஒவ்வொரு படத்துக்கும், கதாபாத்திரத்துக்கும் ஏத்த மாதிரி என்னோட பயிற்சி முறைகளும் மாறும். என்னோட இத்தனை வருஷ சினிமாப் பயணத்துல, ரொம்ப சிரமப்பட்டு உடலை வருத்தி செஞ்ச படம், `6 மெழுகுவத்திகள்'. படத்தோட கடைசியில, பலவீனமா தெரியனும்ன்னு இயக்குநர் சொல்லியிருந்ததால அளவுக்கு அதிகமா உழைக்க வேண்டியிருந்துச்சு. படத்தோட கடைசிப் பகுதியில அது தெரியும். ஏறத்தாழ மூணு வாரத்துக்கு, ஆப்பிள் தவிர வேறெதுவுமே சாப்பிடாம இருந்தேன். அந்த இடைவெளியில, சரியான தூக்கமும் இருந்தது கிடையாது. 13 கிலோ வரைக்கும் குறைச்சுட்டேன். படப்பிடிப்பெல்லாம் முடிஞ்சு, அடுத்த 10 நாளைக்கு எழுந்திருக்காம தூங்கிதான் என்னோட ரெகுலர் வாழ்க்கைக்குள்ளையே வந்தேன்னா பாத்துக்கோங்க...! `புறம்போக்கு என்கிற பொதுவுடைமை' படத்துல போலீஸ் அதிகாரியா நடிச்சிருந்தேன். அதுக்காக, தசைப் பயிற்சிகளெல்லாம் பண்ணி அந்த ரோல்க்கு ஏத்த மாதிரி ஃபிட்டானேன். ஸோ, படத்துக்குப் படம் ஃபிட்னெஸ் மாறும். அது, சினிமாவுக்காக உழைக்கிறது. இன்னும் சொல்லனும்னா, சினிமாவுக்காக நான் உழைக்கிறது, பெர்சனல் லைஃப் பயிற்சி முறைகளைக் காட்டிலும் ரெண்டு மடங்கு அதிகமா இருக்கும். தினசரி வாழ்க்கையில எக்ஸர்சைஸ் செய்யறது, ஜஸ்ட் நம்மளை ஃபிட்டா வெச்சுக்கத்தானே..."

``ஃபிட்னெஸ் வாழ்க்கைக்கு எவ்ளோ முக்கியம்?"

``எந்த ஒரு வேலையிலயும், ஒருத்தருடைய பெர்சனாலிட்டியை வெச்சுதான் அவங்க எப்படி பட்டவங்கன்னு முடிவு பண்ணுவாங்க. அந்த பெர்சனாலிட்டிக்கு, ஃபிட்னெஸ் முக்கியம்ன்னு நான் நினைக்கிறேன். தினமும் உடற்பயிற்சி செய்றது மூலமா, உடம்பு மட்டுமல்லாம, மனசும் தெம்பாகிடும். வேலையில உற்சாகமா இருக்கவங்களை, யாருக்குத்தான் பிடிக்காது சொல்லுங்க....? ஃபிட்னெஸ் ஆயுளைக்கூட்டுமான்னு எனக்குத் தெரியலை, ஆனா அது கொடுக்குற பாசிட்டிவ் எண்ணங்கள், வாழ்க்கை முறையை அழகாக்கும்"

``உடற்பயிற்சி செய்யாதவங்களுக்கு உங்க அட்வைஸ்..."

``என்னோட தினசரி நாள்ல, குறைஞ்சபட்சம் ஒரு மணி நேரமாவது ஜிம்மில் செலவு பண்ணிடுவேன். என்னைக்கேட்டா, எல்லாருமே தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்யணும். ஒவ்வொரு நாளுடைய கடைசியிலயும் உடம்புல கலோரிகள் சேரும். அதெல்லாம் உடம்புல அப்படியே இருந்துச்சுன்னா, கொழுப்பா மாறி ஏகப்பட்டப் பிரச்னைக்கு வழிவகுக்கும். வியர்வை உடம்புல இருந்து வெளியேறிட்டாலே உடம்புல இருக்க கொழுப்பு, கலோரி, நெகடிவ் எனர்ஜி, ஸ்ட்ரெஸ் எல்லாமே தானா வெளியேறிடும். எக்ஸர்சைஸ் மாதிரியான சிறந்த ஸ்ட்ரெஸ் பஸ்டர் வேறெதுவும் கிடையாது. மன அமைதிக்காக என்னென்னவோ பண்ற நம்ம மக்கள், எக்ஸர்சைஸ் பண்ணலாம்...

சில பேர் ஃபிட்டா இருந்தா அதிக நாள் வாழலாம்ன்னு நினைக்கிறாங்க. எத்தனையோ ஃபிட் பெர்சனாலிட்டீஸ், ஸ்ட்ரெஸ் ப்ராப்ளம் காரணமா இறந்திருக்காங்க. எந்தக் கெட்டப்பழக்கமும் இல்லாத சிலபேர், சின்ன வயசுலயே தவறிடுவாங்க. அது, தலையெழுத்து. என்னப் பொறுத்தவரைக்கும், தினமும் எக்ஸர்சைஸ் செய்றது நம்மளுடைய உடம்பை கஷ்டப்படுத்தாம இருக்கத்தானே தவிர, ஆயுளை நீடிக்க இல்ல. சிலர் டயட்ன்னு சொல்லி உணவுமுறையில கஷ்டப்பட்டு சாப்பாட்டு முறைகளை மாத்திக்கிறாங்க. சில சின்னப்பசங்கக்கூட ப்ரோட்டின்காக ஏதேதோ சாப்பிடறது பாக்கறேன்.  அது அவசியமில்லாதது. பாடிசார்ட் (BodyChart) கணக்குப்படி உயரத்துக்கும், உடம்புக்கும் ஏத்த மாதிரி உடல் எடையை மெயின்டெய்ன் பண்றதுக்குதான் எக்ஸர்சைஸ். ஆயுளை நீடிக்க இல்ல. உடல் எடையைப் பொறுத்தவரைக்கும், தசைக்கான எடை; கொழுப்புக்கான எடைன்னு ரெண்டு முக்கியமான விஷயம் இருக்கும். தசையுடைய எடை அதிகமா இருக்குறது பிரச்னை இல்ல.... ஆனா, கொழுப்பு அதிகமாகிடக் கூடாது"