Published:Updated:

புளிசாதம் சாப்பிடலாம்... வாட்ஸப் சாட் பண்ணலாம்... அ.தி.மு.க-வினருக்கு உண்ணாவிரத யோசனைகள்!

ஒருநாள் உண்ணாவிரதத்தில் உணவு இடைவெளியும் விட்டு தயிர்ச்சோறு, தக்காளிச்சோறு மற்றும் வெஜிடபிள் பிரியாணியை தயிர் பச்சடியோடு வெளுத்து வாங்கியிருக்கின்றனர் அ.தி.மு.க-வினர். அதிலும் வெஜிடபிள் பிரியாணியில் பீஸ் இல்லையென சண்டை பிடித்ததையெல்லாம் கேள்விபட்டால், கடுப்பில் உண்ணாவிரதமே உண்ணாவிரதம் இருக்கும். எனவே, இப்படி அசிங்கப்படாமல் உண்ணாவிரதமிருக்க அ.தி.மு.க-வினருக்கு சில யோசனைகள்...

புளிசாதம் சாப்பிடலாம்... வாட்ஸப் சாட் பண்ணலாம்...  அ.தி.மு.க-வினருக்கு உண்ணாவிரத யோசனைகள்!
புளிசாதம் சாப்பிடலாம்... வாட்ஸப் சாட் பண்ணலாம்... அ.தி.மு.க-வினருக்கு உண்ணாவிரத யோசனைகள்!

ருநாள் உண்ணாவிரதத்தில் உணவு இடைவேளையும்விட்டு தயிர்சோறு, தக்காளிசோறு மற்றும் வெஜிடபிள் பிரியாணியை தயிர்பச்சடியோடு வெளுத்துவாங்கியிருக்கின்றனர் அ.தி.மு.க-வினர். அதிலும் வெஜிடபிள் பிரியாணியில் பீஸ் இல்லை என சண்டை பிடித்ததையெல்லாம் கேள்விபட்டால், கடுப்பில் உண்ணாவிரதமே உண்ணாவிரதம் இருக்கும். எனவே, இப்படி அசிங்கப்படாமல் உண்ணாவிரதம் இருக்க அ.தி.மு.க-வினருக்கு சில யோசனைகள்... 

காலையில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தால்தானே பிரேக்ஃபாஸ்ட், லன்ச், ஈவ்னிங் ஸ்நாக்ஸ் என, பல தடைகள் குறுக்கே பாயைப் போட்டு படுக்கின்றன. அதனால், உண்ணாவிரதத்தையே பாயைப் போட்டு படுத்து இரவில் நடத்திவிடலாம். எந்தப் பிரச்னையும் வராது ரத்தத்தின் ரத்தங்களே!

அ.தி.மு.க-வின் அசுர பலமும் அஸ்திவாரமும் ஆதி அந்தமும் ஸ்டிக்கர், ஸ்டிக்கர், ஸ்டிக்கர் மட்டுமே. எனவே, நிவாரண பொருள்களின் மீது ஒட்ட, மணமக்களின் நெற்றியில் ஒட்ட மற்றும் இன்னபிற இடங்களில் ஒட்ட அடித்துவைத்திருந்த ஸ்டிக்கர்களை அள்ளிப்போட்டு கொண்டுவந்து, உண்ணாவிரதமிருக்கும் கழகத்தினரின் வாயிலேயே ஒட்டிவிடலாம். உணவு உண்ண மட்டுமல்ல, கொட்டாவி விடக்கூட வாயைத் திறக்க முடியாது. இறுதி நேரத்தில் ஒட்டிய ஸ்டிக்கரில் சிறு ஓட்டையைப் போட்டாலே போதும். அதில் ஸ்ட்ராவை செருகி சாத்துக்குடி ஜூஸ் ஊற்றி உண்ணாவிரதத்தை வெற்றிகரமாய் முடித்துவிடலாம்.

உண்ணாவிரதம் என்ற பெயருக்கு முன்னால் தயிர்சாதம், தக்காளிசாதம், பிரியாணி போன்ற வார்த்தைகளைக் கோத்துவிட்டு, `தயிர்சாதம், தக்காளிசாதம், பிரியாணி உண்ணாவிரதம்' என பேனர் அடித்து பந்தலில் தொங்கவிடலாம். உணவு இடைவேளையின்போது  அவை தவிர்த்து மற்ற வெரைட்டி ரைஸ்களை விரட்டி விரட்டி வெளுத்துவிட்டு, யாராவது கேள்வி கேட்டால் `இது தயிர்சாதம், தக்காளிசாதம், பிரியாணி உண்ணாமல் இருக்கும் விரதம்தான், புளியோதரையோ, தேங்காய்சாதமோ உண்ணாமல் இருக்கும் விரதமல்ல. அப்படி நாங்கள் சொல்லவும் அல்ல' என பதிலுக்கு லாஜிக் குத்து குத்தலாம்.

உலகமே வியத்தகு விஞ்ஞானி ஒருவர் கட்சியில் இருக்கும்போது, இந்த மேட்டரை விஞ்ஞானரீதியாகவே கையாளலாம். `ஒருநாள் முழுக்க வாயில் பச்சைத்தண்ணி படாமல் உண்ணாவிரதம் இருக்க என்ன செய்யலாம்?' என செல்லூர் ராஜுவிடம் கேட்டால், `கால் வீசம் கால்சியம் சல்ஃபேட்டை சால்னாவில் கலந்துவிட்டு, பரோட்டாவோடு புரட்டி அடித்தால் இரண்டு நாள்களுக்குப் பசிக்காது' என ஏதாவது ஆலோசனை வழங்குவார். அந்தச் செய்முறையை செயல்முறைப்படுத்தி உண்ணாவிரத்தில் ஜெயித்துக்காட்டலாம். இதை உண்மை என நம்பி உண்மையிலேயே அ.தி.மு.க-வினர் சல்ஃபேட் சால்னாவை பரோட்டாவோடு புரட்டிச் சாப்பிட்டு ஏற்படும் விளைவுகளுக்கு கம்பெனி பொறுப்பல்ல.

யோகா சித்தர் டாக்டர் மானோஸ் எழுதிய `முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்க்கை வரலாறு' புத்தகத்தையும் முதலமைச்சர் பழனிசாமியின் பொன்மொழிகள் புத்தகத்தையும் உண்ணாவிரத மேடையில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கலாம். படிப்பவர்கள் நிச்சயம் சோறு, தண்ணி எல்லாம் மறந்து புத்தகத்தில் மூழ்கிவிடுவார்கள். உண்ணாவிரதத்தையும் உணவு இடைவேளையின்றி வெற்றிகரமாக முடித்துவிடலாம். அப்படியும் சாப்பாடு ஞாபகம் வந்தால் `துணை முதல் - அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்க்கை வரலாறு' புத்தகத்துக்கு பாயின்ட்ஸ் எடுக்க ஆரம்பிக்கலாம். `ஓ.பி.எஸ் அவர்கள் செய்த சாதனைகள் முப்பதை வாட்ஸப்பில் எழுதி முதல் ஆளாக சென்ட் பட்டனை க்ளிக்குபவர்கள் சாப்பிட கிளம்பலாம்' எனச் சொன்னாலே போதும். ரத்தத்தின் ரத்தங்கள் அனைவரும் உண்ணாவிரதம் முடிந்த பிறகும் `பாயின்ட் வரட்டும்' எனக் காத்திருப்பார்கள். எப்பூடி!