Published:Updated:

திருடன் அணுகாத, பூச்சிகள் அரிக்காத பொக்கிஷம் எங்கே இருக்கிறது தெரியுமா? - பைபிள் கதைகள்

திருடன் அணுகாத, பூச்சிகள் அரிக்காத பொக்கிஷம் எங்கே இருக்கிறது தெரியுமா? - பைபிள் கதைகள்
திருடன் அணுகாத, பூச்சிகள் அரிக்காத பொக்கிஷம் எங்கே இருக்கிறது தெரியுமா? - பைபிள் கதைகள்

கிறிஸ்தவர்களின் புனித நூலான, 'பைபிள்' இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது. இயேசு கிறிஸ்து பிறப்புக்கு முன்னர் உள்ள நிகழ்ச்சிகள் அனைத்தும் வரலாற்றுத் தொகுப்பாகத் தொகுக்கப்பட்டு, 'பழைய ஏற்பாடு' எனவும், இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பின்னர் நிகழ்ந்தவை 'புதிய ஏற்பாடு' எனவும் பிரிக்கப்பட்டிருக்கின்றன. புதிய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து உவமைகளாகவும் உருவகங்களாகவும் கூறிய 'பைபிள் கதைகள்' உலகம் முழுவதும் உள்ள மக்களால் பெரிதும் விரும்பிப் போற்றப்படுபவை.

லௌகீகமான விஷயங்களில் மனிதர்களுக்கு இருக்கும் அக்கறை அவர்களை ஒரு நாளும் இறைவனிடம் கொண்டு போய் சேர்க்காது என்பதை இங்கே நமக்கு விளக்குகிறார்.

ஒருமுறை இயேசு கிறிஸ்து ஜனங்கள் திரண்டிருந்த பொதுவெளியில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒருவன் வந்து, ``நாங்கள் சகோதரர்கள் இரண்டு பேர்.  எங்கள் சொத்துகளைச் சேதாரமில்லாமல்  எங்களுக்குப் பிரித்துக்கொடுங்கள்'' எனும் கோரிக்கையை வைத்தான்.

அதற்கு அவர், ``என்னை உங்களுக்கு நியாயாதிபதியாகவும் பங்கிடுகிறவனாகவும் வைத்தவன் யார்?’’  என்றவர் திரளான மக்களை நோக்கிச் சொன்னார், 

``பொருளாசையைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள். ஒருவனுக்கு எவ்வளவு திரளான சொத்துகள் இருந்தாலும், அது அவனுக்கு ஜீவனல்ல என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்'' என்றார். மேலும் அவர்களுக்குப் புரியும்படியாக உவமையுடன்கூடிய ஒரு கதையைச் சொன்னார்.

செல்வம் மிக்க நிலச்சுவான்தார் ஒருவனுடைய நிலம் நன்றாக விளைந்திருந்தது. அறுவடைக்குக் காத்திருந்த வயல்களைப் பார்த்தபோது, `இத்தனை தானியங்களையும் சேமித்துவைக்க என்னிடம் களஞ்சியம் இல்லையே... நான் என்ன செய்வேன்!’ என வருந்தினான். 
பின்னர் அவனுக்கு ஒரு யோசனையும் பிறந்தது. பழைய களஞ்சியத்தை இடித்துவிட்டு, பெரியதாக ஒரு புதிய களஞ்சியத்தைக் கட்டினான். அதில் தனது வயலில் விளைந்த தானியங்களைக் கொண்டுவந்து பாதுகாத்தான். 

அப்போது  அவன் தனக்குத்தானே பேசிக்கொண்டான். `தலைமுறை தலைமுறைக்கும் தேவையான சொத்துகளைச் சேர்த்துவிட்டேன். குறிப்பாக இந்த ஆண்டு கிடைத்திருக்கும் இந்த தானியத்தை என் தேவைக்குப்போக மற்றதை விற்று பொருளும் பணமும் சேர்ப்பேன். அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஆடம்பரமாகச் செலவு செய்து வாழ்வேன். பிரியப்பட்டதைச் சாப்பிட்டு, குடித்து, களிகூர்ந்திருப்பேன்' எனச் சொல்லிக்கொண்டான். 

தேவனோ அவனை நோக்கி, ``மதிகேடனே, உன் ஆத்மா உன்னிடத்திலிருந்து இன்றைய இரவில் எடுத்துக்கொள்ளப்படும். அப்போது நீ சேகரித்தவை யாருடையதாகும்?'' எனக் கேட்டார்.

``தேவனிடத்தில் ஐசுவரியவானாயிராமல், தனக்காகவே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கிறவன் இப்படித்தானிருக்கிறான்’’ என்றார். பின்னும் அவர் தம்முடைய சீடரை நோக்கி... 

* என்னத்தை உண்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும், என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

* ஆகாரத்தைப் பார்க்கிலும் ஜீவனும், உடையைப் பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவையாக இருக்கின்றன.

* காகங்களைக் கவனித்துப் பாருங்கள்... அவை விதைக்கிறதுமில்லை அறுக்கிறதுமில்லை, அவற்றுக்கு பண்டகசாலையுமில்லை, களஞ்சியமுமில்லை. இல்லாவிட்டாலும் அவற்றையும் தேவன் பிழைப்பூட்டுகிறார்; பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.

* கவலைப்படுகிறதினால் உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்.

*  காட்டுப் புஷ்பங்கள் எப்படி வளருகிறதென்று கவனித்துப்பாருங்கள்; அவை உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை. என்றாலும், சாலமன் முதலாய் தன் சர்வ மகிமையிலும் அவற்றில் ஒன்றைப்போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

*  இப்படியிருக்க, அற்ப விசுவாசிகளே, இன்றைக்குக் காட்டிலிருந்து நாளைக்கு அடுப்பிலே போடப்படுகிற புல்லுக்கு தேவன் இவ்விதமாக உடுத்துவித்தால், உங்களுக்கு உடுத்துவிப்பது அதிக நிச்சயமல்லவா? ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று நீங்கள் கேளாமலும் சந்தேகப்படாமலும் இருங்கள்.

* இவற்றையெல்லாம் உலகத்தார் நாடித் தேடுகிறார்கள்; இவை உங்களுக்கு வேண்டியவையென்று உங்கள் பிதாவானவர் அறிந்திருக்கிறார்.

* தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்போது இவையெல்லாம் உங்களுக்குக் கொடுக்கப்படும். 

* உங்களுக்கு உள்ளவற்றை விற்றுப் பிச்சை கொடுங்கள். பழைமையாகப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள். அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை. உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இதயமும் இருக்கும்.