Published:Updated:

”இது தேவையில்லாத போராட்டம்!” - 2002-ல் ரஜினி! காவிரியும் கோடம்பாக்கமும்

”இது தேவையில்லாத போராட்டம்!” - 2002-ல்  ரஜினி!  காவிரியும் கோடம்பாக்கமும்
”இது தேவையில்லாத போராட்டம்!” - 2002-ல் ரஜினி! காவிரியும் கோடம்பாக்கமும்

2002-ம் ஆண்டு அக்டோபர் மாதம். குறுவை சாகுபடியை இழந்துவிட்டு, சம்பா பயிரைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தன டெல்டா மாவட்டங்கள். காவிரி நீரை கர்நாடகம் திறந்துவிடாததால் தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது.

மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு, ஆட்சி நடத்திக்கொண்டிருந்தது. அப்போது தமிழகத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்தார். விவசாயம் முற்றிலும் முடங்கிப்போன நிலையில், டெல்டா மாவட்டங்களில் அன்றைக்கு நேரடியாக ஆய்வு மேற்கொண்டது `காவிரி கண்காணிப்புக் குழு'. அப்போதைய மத்திய நீர்வளத்துறைச் செயலாளர் கோஸ்வாமி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில், தமிழக தலைமைச் செயலாளர் சுகவனேஸ்வரும் கர்நாடக தலைமைச் செயலாளர் ரவீந்திராவும் இடம்பெற்றிருந்தனர். விவசாயிகளிடம் கருத்துகளை கேட்டதோடு, மேட்டூர் அணையை ஹெலிகாப்டர்களில் பார்வையிட்டது `காவிரி கண்காணிப்புக் குழு'.

”இது தேவையில்லாத போராட்டம்!” - 2002-ல்  ரஜினி!  காவிரியும் கோடம்பாக்கமும்

கர்நாடகாவிலோ `காவிரி நீரைத் தரக் கூடாது' எனப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தன. மைசூர், மாண்டியா ஏரியாக்களில் தமிழகத்துக்கு எதிராக வன்முறையும், கலவரமும் தலைவிரித்தாடியது. தமிழக வாகனங்கள் தாக்கப்பட்டன. தமிழர் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதே நேரம், தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தன. அப்போது கோலிவுட்டும் தன் பங்குக்கு கோதாவில் குதித்தது.

சினிமா சங்கங்கள் பலவும் இணைந்து, `தமிழர் பாதுகாப்பு அணி' என்ற ஓர் அமைப்பை, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் உருவாக்கினார்கள். 2002 அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று, சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் போட்டது `தமிழர் பாதுகாப்பு அணி'. தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தினர், பெப்சி யூனியன் ஆகியோர் அந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். `சினிமா விருதுகளைத் திருப்பி அளிப்போம். கர்நாடகாவுக்கு நெய்வேலியிலிருந்து போகும் மின்சாரத்தை தடுத்து நிறுத்துவோம்' எனக் கூட்டத்தில் முடிவெடுத்தார்கள்.

காவிரி பிரச்னையில் மத்திய அரசைக் கண்டிக்கும் வகையில், மத்திய அரசு. தமிழக திரையுலகக் கலைஞர்களுக்கு அதுவரை வழங்கிய அனைத்து தேசிய விருதுகளையும் திருப்பித் தந்துவிடலாம் என பாரதிராஜா தலைமையில் நடந்த அந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுத்தார்கள். அதன் பிறகு, `காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்காத வரை, தமிழ்த் திரையுலகினர், மத்திய அரசு அளிக்கும் விருதுகளை ஏற்கக் கூடாது' எனத் தீர்மானம் மாற்றி நிறைவேற்றப்பட்டது. காவிரியில் இன்றுவரையில் தமிழகத்துக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆனால், ஆண்டுதோறும் மத்திய அரசு அளிக்கும் விருதுகளை தவறாமல் வாங்கிக் கொள்கிறார்கள் தமிழ்த் திரையுலகினர் என்பது தனிக் கதை.

`காவிரி நதி எங்களுக்குத்தான் சொந்தம் எனக் கர்நாடகம் உரிமை கொண்டாடுவதால் நெய்வேலி மின்சாரம் தமிழகத்துக்குத்தான் சொந்தம் என்பதை வலியுறுத்தும் வகையில் 2002-ம் ஆண்டு அக்டோபர் 12-ம் தேதி நெய்வேலியில் மிகப் பெரிய போராட்டம் நடைபெறும். பேரணி நடத்தி, அனல் மின்நிலையத்தை முற்றுகையிட்டு, கர்நாடகத்துக்கு மின்சாரம் வழங்கக் கூடாது எனப் போராடுவோம்.' என இன்னோரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது 'தமிழர் பாதுகாப்பு அணி'

நெய்வேலியில் கர்நாடகத்துக்கு மின்சாரம் தருவதை எதிர்த்து நடிகர்கள் நடத்தும் போராட்டத்துக்குப் பல தரப்பிலிருந்தும் ஆதரவுகள் குவிந்தன. அன்றை தினம் படபிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. தியேட்டர்கள் மூடப்பட்டன. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோர் ஆதரவு கொடுத்தனர். "பாரதிராஜா முயற்சியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு, இருண்டு கிடக்கும் மக்களின் நம்பிக்கைக்குக் கிடைத்த ஒளிக் கீற்று. எங்கே சினிமாக்காரர்கள் நம்மை ஒதுக்கிவிட்டார்களோ, நம்மை கைவிட்டுவிட்டார்களோ என்று சந்தேகத்துக்கு மக்கள் தள்ளப்பட்டிருந்தனர். ஆனால், தமிழ்த் திரையுலகினர் ஒன்று கூடி ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்களுக்கு பா.ம.க. முழு ஆதரவு தரும்'' என ராமதாஸ் அறிக்கை விட்டார்.

சினிமா நடிகர்களை எதிர்த்து வந்த ராமதாஸிடமிருந்து இப்படியான ஆதரவு கிடைத்தது ஆச்சர்யம். போராட்டம் நடக்கும் நெய்வேலி ஏரியா பா.ம.க-வின் கோட்டை. அதனால் அந்த ஆதரவு முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது.

தமிழகத்தைப் பார்வையிட்ட `காவிரி கண்காணிப்பு குழு', `தமிழகத்தில் கடுமையான வறட்சி நிலவுவதால் டெல்டா ஏரியாவில் 11 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள விவசாயத்தை காப்பாற்ற 63 டி.எம்.சி. நீர் உடனடியாகத் தேவைப்படுகிறது' என உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 4-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.

இப்படியான சூழலில் நடிகர் ரஜினியிடமிருந்து எதிர்வினை கிளம்பியது. `கர்நாடகத்துக்கு மின்சாரம் தரக் கூடாது' என நெய்வேலியை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தப்படும் எனத் தமிழ்த் திரையுலகம் அறிவித்த நிலையில், "இது தேவையில்லாத போராட்டம்" எனச் சொல்லி அதிர வைத்தார் ரஜினி.

(தொடரும்)