Published:Updated:

'தமிழ்நாட்டை தனிநாடாக்கப் பார்க்கிறார்கள்..!' சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய ட்விஸ்ட் - கோடம்பாக்கமும் காவிரியும் #FlashBack

'தமிழ்நாட்டை தனிநாடாக்கப் பார்க்கிறார்கள்..!' சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய ட்விஸ்ட் -  கோடம்பாக்கமும் காவிரியும் #FlashBack
'தமிழ்நாட்டை தனிநாடாக்கப் பார்க்கிறார்கள்..!' சுப்பிரமணியன் சுவாமியின் அன்றைய ட்விஸ்ட் - கோடம்பாக்கமும் காவிரியும் #FlashBack

''நெய்வேலியை முற்றுகையிடும் தமிழ் திரையுலகினர் நடத்தும் போராட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்'' என ரஜினி வெளியிட்ட அறிக்கை அனலை கிளப்பிக் கொண்டிருந்தது.

பாரதிராஜாவின் பதிலடியால் ரஜினிக்கு எதிராக திரையுலகம் திரள ஆரம்பித்தது. ரஜினி ரசிகர்களே பல இடங்களில் அவருக்க எதிராகப் போராட்டங்களை நடத்தினர். ரஜினியின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டன. இதை ரஜினியே எதிர்பார்க்கவில்லை

இந்த நிலையில் நெய்வேலி போராட்டம் தொடர்பாக பாரதிராஜாவும் ரஜினிகாந்தும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். ''காவிரி பிரச்னையில் கர்நாடகவுடன் நாங்கள் சண்டைக்கு நிற்கவில்லை. நம் எதிர்ப்பை தெரிவிக்கவே நெய்வேலி போராட்டத்தை கையில் எடுத்திருக்கிறோம். காவிரி நீருக்காக விவசாயிகள், அரசியல் கட்சிகள், மாணவர்கள், வியாபாரிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் போராட்டத்தை வாபஸ் பெற முடியாது. போராட்டத்துக்கு ஆதரவு தர வேண்டும்" என ரஜினியிடம் பாரதிராஜா கேட்டுக் கொண்டார்.

இப்படிப்பட்ட சூழலில் நடிகர் சங்க கூட்டத்தின் பொதுச் செயலாளர் சரத்குமார் தலைமையில் கூடி நெய்வேலி போராட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. அப்போது நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் லண்டனில் இருந்ததால் அவரால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தக் கூட்டத்தில் ரஜினி, கமல், விஜய, அஜித், சத்யராஜ், பிரபு, கார்த்திக், வடிவேலு மனோரமா, ராதிகா, கோவை சரளா, ரேவதி, விந்தியா உள்ளிட்ட நடிகர்கள் பங்கேற்றனர். கன்னட நடிகர்கள் என முத்திரைக் குத்தப்பட்ட அர்ஜூன், முரளி, பிரபுதேவா, பிரகாஷ்ராஜ் போன்றவர்களும் கலந்து கொண்டனர். தனக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியதால் நடிகர் சங்க கூட்டத்தில் ரஜினி பங்கேற்றார்.

கூட்டம் முடிந்த பிறகு, ''12-ம் தேதி நடைபெறும் நெய்வேலி ஆர்ப்பாட்டத்தில் நடிகர் சங்கமும் கலந்து கொள்ளும்'' என சரத்குமார் அறிவித்தார். ''கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமையுண்டு. அதன் அடிப்படையில்தான் ரஜினியும் கருத்து தெரிவித்தார். தற்போதுள்ள உணர்வுகளைப் புரிந்து கொண்டு நெய்வேலி போராட்டத்தில் அவர் பங்கேற்பார்'' என சொன்னார் சரத்குமார்..

ரஜினியும் மீடியாவிடம் பேசினார். ''காவிரி தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும். ஆனால், போராட்டத்தால் ரத்த ஆறு ஓடிவிடக் கூடாது என்பதே என் கருத்து. இருந்தாலும் நடிகர் சங்கத்தின் முடிவுக்குக் கட்டுப்படுவேன். எதனை செய்தாலும் ஒன்றாக இணைந்தே செய்வோம்.'' என்றார்.

''நெய்வேலி போராட்டத்தால் கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு சிக்கல் ஏற்படும்'' என ரஜினி சொல்லியிருந்த நிலையில் அவரின் சொற்களைத்தான் சுப்பிரமணியன் சுவாமியும் சொன்னார். ''விடுதலைப்புலி ஆதரவாளர்கள்தான் நெய்வேலி போராட்டத்தை நடத்த முயல்கிறார்கள். காஷ்மீரைப் போல தமிழ்நாட்டையும் தனி நாடாக்க நினைக்கிறார்கள். அதனால் தமிழ் திரையுலம் நடத்தும் போராட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. போராடுகிறவர்களை பொடா சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.'' என்றார் சுப்பிரமணியன் சுவாமி.

இப்படி போராட்டத்திற்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், தமிழன் என்கிற அடையாளத்தோடு மட்டும் நெய்வேலியில் கூடுவோம். அரசியல் கட்சிகளின் கொடிகளை நெய்வேலி போராட்டத்தில் பயன்படுத்தக் கூடாது'' என அறிவித்தார் பாரதிராஜா. 

''தமிழ்த் திரையுலக சகோதரர்களே கனத்த இதயத்தோடு நீதி கோர நெய்வேலிக்கு அழைக்கிறோம். தமிழ்த் திரை உலகின் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நெய்வேலியில் கண்டன ஆர்பாட்டம் மற்றும் பேரணி நடத்தவுள்ளோம். எங்கள் கிளைகளும், பூக்களும் நகரங்களில் மணந்தாலும், வேர்கள் இன்னும் கிராமங்களில்தான் இருக்கின்றன.

எங்களை வாழ வைத்தவர்களை வாடி நிற்க வைத்துவிட்டு, தமிழனின் வாழ்க்கையையும் வயிற்றையும் கர்நாடக அரசு கருக விடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. நியாயம் கேட்கும் தமிழக அரசையும், தமிழக மக்களையும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையும் அடாவடியாகப் புறக்கணிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்கவே இந்தப் போராட்டத்தை நடத்துகிறோம். அரசியலுக்கு அப்பாற்பட்டு பொது நோக்கோடு, தமிழ் உணர்வின் அடிப்படையில் மட்டுமே, தமிழ்த் திரையுலகினரால் நடத்தப்படுகின்ற இந்தப் பேரணியில், அரசியல் ரீதியான மாறுபட்ட உணர்வுகள் ஏதும் கலந்துவிடக் கூடாது. பேரணியில் கலந்து கொள்ளும் தமிழ்த் திரையுலகினர் கருப்பு பேட்ஜ் மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த அரசியல் மற்றும் பிற அமைப்புகளின் சின்னங்களையோ, கொடிகளையோ பயன்படுத்தக் கூடாது. தமிழர்கள் என்ற அடையாளத்தோடு மட்டும் அங்கு சங்கமிப்போம். முறையான வாசகங்கள் அடங்கிய தட்டிகள் மற்றும் பேனர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.'' என சொல்லியிருந்தார் பாரதிராஜா.

தொடரின் பிற பகுதிகளைப் படிக்க காவிரியும் ரஜினியும் க்ளிக் செய்யவும்