Published:Updated:

இறந்தும் உயிர் வாழ வேண்டுமா? மைண்ட் அப்லோட் செய்துகொள்ளலாம்! #Nectome

நிஜத்தில் மரணத்தை வெல்ல மனிதனால் முடியுமா? இந்தப் பூத உடலை நாம் நிச்சயமாக அழியாமல் காக்க முடியாது. அதற்கான தொழில்நுட்பத்தை குறித்து ஆய்வு செய்வதை விட்டுவிட்டு நம் நினைவுகளை மட்டும் டவுன்லோட் செய்து, இறந்தவுடன் அந்த ஞாபகங்களை வேறொரு ஆரோக்கியமான உடலுக்குச் செலுத்திவிட்டால் என்ன?

இறந்தும் உயிர் வாழ வேண்டுமா? மைண்ட் அப்லோட் செய்துகொள்ளலாம்! #Nectome
இறந்தும் உயிர் வாழ வேண்டுமா? மைண்ட் அப்லோட் செய்துகொள்ளலாம்! #Nectome

ல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ஒருநாள் நடக்கும் சம்பவம் இது. குளிரூட்டப்பட்ட பிணவறைபோல இருக்கிறது அந்த இடம். நிறைய உடல்கள் ஆங்காங்கே பல்வேறு டியூப்கள் பொருத்தப்பட்டுக் கிடக்கின்றன. திடீரென ஓர் உடல் உயிர்த்து எழுகிறது. மருத்துவர்கள், காவலாளிகள் எத்தனை பேர் தடுத்தும் முரண்டுபிடிக்கிறது. சுற்றி இருப்பவர்களை அடித்து துவம்சம்செய்கிறது. 

"போன தடவ கொடூரமா செத்துருப்பான். அதான் அந்த அதிர்ச்சி இன்னும் நெனவுல இருக்கு!" என்று ஒரு விளக்கக் குரல் ஒலிக்கிறது. 

உயிர்த்து எழுந்த உடல், அம்மணமாக, ஆதியில் பிறந்த முதல் மனிதனைப்போல நிற்கிறது. நிற்கிறான். ஏதோ தவறாக இருப்பதாக உணர்கிறான். கண்ணாடி வேண்டுமெனக் கத்துகிறான். ஒரு எவர்சில்வர் ட்ரேவை நீட்டுகிறார்கள். தன் முகத்தை அதில் பார்க்கிறான். ஆனால், அவன் முகம் தெரியவில்லை. மாறாக, வேறு யாரோ ஒருவரின் முகம் தெரிகிறது. அலறுகிறான். எழுந்து...

அந்தக் கதையை இதோடு நிறுத்திக்கொள்வோம். இது, நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகும் 'Altered Carbon' தொடரில் வரும் காட்சி. எதிர்காலத்தில் நடப்பதுபோல சித்திரிக்கப்பட்டிருக்கும் இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் தொடரில், மனிதர்கள் மரணத்தை வென்றுவிட்டனர். இதில், ஒருவரின் மொத்த நினைவுகளையும் மூளையிலிருந்து டவுண்லோட் செய்து வைத்துக்கொள்ள முடியும். அது, தண்டுவடப் பகுதியில் செயற்கையாகப் பொருத்தப்பட்டிருக்கும் 'stack' என்ற எலெக்ட்ரானிக் ஸ்டோரேஜ் டிவைசில் பதியப்படும். எனவே, இங்கே மனித உடலைவிட அந்த 'stack' என்ற பொருளுக்கே மரியாதை. யாரேனும் இறந்துபோனால், கவலைப்படத் தேவையில்லை. அந்த 'stack'-ஐ எடுத்து வேறொரு உடலில் பொருத்திவிட்டால் போதும். பழைய நினைவுகளை மீட்டெடுத்து, மீண்டும் பழைய மனிதனாகவே வாழ முடியும். ஆம், இது மரணத்தை வென்ற மனிதர்கள் கதைதான்.

ஆனால், நிஜத்தில் மரணத்தை வெல்ல மனிதனால் முடியுமா? இந்தப் பூத உடலை நாம் நிச்சயமாக அழியாமல் காக்க முடியாது. அதற்கான தொழில்நுட்பம்குறித்து ஆய்வுசெய்வதை விட்டுவிட்டு, மேலே உள்ள தொடரில் வருவதுபோல நம் நினைவுகளை மட்டும் டவுண்லோட் செய்துகொண்டு, இறந்தவுடன் அந்த ஞாபகங்களை வேறொரு ஆரோக்கியமான உடலுக்கு அப்லோட் செய்துவிட்டால் என்ன? இதைத்தான் மறைந்த எழுத்தாளர் சுஜாதா தனது பேசும் பொம்மைகள் நாவலில் பேசியிருப்பார். இப்போது, கிட்டத்தட்ட அதே திட்டத்துடன், தன்னால் அதைச் செய்ய முடியும் என 'நெக்டோம்' (Nectome) எனும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் களத்தில் குதித்துள்ளது.

இதை, அவர்கள் கூலாக 'Mind Uploading Service' என்கிறார்கள். ஆனால், இது ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. மனத்தளவிலும், உடல் அளவிலும் பல்வேறு வலிகளைப் பொறுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இவர்களின் திட்டத்தை இப்படி விளக்குகிறார்கள். இறக்கும் தருவாயில் இருக்கும் ஒருவரின் மூளையை மட்டும் பதப்படுத்த வேண்டும். அதற்காக, அவரின் ரத்தக் குழாய்களில் எம்பாமிங் (Embalming) ரசாயனம் செலுத்தப்படும். இதைச் செய்யும்போது, அவரின் உயிர் பிரிந்துவிடும். அதன்பின், பதப்படுத்தப்பட்ட மூளையை மேப்பிங் (Mapping) செய்வார்கள். அதாவது மூளையின் நரம்புகள் ஒவ்வொன்றும் எவ்வாறெல்லாம் பின்னிப்பிணைந்து இருக்கின்றன, நியூரான்கள் எனப்படும் நரம்பணுக்கள் எவ்வாறெல்லாம் தொடர்பில் இருக்கின்றன போன்ற தகவல்கள் அப்படியே பிரதி எடுக்கப்படும். இப்படி மூளையின் கடினமான குழப்பம் ஏற்படுத்தும் தொடர்புகளின் மேப்பை 'Connectome' என்று அழைக்கிறார்கள். இதை வைத்து, எதிர்காலத்தில் தங்களால் இறந்தவர்களின் நினைவுகளை மீட்டெடுக்க முடியும் என்கிறார்கள். 

இவர்களை எப்படி நம்புவது? இந்தக் கேள்விக்கு பதிலாக, தங்கள் நிறுவனத்தின் விருதுபெற்ற சாதனை ஒன்றை முன்வைக்கின்றனர். அதில் இவர்கள், ஒரு பன்றியின் மூளையை இதேபோல பதப்படுத்தி, அதன் 'Connectome'-ஐ வெற்றிகரமாகப் பிரதியெடுத்துள்ளனர். இது, இதுவரை யாரும் செய்திடாத சாதனை. இவர்களின் இந்த மனித மூளை ஆராய்ச்சியை அமெரிக்காவின் எம்.ஐ.டி.நிறுவனம் பாராட்டி எழுதி, இந்த ஆராய்ச்சிக்கு உதவ ஒப்பந்தம் போடத் தயாராக இருப்பதாகக் கூற, நெக்டோம் நிறுவனத்துக்கு ஏகப்பட்ட விளம்பரம் கிடைத்துவிட்டது. அது மட்டுமின்றி, முன்னரே இந்த நிறுவனம் அமெரிக்காவின் தேசிய மனநல ஆராய்ச்சி நிறுவனத்திடம் 9,15,000 டாலர்கள் நிதியுதவியும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. எம்.ஐ.டி.போன்ற ஒரு நிறுவனம், இந்த நெக்டோம் போன்ற ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் மேல் ஆர்வம் காட்ட அவர்கள் செய்யும் நூதன ஆராய்ச்சி ஒரு காரணம் என்றாலும், இதன் நிறுவனர்கள் எம்.ஐ.டி-யின் முன்னாள் மாணவர்கள் என்பதும் ஒரு காரணம்.

ஆனால், இந்தச் செய்திகள் வெளியானதும் நெக்டோம் நிறுவனத்துக்கு எந்த அளவுக்கு விளம்பரமும் புகழும் கிடைத்ததோ, அதே அளவு எதிர்ப்பும், பிரச்னைகளும் வந்துள்ளன. காரணம், இவர்களின் ஆராய்ச்சிகுறித்துத் தெரிந்துகொண்ட நரம்பியல் மருத்துவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களில் ஒரு சாரார், இது முட்டாள்தனமான ஆராய்ச்சி என்று பகிரங்கமாக விமர்சனம்செய்துள்ளனர். 
"'Connectome' தகவல்களை எடுத்தது சாதனைதான் அதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அதைவைத்து ஓர் உயிரினத்தின், அதுவும் மனிதனின் நினைவுகளை மீட்டெடுப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று. நம் நரம்பு மண்டலம் எவ்வாறு இணைந்துள்ளது, எந்தெந்த வழியில் மூளையின் உள்ளே தகவல்கள் பரிமாறப்படுகின்றன என்பதற்கும், நம் நினைவுகளுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதே நமக்குச் சரியாகத் தெரியாது. பின்பு, அதை மையமாக வைத்துச் செய்யப்படும் இந்த ஆராய்ச்சியை என்னவென்று எடுத்துக்கொள்ள?" என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

இவ்வாறான அதிருப்திகள் மற்றும் விமர்சனங்களுக்குப் பிறகு, திடீரென எம்.ஐ.டி நிறுவனமும், நெக்டோம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யாமல் நழுவியுள்ளது. இதுகுறித்தும், ஆராய்ச்சிகள்குறித்தும் எழுந்த சர்ச்சை குறித்து நெக்டோம் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராபர்ட் மெக்இன்டயர் விளக்கமளித்துள்ளார்.

"நல்ல ஆரோக்கியத்துடன், உயிரோடு இருப்பவர்களின் மேல் எந்த நிலையிலும் இதை நாங்கள் செய்ய மாட்டோம். நாங்கள் இப்போது ஆராய்ச்சியில் மட்டுமே உள்ளோம். இந்த 'Connectome' மேப்பிங் செய்வது என்பது முதல் அடி மட்டுமே. அதன்மூலமே நினைவுகளைத் திரும்பப் பெற முடியும் என்று நாங்கள் நினைக்கவில்லை. இதுகுறித்து அடுத்தகட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. நியுரோசயின்ஸ் என்பது வினோதமான புதுப்புது ஆராய்ச்சிகளால் வளர்ந்த ஒரு துறை. அப்படிப்பட்ட ஒன்றுதான் இதுவும். எம்.ஐ.டி நிறுவனம் வெளியேறியது வருத்தம் அளித்தாலும், அவர்களின் சூழ்நிலை எங்களுக்குப் புரியாமல் இல்லை. விரைவில் அவர்கள் மீண்டும் எங்களுடன் இணைவார்கள்" என்று நம்பிக்கையுடன் முடித்தார்.

அதுசரி, எல்லா நரம்பியல் வல்லுநர்களுமா இவர்களுக்கு எதிராக இருக்கிறார்கள்? இல்லை. ஒரு சிலர் இவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டி வருகின்றனர். "எப்படியும் இறந்துபோகப் போகிறோம் என்று தெரிந்தவர்களை வைத்துத்தான் இவர்கள் முயல்கிறார்கள். அதில் ஒன்றும் நஷ்டமில்லையே? வெறும் 'Connectome' வைத்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா என்பது வாதத்திற்கு உட்பட்டதுதான் என்றாலும், அந்தக் கூற்றை யாராலும் முழுமையாக மறுத்துவிட முடியாது. எனவே, இவர்கள் ஆராய்ச்சியை வரவேற்பதும், அதற்கு ஆதரவு கொடுப்பதும் மிக முக்கியம்" என்று கருத்து தெரிவிக்கின்றனர். 

இந்த ஆட்டத்தில் இன்னமும் மதவாதிகள், அடிப்படைவாதிகள் யாரும் உள்ளே வரவில்லை. வந்தால் இருக்கிறது கச்சேரி!